Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஏப்ரல் 2019|
Share:
சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இங்குதான் புராதனப் புகழ்பெற்ற தலசயனப் பெருமாள் ஆலயம் உள்ளது.

இத்தலத்தின் பழம்பெயர் திருக்கடல்மல்லை. மூலவர், நாராயணப் பெருமாள். உற்சவர், உலகுய்ய நின்றான். தாயாரின் திருநாமம் நிலமங்கைத் தாயார். இங்கே தீர்த்தம், புண்டரீக புஷ்கரணி. பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையது இத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்று. உற்சவர் உலகுய்ய நின்றான் கையில் தாமரையுடன் பெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கும் நிலையில் காட்சி அளிக்கிறார். மூலவர், ஆதிசேஷன் இன்றி, இந்த நிலமாகிய தலத்திலேயே சயனம் கொண்டதால் தலசயனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடற்கரையை ஒட்டிய நகரம் மாமல்லபுரம். இவ்விடம் ஏழு கோவில்கள் இருந்ததால் ஏழு கோவில் நகரம் என்றும் அக்காலத்தில் அழைக்கப்பட்டது. கடல் அலைகளின் சீற்றத்தினால் ஏழு கோவில் நகரம் மூழ்கிவிட்டது. எஞ்சிய தலசயனப் பெருமாள் கோவில் திரும்பக் கடலில் மூழ்காமல் இருக்க விஜயநகர அரசர் பராங்குசரால், மாமல்லபுரம் நகரின் உள்ளே பதினான்காம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனர். வழக்கம்போல் எல்லா பூஜைகளும் பெருமாளுக்குச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

தலபுராணம்
புண்டரீக மகரிஷிக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த பெருமையுடையது இத்தலம். ஒருகாலத்தில் மாமல்லபுரம் கடற்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. அந்த ஏகாந்தமான சூழலில் புண்டரீக மகரிஷி தவம் செய்துவந்தார். ஒரு சமயம் அருகில் இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களைக் கண்டு, அவற்றை விஷ்ணுவின் பாதத்தில் சமர்ப்பிக்க எண்ணினார். ஆனால், கடல் அவரைச் செல்ல விடவில்லை. பல வருடங்கள் கடல் நீரை இறைத்தும் முடியாமல் போகவே, மனம் வருந்தி பரந்தாமனை நோக்கி, "நான் உனது உண்மையான பக்தனாக இருந்தால் கடல் நீர் வற்றி உன்னை அடையும் வரையில் இம்மலர்கள் வாடாமல் இருக்க வேண்டும்" என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அந்தச் சமயம் பெருமாள் ஒரு வயோதிகராக மகரிஷியின் முன் தோன்றினார். "எனக்கு மிகுந்த பசியாக உள்ளது" என்று கூறி உணவு தரும்படி வேண்டிக் கொண்டார். புண்டரீக மகரிஷி அவரிடம், தாம் உணவு எடுத்துக்கொண்டு திரும்ப வரும்வரை பெருமாளின் பாதத்தில் அர்ப்பணிக்க வைத்திருக்கும் மலர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். உணவுடன் அவர் திரும்பி வரும்போது பெருமாள் தனது திருமேனியில், ரிஷி தந்த மலர்களை அணிந்தபடி, புஜங்கசயனத்தில் காட்சிதந்தார் மலர்க்கூடையை சுமக்கச் சொன்னதற்காகத் தன்னை மன்னிக்கும்படிக் கேட்டு, மலர்களை பரந்தாமன் பாதத்தில் சமர்ப்பித்து, என்றும் இதேபோல் பக்தர்களுக்குக் காட்சி தருமாறு மனம் உருகிக் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டார் மகரிஷி. மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.
கோவில் அமைப்பு
ஆலயத்தின் ஐந்து நிலை கோபுரத்தையும் கடந்து வந்தால் தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், அர்த்தமண்டபம், கருடாழ்வார் சன்னிதி. மூலவருக்கு முன்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு புஜங்களுடன் உலகுய்ய நின்றான் என்ற திருநாமத்துடன் உற்சவர் காட்சியளிக்கிறார். பூதத்தாழ்வார் பிறந்த இடம் இது என்பதனால் அவருக்குத் தனிச் சன்னிதி உள்ளது. மூலவர் கருவறையில் பெருமாள் கிடந்த கோலம், பாதங்களில் இதழ் விரிந்த தாமரை மலர், அதனை அர்ப்பணித்த மகரிஷி பாதங்களுக்கு அருகில் கைகூப்பி நிற்கிறார். மூலவரின் நான்கு திருக்கரங்களில் வலது மேல்கரத்தைச் சிரசின் அடியில் வைத்து, இடது கரத்தால் வரும் பக்தர்களை வா என அழைக்கிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளிக்க ஓடோடி வந்ததால், பெருமாள் சங்கு, சக்கரம், நாபியில் பிரம்மா, ஸ்ரீதேவி, பூதேவி இல்லாத கோலத்தில் காட்சியளிக்கிறார். பிரகாரத்தை வலம் வந்தால் தாயார் சன்னதியில் நிலமங்கைத் தாயார் காட்சியளிக்கிறார். வடமேற்கில் ஆண்டாள் சன்னிதி, அர்த்தமண்டபம், வலப்புறத்தில் லட்சுமியை மடியில் தாங்கியபடி மூலவர், உற்சவர் காட்சி அளிக்கின்றனர்.

சித்திரை மாதம் பிரம்மோற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மகப் பௌர்ணமி அன்று பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. முதல்நாள் புண்டரீக புஷ்கரணி தெப்போற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் திருமணம் தடையின்றி நடைபெற பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நிறைவேறியதும் வந்து அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றிப் பெருமாளை வழிபடுகின்றனர்.

மாமல்லபுரத்தில் பெருமாள் வயோதிகனாக வந்து கடல்நீரைத் தனது இரு கைகளாலும் நிறைய வாரி இறைத்ததால் இங்கு கடலில் நீராடுவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline