Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை
- ஹரி கிருஷ்ணன்|மே 2019|
Share:
பொதுவாக, பீமனைப்பற்றி 'அவன் ஒரு சாப்பாட்டு ராமன். ஏதுமறியாதவன்' என்றெல்லாம் சில அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. ஆனால் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் இடத்தையும் இதையொத்த மற்ற இடங்களையும் பார்க்கும்போது, தருமபுத்திரர் எதை தருமம் என்று சொல்கிறாரோ, அதற்கு மற்றொரு கோணத்தைக் காட்டி, 'இதுவும் தர்மம்தான்' என்று வாதிடுகின்ற போக்கைக் காணலாம். தருமபுத்திரரிடத்திலே இப்படி பீமன் மட்டும்தான் வாதிடுவான். இப்படிப்பட்ட பல இடங்களில் அர்ஜுனன் குறுக்கிட்டு, 'என்ன ஆனாலும் தருமபுத்திரர் சொல்வதைக் கேட்பது மட்டுமே நம்முடைய கடமை' என்று சொல்லி அவனைச் சமாதானப் படுத்துவதையும் காணலாம். இந்த எல்லாப் பேச்சுகளிலும் தருமபுத்திரர், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவர் மட்டுமே விவாதிப்பார்கள். நகுல, சகதேவர்கள் எந்தச் சமயத்திலும் யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ கருத்துத் தெரிவிக்கமாட்டார்கள். உதாரணமாக, பாஞ்சாலியைப் பந்தயம் வைத்திழந்த கட்டத்தில்கூட இப்படி பீமன் சினப்பதையும் அர்ஜுனன் சமாதானப்படுத்துவதையும் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் பார்த்தோம். இந்தக் கட்டத்தில்கூட நகுல சகதேவர்கள் எந்த மறுமொழியும் பேசாதவர்களாகவே காணப்பட்டார்கள். இதைப் போலவே, நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிற கட்டத்திலும்கூட பீமனின் பேச்சில் பலவிதமான தர்க்க நியாயங்களும், எதிர்க்கேள்விகளும் மாற்றுப் பார்வைகளும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.

அவன் பேசியதைச் சுருக்கி, "அண்ணா, துரியோதனன் தருமவழியில் நடக்கவில்லை. கபடமான முறையில் நம்முடைய அரசைப் பிடுங்கிக்கொண்டான். நம்முடைய கவனக் குறைவால் நாட்டை இழந்தோம். உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எங்களை அடக்கிக் கொண்டோம். நீர் எப்போதும் 'தர்மம், தர்மம்' என்று பேசி எங்களை அடக்கி விடுகிறீர். இதனால் எங்கள் பராக்கிரமம் வெளிப்பட முடியாமல் போய்விடுகிறது. நாம் துன்புறுவது மட்டுமல்லாமல் நம்முடைய உறவினர்களையும் துன்புறுத்துகிறோம். போர் புரிவது மட்டுமே ஒரு க்ஷத்திரியனுடைய தர்மம். ஆகவே, எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாங்கள் போர்புரிந்து துரியோதனனைக் கொன்று, நாட்டைக் கைப்பற்றுகிறோம். நீர் நாட்டை ஆண்டு, உங்களுக்கு விருப்பம்போல தான தருமங்களைச் செய்யும்" என்று சொல்லலாம். தருமர் இதை மறுத்து, ஆட்டத்தில் தோற்பவர் பன்னிரண்டாண்டு வனவாசமும், ஓராண்டு அக்ஞாத வாசமும் மேற்கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் மறுசூதை ஆடினோம். இப்படியொரு வார்த்தையை அவ்வளவு பெரிய சபையின் நடுவே நாம் ஏற்றிருக்கிறோம். "ஸாதுக்களின் முன்னிலையில் அந்த நிச்சயத்தை அடைந்து, இங்க ராஜ்யத்திற்காக எவன்தான் (அதை) விடுவன்? பெரியோருக்குத் தர்மத்தைவிட்டுப் பூமியை ஆளுகிறது மரணத்தைக் காட்டிலும் கொடியதென்று என்ணுகிறேன்." (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 34, பக்.127). "பெரியவர்களுக்கு எதிரில் அப்படியொரு நிபந்தனைக்கு உட்பட்டதன் பிறகு, அரசுரிமையைத் திரும்பப் பெறுவதற்காக இப்போது அதை மீறுவது என்பது மரணத்தைக் காட்டிலும் கொடிது. இது எனக்கு ஏற்புடையதன்று" என்பது தருமனுடைய மறுமொழி.

இந்தச் சந்தர்ப்பத்தில் தருமர் சூதாட்டச் சபையில் நடந்த இன்னொரு விஷயத்தையும் பீமனுக்கு நினைவூட்டுகிறார். "பீம! நீ சூதாட்டத்தில் பரிகமென்னும் ஆயுதத்தைத் தொட்டு என் கைகளை எரிக்கவும் கருதி அர்ஜுனனால் தடுக்கப்பட்ட பொழுதே வீரச் செய்கையை (சண்டையைச்) செய்திருந்தால் என்ன கெடுதி வந்திருக்கும்? இவ்விதம் உடன்பாட்டைச் செய்வதற்கு முந்தியே உனது ஆண்மையை அறிந்த நீ ஏன் சொல்லவில்லை? வந்த மரணம்போன்ற துன்பத்தை ஏற்றுக்கொண்டு பிறகு என்னைக் குறித்து இப்பொழுது ஏன் வரைகடந்து பேசுகிறாய்?" (மேற்படி இடம்.)

பாஞ்சாலியை வைத்திழந்தபோதே நீ என் கையை எரிப்பதையோ அல்லது துரியோதனாதியருடன் போரில் ஈடுபடுவதையோ செய்திருந்தால் மறுசூது என்ற ஒன்றே நிகழ்ந்திருக்காதே! அப்போது விட்டுவிட்டு, பன்னிரண்டாண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிபந்தனையாகக் கொண்டு அனுத்யூதமெல்லாம் நடந்து முடிந்து, நாம் வனத்துக்கு வந்தபிறகு இப்போது இப்படி என்னை வார்த்தைகளால் சித்திரவதை செய்வதால் என்ன பயன்? "ஓ! பீம! துன்புறுத்தப்படுகின்ற திரெளபதியைப் பார்த்தும் பொறுக்கப்பட்டதனால் அதிக துக்கம் எனக்கு உண்டாகிறது. ஓ! பீமஸேன! விஷத்தின் ரஸத்தைக் குடித்துவிட்டுப் பரிதாபத்தை அடைவதுபோல மிக்க பரிதாபத்தை அடைகிறேன். ஓ! பரதருட் சிறந்த வீர! குருவீரர்களின் நடுவில் (ப்ரதிக்ஞை) செய்து சொல்லப்பட்டதை இப்பொழுது (மாற்றுவது) முடியாது. விதை விதைப்பவன் விளைச்சலின் முதிர்ச்சியை எதிர்பார்ப்பதுபோல ஸுகம் உண்டாவதற்குரிய காலத்தை எதிர்பார்." (மேற்படி இடம்.) இதை கிஸாரி மோஹன் கங்கூலி, "O Bhima, this is my great grief that we could not do anything even beholding Draupadi persecuted in that way. My heart burneth as if I have drunk some poisonous liquid. Having, however, given that pledge in the midst of the Kuru heroes, I am unable to violate it now. Wait, O Bhima, for the return of our better days, like the scatterer of seeds waiting for the harvest." என்று மொழிபெயர்க்கிறார்.
"திரெளபதிக்கு அப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டபோது, விஷத்தைப் பருகியவனைப் போல நானும் துடித்தேன். இருந்தாலும் வனவாச, அக்ஞாத வாச நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் மறுசூதை ஆடியபிறகு, எந்த அடிப்படையிலும் நம்மால் அதை மீறமுடியாது. சரியான காலத்துக்காக, விதை விதைப்பவன் பயிரின் முதிர்ச்சிக்காகக் காத்திருப்பதைப் போலக் காத்திரு. காலம் வந்ததும் நம்முடைய ஆற்றலைக் காட்டுவோம்" என்று தருமர் சொன்னதும் பீமனுக்குப் பொறுக்கமுடியாத கோபம் ஏற்பட்டது.

"பீமஸேனன், 'காலத்துக்குக் கட்டுப்பட்டவரும் நுரைபோல ஸாரமற்றவரும் பழம்போல விழக்கூடியவரும் அப்படியே மரிக்கக்கூடியவருமான நீர், நாசமாக்குகிறது, பாணம்போல் வேகமாகப் போகக்கூடியதும் முடிவற்றதும் அளவிட முடியாததும் (எப்பொழுதும் போய்க்கொண்டிருக்கும்) வெள்ளம் போன்றதும் யாவற்றையும் அடித்துக்கொண்டு போவதுமான காலத்தினால் உடன்பாட்டைச் செய்துகொண்டு, காலத்தை ப்ரத்யக்ஷமாக எண்ணுகிறீர்.... எவன் அளவிற்கடங்காத ஆயுள் உள்ளவனோ அல்லது ஆயுளின் ப்ரமாணத்தை அறிந்தவனோ, யாவற்றையும் நேராகக் கண்ட அவனன்றோ (தொழிலைச் செய்தற்குக்) காலத்தை எதிர்பார்க்கலாம்? ஓ அரசரே! நம்மால் எதிர்பார்க்கப்படும் காலமோ பதின்மூன்று வருஷமாகும். அது ஆயுளின் குறைவைச் செய்து மரணத்தைக் குறித்துக் கொண்டுபோய்விடும். தேகமுள்ளவர்களுக்கு மரணமானது எப்போதும் தேகத்தில் பற்றியிருக்கிறது. ஆகையால் மரணத்திற்கு முந்தியே ராஜ்யத்தைக் குறித்து முயற்சி செய்வோம்’ என்றான்". (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 35, பக். 128)

பீமனுடைய பேச்சின் பிற்பகுதியைச் சுருக்கமாகச் சொல்வதானால், 'நாங்கள் நால்வரும் உங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருக்கிறோம். வில்லிலே வல்லவனான அர்ஜுனன் தன்னுடைய மனத்திலுண்டான தாபத்தை அடக்கிக்கொண்டிருக்கிறான். நகுல சகதேவர்களும் நம்முடைய தாயாரும் "உம்முடைய பிரியத்தையே விரும்பிக்கொண்டு மூடர்போலவும் ஊமையர்போலவும் இருக்கின்றார்கள்". இவர்கள் இப்படியிருந்தாலும் நானும் பிரதிவிந்தியனின் தாயான திரெளபதியும் மட்டுமே தாபத்தை அடைந்தோம். ஆனால் ஒன்று. நாங்கள் பேசுவது மற்றவர்களுக்கும் உடன்பாடான ஒன்றே. (Whatever I speak unto thee is agreeable to all of them, for all of them plunged in distress, eagerly wish for battle.) இவ்வளவு இருக்கும்போது, நீர் ஏன் பொறுமையக் கைக்கொண்டு வாளாவிருக்கிறீர்? ஓ! மஹாராஜரே! கெட்ட எண்ணமுள்ள த்ருதராஷ்டிர புத்திரர்களை ஏன் பொறுக்கிறீர்? செய்யவேண்டிய காரியத்தில் (முயற்சியில்லாமல்) மலைப்பாம்புபோல் ஏன் (சும்மா) இருக்கின்றீர்?" (மேற்படி இடம், பக். 129)

பீமன் பேசிய சுடுசொற்களில் இந்த இடம் மிகக்கடுமையான பிரயோகத்தை உடையது. 'ஏன் மலைப்பாம்புபோல சும்மா இருக்கிறீர்' என்ற இடத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் 'இரையெடுத்த மலைப்பாம்பு' என்று விரித்துக்கொள்ளவேண்டும். இதற்கு வேறு சில பதிப்புகளில் இடமிருக்கிறது. இரையெடுத்த மலைப்பாம்புதான் அசையக்கூட முடியாதபடி மாதக்கணக்கில் அப்படியே படுத்திருக்கும். இவ்வளவு கடுமையான வார்த்தையைக் கேட்டும் தருமபுத்திரன் சினம் கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல. தர்மத்தையே மேலும் மேலும் வலியுறுத்தியபடி தர்மர் தன்னைக் கட்டிப் போட்டுக்கொள்ளும் அதே சமயத்தில் மற்ற நான்கு பாண்டவர்கள், திரெளபதி முதலியவர்களுடைய உணர்வுகளையும் கட்டிப் போடுகிறார் என்பதையும், பேராற்றலையுடைய அந்த நான்கு சகோதரர்களும்—பீமனும் பாஞ்சாலியும் மட்டும் அவ்வப்போது எதிர்ப்புக் காட்டினாலும்-இதற்குக் கட்டுப்பட்டே இருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இவர்களைக் கட்டிப்போட்டது அன்பு என்னும் நொய்மையான நூலிழை மட்டுமே என்பதை மறுக்கமுடியுமா?

'மனிதர்களாகப் பிறந்த நாம், காலத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். நமக்கு உயிர் இருக்கும்போதே அரசுரிமையை மீண்டும் வென்றெடுக்க வேண்டும்' என்று வற்புறுத்தும் பீமனிடத்தில் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாற்றுத் திட்டமும் இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline