Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்|டிசம்பர் 2018|
Share:
அன்புள்ள சினேகிதியே

அம்மா சித்ரா, நமஸ்காரம். நான்கு வருடம் கழித்துத் தென்றலில் உங்கள் பத்தி (column) படித்தேன். இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது. என் பையன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவனுக்குக் கல்யாணம் ஆகி, புது மனைவி, புதுக் குழந்தை, புது வீடு என்று எல்லாமே புதுசு. என் பையன் இங்கே செட்டில் ஆகி இருபது வருஷம் ஆகிறது. முதல் கல்யாணம் நாங்கள் பார்த்து நடத்தி வைத்தது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பது போலத்தான் இருந்தது. நானும் என் மனைவியும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தோம். இவர்களுக்குள் என்ன பிரச்சனையோ - பிரிந்துவிட்டார்கள். நல்லவேளை குழந்தை இல்லை. ஆனால், அதுதான் பிரிவதற்குக் காரணமா என்றுகூடத் தெரியாது. இவன் மணவிலக்கு செய்ததுகூடத் தெரியாது. இந்த ஊரில் எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக்கொள்கிறார்கள், அப்பா அம்மாவுக்கு எதுவும் தெரிவதில்லை. என் மனைவி அந்த அதிர்ச்சியிலேயே இருந்து என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். அதற்கப்புறம் எனக்கு வாழ்க்கையே இல்லை.

அமெரிக்காவிற்குக் குழந்தைகளைத் தத்துக் கொடுத்துவிட்ட பெற்றோர்கள்தாமே இந்தியாவில் அதிகம். அவர்களுக்காகத்தானே 'நானா - நானி' (Nana - Nani) போன்ற சீனியர் சிட்டிசன்ஸ் ஹோம்களைக் கட்டிக்கொண்டே போகிறார்கள். அதில் போய்ச் சேர்ந்தேன். மனசு ஒட்டவில்லை. டைனிங் ஹாலுக்குப் போனால் என் பிள்ளை சிகாகோவில் இருக்கிறான், என் பெண் ஹூஸ்டனில் இருக்கிறாள் என்று ஒருத்தருக்கு ஒருத்தர் தங்களைப் பார்க்க வராத பிள்ளைகளையும், ஒட்டாத பேரன், பேத்திகளையும் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எனக்குப் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்னுடைய மனைவியும் போய்ச் சேர்ந்துவிட்டாள். அவள் இருந்தபோது அவளைப் பாடாய்ப்படுத்தி வைத்த நான், இப்போது தினம் தனிமையில் அழுது கொண்டிருக்கிறேன். 'நான் பார்த்து வைத்த பெண்ணை என் பிள்ளை டைவர்ஸ் செய்துவிட்டு அவனும் தனிமரமாக இருக்கிறான், மனம் சோர்ந்து (Depression) இருக்கிறான்' என்றா தினமும் புலம்ப முடியும்?

எப்படியோ இரண்டு வருஷம் ஓட்டினேன். அப்புறம் நியூஸ் வந்தது, என் பிள்ளை ஒரு வடக்கத்திப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான் என்று. அவளும் விவாகரத்து பெற்றவள்தானாம். எனக்கும் என் பிள்ளைக்கும் என்றைக்குமே அதிகம் பேச்சுவார்த்தை இருந்ததில்லை. அவன் அம்மாதான் எல்லாம். எங்களுக்குள் பாலமாக இருந்த அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்துவிட்டாள். ஏதோ ஒரு கடமைக்கு அவ்வப்போது ஃபோன் செய்வான். நானும் ஏதோ பேசுவேன். கல்யாணத்துக்கு ஃபோன்மூலமாக அட்சதை போட்டேன். அவனுக்குப் பையன் பிறந்தான். அவன் அப்பா ஆனதும்தான் இந்த அப்பாவைப்பற்றி நினைக்கத் தோன்றியிருக்கிறது. அடிக்கடி 'face time' வழியே குழந்தையின் படங்களை அனுப்பினான். தாத்தா உறவு தேவைபோல இருக்கிறது. என்னை வற்புறுத்திக் கூப்பிட்டான். எனக்கும் பேரனைப் பார்க்க ஆசை வந்தது. இந்த வயதானவர்கள் பேச்சு போரடித்தது. சாப்பாடும் அலுத்துப் போய்விட்டது. நான் வடநாட்டிலிருந்து ரிடையர் ஆனவன். அந்தச் சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். மருமகள் அருமையாகச் சமைத்துப் போடுவாள். அதற்குத்தான் வடநாட்டுப்பெண் மருமகளாக வந்திருக்கிறாளோ என்று தோன்றியது. இங்கே கிளம்பி வந்துவிட்டேன். ஆறு மாதம் விசா. வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால், இங்கேயும் பிடிப்பில்லை. பல வருஷங்களுக்கு முன்னால் நானும் என் மனைவியும் வந்தபோது மூன்று மாதம்கூடத் தங்கியிருக்கிறோம்.பையனுடன் பிரச்சனை வரும். நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். பேசமாட்டோம். பேசினால் ஆர்க்யூமெண்ட்தான். இருந்தாலும் I took it easy. மனைவி எங்கள் இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வாள். இப்போது நிலைமை தலைகீழ்.

வடக்கத்தி மருமகள், மிகவும் பணிவாக இருப்பாள். அவர்கள் எல்லோருமே எந்த இடமாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தால் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள். அதுபோல இவளும் இருப்பாள் என்று நான் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தேன். பையன் மட்டும் ஏர்போர்ட் வந்தான். வீட்டிற்குப் போனால், அவள் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு, கால்மேல் கால் போட்டுக்கொண்டு, நான் உள்ளே நுழைந்தவுடன் 'ஹாய்' என்று சொல்லிவிட்டு, டிவி பார்ப்பதைத் தொடர்ந்தாள். என் முகம் மாறுவதைப் பையன் கவனித்துச் சைகை காட்டி என்னை மேலே வரச்சொன்னான். அவளுக்கு ஏதோ டிப்ரெஷனாம். அவள் அம்மாதான் அவளுக்கு எல்லாமாம். ஆறு மாதத்திற்கு முன் அவள் இறந்து போய்விட்டாளாம். அம்மா ஃபிரெஞ்சுப் பெண். அப்பா குஜராத்தி. இவளுக்கு 2 வயது இருக்கும்போது அவர்களுக்குள் ஒத்துப்போகாமல், வேறென்ன, விவாகரத்து தான். இந்தப் பெண்ணுக்கு இந்திய கலாச்சாரம் எதுவும் அதிகம் தெரியாது. அப்பாவின் பெயரைத்தான் தெரியும். அம்மா உடம்பு சரியில்லாதபோது வேலையை விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உதவிக்கு ஹாஸ்பிடலில் வந்தவனைக் கண்டதும் காதல், திருமணம். அதுவும் நிலைக்கவில்லை. அவளைத் திரும்பி வேலைக்கு எடுத்துக்கொள்ளும்போது என் பையன்தான் இன்டர்வியூ செய்திருக்கிறான். விக்கி விக்கி அழுதாளாம். அம்மாவைப்போல் இருந்தாளாம். என் மனைவி ரொம்ப அழகாக இருப்பாள். இப்போது குழந்தை பிறந்த பிறகு, டிப்ரெஷனா அல்லது stress level அதிகமா என்று தெரியவில்லையாம். அவ்வப்போது கத்துகிறாளாம். Otherwise sweet and cute. இவன்தான் சமையல் எல்லாம். முதல் தடவையாக என் பையன் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னான். அவ்வளவு நேரம் இதற்கு முன்னால் நார்மலாக நாங்கள் பேசியதாக நினைவே இல்லை. குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. எட்டித்தான் பார்க்க முடிந்தது. Nanny பக்கத்திலிருந்தாள். இது Nana-Nani இல்லை. Nanny. எனக்கு அந்தப் பந்தம் விடாதுபோல. குழந்தையைத் தொட வேண்டுமானால் குளித்துவிட்டு, கையில் அந்த சோப்பு தடவிக் கொண்டுதான் போகவேண்டுமாம். ஏதேதோ நிபந்தனைகள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்போது. பையன் சமைத்து வைத்திருந்தான். சாப்பாடு கொடுமை. பாவமாக இருந்தது. எனக்காக ஏதோ கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறான். இங்கே சப்பாத்தியும், பனீர் மட்டரும் கிடைக்கும் என்று நான் விமானத்தில் ஒன்றுமே சாப்பிடவில்லை. ஒரே பசி. யாரிடம் கோபத்தைக் காட்டுவது?

மறுநாள் அவன் விடுப்பு எடுத்துக்கொண்டிருந்தான். அவனே எல்லா வேலைகளும் செய்தான். எனக்கு எது எங்கே என்று எடுத்துக் காட்டினான். நானே காஃபி போட்டுக்கொள்ள வேண்டும். காலை டிஃபன் செய்துகொள்ள வேண்டும். மிஞ்சியிருப்பவற்றைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பாக உணர்த்தினான். எனக்கு ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம். சிவனே என்று அந்த சீனியர் சிடிசன் ஹோமிலேயே இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இந்தியன் ரெஸ்டாரென்ட் போய்விட்டு வந்தோம். மிச்சமிருந்ததை நிறையக் கட்டிக்கொண்டு வந்தோம். மருமகளுக்கு வேறு விதமான சமையல். ஏதோ அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறான்.

என்னை வேலை ஏதும் செய்யச் சொல்லவில்லை. மறுநாள் குழந்தையைப் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தான். ஆனால் அவனைப் பார்ப்பதற்கு பெர்மிஷன் கேட்டுக்கொண்டு, சோப் தடவிக்கொண்டு - இந்த protocol எல்லாம் பிடிக்கவில்லை. என் பேரனை என் இஷ்டத்திற்கு எடுத்துக் கொஞ்சக்கூட உரிமை இல்லையே என்று உள்ளுக்குள் கோபமாக இருந்தது. மருமகள் அன்று என்னிடம் மரியாதையாகப் பேசினாள். ஆனால், திடீரென்று எழுந்து உள்ளே போய்விடுவாள். எப்போது பேச்சைத் தொடர வருவாள் என்று தெரியாது. ஆக, அந்த எதிர்பார்ப்பையும் விட்டுவிட்டேன். உயிர் வாழ்வதற்காக நானே எல்லாவற்றையும் செய்யக் கற்றுக்கொண்டேன். பையனுக்கு தினமும் சமைத்துப் போட்டேன். அவன் இன்னமும் சைவம்தான் சாப்பிடுகிறான். அதில் ஒரு சிறிய சந்தோஷம். தினமும் இணையத்திலிருந்து ஒரு சமையல் கற்று, அதைச் செய்து அவனுக்காகக் காத்திருப்பேன்.

இரண்டு பேரும் ஒன்றாகச் சாப்பிடுவோம். முன்பு இருந்ததைவிட இப்போது அதிகமாகப் பேசுகிறோம். நான் ஏதாவது கோபத்தில் கத்தினால்கூட அவன் பேசாமல் இருந்து விடுகிறான் I feel guilty later. பாவம் அவன். அந்தப் பெண் வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டாள். Financialy he is hit. அவளையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வேலைக்கும் போய், ஒரு மெஷினைப் போலச் செயல்படுகிறான். இப்படியே ஒரு மாதம் ஓட்டிவிட்டேன். இன்னும் ஐந்து மாதம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நேற்றைக்கு நான் திரும்பிப் போவதைப் பற்றி பேசினேன். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் பேசவே இல்லை. அப்புறம் திடீரென்று கதறி அழுதான். முதல் தடவையாக அவன் அம்மாவை நினைத்துக்கொண்டு. அவள் போனபோது அவனால் வரமுடியவில்லை. காலை ஒடித்துக்கொண்டு சர்ஜரி செய்து ஆஸ்பத்திரியில் இருந்தான். அவன் வராத கோபத்தில் அந்தச் சமயம் நான் பேசவே இல்லை. "அப்பா, அம்மாவும் போய்விட்டாள். நான் அனாதையாக இருக்கிறேன். நான் எவ்வளவு இடிந்துபோய் இருந்தேன் என்று உங்களுக்குத் தெரியாது. அடிமேல் அடி. DIVORCE, Accident, Amma's Death. இவளோடு சந்தோஷமாக ஒரு வருஷம்கூட இல்லை. நீங்கள் வந்த இந்த ஒரு மாதமாகத்தான் எனக்குச் சிறிது நிம்மதி. அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் என்ன சொன்னாலும் உங்களுக்குத் தோன்றுவதைத் தான் செய்யப் போகிறீர்கள்! I will rearrange the tickets for you. Date சொல்லுங்கள்!" என்றான். என் இஷ்டத்திற்கு வாழ்க்கை நடத்தி வந்தவன் நான். முதல்முறையாக ஒரு இக்கட்டான நிலை. "சரிப்பா, யோசித்துச் சொல்கிறேன்" என்றேன். இனி மீதி உள்ள ஐந்து மாதத்தை எப்படிக் கழிப்பது? உங்களுக்கு எழுதிக் கேட்கலாம் என்று தோன்றியது. போரடித்துக் கொண்டிருக்கிறேனோ? முன்னைவிட பிள்ளைப் பாசம் எனக்கு இப்போது தெரிய வருகிறது. அதனால் கொஞ்சம் குழப்பம்.

இப்படிக்கு,
...........
அன்புள்ள சிநேகிதரே

* நிறைய தடவை முதல்முறையாக என்று எழுதியிருக்கிறீர்கள். வரும் ஐந்து மாதமும் பிள்ளைக்காகத் தொடர்ந்து இருப்பது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.
* சமைக்கக் கற்றுக்கொண்டு வருகிறீர்கள். நல்லது.
* உங்கள் கோபத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள். நல்லது.
* பிள்ளை நீங்கள் தங்குவதை மிகவும் எதிர்பார்க்கிறான். நல்லது.
* பேரன் வளர, வளர அவன் சிரிப்பையும் விளையாட்டையும் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். Protocol பிரச்சனையாகத் தெரியாது. பழக்கமாக மாறிவிடும். நல்லது.
* பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள். நல்லது
* ஆறு மாதம் கழித்துத் திரும்பிப் போகும்போது ஓர் இணைப்பும், பிணைப்பும் உங்கள் நினைவில் தங்கியிருக்கும். Boredom தெரியாது. நல்லது

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
Share: