Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வ.வே.சு. ஐயர் (பகுதி - 3)
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2018|
Share:
பயணங்கள்
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கள் தேசத் தொண்டுகளைத் தடையின்றிச் செய்யவேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன்படியும், நண்பர்களின் அறிவுறுத்தலின்படியுமே வ.வே.சு. ஐயர் புதுச்சேரியை விட்டு வெளியேறி பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைக்குள் கால் வைத்தார். ஊருக்கு வந்ததும் திரு.வி.க.வின் முயற்சிகளுக்கு நன்றிகூறிக் கடிதம் எழுதினார். பின் வட இந்தியாவின் பல புண்ணியத் தலங்களுக்கும் சென்று தரிசித்தார். காங்ரியில் (Kangri) அவர் பார்த்த ஆரிய சமாஜ குருகுலம் அவரை மிகவும் கவர்ந்தது. அதைப்போல தமிழ்நாட்டிலும் ஒரு கல்வி நிலையத்தைத் துவக்கி நடத்த விரும்பினார். தொடர்ந்த காசிப் பயணம் அவரது வாழ்வின் மிகமுக்கியத் திருப்புமுனை ஆனது. அங்கு முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்தார். கங்கைநதியைப் படகில் சுற்றி வந்தார். ஆங்காங்கே எரியூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உடல்களும், பொங்கிவரும் கங்கைப் பிரவாகமும், திரளான மனிதக்கூட்டமும் அவர் மனதுள் பல கேள்விகளைத் தோற்றுவித்தன. வன்முறை அரசியலாலோ, தீவிரவாதச் செயல்களினாலோ சமூகத்துக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தார். சமூகத்தை உயர்த்தவேண்டும்; வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும்; அதற்காகவே இனி தனது திறமை, அறிவு, ஆயுள் முழுவதையும் செலவிட வேண்டும் என்று உறுதிபூண்டார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் முடிவு செய்தார். பின் வரகநேரிக்குத் திரும்பினார்.

தேசபக்தன் ஆசிரியர்
இந்நிலையில் சென்னையில் தேசபக்தன் இதழின் ஆசிரியராக இருந்த திரு.வி.க.வுக்கும், இதழ் உரிமையாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திரு,வி.க. ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். உடனே உரிமையாளர் காமத் வ.வே.சு. ஐயரை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டினார். ஐயர் அதனை ஏற்றார். அவரது சிந்தனைகள் கட்டுரைகள் வாயிலாகவும், தலையங்கங்கள் வாயிலாகவும் வெளியாகின. தலையங்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டு 'நியூ இந்தியா' இதழிலும் பிரசுரமாகி வந்தன. இந்நிலையில் அவர் எழுதாத ஒரு தலையங்கத்துக்காக ஐயர்மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டியது பிரிட்டிஷ் அரசு. ஐயர் 'தான் அதனை எழுதவில்லை' என்று பலமுறை மறுத்தும் அரசு அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஐயர் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில்...
Click Here Enlargeசிறையில் அவருக்கு முதல்வகுப்பு வழங்கப்பட்டது. தினந்தோறும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தவருக்கு அந்தச் சிறைவாசம் ஒருவிதத்தில் ஓய்வை அளித்தது எனலாம். சிறையில் இருந்துகொண்டே பல புத்தகங்களை வரவழைத்து வாசித்தார். நண்பர் ஆதிமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் மேலும் பல புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அங்கிருக்கும்போது கம்ப ராமாயண ஆய்வுகளைத் தீவிரமாகத் தொடர்ந்தார். கம்பனின் பார்த்திரப் படைப்புகளை, உலக மகாகவிகளோடு ஒப்புநோக்கத்தக்க அவன் பெருமையை விரிவாக ஆராய்ந்து 'A Study of Kamban' என்ற நூலை எழுதினார். ஓய்வுநேரங்களில் பலவாறாக அவர் சிந்தனை விரியும். குருகுலத்திற்கான விதை அவரது உள்ளத்தில் தீவிரமாக விழுந்தது பெல்லாரி சிறைச்சாலையில்தான்.

தமிழ்க் குருகுல வித்தியாலயம்
சிறையிலிருந்து வெளிவந்ததும் குடும்பத்துடன் ஹம்பி, விஜயநகரம் போன்ற பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆந்திராவின் எழில்மிக்க பல பகுதிகளுக்குச் சென்று வந்தார். சென்னை திரும்பியதும் 'ஆரிய சமாஜ குருகுலம்' போல் ஒருபள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், மிகச் சிறந்த மாணவர்களை அதன் மூலம் உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். சென்னை, மன்னார்குடி, தஞ்சை என்று பல இடங்களைச் சென்று பார்த்தார் எதுவுமே அவருக்குத் திருப்தி தரவில்லை.

அப்போது, காங்கிரஸின் ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி அவருக்குக் கோவில்பட்டியிலிருந்து அழைப்பு வந்தது. ஐயரும் சென்றார். கூட்டம் முடிந்ததும் அருகிலிருந்த கல்லிடைக்குறிச்சி என்ற ஊருக்குச் சென்று தங்கினார். அங்கே ஒரு தாலுகா பள்ளி இருந்தது. அதன் ஆசிரியர்கள் காந்தியக் கொள்கைகள் மீதிருந்த ஈடுபாட்டால் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பள்ளிக்கு வருவதைப் புறக்கணித்தனர். பின்னர் மாணவர்கள் நலன் கருதி 'திலகர் வித்தியாலயம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மாணவர்களுக்கு அறிவுபுகட்டினர். ஐயர் அவ்வூருக்கு வந்திருப்பதை அறிந்த அவர்கள், அவரே அந்தப் பள்ளியை ஏற்று நடத்துமாறு வேண்டிக்கொண்டனர். ஐயரும் உடன்பட்டார். திலகர் வித்தியாலயத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதுவே 'தமிழ்க் குருகுல வித்தியாலயம்' ஆனது. இக்குருகுலத்தை நடத்துவதற்காக பாரத்வாஜ ஆசிரமம் என்பதையும் ஐயர் தோற்றுவித்தார். டிசம்பர் 08, 1923 அன்று இது தோற்றம் கண்டது. மாணவர்கள் ஒவ்வொருவராகச் சேரத் துவங்கினர். பெரும்பாலும் அந்தணச் சிறுவர்களே அதில் கல்வி பயின்றனர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டன.
சேரன்மாதேவி குருகுலம்
சிலமாத காலம் அங்கேயே குருகுலம் நடந்து வந்தது. நாளடைவில் குருகுலத்தைப் பெரிய அளவில் நடத்த முடிவு செய்தார். அதற்காக நிதி கோரிப் பத்திரிகைகளில் எழுதினார். இந்நிலையில் சேரன்மாதேவியில் முப்பது ஏக்கர் நிலம் விலைக்கு வந்தது. அங்கே குருகுலத்தை அமைத்தால் சிறப்பாக அமையும் என்று கருதிய ஐயர், பல செல்வந்தர்களின் உதவியைக் கோரினார். வ.வே.சு. ஐயர் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்த கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் நிலம் வாங்குவதற்கான தொகை ரூபாய் மூவாயிரத்தை உடனடியாகக் கொடுத்து உதவினார். நிலம் பதிவு செய்யப்பட்டது. குருகுலம் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டது.

பால பாரதி
தனது இலக்கியப் பணிகளைத் தொடரும் பொருட்டு ஐயர் அங்கு ஓர் அச்சகத்தை அமைத்தார். 'பால பாரதி' என்ற இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1924 அக்டோபரில் முதல் இதழ் வெளியானது. "இப்பத்திரிகை சேரமாதேவி தமிழ்க் குருகுலத்தின் வாயிலாகத் தோன்றுகிறது. தமிழ்க் குருகுலத்தின் நோக்கம் தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கிற தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதன காலத்துக் கலைகளைப் போலவே, இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலையமாக ஆக்கவேண்டும் என்பதும், தமிழ் மக்களுக்குப் பூரணமான கல்வி - அதாவது, இலக்கியக் கல்வியோடு விசுவகர்ம கலைகளும் - கற்பிக்கவேண்டும் என்பதுமே” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

குருகுலத்தின் நோக்கம் பற்றி கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார் ஐயர்.
தமிழ் மாணவர்களுக்கு லெளகீகக் கல்வியும், கைத்தொழிலும், வியாபார முறைகளும், ஒழுக்கமும், ஆத்தியாத்ம உணர்ச்சியும் கற்பித்துத் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வித்தியாலயம் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது. இதில் உயர்ந்த வகுப்புகளில்கூடக் கல்வி தமிழ் பாஷையின் மூலம் போதிக்கப்படுகிறது. தமிழ் நாட்டு வீரம் நிறைந்த சரித்திரமும், பாரத நாட்டின் கம்பீரமான இதிகாசமும், இவை தவிர உலக சரித்திரங்களும், மாணவர்களுக்கு நன்கு போதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பாஷையின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் மாணவருக்கு அன்பும், ஆர்வமும் பிறக்கும்படியும், தமிழில் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டாக்கும் படிக்கும், சரஸ்வதி கடாக்ஷம் உள்ளவர்களுக்குக் கவிதா சக்தியும் பிறக்கும்படிக்கும் தமிழ் போதிக்கப்பட்டு வருகிறது. கணிதம், பூகோளம், இயற்கைப் பாடம், சரீர தத்துவம், பிராணி நூல், ஸ்தாவர முதலிய பெளதிக சாஸ்திரங்கள் மாணவருக்கு அழகாகப் போதிக்கப்பட்டு வருகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி முதலிய பாஷைகளும் பிரம்மசாரிகளுக்கு நன்கு கற்பிக்கப்பட்டுவருகின்றன, தாய், தந்தையர் தமது குமாரர் சமஸ்கிருதம் படிக்க வேண்டாம் என்று வியக்தமாகத் தெரிவித்தாலொழியச் சம்ஸ்கிருதம் கட்டாய பாஷையாக வைக்கப்பட்டிருக்கிறது,”

Click Here Enlargeஐயரின் இலக்கியப் பணிகள்
இவ்வாறான உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த குருகுலமும், பால பாரதி இதழும் மிகச் சிறப்பாகவே நடந்து வந்தன.. இதழில் கம்ப ராமாயண ஆராய்ச்சி, ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள், ராஜகோபாலன் கடிதங்கள் போன்ற பகுதிகளைத் துவக்கினார் ஐயர். இதழுக்கு பொ. திரிகூட சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், மஹேசகுமார சர்மா, கி. லக்ஷ்மண ஷர்மா என பலர் பங்களிப்புகளைத் தந்தனர். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு முதன்முதலில் தமிழில் பால பாரதியில்தான் தொடராக வெளியானது. ஸ்ரீ அரவிந்தர் எழுதிய 'யோக ஸாதனம்' என்னும் நூலும் அமுதனின் மொழிபெயர்ப்பில் அதில் வெளியானது. ஆங்கிலம் மற்றும் தமிழில் நூல் விமர்சனமும் தொடர்ந்து வெளியாயின. லைலி மஜனூன், எதிரொலியாள் அழேன் ழக்கே எனப் பல சிறுகதைகளை அதில் எழுதினார் ஐயர். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்னும் பாரதியின் கனவிற்கேற்ப நெப்போலியனின் வீரப் பிரசங்கங்கள், சாவர்க்கர் கடிதங்கள் போன்றவை தமிழில் வெளியாகின. தனது பரத்துவாஜ ஆசிரமம் மூலம் பல்வேறு நூல்களையும் ஐயர் வெளியிட்டு வந்தார்.

குருகுலத்தின் நடைமுறை
மகாதேவ ஐயர், சுத்தானந்த பாரதியார், கும்பலிங்கம் பிள்ளை, நாராயண ஐயர், அனந்தகிருஷ்ண ஐயர் போன்றோர் குருகுலத்தின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு அங்கேயே தங்கி உழைத்து வந்தனர். குருகுலம் மிகுந்த கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் ஐயரால் நடத்தப்பட்டு வந்தது. அதன் வளர்ச்சிக்காக அவர் இரவு, பகலாக உழைத்தார். பலர் அளிக்கும் நிதி ஆதரவைக் கொண்டே குருகுலம் நடந்து வந்தது. அது போதாதபோது ஐயர் பல இடங்களுக்கும் பயணப்பட்டு நிதி திரட்டி வருவார். காங்கிரஸின் சார்பாக ரூ. 5000 நிதி அளிக்கப்பட்டது. டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் வேறு பல தனவந்தர்களும் ஆசிரமத்திற்கு நிதி உதவி வந்தனர்.

'குருகுலம்'பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அதற்கேற்ற நடைமுறைகளையே பின்பற்றியது. ஒவ்வொரு நாளும் காலை நான்கரை மணிக்கு மாணவர்கள் எழுந்து, காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஆளுக்கொரு கூடையில் வாய்க்காலிலிருந்து வண்டல்மண் அள்ளி வந்து மரங்களுக்கு இடுவர். தொடர்ந்து உடற்பயிற்சி. அதன்பின் ஆசிரமத்தின் பொதுவிடம் மற்றும் தத்தம் அறைகளைத் தூய்மை செய்வர். ஓர் ஊதல் ஒலி கேட்டதும் மாணவர்கள் வரிசையாக நிற்பார்கள். தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகள் நடக்கும். முடிந்ததும் எண்சுவடி, குழிமாற்று, நிகண்டு, மனப்பாடப் பகுதிப் பாடல்களைப் பாடிக்கொண்டே ஐயன் வாய்க்காலுக்குச் செல்வர். அங்கு துணி துவைத்துக் குளித்துவிட்டு வருவர். சனிக்கிழமை என்றால் எண்ணெய் தேய்த்துக் குளியல் கண்டிப்பாக உண்டு. பின்னர் தேவாரமோ, திருவாசகமோ, பிரபந்தமோ பாடி இறைவனைத் துதிப்பர். பின் ஆசிரமம் திரும்புவர்.

ஆசிரமத்தில் கடவுள் வாழ்த்துப் பாடுவர். அரைமணி நேரம் பாரதநாட்டின் வீர வரலாற்றை உணர்ச்சி ததும்பக் கூறுவார் ஐயர். காலை உணவுக்குப் பிறகு, மாணவர்கள் வகுப்புக்குச் செல்வார்கள். வகுப்புக்கள் பெரும்பாலும் மரநிழலிலேயே நடக்கும். பதினொன்றரை மணிக்குக் காலை வகுப்புகள் முடியும். பின் மாணவர்கள் சமையற்கட்டில் இலை தைப்பது, சுற்று வேலைகளைச் செய்வது எல்லாம் செய்வர். மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு. பின் நெசவுக் கூடத்தில் நூல் நூற்பர். பிறகு மூன்று மணிக்கு மேல் மாலை வகுப்புகளில், மொழி, வரலாறு, புவியியல், அறிவியல், நீதிநூல், இசை இடம்பெறும். மாலையில் விளையாட்டு, தோட்டவேலை, வயல்வேலை, பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல் போன்றவை இருக்கும்.

மாலை 6.30 மணிக்குக் கை, கால் கழுவி, மாணவர்கள் சிறிதுநேரம் துதிப்பாடல்கள் பாடுவர். அதன் பிறகு சிறு சொற்பொழிவு, இரவு உணவு. பின்னர் மாணவர்கள் அரிக்கேன் விளக்கொளியில் பாடம் படிப்பர். அதற்குப் பின் இரவு நடை. அப்போது ஐயர் தேசப்பற்றை ஊட்டும் சம்பவங்களைச் சொல்லுவார். அதன் பின் மாணவர்கள் உறங்கச் செல்வர். இதுதான் நித்திய வழக்கம். அவ்வப்போது காந்தி, திலகர் போன்றோரது பிறந்த நாட்களையொட்டி விழாக்கள் நடக்கும். ராஜாஜி போன்ற தலைவர்கள் வந்து உரையாற்றுவார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களை அருவி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், ஆலயங்கள் போன்றவற்றிற்குச் சுற்றுலா அழைத்துச் செல்வார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline