Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
Tamil Unicode / English Search
முன்னோடி
முனைவர். கணபதி சண்முகம்
- ஜெயா மாறன், திருமதி. கீதா வைதீஸ்வரன், திரு. வைதீஸ்வரன்|ஆகஸ்டு 2018|
Share:
ஜூன் 30, 2018 அன்று, மண்ணியல் (Geology) துறையின் முதல் இந்தியராக, வியத்தகு சாதனைகள் பல செய்து, பல விருதுகளைப் பெற்றுள்ள ஆழ்கடல் படிவியலாளர் (Deep-water Sedimentologist) முனைவர். கணபதி சண்முகம்அவர்களைப் பாராட்டி, "அமெரிக்கத் தமிழ் முன்னோடி" விருதைக் கொடுத்து கௌரவித்தது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA).

தமிழ் நாட்டில் உள்ள சீர்காழியில் 1944ல் திரு. கணபதி அய்யாவுக்கும், திருமதி. சம்பூர்ணம் அம்மாவுக்கும் மூத்த பிள்ளையாகப் பிறந்து வளர்ந்து, 1970ல் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார் கணபதி சண்முகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (Geology & Chemistry) படிக்கையில் ஓயாத ஆஸ்துமா தொல்லை. இரவு முழுதும் தூங்கமுடியாது. அந்த இரவு நேரத்தைக் கடத்துவதற்காகப் பாடங்களில் கவனத்தைத் திருப்பினார். அவரே ஆச்சரியப்படும்படி முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறைத்தலைவர் திரு. முத்துசாமி, அவரை IITயில் மேற்படிப்புக்குப் போகச் சொல்லித் தீவிரமாக ஊக்கப்படுத்தினார். பின் IIT-பாம்பேயிலும் (Applied Geology), ஒஹையோ பல்கலையிலும் (Geology) முதுகலைப் பட்டங்கள் பெற்று, டென்னஸி பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் படிக்கும் காலத்திலேயே பகுதிநேர வேலை செய்து தன்னுடைய (சிறிய தங்கை சாவித்திரி 6 வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட) மூன்று தங்கைகளுக்கும் (தனலட்சுமி, சரஸ்வதி, சந்திரா) திருமணம் செய்துவைத்த இவர், அமெரிக்கக் கலாசாரப்படி முறையாக இரண்டு வருடங்கள் டேடிங் செய்து நாக்ஸ்வில்லைச் சேர்ந்த ஜீன் மரி பர்ஹம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

"கடலுக்கடியில் உள்ள படிமானப் படுகைகள் வண்டல் மண் நீரோட்டத்தினால் (turbidity currents) உருவானவை" என்று பரவலாக நம்பப்பட்ட கருத்தை உடைத்து, "கடலடிப் படிமானங்கள், இயற்கையினால் அடர்த்தியான வண்டல் மண் நகர்ந்து (debris flows), உயர் அழுத்தத்தினால் உருவானவை" என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தினார். இது பெட்ரோலிய ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பெட்ரோலைக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் செலவு செய்து பல இடங்களில் துளையிடுவது இதனால் நின்றது. சரியான இடத்தில் துளையிட்டு எண்ணெய் எடுக்க உதவியது. இந்தச் சாதனை Mobil நிறுவனத்தில் (1978) மண்ணியல் ஆய்வாளர் (Research Geologist) பதவியை சண்முகம் அவர்களுக்குப் பெற்றுத் தந்தது. மண்ணியலின் பல்வேறு உட்பிரிவுகளில் 22 ஆண்டுகள் ஆய்வுகளும் பணியும் செய்து தலைமை மண்ணியல் விஞ்ஞானி (Geological Scientist) ஆனார். நிறுவனத்தின் இந்தப் பதவியை வகித்த ஒரே இந்தியர் என்ற பெருமையுடன் 2000ஆம் ஆண்டு சண்முகம் ஓய்வுபெற்றார். ஆனால் அறிவியல் உலகம் இவரை ஓய விடவில்லை.

டெக்சஸ் பல்கலையின் (ஆர்லிங்டன்) அழைப்பின் பேரில் 2003-04 ஆண்டுகளில் அங்குப் படிவியல் மற்றும் பாறை அடுக்கியல் (Sedimentology & Stratigraphy) வகுப்புகளை நடத்தினார்.

2010-11 ஆண்டுகளில் சீன பெட்ரோலியம் ஆராய்ச்சிக் கழகத்தில் (RIPED) பெய்ஜிங்கில் விஞ்ஞான ஆலோசராக இருந்துள்ளார்.

380க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வகித்துள்ள பதவிகள்:
Journal of Paleogeography (Elsevier) - இணைப் பதிப்பாசிரியர் Petroleum Exploration & Development (Elsevier), Journal of Indian Association of Sedimentologists - ஆசிரியர் குழு உறுப்பினர்

ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானப் புத்தகங்களை வெளியிடும் உலகின் தலைசிறந்த Elsevier's பதிப்பகம், இவருடைய இரண்டு Elsevier's Handbook of Petroleum Exploration and Production 2006, 2012 (ஆங்கிலம் மற்றும் சீனப் பதிப்புகள் உள்பட) நூல்களை வெளியிட்டுள்ளது. முதன்முறையாக மண்ணியல் துறையில் ஒரு இந்திய விஞ்ஞானியின் புத்தகத்தை இந்தப் பதிப்பகம் வெளியிட்டது நமக்குப் பெருமை தருவதாகும்.

விருதுகள்:
முதுகலையில் முதல் மாணவர் IIT விருது - 1968
NAPE (Nigerian Association of Petroleum Exploration) - சிறந்த ஆய்வறிக்கை விருது (1995)
Millennium Edition of Marquis Who's who in Science and Engineering - 40 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 470 மண்ணியலாளர்களில் ஒரே இந்தியர் (2000)
Sedimentary Research இதழில் வெளியான 'High-density turbidity currents: Are they sandy debris flows?' என்னும் இவருடைய ஆய்வறிக்கை மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரே ஆய்வறிக்கையாக அறிவிக்கப்பட்டது (1996)

சமீபத்தில், படிவியல் ஆய்வுத்துறையில் இவருடைய நீண்ட வெற்றிகரமான பயணத்தைப் பாராட்டி, 2018ம் ஆண்டுக்கான தொழில்முறைச் சாதனை விருதை டென்னசி பல்கலை அறிவித்துள்ளது. விருது வழங்கும் விழா இவ்வாண்டு செப்டம்பர் 21 அன்று நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கு உதவி
டென்னசி பல்கலை, IIT-பம்பாய் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் நிதி அறக்கட்டளை அமைத்து, மாணவர்களுக்குக் கல்வியுதவி, நூலக மேம்பாடு, புதிய கட்டடங்களைக் கட்டுதல் போன்ற பல பணிகளைச் செய்து வருகிறார். இந்தியாவில் பல பயிற்சி முகாம்களை நடத்தியும், ஆராய்ச்சி மாநாடுகளில் சிறப்புரைகள் ஆற்றியும் வருகிறார். தனது ஆய்வும் அறிவும் பலருக்கும் பயன்பட வேண்டுமென்கிற நல்லெண்ணத்தில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், நைஜீரியா, இத்தாலி, நார்வே, சௌதி அரேபியா, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமது ஆராய்ச்சிகளைப் பற்றி உரையாற்றி வருகிறார். சீர்காழியில் 1995 முதல் 2008 வரை ஆண்டுக்கொரு முறை ஆயிரம் மாணவர்களுக்குச் சீருடையும், பாடப்புத்தகங்களும், உணவும் வழங்கி வந்திருக்கிறார். கைம்பெண் மறுவாழ்வுக்காகத் தன்னை அணுகும் எவருக்கும் உதவி வருகிறார்.

தனது ஆராய்ச்சிகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் மனைவி ஜீனுடன் டெக்சஸின் இர்விங்கில் வசித்து வரும் இவர், சிறுவயதில் ஆஸ்துமாவால் தூங்க முடியாமல் சிரமப்பட்ட போது இரவு முழுவதும் தனக்கு விசிறிக்கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்த தாயார், பிற்காலத்தில் "இந்த மாதிரி ஒரு பிள்ளையை பெத்து வளர்ப்பது எப்படின்னு சொல்லுங்க?" என்று ஊர்க்காரர்கள் கேட்க, தன் மகனை நினைத்துப் பெருமிதப்பட்டதை இன்றும் நினைவுகூர்கிறார்.

Click Here EnlargeClick Here Enlarge


பலகோடி வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்து வெளித்தோன்றிய உயரமான மலைகளையும் (Appalachian, Alps, Ouachita) பாறைகளையும் பற்றித் தனியாகவும், ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்றும் பல ஆராய்ச்சிகளைத் திறம்பட மேற்கொண்டார். American Association of Petroleum Geologists வெளியிடும் செய்தியறிக்கையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார் டாக்டர். சண்முகம். அந்த வெளியீடு அவர் எடுத்த ஆறு மண்ணியல் புகைப்படங்களை முதல் பக்கத்தில் வெளியிட்டுக் கௌரவித்துள்ளது. 'The Landslide Problem' என்று கூகுளில் தேடினால் 12 மில்லியன் ஆய்வறிக்கைகளில் இவருடையதுதான் முதலில் வரும். இவருடைய பெரும்பாலான ஆய்வறிக்கைகளை/வெளியீடுகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள, வலைப்பக்கம்:
Deep-water processes
Research Gate
UTA Profile

தடைக்கல்லைப் படிக்கல் ஆக்குங்கள்
ஒரு சராசரி மாணவனாக இருந்த காலத்தில். ஆஸ்துமா பறித்த தூக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அதைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டதால்தான் இந்த அளவுக்குச் சாதிக்க முடிந்தது என்று திடமாக நம்பும் இவரது தாரக மந்திரம்: "Convert Obstacle into Opportunity". டாக்டர். கணபதி சண்முகம் போன்ற அமெரிக்க முன்னோடிகள் உலகத்தின் வழிகாட்டிகள்.

எழுத்து: ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா
உதவி: திருமதி. கீதா வைதீஸ்வரன், திரு. வைதீஸ்வரன்
Share: 
© Copyright 2020 Tamilonline