Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
Tamil Unicode / English Search
முன்னோடி
வ.த. சுப்பிரமணிய பிள்ளை
- பா.சு. ரமணன்|ஜூன் 2018|
Share:
"பூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித்
தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும்
மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடி
யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய வேந்தல்சீ ரியம்புறற்பாற்றோ.."

மேற்கண்டவாறு புகழ்ந்துரைத்தவர் உ.வே.சா. புகழ்ந்துரைக்கப்பட்டவர் வ.த. சுப்பிரமணிய பிள்ளை. புகழ்ந்துரைக்கப்பட்டதற்குக் காரணம், ஆயிரக்கணக்கான திருப்புகழ்ப் பாடல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டு வெளியிட்டதுதான். சுப்பிரமணிய பிள்ளைக்கு முன் ஒரு சிலர் திருப்புகழின் சில பாடல்களை அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொகுத்து வெளியிட்டு வந்த வேளையில், ஆயிரக்கணக்கான திருப்புகழ் பாடல்களைத் தேடித் தொகுத்து நூலாக்கி அவை பலருக்கும் கிடைக்கக் காரணமானவர் வ.த. சுப்பிரமணிய பிள்ளைதான். உ.வே.சா., தமிழ்ச் சுவடிகளைத் தேடித்தேடிப் பதிப்பித்தது போல, பிள்ளை, திருப்புகழ்ச் சுவடிகளை தேடித்தேடித் தொகுத்துப் பதிப்பித்தார். அதனாலேயே உ.வே.சா. மனமுவந்து இவரது பணியைப் பாராட்டி வாழ்த்தினார்.

வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை என்னும் வ.த. சுப்பிரமணிய பிள்ளை, செங்கல்பட்டில், 1846 டிசம்பர் 11ம் நாளன்று தணிகாசலம் பிள்ளை-இலக்குமியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை அருணாசலேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். திருத்தணிகை முருகன் இவர்களது குலதெய்வம். தந்தைவழியே தனயனும் இளவயதிலேயே ஈசன் மீதும் முருகப்பெருமானின் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தனி ஆசிரியர் மூலம் வீட்டிலேயே இவருக்கு ஆரம்பக்கல்வி போதிக்கப்பட்டது. தமிழும் தெலுங்கும் பயின்றார். 1857ல் செங்கல்பட்டு மிஷன் ஸ்கூலில் உயர்கல்விக்காகச் சேர்க்கப்பட்டார். படிப்பை முடித்ததும் அங்கேயே சில ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். மிகக் குறைந்த ஊதியம்தான் என்றாலும், குடும்பச் சூழ்நிலையால் அப்பணியை மேற்கொண்டார். இந்நிலையில் பள்ளி ஆய்வுக்காக வந்த மில்லர் துரை இவரது திறமையைக் கண்டு சென்னைக்கு வருமாறும், மாகிண்டோஷ் ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தாம் தகுந்த வேலை வாய்ப்புக்கு உதவுவதாகவும் வாக்களித்தார்.

அவ்வாறே சென்னை வந்து தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார் பிள்ளை. மில்லர் துரையும் தாம் வாக்களித்தபடி இவருக்கு மாதம் எட்டு ரூபாய் ஸ்காலர்ஷிப் தொகை கிடைக்கும்படிச் செய்தார். தொடர்ந்து U.C.S. தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றார். பின்னர் F.A. வகுப்பில் சேர்ந்து, அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பி.ஏ. படிக்க ஆசையிருந்தும் வசதி இல்லாததால் செய்யவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மில்லர் துரையின் பரிந்துரையின் பேரில், ஸ்காட்லாண்ட் மிஷன் பள்ளியில் ஆசிரியப்பணியில் சேர்ந்தார். 1868ல் வள்ளியம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. சென்னையில் வசித்து வந்த இவருக்கு அடிக்கடி உடல்நலம் குறைந்ததால், ஆசிரியர் பணியிலிருந்து விலகி, மில்லரின் நண்பர் ஹாட்ஸன் துரையின் பரிந்துரையின் பேரில் மஞ்சக்குப்பம் கோர்ட்டில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

அருகில் இருந்த சிதம்பரம் தலத்திற்கு அடிக்கடிச் சென்று தரிசனம் செய்து வருவது சுப்பிரமணிய பிள்ளையின் வழக்கம். ஒருசமயம் சிதம்பரம் தீக்ஷிதர்கள், ஒரு வாதத்தின் போது தங்கள் பெருமையை நிலைநாட்ட பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி வாதித்தனர். அதில்,

"வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே"

என்ற திருப்புகழ்ப் பாடலை எடுத்துக் காட்டி, நடராஜப் பெருமானைப் பூசிக்கும் தங்களைப்பற்றி அருணகிரிநாதர் மிக உயர்வாகப் பாடியிருப்பதைக் கூறி வாதில் வென்றனர். அந்தப் பாடலின் சந்த நயமும், சிறப்பும் பிள்ளையை மிகவும் கவர்ந்தன. இப்பாடல் அருணகிரிநாதர் அருளிய 'திருப்புகழ்' என்பது தெரிந்தது. உடனே அதைச் சேகரித்து நூலாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதுமுதல் திருப்புகழ் சுவடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். இது குறித்துத் தனது நாட்குறிப்பில் அவர், "இன்று 'நல்வெள்ளிக்கிழமை' என்னும் பண்டிகை நாள். அருணகிரிநாதருடைய திருப்புகழ்ப் பாடல்களை ஓலைப் புத்தகங்களினின்றும் பெயர்த்தெழுத இன்று ஆரம்பித்தேன். எவ்வளவு பாடல் சேகரிக்கக் கூடுமோ அவ்வளவு சேகரித்து, நல்ல தமிழ் வித்துவானால் அவைதமைத் திருத்துதல் என் கருத்து. இம்முயற்சி நிறைவேறக் கடவுளே அருள்புரிய வேண்டும்" என்று எழுதியுள்ளார். மற்றொரு குறிப்பில், "திருப்புகழ்ப் பாட்டுக்களைச் சேகரஞ்செய்து வருகின்றேன். முருகப்பெருமானுடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரம் பாடலாவது திருத்தமாக அகப்பட்டால் அச்சிட்டு விடலாம். ஜனோபகாரமாயும் வெகு புண்ணியமாயுமிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இக்காலகட்டத்தில் இவர் "முன்சீஃப்" (Civil Higher Grade) தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார்.

பல இடங்களுக்கு அலைந்தும், நண்பர்கள் மூலம் விசாரித்தும் திருப்புகழ்ச் சுவடிகளைச் சேகரிக்கத் துவங்கினார். உ.வே.சா.வுடன் தொடர்பு கொண்டு திருப்புகழ்ச் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டினார். பின்னும் பல தமிழறிஞர்களுக்கு கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்தார். இடைப்பட்ட காலத்தில் "பிரச்னோத்திர காண்ட வசனம்" என்ற நூலை எழுதி அச்சிட்டார். 1879ல் வெளியான இதுவே அச்சில் வந்த அவரது முதல் நூலாகும். சிலகாலம் தலைமை எழுத்தராகப் பணியாற்றிய பின்னர் 1882ல் கடலூருக்கு மாவட்ட முன்சீஃப் ஆக நியமிக்கப்பட்டார். வேத வேதாந்த விளக்கங்கள் குறித்தும், ஆங்கில நூல்கள், கட்டுரைகள் குறித்தும் இவர் 'ஜனவிநோதினி' உள்ளிட்ட சில இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அவை அறிஞர்களால் பாராட்டப்பட்டன. தொடர்ந்து சோளிங்கர், விழுப்புரம் உள்ளிட்ட சில இடங்களில் பணியாற்றிய பின்னர் நாமக்கல்லில் முன்சீஃப் பொறுப்பேற்றார்.
சுப்பிரமணிய பிள்ளை, எங்கு வேலைக்குச் சென்றாலும் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தினந்தோறும் நாட்குறிப்பு எழுதி வந்தார். நாமக்கல்லில் முன்சீஃப் பொறுப்பேற்ற பின்னர், மே 31, 1888ல் அவர் எழுதிய குறிப்பு இது: "It is starnge and it is much to be regretted that in such a large town as Namakkal there is not a siva temple or any saiva temple. There is a பிள்ளையார் in a shed near the pond; this all for the Saivas of the place." (பெரிய ஊராகிய இந்த நாமக்கல்லில் ஒரு சிவன் கோயிலோ சைவக் கோயிலோ இல்லாதிருப்பது ஆச்சரியமாகவும் மெத்த வருத்தத்தைத் தரத்தக்கதாயும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பிள்ளையார் இருக்கிறார்; இவரே இவ்வூர்ச் சைவர்களுக்குள்ள மூர்த்தி.) நாமக்கல்லில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்பு இவருக்கு கும்பகோணத்துக்கு மாற்றல் ஆனது. கும்பகோணம் நகர் இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. காரணம், அங்கிருந்த கோயில்கள். இது குறித்து அவர் தனது நாட்குறிப்பில், "I am glad that there are so many சிவஸ்தலங்கள் near கும்பகோணம் and that i make good use of each sunday in visiting a temple. (கும்பகோணத்துக்கருகில் இவ்வளவு சிவஸ்தலங்கள் இருப்பது எனக்கு ஆநந்தமாயிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு ஸ்தலமாவது தரிசித்து என் வாழ்நாள் பலன்படுகிறது) என்று எழுதியிருக்கின்றார்.

கும்பகோணத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் சில ஆண்டுகாலம் வசித்தார். அங்கிருக்கும்போது திருப்புகழை அச்சிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். நண்பர்கள் அளித்த சுவடிகளைக் கொண்டும், சுவடிகளை ஒப்பு நோக்கியும், அனந்தராம ஐயர், கடலூர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை போன்ற புலவர்கள் பலரது ஆதரவுடன், 1300 பாடல்களைக் கொண்ட தொகுப்பாக, 1895 ஏப்ரலில் திருப்புகழ் முதற்பாகம் அச்சிட்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி இவ்வளவு ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர்தான் சாத்தியமானது. அந்தத் தொகுப்பிற்கு தமிழறிஞர்களிடையே மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. அடுத்த பாகம் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தையும் பிள்ளைக்கு உண்டாக்கியது. உடனே அந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் இவர் எழுதிய 'திருத்துறைப்பூண்டி ஸ்தல புராணம்' என்னும் நூல், அவ்வூர் தேவஸ்தானத்தாரால் வெளியிடப்பட்டது.

தான, தர்மங்களில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. பல்வேறு மடங்களுக்கும், ஆலயங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். விளக்குகள் அளிப்பவது, பாத்திரங்கள், ஆலயமணிகள், வேல், ஆபரணங்கள் போன்றவற்றைத் தருவது, ஆலயங்களைப் புதுப்பிப்பது, கவனிப்பின்றி இருக்கும் தெய்வச் சிலைகளை ஆலயங்களில் பிரதிஷ்டை செய்வது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்தார். மதுரையில் இருக்கும் பழமுதிர்சோலை ஆலயம் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டு வருந்தி அதைச் சீர்செய்வதில் முன்னின்றவர் பிள்ளை. சைவப் பணிக்காகவே பிறந்த நகரத்தார்களுக்கு இவர் "நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுக்கு ஓர் விண்ணப்பம்" என்பதை எழுதி அனுப்பி ஆலயத்தைச் சீர்த்திருத்துமாறு வேண்டிக் கொண்டார். இவர் முயற்சியின் பேரில் நாளடைவில் ஆலயம் சீரமைக்கப்பட்டு சிறப்புப் பெற்றது. மாதக் கார்த்திகை தினங்களில் தவறாது முருகன் ஆலயத்திற்குச் செல்வதும், அவன்மேல் புகழ்ந்து பாடல் பாடுவதும் இவர் வழக்கமாக இருந்தது. தினமும் தவறாமல் 32 முறை 'தணிகையன் துணை' என்று எழுதியபின் தணிகேசன் மீது பாடல் பாடுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

மண்ணாசை யென்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி
எண்ணா துனை மறந் தேயிருந் தேனினி யாகிலுமென்
அண்ணாவுன் றன்பொன் னடிக்கம லம்வந் தடையும் வண்ணந்
தண்ணா ரருள்புரி யாய்தணி காசல சண்முகனே."

என்று திருத்தணிகை முருகன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சிவபெருமான், உமையம்மை, மகாவிஷ்ணு, விநாயகர், நால்வர்மீதும் இவர் பல்வேறு காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை, திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் போன்றவை இவரால் அச்சிடப்பட்ட குறிப்பிடத் தகுந்த படைப்புகளாகும். ஓய்வு நேரத்தில் பல சுவடிகளை ஆராய்ந்து பல ஸ்தல புராணங்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், மானாமதுரை ஸ்தல புராணம், திருநீடூர் தல புராணம் போன்றவை குறிப்பிடத்தக்கன. இவரது அரிய தமிழ்ப் பணியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் பாராட்டி, சேலம் கல்லூரி தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளை தனது வாழ்த்துரையில்,

"நிறைமதியன் மெய்ப்புகழ்சேர் நீதிபதி யதிகார நிகழ்த்து மேலோன்
நறையொழுகு கடம்பணிவே ளடிபணிசுப் பிரமணிய நயவான் மன்னோ..."

என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்துகொண்டு ஏகாம்பரநாதரைத் தரிசித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது. 274 பாடல் பெற்ற தலங்களில் 176 இடங்களுக்குச் சென்று தரிசித்த பெருமையும் இவருக்கு உண்டு. மாவட்ட முன்சீஃப் ஆக இருந்த பொழுது இவர் அளித்த தீர்ப்புக்கள் மிகவும் பாராட்டப்பட்டன. நாகப்பட்டினம் சப்ஜட்ஜ் ராமசாமி ஐயங்கார், ஜட்ஜ் வியர் துரை உள்ளிட்ட பலர் இவரது தீர்ப்புக்களைப் பாராட்டியுள்ளனர். இவருடைய பொறுமை மற்றும் கடமை உணர்ச்சியைக் கண்டு ஆங்கிலேய அதிகாரிகள் மில்லர், ஹட்சன், ஆண்டர்சன் உள்ளிட்ட பலரும் இவரைப் பாராட்டிப் பத்திரம் அளித்துள்ளனர்.

மதுரை, மானாமதுரை போன்ற இடங்களில் முன்சீஃப் பணியாற்றிய பிள்ளை, 1901ல் பணி ஓய்வு பெற்றார். தமது இறுதிக் காலம் முழுக்கத் திருப்புகழ் பாடல்களைத் தொகுப்பதிலேயே ஈடுபட்டார். 1902ல் திருப்புகழ் இரண்டாம் பாகத்தை அச்சிட்டு வெளியிட்டார். 'சுந்தர விளக்கம்' (1904), 'சிவஸ்தல மஞ்சரி' (1905) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார். 'சிவஸ்தல அகராதி'யாகக் கருதப்படும் அந்த நூலை உ.வே.சா., வள்ளல் பாண்டித்துரைத் தேவர் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டியிருந்தனர். திருத்தணி மீதான திருப்புகழையும் தனியாக அச்சிட்டு வெளியிட்டார். தொடர்ந்து திருப்புகழ் மூன்றாவது பாகத்தைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அது நிறைவேறவில்லை. ஏப்ரல் 17, 1909ல் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவில் ராஜகோபுரத்தை நோக்கியவாறு அமைக்கப்பட்டது. நந்தியும் லிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமாதிக் குறிப்பில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க படம்)

இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து தந்தையின் வழிநின்று தொடர்ந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்' என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார். சுப்பிரமணிய பிள்ளையின் மகனான வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்' என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.

தமிழும் சைவமும் மறக்கக் கூடாத முன்னோடிகளுள் முக்கியமானவர் வ.த. சுப்பிரமணிய பிள்ளை.

(தகவல் உதவி: வ.சு.செங்கல்வராய பிள்ளை எழுதிய 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்')

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline