Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மழைக்குப் பின் தீவுகள்
- தமயந்தி|மார்ச் 2018|
Share:
எவ்வளவு நேரம் யாருமில்லாத சூன்யத்தை வெறிக்கமுடியும் என்று தெரியவில்லை. டி.வி.யில் யாரோ எதையோ பற்றி நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தார். மனம் அதில் லயிக்கவில்லை.

வயிறு ஒரு பிசாசைப்போல பசித்தது. ஃப்ரிட்ஜில் குழம்பு இருந்தது. எடுத்துச் சுடவைக்க வேண்டும். அப்பளம் சுட்டு வைத்திருந்தாள் மைதிலி. ஊறுகாய் ஆகாது. கற்பகம் எழுந்தாள். டி.வி.யின் மேல் ஸ்விட்சை அணைத்தால் போதும் என்று ஸ்ரீநிவாசன் சொல்லியிருக்கிறான்.

சாயந்தரம்தான் குழந்தை வருவான். மூன்றரைக்கு வேன் வந்து விட்டுப்போகும். மைதிலிக்கும், ஸ்ரீநிவாசனுக்கும் ஆபீஸ்விட்டு வர ஆறு மணி ஆகிவிடும். மூன்றரை மணியிலிருந்து குழந்தைகூட இருக்கத்தான் கற்பகம் வர வேண்டியதாயிற்று.

கிராமத்தை விட்டு வருவது அவ்வளவு லேசான விஷயமாயில்லை அவளுக்கு. ஓட்டு வீடும், சுற்றின தோட்டமும், வயல்களும், மாடுகளுமாய் அதன் சுவாசம் வேறு. வாழ்க்கை அங்குதான் நகர்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது அவளுக்கு.

இங்கு காலையில் மைதிலி வாசல் தெளிப்பதில்லை. ஏன், வாசலே இல்லை. எதிர் ஃப்ளாட்டில் யாரோ ஆடிட்டர் இருப்பதாக மைதிலியும், ஸ்ரீநிவாசனும் பேசிக் கொண்டார்கள்.

போன வாரம் ஸ்ரீநிவாசன் வெளியே போகும் சமயம் கதவைச் சாத்த வரும்போது, அந்த ஆடிட்டரின் மனைவி கதவில் கரையான் போக மண்ணெண்ணெய் அடித்துக் கொண்டிருந்தாள். கற்பகம் அவளைப் பார்த்துச் சிரித்தாள். அவள் நிமிரவே இல்லை.

"கரையான் வச்சிருக்கோ" என்றாள்.

அதற்கும் பதிலில்லை.

பிறகு அவள் மண்ணெண்ணெய் தெளித்தபிறகு, எழுந்து உள்ளே போய் கதவைச் சாத்திக் கொண்டாள். கற்பகத்துக்குக் கொஞ்சம் அவமானமாகக் கூட இருந்தது.

"இங்க யாருமே பேசிக்க மாட்டாங்களா?"

இரவு டி.வி. பார்க்கும்போது கற்பகம் மெல்லக் கேட்டாள். காரத்தூள் தூவின உருளைக்கிழங்கு சிப்ஸைக் கொறித்துக் கொண்டே "ஏன் பேசணும்?" என்றாள் மைதிலி.

குழந்தை அவன்பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தான்.

"இது வேற லைஃப்மா. நம்ம வாழ்க்கை. நம்ம பிரச்னை, நம்ம சந்தோஷம், தட்ஸ் ஆல்."

சொன்ன ஸ்ரீநிவாசனைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. எப்படி வளர்ந்தவன் அவன்! மனிதர்களின் மத்தியில் வளர்ந்தவன். ஆற்றில் மூழ்கி நீர்யானை மாதிரி குளித்தவன். புளியங்கொட்டைகளை மடிநிறைய ஏந்தி 'உஸ் உஸ்' என்று சாப்பிட்டு யானைக்கதை கேட்டவன். மறந்து விட்டானா? பழசின் நினைவுகளை தூரதேசம் அனுப்பி விட்டானா?

ஃப்ரிட்ஜில் குழம்பை எடுத்துச் சுடவைத்தாள். வெறும் அப்பளம் கூட்டாகத் தோன்றவில்லை. உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கூட்டும், கறியுமாய் வளர்த்த நாக்கு, வெறும் அப்பளத்தில் திருப்தியடையாதுதான். பாவம் மைதிலி, காலையில் எழுந்து பரபரவென்று ஏதோ செய்கிறாள். ஏதோதான். வந்த புதிதில் கற்பகமும் காய் வெட்டிக் கொடுத்தாள். கால் கிலோ காய்வெட்டவே கற்பகத்துக்கு அரைமணி நேரமாயிற்று. ஒன்றுபோல, முத்துமுத்தாய் வெட்டிய கறி சாப்பிடும் போது ஸ்ரீநிவாசன் சொன்னான்.

"அம்மா எவ்ளோ அழகா காய் வெட்டிருக்கா பாரேன்."

"வெட்டலாம். அது ஒண்ணுதான் வேலைனா, மனுஷா எதையும் அழகா செய்யலாம்."

மைதிலி சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால், ஏதோ உள்மனதில் தைத்தது. அதற்குப் பிறகு, மைதிலி காய் வெட்டச் சொன்னதில்லை. முடிந்தால் காய் செய்வாள். இல்லையென்றால், அப்பளம்தான். போன வாரம் முழுக்க உடம்பு சரியில்லையென்று அப்பளம்தான் பொரித்திருந்தாள்.

ஒருநாள், தலைக்கு ஊற்றிவிட்டு, புடவை மாற்றும் போது பீரோ கண்ணாடியில் முகத்திற்கு பதில் அப்பளம் தெரிந்தாற் போலிருந்தது. சட்டென்று தன்னையே உலுப்பிக் கொண்டாள்.

வாழை இலை போட்டு சப்பணமிட்டு உண்ட உணவு நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் ஸ்ரீநிவாசனுக்கு தோசைகூட வாழை இலையில்தான் இட வேண்டும். நல்லெண்ணெய் சுற்றிவிட்டு முறுகிய தோசை. செக்கு எண்ணெய்தான் வேண்டும். வாழை இலையில் தோசையைப் பிட்டு, சட்னியில் தோய்த்து ஸ்ரீநிவாசன் சாப்பிடுவது ஞாபகம் வந்தது.

இப்போது ஹாட்பேக்கில் வைத்த பாதி ஆறிய தடிமனான தோசைகளை எந்தவித அலுப்பில்லாமலும் சாப்பிட்டுப் போகிறான். அவனே தட்டைக் கழுவி, மேஜை விரிப்பான்களை விரித்தும் விடுகிறான். குழந்தைக்குக் கூட காலையில் பாக்கெட்டில் உள்ள உருட்டை தானியத்தில் வெதுவெதுப்பான பாலை விட்டுத்தான் மைதிலி கொடுக்கிறாள். இரவில் டி.வி. பார்த்தபடி ஏதோ திணிக்கிறாள். நிலா பார்த்து கதை சொல்லி ஊட்டினால் குழந்தை சாப்பிடுவான்.

சொன்னால் மைதிலி முகம் சுளிப்பாளோ என்கிற பயத்திலேயே எதுவும் சொல்வதில்லை.

கயிற்றுக்கட்டிலில் வேப்பமர நிழலில் காற்று வாங்கிய உடலுக்குத்தான் இந்த நாலு சுவருக்குள் உள்ள வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. ஏர்கூலர் என்று பெரிதாக ஒரு மெஷின் போல ஏதோ வைத்திருந்தார்கள். அது வெப்பத்தைச் சுழற்றி விடுவதாகவே கற்பகத்துக்குத் தோன்றிற்று.

மொட்டைமாடியில் போய் நிற்பதை ஸ்ரீநிவாசன் விரும்பவில்லை என்று வந்த இரண்டு நாட்களிலேயே தெரிந்து கொண்டாள். "மொட்டை மாடி வேணாம்மா, குழந்தையும் வருவேனு அடம்பிடிக்கிறான். மத்தக் கொழந்தைகளும் வரும், கெட்டுருவான்."

மற்ற குழந்தைகளோடு பழகுவது ஸ்நேகத்தை அதிகரிக்கக் கூடுமேயன்றி, கெடுவதற்கான வழியல்லவே? பழகுதல், அறியப்படுவதின் அர்த்தம் அல்லவா? மனிதன், மனிதனை அறிந்து கொள்வதுதானே வாழ்வின் பொருள்? எட்டி எட்டித் தீவுகளாய், எப்படி மனிதம் உயிர் வாழும்? கற்பகம், ஸ்ரீநிவாசனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீ நினைக்கிற உலகம் இதில்லம்மா. இது நச்சு. ட்ரக்ஸ், பொலூஷன் எவ்ளோ இருக்கு.."
"ம்.."

"படம் ஏதும் எடுத்து வரவா? பார்க்கறியா?"

"வேணாம் ஸ்ரீநிவாசா."

படத்தில் என்ன இருக்கிறது? அரைகுறை ஆடையோடு மழையில் நனைகிறார்கள். காதல் நிறைவேறினதும் முற்றும், மீண்டும் வரும் என்கிறார்கள். காதல் திருமணத்துக்குப் பிறகான நிதர்சன வாழ்விலிருந்து எந்தப் படமாவது, தமிழ் சினிமாவாவது தொடங்கி இருக்கிறதா? இல்லையென்றால், கொலை செய்வதற்கான வழிமுறைகள் இவை இவையென்று சொல்லிவிட்டு இறுதியில், 'வன்முறை வழியல்ல' என்று கார்டு போடுகிறார்கள்.

"பாலைச் சுடவச்சு குழந்தை வந்ததும் கொடுத்துருங்க அத்தே."

"சரி மைதிலி. பார்த்துப் போ."

மைதிலி பளீரென்று ஸ்நேகமாகச் சிரித்தாள். அழகுப் பெண்தான். நல்ல பெண்தான் என்று அந்த நிமிடம் மனதுள் ஏதோ தோன்றிற்று. அவர்கள் போய் அரைமணி நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்பட்டது. யாருமில்லாத நேரத்தில் கதவு தட்டப்பட்டால் இதில் கண் வைத்துப் பார் என்று ஸ்ரீநிவாசன் காட்டின இடத்தில் வலது கண்ணை வைத்துப் பார்த்தாள். யாரோ ஒருவன், டை கட்டி நின்றிருந்தான்.

"என்ன வேணும்?" என்றாள்.

"வந்து... சார் இருக்காரா?"

"யார் நீங்க? என்ன வேணும்?"

"குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்கும் பிரதிநிதி நான்."

"என்ன பொருட்கள்?" என்றாள் ஆவலுடன். மனதில் குழந்தைக்கு ஏதாவது வாங்கலாம் என்கிற ஆசை துளிர்விட்டது. சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் காட்டினால், சந்தோஷப்படுவான்.

"எல்லா வகை பொம்மைகளும், வெளியே வர முடியுமா?"

"இதோ."

சாவி போட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவன் இரு கூடைகள் நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருந்தான். கரடி பொம்மைகள், சிங்கம், புலி, மான் என்று ஏராளமானவை வசீகரிக்கும் வண்ணங்களில் இருந்தன. குழந்தை இருந்திருந்தானானால், சந்தோஷப்பட்டிருப்பான். அவனே தேர்ந்தெடுக்கவும் கூடும். கற்பகம் மிகுந்த ஆவலுடன் பொம்மைகளைத் தேர்ந்தெடுத்தாள்.

திடீரென்று அந்தப் பிரதிநிதி நிற்க முடியாமல் விழுந்தான். கையும் காலும் வெட்டி வெட்டி இழுத்தது. வாயில் நுரை தள்ளியது.

"ஈஸ்வரா" என்று கற்பகம் பதறினாள்.

பொம்மைகளைக் கீழே போட்டுவிட்டு கதவிலிருந்த சாவிக்கொத்தை அவன் கைகளுக்குள் திணித்தாள் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வாய்க்குள் பையிலிருந்த சிறுதுணியைத் திணித்தாள். மெல்ல அவனது இழுப்பு குறைந்தது. எழுந்து உட்கார்ந்தவனை உள்ளே வரச் செய்து, காப்பி கொடுத்தாள். அவன் ஆயாசமாய் நன்றி கூறி விடைபெற்றான்.

திரும்பவும் கதவைச் சாத்தும்போதுதான் எதிர்வீட்டுக் கதவு இத்தனை களேபரத்திலும் திறக்கப்படவே இல்லை என்கிற உண்மை முகத்திலடித்தது. அதைவிட குழந்தைக்கு பொம்மையும் வாங்கவில்லை என்பதும் மனதை வருந்தச் செய்தது.

சாயந்தரம் மைதிலியும் ஸ்ரீநிவாசனும் இவள் சொன்னதைக் கேட்டு வருத்தப்பட்டார்கள்.

"யாரோ எவனோ, ஏன் கதவைத் திறந்தே?"

"உள்ளே வேற விட்டு, காப்பி கொடுத்தீங்களா? என்ன என்ன போச்சோ கடவுளே?" மைதிலி அலுத்துக் கொண்டு, ஹால் முழுக்கப் பார்வையைச் சுழற்றினாள்.

"காப்பி எவ்ளோ நேரம் போட்டீங்க? அஞ்சு நிமிஷம் இருக்குமா? அப்போ அவன் பெட்ரூம் வரை கூட போயிருக்கலாம். பீரோ சாவி எங்கருந்துச்சு?"

"இல்ல மைதிலி. பாவம் அந்தப் புள்ள வலிப்பு வந்து நிக்கக்கூட முடியாம தவிச்சான். வாயெல்லாம் நுரையாகி.."

"க்ளோஸ்-அப்போ, கால்கேட்டோ" மைதிலி சிரித்தாள்.

"இனிமே இப்படித் திறந்திடாதம்மா. காலம் மோசமாயிருக்கு. யாருனாலும் கண்ணால கதவு வழியா பார்த்து, அப்படியே பேசி அனுப்பிடு."

"இல்லைடா... குழந்தைக்கு பொம்மை வாங்கலாம்னு."

"பொம்மை எதுக்கும்மா? ஹோம்வொர்க் செய்யவே நேரமிருக்கிறதில்லை அவனுக்கு."

மைதிலி அன்று சாயந்தரம் வீட்டிற்குள் வைக்கிறாற் போலிருந்தத செடியொன்றை வாங்கி வந்திருந்தாள். சிகப்பு நிற பெயிண்ட் அடித்த தொட்டியில், குட்டையாய், நிமிர்ந்து நின்றது அது.

"பேர் என்னவோ தெரியவில்லை. இண்டோர்தான். ரொம்ப அழகா வரும்னா ஸ்வப்னா" என்றாள் மைதிலி, ஸ்ரீ நிவாசனிடம். அது 'வெளி'யில் எப்படிப் படர்ந்து, விருட்சமாயிருக்கக் கூடும் என்று தோன்றிற்று கற்பகத்துக்கு.

செடியின் வெகுபக்கத்தில் உட்கார்ந்து, குழந்தை வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்திருந்தான்.

தமயந்தி
Share: