Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பயணம்
மயக்கும் மரகதத்தீவு! (பகுதி - 2)
- ஒரு அரிசோனன்|பிப்ரவரி 2018|
Share:
இலங்கைத் தமிழர்களின் அன்புப் பெருக்கை நினைவுகூர்வது மிக முக்கியம். சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த சமயம் துவங்கி, சென்னைக்குத் திரும்பி வரும்வரை நான் சந்தித்த இலங்கைத் தமிழர்களின் அன்பில் திக்குமுக்காடித்தான் போய்விட்டேன். முதலில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி.

நானும், என் மனைவியும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தோம். எங்கள் எதிரில் குழந்தையுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். தானாகவே பேச்சுக்கொடுத்தார். முதன்முறையாக இலங்கை செல்கிறோம் என்பதை அறிந்ததும் தங்கள் வீட்டில் தங்குமாறு அழைப்பு விடுத்தார். அசந்து போய்விட்டோம். மரியாதைக்காகச் சொல்கிறார் என்று நினைத்துப் பேசி மழுப்பினோம்.

இலங்கையில் இறங்கியவுடன் "வாங்க, என் கணவரை அறிமுகப்படுத்துகிறேன். அவருடன் கதைத்துவிட்டு எங்க வீட்டுக்குப் போகலாம்" என்றவுடன்தான் அவர் முழுமனதுடன் உண்மையாகவே அழைத்திருக்கிறார் என்பது புரிந்தது. எங்களுக்காக ரவி கையில் அட்டையுடன் நிற்பதைக் காட்டி, "இவர்தான் எங்களை அழைத்துச்செல்ல வந்திருக்கிறார். நாங்கள் ஹோட்டலில் தங்கப்போகிறோம்." என்று பிரியாவிடை பெற்றோம். தன்னுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து, என்ன உதவிவேண்டுமானாலும் தயங்காமல் கேட்கும்படி அவர் சொன்னது மனதைத் தொட்டது. எங்களுக்குத் தொலைபேசி கிடைத்தவுடன் அவருடன் சில தடவை பேசினோம்.மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா யாழ்ப்பாணத்தில் இருக்கும்போதே அங்கு செல்வது நலம் என்று ரவியின் வேனில் யாழ்ப்பாணம் புறப்பட்டோம். நீர்க்கொழும்பில் டீசல் போடுவதற்காக ரவி வேனை நிறுத்தினார். அங்கு இரண்டு ராணுவ வீரர்களைப் பார்த்தேன். அவர்களுடன்பேசவேண்டும் என்று தெரிவித்தவுடன், ரவி வேண்டாமென்றார். அமெரிக்க பாஸ்போர்ட் இருக்கிறது, கவலையில்லை என்று சமாதானம் கூறிவிட்டு, துப்பாக்கியுடன் நிற்கும் அவர்கள் முன் சென்று, "குட்மார்னிங்" என்று புன்னகைத்த என்னை ஏற இறங்கப்பார்த்தனர். தயக்கத்துடன் "குட்மார்னிங்" என்றனர். நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்று ஒரு ராணுவவீரர் கேட்டார். அமெரிக்கா என்றேன். அமெரிக்காவில் எங்கிருந்து என்று கேட்டார்.

ஃபீனிக்ஸ் என்றாலும், லாஸ் ஏஞ்சலஸுக்குப் பக்கத்தில் என்றாலும், அவருக்குப் புரியவில்லை. டிஸ்னிலாந்து என்றேன். அவரது முகம் மலர்ந்தது. எவ்வளவு ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறேன் என்றும் கேட்டார். மற்ற வீரர் நாங்கள் பேசுவதை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலம்கூட இவருக்குத் தெரியவில்லை. மற்றவரிடம் சிங்களத்தில் என்னமோ கேட்டார். என்னவென்று நான் வினவியதற்கு, "நீங்கள் ஏன் சிங்களத்தை மறந்துபோய்விட்டீர்கள், அமெரிக்காவிலேயே இருந்ததாலா?" என்றார்.எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்னை ஒரு சிங்களவர் என்று எண்ணியிருக்கிறார்கள்!இதைக் கேட்டதும் ரவியால் நம்பவே முடியவில்லை. "அம்மாவையோ, என்னையோ உங்களுடன் பார்த்திருந்தால் உங்களைச் சிங்களவர் என்று நினைத்திருக்கமாட்டார்கள்" என்றவர், "பரவாயில்லை, நீங்கள் உங்களைத் தமிழர் என்று சொல்லிக்கொள்ளாமலிருந்ததே நல்லது." என்று முடித்தார். "ஏன்?" என்றேன். பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டார். உள்நாட்டுப் போரின் கசப்பு இன்னும் நீங்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

நீர்க்கொழும்புவரை கொழும்பின் புறநகர்ப்பகுதி. அதன் பிறகுதான் மரகதத் தீவின் பசுமை கொள்ளை கொண்டது. இலங்கையின் கடலோரப்பகுதியின் தெரிந்த மேற்குக்கடலும், தென்னை மரங்களும், கிட்டத்தட்ட கேரளப் பெண்களைப் போலவே உடையுடுத்திய சிங்களப் பெண்களும் எனக்குச் சேரநாட்டை நினைவுறுத்தின. புத்தளம் வருவதற்குமுன்னர் சிலாபம் என்றொரு ஊர். அதற்குக் தெற்கே மாதம்பை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ராஜகோபுரம் ஒரு தனித்தன்மையுடன் விளங்குகிறது. கையில் வேலேந்திய முருகன் ராஜகோபுரத்தின் முதல் தளத்திலிருந்து கடைசித் தளம்வரை தங்கவண்ணத்துடன் காட்சியளிக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பதடி உயரம். அருகிலேயே பெரிய சிவன், விநாயகர், அநுமன் சிலைகள்.

கோவில் மிகச் சுத்தமாக இருந்தது. வள்ளி, தெய்வானையுடன் கர்ப்பக்கிருகத்திற்கு வெளியில் முருகன் காட்சிதருகிறார். தெற்குநோக்கிப் பாம்பில் பள்ளிகொண்ட விநாயகர், வடக்கு நோக்கிய திருமால், சரவணப்பொய்கைபோல் உருவாக்கிய நீர்த்தொட்டியில் கார்த்திகைப் பெண்கள் ஆறு குழந்தைகளைச் சீராட்டுவது போன்ற சிற்பங்கள் வரவேற்றன. நுழைவாயிலில் இரண்டங்குல ஆழ நீர். அதில் காலைக் கழுவிக்கொண்டு உள்ளே நுழைகிறோம்.

எங்களுக்காகத் தீபாரதனை காட்டின அர்ச்சகர், நாங்கள் தட்டில் போட்ட பணத்தை வாங்க மறுத்துவிட்டார். பணத்தைக் கோவில் உண்டியலில் போடச் சொல்லிவிட்டார். இந்தக் கோவிலில் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் எல்லாக் கோவில்களிலும் இப்படியே நடந்தது மிகவும் வியப்பாக இருந்தது.
ஒரு அரிசோனன்
Share: 
© Copyright 2020 Tamilonline