Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
Tamil Unicode / English Search
பயணம்
மயக்கும் மரகதத்தீவு! (பகுதி - 1)
- ஒரு அரிசோனன்|ஜனவரி 2018|
Share:
நானும் உலகத்தில் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பனிபடர்ந்த மலைகளைப் பார்த்திருக்கிறேன். இடைவிடாத மழையில் நனைந்திருக்கிறேன். சூறாவளியின் மையத்தில் இருந்து, சிறிது நேரமே கிட்டும் அந்த அமைதியையும் அனுபவித்திருக்கிறேன்.

ஆயினும், ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும், விமான நிலையத்தை விட்டு வெளிவந்து, காரில் போகும்போது, வேறெந்த இடமும் செய்யாதமாதிரி என் மனதைக் கொள்ளை கொண்டது அந்த மரகதத்தீவு! நிலமகள் பச்சைப்பசேல் போர்வையைப் போர்த்திக்கொண்டு, "என்னைப் பார்!" என்று அழைத்தாள் இலங்கைத் தீவில்.

இங்கே வசிக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணத் தூண்டியது இலங்கை. எந்த இடத்திலும் பசுமைக்குக் குறைவில்லை. மழைநாளாகப் பார்த்து வந்திருக்கிறீர்களே என்று சிலர் பயமுறுத்தியும், தன்னழகில் மயங்கிய இவனை வருத்தக்கூடாதென்று, மழையுமில்லாமல், அதிக வெய்யிலுமில்லாமல் என் பயணத்தை இனிமையாக்கினாள் இலங்கைப் பேரழகி.

Click Here Enlargeஇந்த இனிய அனுபவத்தை நான் பெறக் காரணமாக இருந்தவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். சென்னையில் அவரைச் சந்தித்தபோது என்னை அன்புடன் இலங்கைக்கு அழைத்தார். அங்கு நிலவரம் கலவரமாக இருக்குமோ என்ற அச்சத்தை மாற்றி, ஆனந்தமாகச் சுற்றிப்பார்க்க உதவினார்.

பசுமைக்கு அடுத்தபடி இலங்கையில் என்னைக் கவர்ந்தவை அதன் அருமையான சாலைகள்! எங்கெங்கும் மேடுபள்ளம் இல்லாமல் வசதியாக இருந்தன. பெருவழிப் பாதை தவிர மற்ற சாலைகளில் அதிகபட்ச வேகம் 70 கி.மீதான் (46 மைல்). ஊருக்குள் நுழைந்துவிட்டால் 50 கி.மீ (31 மைல்) ஆகக் குறைக்கப்படுகிறது. வேக எல்லையைத் தாண்டினால் போலீஸ் வந்து லபக்கென்று பிடிக்க எல்லா கண்காணிப்பு வசதிகளையும் வைத்திருக்கிறார்கள்.

கொழும்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதுவும் பள்ளி, அலுவலகம் திறக்கும், மூடும் நேரங்களில் பேசாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பதே நல்லது. ஆயினும், கண்டகண்ட இடங்களில் வண்டிகளை நிறுத்திச் சாலைமறியல் செய்வதில்லை. சாலையின் இருபுறமும் வெள்ளைக்கோட்டைத் தாண்டி வண்டியை நிறுத்தினால், இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். எனவே, சாலை முழுவதும் வண்டிகள் போகக் கிடைக்கின்றன. ஆயினும் வாகன நெரிசல் உண்டு, சென்னையைப் போலவே!

அறிவிப்புப் பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. பஸ்களிலும் அப்படியே. எனவே தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கொழும்பில் எங்கு தமிழில் பேசினாலும் புரிந்துகொள்கிறார்கள். அது ஒரு சுகமான அனுபவம்.
கொழும்பு கிட்டத்தட்ட சென்னை மாதிரிதான். எங்கெங்கும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. துறைமுகம் ஆழமும், விரிவும் ஆக்கப்படுகிறது. நான் தங்கியிருந்த வெள்ளவத்தை பகுதியிலிருந்த குளோப் டவர்ஸ் ஹோட்டலுக்கு எதிரில் பார்த்தால் இந்துமாக்கடல். தார்ச்சாலை, ரயில்வே தடங்களைக் கடந்தால் அழகான கடற்கரை விரிந்து கிடக்கிறது. கவனமில்லாமல் இருப்புப்பாதையைக் கடக்காதே என்கிறது ஒரு அறிவிப்புப் பலகை. பாதையைக் கடக்கமுயன்று, ரயிலில் அடிபட்டுத் துண்டான உடலின் படம் ஒன்று அதில் இருந்தது. சரியான எச்சரிக்கைதான் என்று நினைத்துக்கொண்டேன்.

கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. அங்கே கடலோரத்தில், தண்ணீரிலேயே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். ஏதோ ஒரு விளம்பரப் புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அருகில் முஸ்லிம் சகோதரர்கள் சிறியவர், பெரியவர் எல்லோரும் கூட்டமாகக் கடற்கரையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அருகில் சென்று விசாரித்தேன். தாங்கள் பலகாலமாக இப்பணியைச் செய்துவருவதாகவும், அது கடற்கரைக்குப் பலரும் தயக்கமின்றி வந்துசெல்ல வசதியாக இருப்பதாகவும் கூறினர். நான் அமெரிக்காவிலிருந்து வந்த தமிழன் என்றதும் மிகவும் அன்புடன் பேசினர். அவர்களின் தலைவரான பெரியவர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவர்களைப் பாராட்டி, படம் எடுத்துக்கொண்டேன்.

Click Here Enlargeதமிழ்நாட்டை மிகவும் நினைவுக்குக் கொணர்ந்தது சாப்பாட்டு வேளையில்தான். சைவ உணவு உண்ணும் எனக்கு இலங்கையில் சைவ உணவு வலைபோட்டுத் தேடினாலும் கிடைக்கவில்லை. எந்த ஊருக்குப் போனாலும் முதலில் சைவ உணவு எங்கு கிடைக்கும் என்று விசாரித்து வைத்துக்கொள்ள வேண்டியிருநதது. கொழும்பில் மறவன்புலவு ஐயா ஒரு சைவ ஹோட்டலிலேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார். அங்கு நெய்தோசை... ஆஹா... இப்போது நினைத்தாலும் மணக்கிறது!

எங்களை இலங்கை முழுவதும் வேனில் அழைத்துச் சென்ற ரவி அவர்கள் தன் வீட்டிலேயே சுவையான உணவு படைத்தார். பத்துநாள் அவர்கூடப் பழகியதில் எனக்கு யாழ்ப்பாணத் தமிழ்கூட வந்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இலங்கைத் தேநீரின் சுவையே தனி! தேயிலை உற்பத்தியில் வேதிப்பொருளோ, செயற்கை உரங்களோ உபயோகிப்பதில்லை. டிகாக்‌ஷனைச் சாரம் என்று சொல்கிறார்கள். இலங்கையில் உணவகங்களில் புதுப் பழக்கம் ஒன்று என்னை வியப்பில் ஆழ்த்தியது. தோசை, இட்லி, வடை என்று ஆர்டர்கொடுத்தால், ஒரு தட்டு நிறைய வடை, இன்னொன்றில் இட்லி எல்லாம் கொண்டுவைக்கிறார்கள்.

"உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்; மற்றவற்றை அவங்க பார்த்து, நம்ம சாப்பிட்டதுக்கு மட்டும் பில் கொடுப்பாங்க. விளங்கிச்சா?" என்று விளக்கினார் ரவி.

(தொடரும்)

ஒரு அரிசோனன்
Share: 
© Copyright 2020 Tamilonline