Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறப்புப் பார்வை
வெள்ளிவிழா காணும் ஸ்ரீ லலிதகான வித்யாலயா
- தென்றல்|செப்டம்பர் 2017|
Share: 
வெள்ளிவிழா காணும் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவையும் அதன் கலை இயக்குனர் திருமதி லதா ஸ்ரீராம் அவர்களின் அரிய பங்களிப்பையும் கொண்டாடும் விதத்தில் 'பல்லவிதா' இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் SLGV-25 விழாவை ஏற்பாடு செய்யவுள்ளது. கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை நன்கறிந்து பயின்ற, தெள்ளிய குரலும் கற்பனை வளமும் கொண்ட பல சங்கீத வித்வான்களை இந்த 25 ஆண்டுக் காலத்தில் லலிதகான வித்யாலயா உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் கர்நாடக இசைக் குழுவினரும் பின்னணி கருவியிசைக் குழுவினரும் இணைந்து நன்கறியப்பட்ட கிருதிகளை, மனோதர்ம சங்கீதப் பாணியில் வழங்கும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இளஞ்சிறாரில் தொடங்கி முதுநிலை பயில்வோர் வரையிலான நூற்றுக்கு மேற்பட்ட வித்யாலயாவின் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் உலகெங்கிலும் தமது முத்திரையைப் பதித்துள்ள முன்னாள் மாணவர் சித் ஸ்ரீராமின் வாய்ப்பாட்டும், மாணவி பல்லவி ஸ்ரீராமின் பரதநாட்டியமும் இவ்விழாவின் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளாக அமையும்.

விழாவின் ஓர் அங்கமாக 'பால கோபாலா' இருக்கும். இந்தக் கர்நாடக சேர்ந்திசை நிகழ்வு ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியது. முத்துசுவாமி தீட்சிதர், மஹாராஜா சுவாதித் திருநாள் ஆகியோர் கிருதிகளை அடிப்படையாகக் கொண்ட மனோதர்ம சங்கீதமாக இதனை லதா ஸ்ரீராம் வடிவமைத்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பிரபலமாக்கப்பட்ட பஜனைப் பாடல்கள், அருணா சாய்ராம் பிரபலப்படுத்திய அபங்கங்கள், தில்லானாக்கள் மற்றும் லால்குடி ஜயராமன் படைத்த வர்ணங்களும் 'பால கோபாலா'வில் முக்கிய இடங்களைப் பெறும்.

இசைவல்லுனர் குடும்பத்தில் பிறந்தவர் லதா ஸ்ரீராம். சென்னை பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் இளங்கலைப் பட்டம் பயின்றவர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உயர்தரமான இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். வளரும் கலைஞர்களுக்குத் திறனை வெளிக்காட்ட மேடை அமைத்துத் தருவதற்கும், வட அமெரிக்கச் சமுதாயத்தினரிடையே கர்நாடக சங்கீதத்தைப் பரப்பவும் என இவர் 'பல்லவிதா' என்ற லாபநோக்கற்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
மாணவர்களைக் கற்பிக்க ஏற்பதிலும் அவர்களுக்குத் தொடர்ந்து கற்பிப்பதிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படும் லதா ஸ்ரீராம், ஆரம்பத்திலிருந்தே அவர்கள் விடாமல் ஒழுங்காகத் தாம் கற்பதைப் பயிற்சி செய்துவர வேண்டும் என எதிர்பார்க்கிறார். பாரம்பரிய கர்நாடக சங்கீதப் பயிற்சியைத் தக்க முறையில் வடிவமைத்து அதன்படி உறுதியாக நடத்தி வருகிறார். சுருதி சுத்தத்தோடும் குரல் வீச்சோடும் பாடவைக்கும் நோக்கத்தோடு குரல்வளப் பயிற்சிகள் தருவதிலும் அதிக காலம் செலவிடுகிறார். ஒரு ராகத்தில் அமைந்த பல கிருதிகளைக் கற்றும், கர்நாடக சங்கீத ஜாம்பாவன்களின் கச்சேரிகளைக் கேட்டும், திரும்பத் திரும்பப் பாடியும் அந்த ராகத்தின் ஆன்மாவை உள்வாங்கிக் கொள்வதால் கலைஞரின் 'மனோதர்மம்' விருத்தி அடைகிறது. லதா ஸ்ரீராம் அவர்களின் பயிற்சிமுறை இதை வழிகாட்டியாக வைத்துக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லலிதகான வித்யாலயாவை 1992ம் ஆண்டு ஃப்ரீமான்ட்டில் (கலிஃபோர்னியா) லதா ஸ்ரீராம் தொடங்கினார். வட கலிஃபோர்னியாவில் வளரும் இளம் இந்தியத் தலைமையினருக்குத் தமது கலைப் பாரம்பரியத்தின் வேர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள உதவுவது இதன் முக்கிய நோக்கம். அத்துடன் பரவலாக வடகலிஃபோர்னிய சமுதாயத்துக்கு இந்தியாவின் செழிப்பான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதும் நோக்கமாக இருந்தது.

இரண்டு மாணவர்களோடு தொடங்கிய வித்யாலயாவில் இன்றைக்கு நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். தமது தொடர்ந்த, முறையான அர்ப்பணிப்போடு கூடிய முயற்சிகளால் லதா ஸ்ரீராம் அவர்கள் வித்யாலயாவை இசையை ஆழ்ந்து கற்கவும், கற்றதை வெளிக்காட்டவும் இடந்தரும் ஓர் அமைப்பாக மாற்றியமைத்துள்ளார். வட அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும் இசைக்கல்வி நிறுவனமாக ஸ்ரீ லலிதகான வித்யாலயா உயர்ந்துள்ளது.
Share: