Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தவளை
கங்கா ஜலம்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
- ராமா கார்த்திகேயன்|ஆகஸ்டு 2017|
Share:
பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது.

"அப்பா, யூ நோ வாட் ஹேப்பென்ட் இன் மை ஸ்கூல் டுடே? ஜெனிஃபர் டுக் மை பென்சில் அண்ட் ரேன் அவே" என்று அவள் தனது தினசரி பள்ளிக்கதைகளைச் சொல்லும்போதெல்லாம் "ஏம்மா மீனு, அப்பா எவ்ளோ தடவ சொல்லிருக்கேன், தமிழ்ல சொல்லுன்னு" என்று சொல்லி முடிப்பதற்குள் மீனாட்சி மைண்ட் வாய்ஸில் "அட போப்பா..." என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் போய் "அம்மா, யு நோ வாட்...." என்று ஆரம்பிப்பாள். இப்படி அப்பாவின் தமிழ் டார்ச்சர் ஆகாதென்று தனது தாயிடம் முறையிட்ட நாட்கள் பல. பாரதியும் இதை உணர்ந்து, ஒரு ஆப்டிமல் தமிழ் பேலன்ஸை தனது உரையாடலில் கொண்டுவரப் பல முயற்சிகள் எடுத்துவந்தான்.

பாரதி, ஆயிரத்தி முன்னூத்தி முப்பது வகைக் குரல்களில் கெஞ்சியும், நூற்றி முப்பத்தி மூன்று வகையாக அதிகாரங்கள் பண்ணியும் ஒரு பயனும் இல்லை. "இரண்டு அடி போடுவேன்" என்று பயமுறுத்தினால் தமிழ் வரும் என்று நினைத்தால், தமிழுடன் சேர்ந்து இந்த ஊர் போலீசும் வரும் என்று தீர்க்கதரிசி பாரதிக்கு நன்றாக தெரிந்திருந்தது. மேலும், தண்டனையால் தாய்மொழி வளர்ப்பதிலும் பாரதிக்கு உடன்பாடு இல்லை.

நவராத்திரி கொலுவை பார்க்க அன்று வந்த டீனேஜ் பெண்கள் ஐந்து பேர் சேர்த்து "அயிகிரி நந்தினி" ஆக்ஸென்ட்டில் பாட, அங்கு ஆறுமாத விசிட்டிற்கு வந்த பாரதியின் அம்மா ஆடிப்போனாள். "ஏம்மா, இங்கயே பொறந்து வளந்து இன்னும் நம்ம பண்பாட்டை விடாம இவங்கெல்லாம் பாடறாங்களே, அதப் பாத்து பெருமைப் படுவையா, அத வுட்டுட்டு குத்தம் கண்டு பிடிக்காத" என்று தனது அம்மாவை ஒப்பேத்தினாலும், உள்ளூர "அய்யகோ, எனது மகளும் சில வருடம் கழித்து ஆண்டவனை ஆக்ஸென்ட்டில் துதி பாடுவாளே" என்று பாரதி, இந்தியன் ஆக்ஸென்ட்டில் எண்ணி வெலவெலத்ததுண்டு.

"உன் பொண்ணு எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசறா? நானும்தான் எல்லா கிளாசும் செய்துருக்கேன், ஆனா என் பொண்ணுக்கு வாயில தமிழே வரமாட்டேங்குது மீனா" என்று அனுதாபத்துடன் எங்கும் எண்ணற்ற பெற்றோர்களின் லிஸ்ட்டில் சேர்ந்தனர் பாரதி தம்பதியினர்.

தாத்தா, பாட்டி இந்தியா திரும்பியதும் அவர்களுடன் வாட்ஸப் வீடியோ காலில் பேசினால் தமிழ் கொஞ்சம் பிக்கப் ஆகும், என்று தனது ஃபோன் ஸ்பீட் டயலில் ஒன்றை அழுத்தி "இந்தா தமிழ்ல பேசு" என்று கொடுத்துவிட்டு சற்றுநேரம் கழித்து வந்து பார்த்த பாரதிக்கு தன் தாய் தந்தையின் கண்களில் குழப்பம் நிறைந்தது தெரிந்தது. அவனது அம்மாவை பார்த்து "என்னம்மா, உன்பேத்தி என்ன சொல்றா? நான் ஒரு பாட்டுப் பாட சொன்னேன். அவளும் எதையோ இங்கிலிஷ்ல பாடினா. எனக்கு ஒன்னும் புரிலடா, என்ன பாட்டுன்னு கேட்டேன், அதுக்கு அவ ஏதோ டெய்லர் கடைல சாவி இருக்குனு சொல்றா, என்னனு நீயே கேட்டுச் சொல்லேன்..." என்றாள் தாய்.

அவன் குழந்தை மீனாட்சியிடம் "என்னடி கண்ணா பாட்டு பாடின?" என்று கேட்டதில், அவள் ஏதோ டைலர் ஸ்விஃப்டும், அலிசா கீஸையும் பாடிக் காட்டியது அவனுக்கு விளங்கியது. தனது ஃபோனை அவள் நோண்டி, யூடியூபில் பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பதும் புரிந்தது. உடனே அம்மாவிடம் வாட்ஸப்பில் "அது ஒண்ணும் இல்ல மா, இங்க ஸ்கூல்ல ஏதோ ரைம்ஸ் சொல்லி கொடுக்கறாங்க. அதப் பாடிருக்கா" என்று சமாளித்தான்.

"அம்மா, உன் பேத்திக்கு ஆக்ஸென்ட் மாறினாலும் அன்பு மாறல. எப்போ பாத்தாலும் தாத்தா பாட்டிகூடப் பேசணும்னு ஒரே அடம்" என்று ஒரு சிறிய ஐஸாக வைத்து நகர்ந்தான். "எலிஃபன்ட்டுக்கு தமிழ்ல என்ன சொல்லு கண்ணா? யானை!" என்று தாத்தாவும் விடாமுயற்சியோடு தமிழ்த்தாத்தா உ.வே.சா. ரேஞ்சுக்குத் தமிழ் உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்.

பாரதியின் கல்லூரி கல்ச்சுரல்ஸின்போது அவனது வகுப்பு மாணவி மேடையேறி "தமில்லுக்கும் அமுதென்று பேர் அந்த தமில் இன்ப தமில் எங்கல் உயிருக்கு நேர்..." என்று தப்பாக ஆட்டோகரெக்ட் செய்வதுபோல் பாடியவுடன் கூச்சலிட்டு பாரதியும் அவன் நண்பர்களும் கலாய்த்ததால் அந்தப் பெண் ஓவென்று மேடையிலேயே அழுதுவிட்டாள். தான் என்னமோ ஒரு முண்டாசுக் கவிஞன் ரேஞ்சுக்கு தன் கல்லூரி நண்பர்களின் ழகர, ளகர, லகர தவறுகளை கலாய்த்த பாவமோ என்னமோ, தன் மகளுக்கு இப்படித் தமிழ் இழுபறியாய் உள்ளதோ என்று அவன் எண்ணியதும் உண்டு.
சரி ஷார்ட்கட்டில் தமிழ் வளரட்டும் என்று சன் டி.வி. வைத்துக் கொடுத்தால் அதிலும் பெரிய பயனில்லை. இரட்டைக் கிளவிகளையும் அடுக்குத் தொடர்களையும் படித்த பாரதிக்கு, தன் மகளுக்கு வந்த அடுக்குத்தொடர் "டானு டானு ...நீ என்னோட மானு" மற்றும் "டார்லிங்கு டம்பக்கு" தான் என்பதில் பெரிய மனவருத்தம் உண்டு.

"வீட்ல கறிகாய் எதுவும் இல்லை, ஒழுங்காப் போய் வாங்கிட்டு வாங்க" என்று மனைவி ஆணையிட, பாரதி பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினான். "அப்டியே கொழந்தையைக் கூட்டிட்டு போங்க... போற வழில ரெண்டு தமிழ் வார்த்தை சொல்லிக் கொடுங்க" என்று அன்பாக அவள் அதட்ட, மகளைக் கூட்டிக்கொண்டு காரில் ஏறினான். போகிற வழியில் "இதோ பாரு மீனு, நீ தமிழ் முழுசா பேசலேனாலும் பரவால்ல, பாதி இங்கிலீஷ் பாதி தமிழ் கலந்து பேசு. போகப்போக தானா தமிழ் வந்துடும். கவலைப்படாத, அப்பா சொல்லிக் கொடுக்கறேன்" என்று கரிசனத்தோடு சொன்னான்.

கடைக்குள் நுழைந்தவுடன் எப்பவும்போல் மீனாட்சி ஓட்டம் பிடித்தாள். குரோசரி கடையில் அவள் லூட்டி தாங்காமல் அவளை மெல்லக் கையில் கிள்ளி "பேசாமே வரப்போறயா இல்லையா" என்று மெதுவாக மிரட்டினான் அவ்வளவுதான், அந்தக் கடையே இரண்டாகும் அளவிற்கு "அப்பா டோன்ட் கிள் மீ... டோன்ட் கிள் மீ" என்று 4 வயது மீனாட்சியின் கூக்குரல் கூரையைப் பிளந்தது. இது என்னடா தமிழுக்கும் தனக்கும் வந்த சோதனை என்று எண்ணி "ஏய், சும்மா இருடி, இங்கிலிஷ்லேயே பேசுடீ, ப்ளீஸ்... கில்லுன்னு சொல்லாதடி" என்று மன்றாடினான்.

அதிகப் பிரசங்கித்தனமாகப் பாதித் தமிழ் பாதி இங்கிலீஷ் பேசச் சொன்னது இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவன் சற்றும் எண்ணவில்லை.

அங்கிருந்த செக்யூரிட்டி முதல்கொண்டு அனைத்துத் தாய்மார்களும் கூடிவிட்டனர். ஆர்கானிக் பால் வாங்கவந்த ஓர் அம்மையார், அலறிப்போய் தனது தொலைபேசியில் 911ஐ அழுத்த, போலீஸ்கார்கள் ஓடிவந்தனர். பாரதியைச் சுற்றிப் பெரிய கூட்டம். அவர்கள் பார்வையில் ஒரு ஜட்ஜ்மெண்ட் தெரிந்தது. "என்ன தகப்பன் இவன், சொந்தப் பெண்ணையே கொல்லுவேன் என்று பயமுறுத்துகிறானே. நாம் முதலில் அந்த சைல்ட் ப்ரொடெக்‌ஷன் ஆஃபீசர்களை கூப்பிடவேண்டும்" என்று அவர்கள் மனதில் நினைப்பதைப் பார்த்து பாரதியின் கண்களில் பீதி கண்ணீராக வெளியானது.

உடனே அவன் "நோ நோ, யு ஹேவ் மிஸ்டேக்கன்... இன் டமில், வி கால் பிஞ்ச்சிங் ஆஸ் கில்லிங்... ஐ கேன் எக்ஸ்பிளெய்ன் திஸ் லிட்டில் கன்ஃப்யூஷன்" என்று வந்த ஆஃபீஸர்களிடம் சொல்லி ஒரு வழியாகச் சமாளித்து வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அடுத்த நாள் குழந்தை ஸ்பீட் டயலில் ஒன்றை அழுத்தித் தாத்தா பாட்டியுடன் வீடியோ காலில் உரையாடத் துவங்கினாள். "யூநோ பாட்டி, அப்பா கில்ட் மீ யெஸ்டர் டே இன் த ஸ்டோர். ஐ க்ரைட். அண்ட் தி பொலீஸ் கேம்" என்று தனது தினசரி அப்டேட்டைக் கொடுக்கத் தொடங்கினாள்.

பதறிப்போன பாட்டி, "என்னடா சொல்றா உன் பொண்ணு? ஒழுங்கா கேட்டுச் சொல்லுடா" என்று சொல்லி முடிப்பதற்குள் பாரதி வீடியோ காலில் மூக்கை நுழைத்து "அம்மா, உன்னக்கு ஆறு நாளில் அமெரிக்கன் ஆக்ஸன்ட்" புக்கை அமேசான்ல ஆர்டர் பண்ணிருக்கேன். நாளைக்கு வந்துடும், ஒழுங்கா நீ இனிமே இங்கிலிஷ்ல பேச ஆரம்பி. என்னால தமிழ் வளர்க்க ஜெயிலுக்கெல்லாம் போகமுடியாது" என்று படபடத்தான் பாரதி!

ராமா கார்த்திகேயன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

தவளை
கங்கா ஜலம்
Share: 
© Copyright 2020 Tamilonline