Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14b)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2017|
Share:
கதிரவனைக் கேளுங்கள்:

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14b)

முன்னுரை:ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

*****


கேள்வி: நான் சமீபத்தில் இணைநிறுவனர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளேன். நான் பொருள் சந்தைப்படுத்தல் துறையைச் (product marketing) சார்ந்தவன். என் இணைநிறுவனர்கள் தொழில்நுட்பவாதிகள். தற்போதைக்கு நானே CEOவாக உள்ளேன். நாங்கள் சில மூலதனத்தாரிடம் பேசினோம். அவர்களோ, வணிகச் சந்தை அளவு என்ன, பொருள் விலை எப்படி இருக்கும், மூன்று வருட வரவு-செலவுத் திட்டம் எந்த மாதிரி என்னென்னவோ கேட்கிறார்கள். என் தலை சுற்றுகிறதே! நான் யாராவது ஒரு ஒப்பந்ததாரரை தற்காலிகமாக வைத்து அவற்றைத் தயாரிக்கச் சொல்லி மூலதனக் கூட்டங்களில் பேச விட்டுவிடட்டுமா? (தொடர்கிறது)

கதிரவனின் பதில்: ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரரிடம் பொறுப்பை ஒப்பித்துவிடுவது மூலதனத்தாருக்கும் ஒத்துவராது, உங்கள் வருங்கால வளர்ச்சிக்கும் பொருந்தாது என்று சென்ற பகுதியில் கண்டோம். ஒப்பந்ததாரர் அல்லது ஆலோசகர் வாரியத்தின்மூலம் வணிகப் படிவத்தை (model) அமைத்து எவ்வாறு உங்கள் நிறுவனத்தின் வணிகச் சந்தை அளவைக் கணிப்பது என்றும் கண்டோம். இப்போது, வேறு வகையான ஆலோசகரின் உதவியுடன் நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நடப்புக்கான படிவத்தை (financial and operational model) எப்படி உருவாக்கி மூலதனத்தாருக்கு உங்கள் மேல் நம்பிக்கையளிப்பது என்று இப்பகுதியில் விவரிப்போம்.

வணிகச் சந்தைப் படிவம் உருவாக்க வணிகச் சந்தை விற்பன்னொருவரை ஆலோசகராக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன் அல்லவா. அதே போல் நிறுவன நடப்பு படிவம் உருவாக்க வேண்டுமானால் அதில் நல்ல பலமான முன்பழக்கம் உள்ளவரை ஆலோசகராக அனுசரிக்க வேண்டும். அத்தகைய விற்பன்னர், முன்பே ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகராக (CEO) அனுபவம் பெற்றிருந்தால்தான் உங்களுக்கு நல்ல ஆலோசனை தர இயலும். உங்களுக்கே விரிதாள் (spreadsheet) மூலம் படிவம் உருவாக்கும் திறன் இல்லாவிட்டால், அந்தத்திறன் பெற்ற அலுவலரையும் உதவி ஆலோசகராக அல்லது ஒப்பந்ததாரராக இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

அவர்களின் உதவியுடன், நிறுவனம் ஆரம்ப காலத்தில் வருமானம் வளர ஆரம்பிக்குமுன் எவ்வாறு செலவை ஜாக்கிரதையாகக் கட்டுப் படுத்துகிறது; பிறகு முதல் வருமானம் சேகரிக்க வணிக மற்றும் விற்பனைச் செலவுகளை எப்படி மெள்ள அதிகரிக்கிறது; அதன்பின் விற்பொருள் வணிகச் சந்தைப் பொருத்தம் நன்கு தெரிந்த பிறகு, பிரம்மப் பிரயத்தனமின்றி மீண்டும் மீண்டும் எளிதில் விற்கமுடிந்த நிலையை அடைந்த பின் எவ்வாறு விற்பனை விரிவாக்கம் செய்யப்படும், எந்த நிறுவனங்களின் விற்பனை உதவியுடன் உங்கள் நிறுவனத்தின் முயற்சி பலமடங்கு பெருக்கப்படும், அதற்கான எத்தகைய குழுவும் செலவுத் திட்டமும் தேவை என்பதெல்லாம் அடங்கிய செயல்முறைப் படிவத்தை (operational execution model) உருவாக்க வேண்டும்.

அத்தகைய படிவத்தைப் புரிந்துகொண்டு மூலதனத்தாருக்கு விளக்க வேண்டுமெனில் உங்களுக்கு நிதித்துறை பற்றியும், நிதிப் படிவங்களைப் பற்றியும் சற்றேனும் திறன் வேண்டியுள்ளது. அதற்காக, ஒருக் கல்லூரியிலோ, இணையதளங்கள் மூலமோ, ஆரம்பநிலை நிதித்துறைத் திறன் கற்றுத்தரும் ஒரு படிப்பில் சேர்ந்து பயில்வது நல்லது. உங்கள் நிறுவனத்தின் துறையைப் பற்றி உங்களுக்குத்தான் நன்கு தெரியும் என்பதால், இந்த நிதித்துறைத் திறனை வளர்த்துக் கொண்டால், உங்கள் ஆலோசகருக்கும் உதவியாக இருக்கும்; மூலதனத்தாருக்கும் விளக்கமுடியும்.

அடுத்த படியாக, நீங்களே ஓர் எளிய செயல்முறைப் படிவத்தை உருவாக்க முயலுங்கள். முதலில் மிகக் கடினமாக இருக்கும், பல தவறுகள் செய்வீர்கள். கவலை வேண்டாம், தோல்வியே வெற்றிக்கு முதல் படி! முயல, முயல நீங்கள் நுணுக்கங்களை மெள்ள மெள்ளக் கற்றுக் கொண்டு தவறுகளின்றி உருவாக்க இயலும்.
கற்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டுமானால், உங்கள் ஆலோசகரையும் ஓர் துணையாசானாகக் கருதி நீங்கள் உருவாக்கும் படிவத்தை அவரிடம் சற்றுக்கூடத் தயக்கமோ, வெட்கமோ இன்றிக் காட்டி அவரது ஆலோசனைகளைப் பெற்று மெருகேற்றுங்கள். மேலும், உங்கள் படிவத்தை வேறொரு ஆரம்பநிலை நிறுவனத்தின் தலைமை அலுவலரிடமும் காட்டி, அவர்களுடைய செயல்முறைப் படிவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள உதவும். அவர்களின் படிவத்தை அவர்கள் காட்ட ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உங்கள் படிவத்தின் கட்டமைப்பையும், அனுமானங்களையும் பற்றிய அவர்களின் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.

இவ்வாறு பல விதங்களில் முயன்று செயல்முறை மற்றும், வணிகப் படிவங்களைப் பற்றிய திறனை வளர்த்துக்கொண்டால், நீங்கள் மூலதனத்தாருக்கும் ஆலோசகருடன் சேர்ந்து உருவாக்கிய சிக்கலான முழுப்படிவத்தை விரிவாக விளக்க இயலும்; மேலும் அவர்களின் கடினமான கேள்விகளையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

இவ்வாறு படிவங்களைப் புரிந்துகொள்வது, உருவாக்குவது, விளக்குவது போன்ற திறன்களை நீங்கள் ஓரளவு வளர்த்துக் கொண்டபின், உங்கள் நிறுவனத்தின் பங்கு மூலதனப் படிவத்தையும் நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். முதலில் உங்கள் நிறுவன வழக்குரைஞரும் நிதி அலுவலர் அல்லது ஆலோசகரும் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதை நீங்களே புரிந்து கொண்டால், அடுத்தடுத்து நிதி திரட்டுகையில் அது எவ்வாறு மாறும், முக்கிய மேலாண்மைக் குழு உறுப்பினர்களை அமர்த்துகையில் அவர்களுக்கு எவ்வளவு பங்களிக்க வேண்டும், அதன் சதவிகிதத்தை அவர்களுக்கு அதைப்பற்றி எவ்வாறு சரியாக விளக்கவேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்துகொண்டு பலமான நம்பிக்கையுடன் உரையாட முடியும்.

இத்தகைய படிவங்களைப்பற்றி நன்கு அறிந்துகொண்டால், படிவத் திறன் மட்டுமன்றி, நிறுவனத்தைச் செம்மையாக நடத்திச் செல்லும் நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். வணிகப் படிவத்தின் மூலம், வணிகச் சந்தையைக் கணிப்பது எப்படி, எந்த வணிகச் சந்தையை முதலில் குறிவைப்பது, உங்கள் பொருளை வாங்குபவர்கள் யார், அதற்கு எப்படி விலை நிர்ணயிப்பது போன்ற நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள். செயல்முறைப் படிவத்தின் மூலம், விற்பனை எப்படிச் செய்கிறார்கள், அதற்கான குழுவமைப்பு என்ன, அதற்கு ஊதியக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், உதவி நிறுவனங்கள் மூலம் எப்படி விற்பனை நடத்தி பலனைப் பன்மடங்காகப் பெருக்குவது போன்ற நுணுக்கங்களை மேலும் உணர்வீர்கள். இதனால் நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்துவதில் நீங்கள் பலம்பெற்று வளர்வீர்கள். மூலதனத்தாருக்கும் உங்கள்மேல் நம்பிக்கை உயரும்.

ஆக மொத்தத்தில், நீங்கள் கேட்டபடி, மொத்தப் பொறுப்பையும் ஏதாவது ஒப்பந்ததாரரிடம் தள்ளிவிட்டு அக்கடாவென்று இருப்பது நல்லதல்ல. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் உருவாக்கும் படிவங்களை நீங்களே புரிந்துகொள்ள முடியும். மூலதனத்தாரிடமும் விளக்கித் தைரியத்துடன் கலந்தோலாசிக்க முடியும். அந்த மனோபாவத்தோடு இந்தத் திறன்களைக் கற்றுக்கொண்டு வளர்ந்து வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்து வேறொரு ஆரம்பநிலை யுக்தியைப் பற்றிய அம்சங்களை அலசுவோம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline