Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஆர். அபிலாஷ்
- அரவிந்த்|ஆகஸ்டு 2017|
Share:
தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல களங்களிலும் பங்களித்து வருபவர் ஆர். அபிலாஷ். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பி.என். ராமசந்திரன், வத்சலகுமாரி தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். பள்ளிப்பருவம் தக்கலையில். தந்தை வாங்கித் தந்த நூல்களும், நூலகத்திலிருந்து எடுத்துத் தந்த நாவல்களும் வாசிப்பார்வத்தைச் சுடரச் செய்தன. நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கிருந்த கலை இலக்கியப் பெருமன்றம் இவரது ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

எழுத்தாளர் ஜெயமோகனுடனான தொடர்பு அபிலாஷின் வாழ்க்கையில் பெரிய உத்வேகத்தைத் தந்தது. அவருடன் வாதித்தும், விவாதித்தும் தனது சிந்தனையை மேம்படுத்திக் கொண்டார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று தேர்ந்தார். ஆங்கில இலக்கிய வாசிப்பு அறிவைக் கூர்மைப்படுத்தியது. சில வருடங்கள் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தார்வத்தால் அதிலிருந்து விலகிப் பத்திரிகைகளில் பணிசெய்தார். மேலும் கற்கும் ஆர்வத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரனுடனான நட்பு இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அவர் இவரது திறனையறிந்து எழுத ஊக்குவித்தார். 'உயிர்மை' இதழின் 'உயிரோசை' இணையதளத்தில் தொடர்ந்து அமெரிக்க ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். அதே தளத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் வாசக கவனம் பெற்றன. ஹைக்கூ கவிதைகளுடன், மொழிபெயர்க்கப்பட்ட ஆலன் ஸ்பென்ஸின் கவிதைகளும் இணைந்து 'இன்றிரவு நிலவின்கீழ்' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. தொடர்ந்து உயிர்மை இதழிலும், அமிர்தா, தாமரை, புதிய பார்வை, தமிழ் ஃபெமினா, காட்சிப்பிழை, புதிய காற்று போன்ற இதழ்களிலும் கட்டுரை, சிறுகதைகளை எழுதினார். சொல்வனம் போன்ற இணைய தளங்களிலும் கட்டுரைகள், சிறுகதைகள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. 'கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்' என்ற தலைப்பிலான இரண்டாவது நூல் பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.

Click Here Enlargeஅபிலாஷை, தமிழ் இலக்கிய உலகத்தில் பரவலாகக் கொண்டுசென்ற நூல் 'கால்கள்' என்ற நாவல். உடல் குறைபாடு அதனால் உண்டாகும் மனத்துயர் பற்றித் தீவிரமாக இந்நாவல் பேசுகிறது. இதற்குச் சாகித்ய அகாதமியின் 'யுவபுரஸ்கார்' விருது கிடைத்தது. இதே நாவல், பாரதிய பாஷா பரிஷத் விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தினசரி வாழ்க்கைப் போராட்டத்தை, சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களை மிகையின்றி இந்நாவல் சித்திரிக்கிறது. எழுத்தாளர் இமையம் "கால்கள் இதுவரை தமிழ் இலக்கியம் கவனப்படுத்தாத ஒரு வாழ்வை வாசகர்முன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் முக்கியமானது." என்கிறார்.

நாவலின் நாயகி மதுக்ஷராவுக்குச் சிறுவயதிலேயே போலியோவால் இடதுகால் பாதிப்படைகிறது. வளர வளரப் போராட்டமாகிறது அவள் வாழ்க்கை. அவள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை, ஏற்படும் கோப தாபங்களை, ஏக்கங்களை, கனவுகளை, சலிப்பை, காலிப்பர் சக்கர நாற்காலியின் உதவியின்றிச் சிறிது தூரம் காலாற நடக்கவேண்டும் என்ற ஆசையை, உள்ளத்தை நெகிழவைக்கும் வகையில் காட்சிப் படுத்தியிருக்கிறார் அபிலாஷ். கிட்டத்தட்டத் தனது வாழ்க்கை அனுபவங்களையே கற்பனை கலந்து நாவலாக்கியிருக்கிறார் அபிலாஷ். இந்நாவலையே 'எம்.ஃபில்' ஆய்வுக்குச் சில மாணவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அடிப்படையில் கவிஞர் என்பதால் நுணுக்கமான சில அவதானிப்புகளை மிக எளிய மொழியில், உவமைகளாக இவரால் அழகாகக் காட்சிப்படுத்த முடிவது இவரது பலம்.
'புரூஸ்லி சண்டையிடாத சண்டை வீரன்' என்னும் இவருடைய நூல் உலகப் புகழ்பெற்ற புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், வாசகர்கள் அறியாத பல விவரங்களுடன் விளக்கிக் கூறுகிறது. 'இன்னும் மிச்சம் உள்ளது உனது நாள்' என்பது மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுதி. இவரது 'ரசிகன்' ஒரு வித்தியாசமான நாவல். இலக்கிய ரசிகனாக இருந்த ஒருவன், சினிமா ரசிகனாகி வீழ்ந்த அவலத்தை இது படம் பிடிக்கிறது. அபிலாஷின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு 'அப்பாவின் புலிகள்'. பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை என்பதை சில சிறுகதைகளில் நெகிழ்வாகவும், சில கதைகளில் இறுக்கமாகவும் அமைந்திருக்கும் மொழி சொல்லிவிடுகிறது. கதைகளில் ஆங்காங்கே வரும் மாய யதார்த்தவாத உத்தி வாசகனை மயக்குகின்றன.

அபிலாஷின் மொழி, சம்பவ விவரிப்புகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. விதவிதமான இவரது எழுதும் ஆற்றலுக்குச் சான்று 'கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்' நாவல். பலவகை நடைகளில் அநாயசமாக எழுதமுடியும் என்பதற்கு உளவியல் பாணியிலான இந்த த்ரில்லர் ஒரு சான்று. சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அடிப்படையில் ஆய்வாளர் என்பதால் ஆய்வு நெறிகளுக்கேற்பத் தரவுகளும் ஒழுங்கும் இவரது படைப்புகளில் இயல்பாக வெளிப்படுகின்றன. கூடவே இலக்கியவாதிக்கே உரிய நுணுக்கமான பார்வையும் கொண்டு மிளிர்கின்றன.

எழுத்தாளன் என்பவன் யார் என்பது பற்றி அபிலாஷ் கூறும் கருத்து மிக முக்கியமானது. "யாரும் எழுத்தாளன் ஆகலாம். ஆனால் குறைந்த பட்சமாய் இலக்கியம், சமூகம் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும். புத்தகங்களை வாசித்து அது குறித்து உரையாட வேண்டும். பல்வேறு சமூக விசயங்களை கவனிக்க வேண்டும். அறிவுத்துறைகளைப் பரிச்சயம் கொண்டு அது குறித்து வாசகனுடன் உரையாட வேண்டும். எழுத்தாளன் வாசகனுக்கு ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். அதற்காக அவன் எந்தச் சன்மானமும் எதிர்பார்க்கக் கூடாது. இதையெல்லாம் செய்யாதவன் என்னைப் பொறுத்தவரையில் போலி எழுத்தாளன்" என்கிறார் ஒரு நேர்காணலில்.

Click Here Enlarge"பத்து வருடங்களுக்குப் பின்னால் உங்களது படைப்புகளைப் படிக்கும்போது அந்த எழுத்துக்கு மதிப்பு இருக்கவேண்டும் அது ஒன்றுதான் எழுத்தாளனாக உங்களை நிலைநிறுத்தும். இல்லையேல் வரலாற்றில் மறக்கப்படுவீர். இறப்புக்குப்பின் உங்களை யாரென்றே தெரியாதவர்கள், உங்களது படைப்புகளை படித்து மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம்" என்ற இவரது கூற்று நிச்சயம் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று.

'தமிழிலக்கியத்தில் உடல்மொழி' என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. நண்பர்களுடன் இணைந்து 'புறநடை' என்ற இதழை நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. 'இன்மை' என்ற இணைய இதழையும் நடத்தியிருக்கிறார். முழுக்கக் கவிதைக்கும் அதுகுறித்த கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவ்விதழ் வெளியானது. தினமணியில் இவர் எழுதிய 'வாங்க, இங்க்லீஷ் பேசலாம்' தொடர், மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். குமுதத்தில் இவர் எழுதிய 'கிரிக்கெட்டோகிராஃபி' மிக முக்கியமானது. கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய வித்தியாசமான தொடர் இது. திரையுலகிலும் இவரது பங்களிப்பு தொடர்கிறது. கிரிக்கெட், சினிமா, கவிதைகள் குறித்து உயிர்மையில் இவர் எழுதிவரும் கட்டுரைகள் முக்கியமானவை.

சொல்லவரும் கருத்தை வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக எழுதும் திறன் மிக்கவர். எதையுமே, துல்லியமாக அதே சமயம் வாசகர்களைக் குழப்பாமல் எளிமையாகச் சொல்வதில் தேர்ந்தவர். நடிகர் ரஜினிபற்றிய தெரியாத பிம்பத்தைப் புத்தகமாக எழுத இருக்கிறார். தற்போது பெங்களூரில் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். thiruttusavi.blogspot.in என்பது இவரது வலைமனை. தனித்துவமிக்க இளம் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த அபிலாஷ், சமகால இலக்கிய உலகின் நம்பிக்கை முகம்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline