Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
நான் கண்ணாடியை மாத்திட்டேன்
கத்தி
ஜவ்வாது
- கோகிரா|மே 2017|
Share:
துண்டிக்கப்பட்ட கை!

அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. காயம் இல்லை. எங்கும் உதிர்ந்த இலைகள்.

ஒருவேளை பொம்மையோ? செல்லின் ஃப்ளாஷ்லைட்டை ஆஃப் செய்துவிட்டு காருக்கு விரைந்தான் கார்த்திக்.

"வெய்ட்" யாரோ கூப்பிடுவதுபோல் இருந்தது. ஃப்ளாஷ்லைட்டை எல்லாத் திசையிலும் சுற்றினான்,

"Here". கேட்கிறது. கேட்பதுபோல் தோன்றியது. தெரியவில்லை.

இருட்டு. இருட்டு. இருட்டு.

ஒரு கோடி சுவர்க்கோழிகள். குழம்பினான். தப்பு. பண்ணிவிட்டோமோ!

மனதை அவசரக் கலவரம் ஆக்கிரமித்தது. இது வழியாக ஒவ்வொரு வாரமும் வருவான். ஹோப்வெல் கிராமத்தில் இருந்து மகளின் கூமன் இடத்திற்கு இதைவிடச் சுலபமான வழி இல்லை. காரில் 15 நிமிஷம்தான்.

வேதியுக்ஷயா 11வது படிக்கிறாள். கூமன் பள்ளியில் ஆசிரியை. வாரம் ஒருமுறை, நான்கு மணிநேரம் ஆசிரியை.

வாரந்தோறும் அவளை விட்டுவிட்டுக் காரில் அருகில் இருக்கும் இந்தியன் மளிகைக்குச் செல்வான். வியாழன் இரவு அங்குதான் புத்தம்புது காய்கறி கிடைக்குமாம்.

"அவளை அங்க விட்டுட்டு அப்படியே ஏன் புதுக்காய்கறி வாங்கிட்டு வரக்கூடாது?" இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் தலையில் கட்டுவதில் வித்யா கில்லாடி.

அன்று எல்லாமே வழக்கம் போலத்தான் இருந்தது, கூமன் பள்ளியை விட்டு வெளிவந்து மேப்பிள்ஸ் லேன் வலது ஜேரட் அவென்யூ இடது US 206 வலது கேம்ப்ளய்ன் எக்ஸிட் எடுத்து வளைவில் ஏற்றத்தில் இறக்கத்தில் ஆளில்லாச் சாலையில் வரும்போதுதான், அது நடுவில் இருந்தது.

துண்டிக்கப்பட்ட கை. அருகில் பார்க்கக் காரைவிட்டு இறங்கினான். கை முழுதும் பச்சை குத்தி இருந்தது. ஒரு விரலில் மட்டும் திருமண அடையாளம். வயிற்றில் கலவரம் பரவியது. இதயத்துடிப்பு காதில் கேட்டது.

"இங்கே பார்". செல்போனின் ஃபிளாஷ் லைட்டைச் சுற்றினான். வலது பக்கத்தில் உலர்ந்த சருகுகள் மத்தியில் ஒரு வெள்ளைக்காரன் தரையில் இருந்தான். இருபது, இருபத்தைந்து வயது இருக்கும். தோள்பட்டை வரை முடி. கூரிய மூக்கு. எல்லாமே நேர்த்தியாக இருந்தது. இடது கை மட்டும் மிஸ்ஸிங்.

ஒரு துளி ரத்தம் இல்லை. காயம் இல்லை. வேறு எந்தத் தடயமும் இல்லை. உயிர் இருந்தது. அவன் மிச்சம் இருந்த கையில் எதையோ சுட்டிக் காட்டினான்.

"ஹலோ. நான் பேசுவது கேட்கிறதா? இப்படி எப்படி ஆச்சு? லெட் மீ கால் 911" என்றேன்.

"நோ" எனக் கதறினான்.

மிகவும் கஷ்டப்பட்டு தூரத்தில் எதையோ சுட்டிக்காட்டினான். அங்கே ஒரு மோட்டார் பைக் கவிழ்ந்து கிடந்தது. அதன் பின்சக்கரம் ஆச்சரியமாக இன்னும் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் அவன் காட்டியது அதையல்ல.

பைக்கிலிருந்து ஐந்து அடியிலிருந்து கருப்பாக ஒன்று இருந்தது. மூன்று அல்லது நான்கு அடி இருக்கும். செல் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. அருகில் இருக்கும் இலைகளைச் சற்று விலக்கினான். விலக்கி அந்த கருப்பு ஐட்டத்தைத் திருப்பினான். அது கருப்பு இல்லை. பச்சை நிறத்தில் இருந்தது. உறைந்து போனான்.

மிகவும் நேர்த்தியான சிவலிங்கம்.

அது எப்படி இங்கு வந்தது. அவன் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறான். கை போனாலும் இதிலே குறியாய் இருக்கிறானே?

கார்த்திக் லிங்கத்தைத் தூக்க முயற்சித்தான். மிகவும் பாரமாக இருந்தது. கையை அசைக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. குனிந்த மாதிரியே இருந்தான். எழ முடியவில்லை. கால்கள் நகரவில்லை. வாய் பேசவில்லை.

சட்டென எங்கும் குளிர்காற்று. அதில் ஜவ்வாது மணம் வீசியது. ஏதோ வழவழப்பாகக் காலில் தென்பட்டது. உற்றுப் பார்த்தான். பாம்பு! பத்து அடி இருக்கும். மெல்லக் காலின்மேல் ஊர்ந்தது. ஆனால் கார்த்திக்குக்கு ஏனோ பயம் சுத்தமாக இல்லை!

யாரோ ஒருவர் வருவதுபோல உணர்ந்தான். காவி உடை, ருத்திராட்ச மாலை, மெல்லிய தேகம், தாடி, வசீகரச் சிரிப்புடன் அவர் வந்தார். கடந்து சென்றார்.

லிங்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். வினாடியில் காட்டுக்குள் மறைந்தார்.

சட்டென உலகமே நின்றுபோய் தூக்கத்திலிருந்து விழித்தது போல உணர்ந்தான். வெள்ளைக்காரன், பைக், கை, பாம்பு, சாமியார், லிங்கம் எல்லாமே மிஸ்ஸிங்.

ஜவ்வாது மணம் மட்டும் இன்னும் இருந்தது.

ஐபோன் 8:30 காட்டியது. ஒரு மணிநேரம் ஆயிடுச்சா? காரைத் திருப்பி கூமன் பள்ளியை நோக்கிப் பயணித்தான். காய்கறிக்கு இப்போது நேரம் இல்லை.

நடந்த சம்பவத்தை வித்யாவிடம் சொன்னான் "யு காட் வைல்ட் இமாஜினேஷன்." மாதவனிடம் சொன்னான் "என்னடா சரக்கு மாத்தி அடிச்சிட்டியா?"

அத்துடன் நிறுத்தினான்.

*****


"Klarer Himmel. Lokale Temperatur ist sechsundzwanzig Celsius." நூவர்க் டு ஜெர்மனி டு சென்னை இருபது மணிநேரப் பிரயாணம். ஒருவழியாக முடிந்தது. ஆரஞ்சு விளக்கில் வண்டிகள் நகர்வதை விமான ஜன்னல்கள் காட்டின.

மூன்று வருடம் ஆயிற்று இந்தியா வந்து. கடைசியாக நிஷ்சலுக்கு மொட்டை போட வந்தது. பயங்கர செலவு. மொட்டை நமக்குத்தான் என மனசுகுக்குள் நினைத்தான். மூன்று வார இந்தியா பயணம். தினப்படி செய்யவேண்டிய பட்டியல் இரண்டு மாதத்திற்கு முன்பே தயார். பீச், வித்யா பள்ளித் தோழியின் இரண்டாவது மகளின் ஒருவயதுப் பிறந்தநாள், வித்யாவின் வீடு, திருப்பதி, தாராசுரம், வித்யாவின் மாமிவீடு, ஷாப்பிங் இத்யாதி என.

விமானத்தை விட்டு வெளிவந்து இமிகிரேஷன் வரிசையில் நின்றான். அயல்நாட்டவர் வரிசையில் இந்தியர்களே நிரம்பி இருந்தனர்.

எல்லாப் பிரயாணக் கடன்களையும் முடித்து வெளிவரும்போது விடிந்திருந்தது.

*****
"எல்லாமே எண்ணெய்ச் சட்டிதான்
சட்டியிலே குண்டு குட்டிதான்"

வாடகை இனோவாவில் அதிநவீன சினிமாப் பாடலை டிரைவர் ஓடவிட்டிருந்தான். சென்னையிலிருந்து தாராசுரத்தை நோக்கிப் புறப்பட்டு மூன்று மணி நேரம் ஆயிற்று. வித்யா, வேதியுக்ஷயா, நிஷ்சல் எல்லாம் பின்வரிசையில் தூக்கம்.

டிரைவரிடம் பேச என்ன முயற்சித்தாலும் அவன் அதிகம் பேசமறுத்தான். வெள்ளை ஆடை, எண்ணெய்க் கேசம், சிறிய விபூதிக் கீற்றுடன் இருந்தான். ஜூனியர் விகடன், நக்கீரன், தந்தி பேப்பர் வைத்திருந்தான். அரசியல் ஆர்வம்போல.

"டிரைவர் சார் உங்க பேர் என்ன? சாரி கேட்க மறந்துட்டேன்."

"ப்ப்பாவின்" "ப" வை அழுத்திச் சொன்னான்.

"நீங்க ஹிந்தியா?"

"குஜராத்தி சார், முழு பேரு ப்ப்பாவின் மோடி."

"ஓ நீங்க ப்ரைம் மினிஸ்டருக்கு சொந்தமா?"

"இல்லை" எனப் புன்னகைத்து மறுத்தான்.

புதிய நெடுஞ்சாலை வழிநெடுக "கும்பகோணம் டிகிரி காபி இங்கு கிடைக்கும்" அறிவிப்புகள். ஆங்காங்கே கிராமத்து மக்கள் சாலையைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

"நீங்க தமிழ்நாட்டிலே பிறந்தீங்களா இல்லை வளர்ந்தீங்களா?"

"ரெண்டும் இல்லை சார். குஜராத்தில் பலன்பூர்ல."

"தமிழ் சூப்பரா பேசறிங்க."

அதற்கும் புன்னகைத்தான்.

"Dad need to pee" நிஷ்சல் தூக்கத்தில் கதறினான்.

"வெயிட் பண்ணு. கொஞ்ச நேரம்தான்."

டிரைவர் சட்டென குறுக்கு வழியில் திரும்பி ஒரு சத்திரத்தின் உள்ளே நிறுத்தி "இங்க பாத்ரூம் நல்லா இருக்கும் சார்" என்றான்.

பாத்ரூம் முடிந்தவுடன் வேன் புறப்பட்டது. டிரைவர் பாடல் ஆடியோ பிளேயர் பொத்தான்களை அழுத்தினான்.

"மாட்டு வண்டி கோனாரு
மஞ்சள் வேட்டி கட்டினாரு"

வேறு ஒரு புதிய படத்தின் பாடல்போல.

"ப்ப்பாவின்"

"?"

"வேற நல்ல பாட்டு போடுங்க. இது வேண்டாம். இளையராஜா சாங்ஸ் இருக்கா?"

"இருக்கு சார்"

"பனிவிழும் மலர்வனம். உன் பார்வை ஒரு வரம்.."

*****


"சுப்பி மாமா கொஞ்சம் ஜாஸ்தி பேசுவார். Please ignore" என வித்யா எச்சரித்திருந்தாள். சுப்பி மாமா, மிருதுளா மாமி இருவரும் தாராசுரம் அருகில் பெருமாண்டி எனும் கிராமத்தில் வாசம்.

"வாங்க வாங்க."

வண்டி நின்றதும் வீட்டிலிருந்து ஓடி வந்தார் சுப்பி மாமா. வண்டியிலிருக்கும் சாமான்களை எடுத்துக்கொண்டார். வித்யா சொன்னதுபோல் மோசம் இல்லை என்று நினைத்தான்.

நினைத்தது தவறு என்று பத்தே நிமிடங்களில் நிரூபித்தார் மாமா. அதீதப் பேச்சு மட்டுமில்லாமல் அதிகப்ரசங்கியாகவும் இருந்தார்.

"நீங்க என்ன வேலைபாக்கிறேள்?"

"கம்ப்யூட்டர் வேலை மாமா."

மாமாவிற்கு வயது 70க்கு மேல் இருக்கும், கட்டம் போட்ட சட்டை. வேஷ்டி. மாமி மட்டும் சற்றே மாடர்னாய் இருந்தார்.

"ஜாவா வா?"

"இல்லை" எனச் சொல்லி முடிக்கும் முன்னர் "எல்லாம் ஒண்ணுதான். என்ன சம்பளம்?" என்றார்.

"மருந்து தயாரிக்கிற கம்பெனியில வேலை பண்றேன் மாமா. ஃபார்மான்னு சொல்லுவா" எனப் பேச்சை மாற்றினேன்

"ஆங். சம்பளம் எவ்வளவுன்னு கேட்டேன்."

கார்த்திக்குக்குப் பொறுமை குறைந்து போனது. "எவ்வளவோ உனக்கு என்னயயா" எனச் சொல்லிவிடலாம் என்று நினைத்தான்.

மெளனித்தான். சுப்பி மாமாவிற்கு ஒரு மகன் இருந்தான். 12 வயதில் சென்னையில் சாலை விபத்தில் இறந்து போனதை வித்யா சொல்லியிருந்தாள். அதனாலோ என்னவோ கார்த்திக் பொறுமை காத்தான்.

"மருந்துக் கம்பெனிக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன சம்பந்தம்?" அவரே ஆரம்பித்தார்.

"இப்படித்தான் திருப்பதி மெடிகல்ஸ் ஓனர் பழனிகிட்டே எவனோ ஒருத்தன் கம்ப்யூட்டர் விக்க வந்தான். நான் ஒரு பிடி பிடிச்சுட்டேன்."

"சுத்தம்"

"என்ன சொன்னேள்?"

"சத்தம். சத்தம் போடாதேன்னு வேதியுக்ஷயா கிட்ட சொன்னேன்."

"இவ பேரு என்ன?"

"வேதியுக்ஷயா"

"அவன்?"

"நிஷ்சல்"

"ஏன் இப்படி எல்லாம் வாயில நுழையாத பேரா வைக்கிறா இந்தக் காலத்தில? நிஷ்சல், அலைச்சல்னு ஒரு பேரா?"

"சான்ஸ்க்ரிட் நேம்ஸ் மாமா" வித்யா குறுக்கிட்டாள்.

"என்ன பெரிய சான்ஸ்க்ரிட். நேக்கு தெரியாதா சான்ஸ்க்ரிட்? ருத்ரம் சொல்லவா?"

"நீங்க தாராசுரம் கோவிலுக்குப் போனதில்லைனு வித்யா சொன்னா. போய்ட்டு வாங்கோ" மிருதுளா மாமி போண்டா, சட்னியுடன் கேட்டார்.

"ஸ்வேத விநாயகர் கோவில். மூலவர் கடல் மண்ணாலே ஆனவர். அங்கே உங்களை மாதிரி நிறையப் பேர் அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு வரா. வெள்ளைக்காரா நிறைய பேர்."

"அமெரிக்காவை விடு. எனக்கு 83ல் குன்னூர்ல போஸ்டிங் போட்டா. வேண்டாம்னுட்டேன்" மாமா விடுவதாக இல்லை.

"பெருமாண்டி உங்க நேடிவ் பிளேசா?"

"இல்லை. மாமா ரிட்டையர் ஆனபின் இங்க வந்தோம். இதுகூட வாடகை வீடுதான்."

"ஓ!"

"தட்சிணாமூர்த்தி மாமாவோட வீடு. ஒண்டிக்கட்டை. வீட்டை முழுசா எங்களுக்கு கொடுத்துட்டு, அவர் பாவம் ஒரு ரூம்ல இருக்கார்."

மாமா குழந்தைகளுடன் ஆச்சரியமாக தீக்குச்சிப் புதிர் விளையாடிக் கொண்டிருந்தார்.

மதிய உணவு நேரம். தரையில் மூன்று இலைகளில் ஆரம்பப் பண்டங்கள் இருந்தன. இலையில் சாப்பிட்டு எவ்வளவு வருடங்கள் ஆயிற்று?
மாமா இடது புறம் அமர்ந்தார். மாமியை நோக்கி "நீங்க?" என்றான்.

"After you guys are done" என்றாள் வித்யா.

"அந்த இலை தட்சிணாமூர்த்தி மாமாவிற்கு. எப்பவுமே குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட்டு. நான் போய் கூப்பிடறேன்" என்றார் மாமி

மாமா "நீங்க ஆரமிச்சுடுங்கோ" என்றார்.

சாப்பிட ஆரம்பித்தான்.

சட்டென்று ஜவ்வாது வாசம் பரவியது. காவி உடையில் தாடியுடன் அருகில் வந்து அமர்ந்தார் அவர். அந்த தட்சிணாமூர்த்தி மாமா.

கார்த்திக்கைப் பார்த்து வசீகரச் சிரிப்புடன் "செளக்கியமா" என்றார்.

மாமி "அமெரிக்காவிலிருந்து என்னோட அண்ணா பொண்ணு வரான்னு சொன்னேனே மாமா. அவளோட ஆத்துக்காரர்."

"மாமாவுக்கு ஒருவேளைதான் சாப்பாடு. எப்பவுமே விளையாட்டு. இல்லைன்னா கோவில். மாமாவுக்கு தெரியாத ஆளே இல்லை"

"ஆறு மாசம் மின்னாடி திருக்குவளை கோவில்ல மரகத லிங்கத்தத் திருடிட்டா. எங்கெல்லாமோ தேடிப்பாத்தா. கிடைக்கலை. இரண்டு மாசம் கழிச்சு மாமாகிட்டே ஓடிவந்தா. மாமா அரைமணிக்குள்ளே கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டார்."

*****


அமெரிக்கா திரும்பி மூன்று மாதம் ஆனது.

கார்த்திக் லேப்டாப்பில் இருந்தான். வித்யா "என்ன பண்றே?" என்றாள்.

"ஒரு சிறுகதை எழுதிட்டு இருக்கேன்."

"ஏய், நீ கதையெல்லாம் எழுதுவியா? எனக்குத் தெரியாதே. என்ன டைட்டில்?"

"ஜவ்வாது."

கோகிரா,
ராபின்ஸ்வில், நியூ ஜெர்சி
More

நான் கண்ணாடியை மாத்திட்டேன்
கத்தி
Share: