Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மீசை
தீராத வாசனை
மணியின் கதைவங்கி
- சாம்பசிவன் வெங்கடேசன்|ஏப்ரல் 2017|
Share:
ட்யூஷன்

"டைம் என்னாச்சும்மா?"

"8:15 இன்னும் 45 மினிட்ஸ் இருக்கு."

"போனவாரம் இந்த டைத்துக்கு வந்தப்ப கூட்டமே இல்ல, க்யூவுல 20 பேர்தான் இருந்தாங்க. குவிக்கா முடிஞ்சுபோச்சு."

"ராயப்பேட்டைல ரெண்டு நாளா நின்னு பாத்தேன். முடியல, ஒரே வெயிலு பாதில வீட்டுக்குப் போயிட்டேன். எங்க ஃப்ளாட் வாட்ச்மேன் இந்த பிராஞ்ச்சுல கூட்டம் இருக்காதுன்னு ட்ரை பண்ணச் சொன்னாரு."

"நார்மலா இங்க கூட்டம் வரதில்ல, இந்த பணத்தட்டுபாடு வரவரைக்கும் நிறைய பேருக்கு இங்க பேங்க் இருக்குறதே தெரியாது."

"ஹும், பார்க்கலாம் இன்னிக்கு நம்ம ராசி எப்படின்னு."

"நீங்க ஹவுஸ் வொய்ஃபா மா?"

"ஸ்கூல் டீச்சர். இப்பதான் ரிடையர் ஆனேன். நீ என்ன பண்றே?"

"ஹோம் நர்ஸ். இங்க ஒரு அம்மாவுக்கு வீட்டுல கேர் டேக்கர்."

"ஓல்ட் ஏஜா?"

"ஆமா. கேன்சர் சர்வைவர். பசங்க அமெரிக்காவுல இருக்காங்க. நான்தான் டெய்லி வந்து 12 ஹவர்ஸ் கவனிச்சுகிறேன்."

"இந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது."

"பசங்கள குத்தம் சொல்லமுடியாதும்மா, எனக்கு வெளிநாடு சான்ஸ் கெடச்சுச்சுன்னா நானும் போவேன். நமக்கு அவ்வளவு படிப்பறிவு இல்ல."

"குத்தம் சொல்லல, எல்லாரும் அவங்கங்க ஃப்யூச்சரத்தானே பார்ப்பாங்க. பெத்தவங்க சப்போர்ட்டுக்கு ஆள் இல்லன்னா என்ன, இருக்கவோ இருக்கு ஓல்ட் ஏஜ் ஹோம். இப்ப எல்லார் வீட்டுலேயும் அதுதானே நடக்குது."

"முன்னமாதிரி இல்லம்மா ஒல்ட் ஏஜ் ஹோம். இப்பெல்லாம் நல்ல ஹைக்ளாஸா இருக்கு. அதுவும் கோயம்புத்தூர்ல இருக்குற ஹோம்ஸ் ரொம்பவே நல்லா இருக்குதுன்னு என் சிஸ்டர் சொல்றா. அவ அங்க நர்ஸ், நிறைய ஹோம்ஸ்ல பேஷண்டு இருக்காங்க. அடிக்கடி போய் வருவா."

"ஹோம்ல இருக்குறது தப்பில்ல ஆனா பெத்தவங்கள அப்படியே அனாதையா விட்டுடக் கூடாதுன்னுதான் சொல்றேன். பசங்களுக்குன்னு கடமை இருக்குல, நாமதான் அவங்கள ஆளாக்கறோம்."

"கரெக்டுதாம்மா. எங்க வூட்டு அம்மா பசங்க அமெரிக்காவுல இருந்தாலும் உயிர் அவங்க அம்மாகிட்டதான். டெய்லி ஃபோன் பண்ணுவாங்க. அம்மாவுக்கு என்னென்ன தேவையோ எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிடுவாங்க. இயர்லி ஒன்ஸ் வந்து 3 வாரம் தங்கிட்டு போவாங்க."

"எல்லா ஃபேமிலியும் அப்படி இல்லங்கறது தான் ப்ராப்ளம். என் பசங்க அமெரிக்காவுக்கு போகணும்னு ஆசைப்படறாங்க, பார்க்கலாம் ஆண்டவன் விட்ட வழி. உனக்கு பசங்க இருக்காங்களா? ஆமாம் உன் பெயரென்ன?"

"எழிலரசி. 2 பசங்க. பையன் 10வது பொண்ணு 8வது படிக்கறாங்க. பையன்தான் படிப்புல வீக். பொண்ணு எல்லாத்தலயும் ஃபர்ஸ்ட்."

"என் பேரு உமா. எனக்கு 2 பாய்ஸ். ரெண்டு பேரும் இஞ்சினீயரிங் படிக்கறாங்க. உன் பையனுக்கு எந்த சப்ஜெக்ட் சரியா வரலை?"

"கணக்கு, சயன்ஸ் ரெண்டுமே சுமார்."

"ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?"

"சொல்லுங்கம்மா."

"என்கிட்ட 3 மாசம் ட்யூஷன் படிக்கட்டும். எப்படி வொர்க் ஆகுதுன்னு பார்ப்போம். நீ ஒண்ணும் ஃபீஸ் தர வேண்டாம்.. ஒகேயா?"

"கண்டிப்பா டீச்சர். எப்ப ரிப்போர்ட் கார்டு வந்தாலும் டீச்சர் சரியில்ல அதான் மார்க் கம்மின்னுவான். அவன் மேலதான் ஃபால்ட், தங்கச்சி அளவுக்கு மூளை பத்தாதுன்னு சொல்லி இத்தினி நாளு நான் ட்யூஷன் வெக்கல."

"டீச்சராயிட்டோம்னா வாழ்க்கை பூரா மாணவர்களுக்கு உதவி செய்யணும்னு எண்ணம் வந்திரும்மா. பசங்கள பெரிய ஆளாக்க பெத்தவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்க. எங்கள மாதிரி ஆசிரியர்களை நம்பித்தானே பிள்ளைகள விடறாங்க, அந்த நம்பிக்கைய எந்த ஒரு நல்ல டீச்சரும் வீணாகவிட மாட்டாங்க. ஒரு சில பேருக்கு எக்ஸ்ட்ரா கோச்சிங் தேவைப்படுது, அவ்வளவுதான். நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன்."

"டீச்சர் உங்களுக்கு பெரிய மனசு. ரொம்ப தேங்க்ஸ்."

"அதெல்லாம் எதுக்குமா. என் பழைய ஸ்டூடன்ட்ஸ் இன்னமும் காண்டாக்டுல இருக்காங்க. ஒவ்வொருத்தரும் வெளியூர், வெளிநாடுன்னு இருந்தாலும் என்னை மதிச்சு அட்வைஸ் கேப்பாங்க, வீட்டு ஃபன்ங்ஷக்கு இன்வைட் பண்ணுவாங்க, பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பாங்க,. அவங்க வாழ்க்கைல வெற்றி அடைஞ்சதை பார்த்த சந்தோஷம் ஒண்ணே போதும்மா."

முந்தா நாள் எழுதியதை இன்னொரு முறை திருப்பிப் படித்துவிட்டு டயரியில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தான் மணி. அப்போது கடை வாசலில் கஸ்டமர் வந்திருப்பதைக் கூட கவனிக்கவில்லை.
பலசரக்கு கடை

"வாட்டர் பாட்டில் ஒண்ணு குடுங்க."

"டேய் மணி, கஸ்டமர கவனியாம என்னடேய் எழுதிகிட்டு கிடக்க?" என்று உரிமையோடு கேட்டார் கடை ஓனர் தங்கமுத்து.

மணி திடுக்கென்று தலையைத் தூக்கிப் பார்த்தான். வெள்ளை பேண்டு சர்ட் போட்ட ஒருத்தர் 100 ரூபாய் நோட்டை நீட்டியபடி நின்றிருந்தார். டயரியை அரிசி மூட்டையின் மேல் வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து கஸ்டமரிடம் குடுத்தான்.

"அண்ணாச்சி 20 ரூவா சில்லறையா இருக்கா, கடைய இப்பதான் தொறந்தேன் பாருங்க" என்று கஸ்டமரிடம் பவ்யமாய் கேட்டார் தங்கமுத்து.

வந்தவர் "பேச்சுல நம்ம ஊரு வாடை வருதே, நீங்க திருநவேலியா?" என்றார் ஓனரைப் பார்த்து.

"ஆமா அண்ணாச்சி, நீங்களும் நம்ம பக்கமா, எந்த ஊரு?"

"தாழையூத்து"

"அட சிமெண்டு கம்பெனி ஊர்லா, இங்கிட்டு என்ன பண்ணுதீங்க?"

"கம்பெனி டிரைவர். ஊர்ல ஆபீஸருக்கு ரொம்ப வருஷமா ஓட்டிகிட்டிருந்தேன், அவரு வேலை மாத்தலாகி சென்னைக்கு வாரப்ப என்னையும் கூடவே கூட்டியாந்துட்டாரு."

"நல்ல கம்பெனியாச்சல்லா வார வேண்டியது தானெ என்ன சொல்லுதீங்க?"

"வாஸ்தவம். ஆனா என்ன ஒண்ணு அப்பப்போ ஊரு பக்கம் வந்து போகலன்னா அரிப்பு எடுக்கு. குறுக்குத்துறைல முங்கிட்டு முருகன கும்பிடு போட்டாத்தான் டானிக் ஏத்தினாப்புல இருக்கு."

"இருக்காதா பின்ன. பட்டணத்துக்கு வந்து 15 வருஷம் ஓடிப் போயிட்டு ஆனாலும் அடிக்கடி ஊரு க்கம் போயி தாமிரபரணி தண்ணிய குடிச்சாத்தான் இந்த ஆக்கங்கெட்ட ஊருல வார நோய் சீக்கெல்லாம் விட்டு வெலகுது."

"நானாச்சும் பரவாயில்ல, வீட்டுகாரம்மா மாசம் ஒருக்க ஊரு பக்கம் ஒடியாந்துருவா. இருட்டு லாலா அல்வாவும் லட்சுமி விலாஸ் மிக்சரும் சாப்பிடலண்ணா தலை வெடிச்சுரும்மா. இந்த டிராவெல்ஸ் காரனுக்கு துட்டு இறக்கி பூரா சம்பளமும் கரஞ்சு போவுது" என்றார் டிரைவர்.

"எம்புட்டு நாளா கடை நடத்துதீங்க?"

"8 வருஷமாத்தான். அதுக்கு மின்னே திருவல்லிக்கேணில ஒரு கடைல எடுபிடியா இருந்தேன். திருநவேலி டவுண்ல ஆண்டி நாடார் இருந்தார்ல அவரு பேரன் இங்கிட்டு ஏஜன்சி நடத்துதாம் அந்த கடைலதான்."

"ஊருக்குப் போனா கடைய யாரு கவனிச்சுகிடுவா?"

"இதோ இந்த மணி பயதான், எங்கக்கா மவன். பய பார்க்க முசலு மாதிரி இருந்தாலும் படிப்புல புலி. சும்மா கிடக்கமாட்டான், பேப்பர் எடுத்துகிட்டு எதையாச்சும் எழுதிகிட்டே கிடப்பான். ஆனா என்ன யாவாரம் வழக்குல அக்கறை கிடையாது. அதான், அக்கா காலேஜ் இல்லாதப்ப இங்க வந்து ஒத்தாசை பண்ணி யாவாரத்த கத்துகிடச் சொல்லுதா."

"நல்லதுதானே, செல்போன முறைச்சுட்டு கெடக்கறதுக்கு இது மேல்."

"ஆமா வீடு எங்கிட்டு இருக்கு? இங்கிட்டு உங்கள அதிகம் பாத்தாப்புல இல்லையே, அதான் கேட்டேன்."

"ரெண்டு தெரு தாண்டி ராமசாமி காலனில. பொதுவா இந்தப் பக்கம் வாரதில்ல. இந்த பேங்க் பிரச்சனையினால இங்கிட்டு வார வேண்டியதாப் போச்சு."

"அங்கிட்டு ஒரு நாயர் கடை இருக்குல்லா?"

"அந்த கடைலதான் பலசரக்கு வாங்குறது. அதுக்கு ஆப்போஸிட்லதான் நம்ம வீடு."

"ஓ சரி சரி. இனிமே நம்ம கடையிருக்குல்லா, வேறெங்கிட்டு போகணுங்கே? அக்கவுண்டு போட்டுத் தாரேன். மாசத் தொடக்குத்துல கணக்கு செட்டில் பண்ணிட்டீள்னா போதும். எதனாச்சும் வேணும்னா ஆச்சிய ஃபோன் போடச் சொல்லுங்க, ஒரு மிதி மிதிச்சு ஹோம் டெலிவரி பண்ணிருவோம், இதுக்காக புதுசா பைக் எறக்கியிருக்கோம்ல. என்ன சொல்லுதீங்க?"

"அதுக்கென்ன. நம்ம பக்கத்து ஆளு வேற இனிமே நான் என்ன சொல்ல. கொஞ்சம் ரேட்ட பாத்து போட்டுக் குடுங்க."

"என்ன இப்படி சொல்லிட்டீங்க. எல்லாம் நான் பாத்துகிடுதேன்."

"சரி அண்ணே. பேங்க தொறந்துட்டாப்ல இருக்கு. லைன் மொள்ள நகர ஆரம்பிச்சாச்சு. பணத்தை எடுத்துகிட்டு கெளம்புதேன். பொறவு பேசலாம்."

"நல்லது அண்ணாச்சி. லைன்ல நிக்கையில பர்சை பத்திரமா பாத்துகிடுங்க. இந்த வெளங்காத பய ஊர்ல அம்புட்டும் களவாணிப் பயகதான்."

தங்கமுத்து மணியிடம் “அப்படி என்ன டேய் எழுதிகிட்டு கெடக்க நாள்பூரா?"

"ஒண்ணுமில்ல மாமா, காலேஜ்ல கட்டுரைப் போட்டி வருது. அதுக்கு வேண்டி ப்ராக்டீஸ் பண்றேன்" என்று பச்சையாய் டுமீல் விட்டான்.

சாதாரணமாகவே கடைக்கு வரும் கஸ்டமர்களின் பேச்சை வைத்து, சொந்தக் கற்பனையும் சேர்த்து டயரியில் எழுதுவது அவனுக்கு நல்ல டைம் பாஸாக இருக்கும். இந்த பணத்தட்டுப்பாடு வந்ததிலிருந்து ஓவர் டைம் போட்டு எழுதிக் கொண்டிருந்தான். காரணம் பக்கத்தில் இருக்கும் பேங்க்கின் க்யூ தினமும் கடைவாசல் வரை நின்று கொண்டிருந்தது. அங்கே நிற்பவர்களின் பேச்சிலிருந்து மணியின் எழுத்துக்கு தீனி ஏராளமாகக் கிடைத்தது,

"அது சரி, யாவார நுணுக்கத்த எப்படே கத்துகிடப் போற? சென்னைல இன்னொரு கெளயத் தொறந்து படிப்படியா சரவண பவன் அண்ணாச்சி லெவலுக்கு வரணும்னு திட்டம் போட்டிருக்கேம்ல. இந்தக் கடைய உங்கிட்ட விட்ருலாம்னுல இருக்கேன். நீ பாட்டுல எழுதிகிட்டிருந்தா வார கஸ்டமரு பூரா இந்த கடைல சர்வீஸு சரியில்லன்னு வேற எங்கிட்டாச்சும் யாவாரத்த எடுத்துகிட்டுப் போயிடுவாக. அசலுக்கே ஆபத்து வந்துருண்டேய்."

"உங்க கனவை என்மேல ஏன் திணிக்கிறீங்க மாமா, எனக்குன்னு வேற ப்ளான் இருக்கு, இந்த கடை வியாபாரமெல்லாம் எனக்கு செட் ஆகாது, போய் வேற ஆளப் பாருங்க" என்றது மணியின் மைண்ட்வாய்ஸ். காலேஜ் முடியற வரைக்கும் அவனால அவன் எதிர்காலத் திட்டத்தைப் பத்தி பேசமுடியாது.

“மாமா ஒரி பண்ணாதீங்க. அதான் டெய்லி வந்துபோய்க் கிட்டிருக்கேனுல, உங்கள வாட்ச் பண்ணிகிட்டேதான் இருக்கேன், உங்க ட்ரெய்னிங்ல நீங்க, 8 வருஷம் கத்துக்கிட்டதை ஆறே மாசத்துல பிக்கப் பண்ணிடுவேன், நீங்களே பெருமைப் படுவீங்க பாருங்க" என்று மாமா தலை கூலாக ஐஸ் வைத்தான்.

"எது எப்படியோடே உன்னையத்தான் நம்பிக்கிட்டிருக்கேன். நம்ம யாவாரத்த சாய்ச்சுப்புடாதே ஆமாம், அம்புட்டுத்தான் சொல்வேன்" என்றார் கொஞ்சம் எமோஷனலாக.

இது எதுவும் மணியின் காதில் விழவில்லை. டைரியின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருந்தான்.

பாரதிராஜா, பாக்யராஜ் காலம் மாதிரி ஊரிலிருந்து ஓடிவந்து டைரக்டர், அசிஸ்டெண்டுன்னு யாரு காலயாவது பிடிச்சு இப்பெல்லாம் சினிமாவுல என்ட்ரி ஆக முடியாதுன்னு தெரிஞ்சு வேற ரூட்டை செல்க்ட் பண்ணி போய்க்கிட்டிருக்கான்.

காலேஜ் முடிச்சு உடனே, பேங்குல வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் பேங்க் பேலன்ஸ சேர்த்தப்புறம் சினிமாவுல முட்டி மோதிப் பாக்கலாம்னு ப்ராக்டிகலா ப்ளான் பண்ணி வெச்சிருக்கான். அதுவரைக்கும் மணியின் கதைவங்கி பேலன்ஸ் மட்டும் ஏறிக்கொண்டிருக்கும்.

சாம்பசிவன் வெங்கடேசன்
More

மீசை
தீராத வாசனை
Share: 
© Copyright 2020 Tamilonline