Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மெல்லக் கனவாய் பழங்கதையாய்...
- பா. விசாலம்|மார்ச் 2017|
Share:
(நாவலிலிருந்து சில பகுதிகள்)

-4-

கழுவந்தட்டு. அந்தப் பெரிய கேட்டுக்கு மேலே பெரிய இரும்பு வளைவு. இரண்டு கேட்டுகளின் இருபக்கமும் இரண்டு கழுகு பொம்மைகள் ஈயத்தில் செய்த மாதிரித் தெரிகிறது. அது இருக்கவேதான் அந்த இடம் 'கழுவந்தட்டு'ன்னு ஆகியிருக்கணும். பழைய காலத்திலே அங்கே கழுமரம் இருந்ததுன்னு ஆத்தா சொன்னா. யுத்தத்திலே பிடிச்ச பேர்களையும் கொலை, கொள்ளை செய்தவர்களையும் இங்கேதான் கொண்டுவந்து கழுவேத்துவான்னும் ஆத்தா சொன்னா. அந்தக் காலத்துலே அங்கேய்லாம் வெறும் காடாக் கிடந்ததாம்.

பூசைப்புரையிலிருந்து ஸ்தலமாத்தம் கிடைச்சு பழையபடி எல்லோரும் இங்கே வந்தாச்சு. குட்டி அண்ணனும் நானும் மணல் அளைந்து விளையாடிக் கொண்டிருந்தோம். மணலோட சேர்ந்து வெள்ளை வெள்ளையா எலும்புப் பொடிகள் மாதிரி ஏதோ விரவியது மாதிரி இருந்தது

"ஏண்ணே, இந்த மணலப் பார்த்தியா, நிறைய எலும்புப் பொடி மாதிரி இருக்குல்லா?"

"மாதிரி இருக்கா, எலும்புப்பொடியேதான். முந்தி முந்தி ரொம்ப ரொம்ப முந்தி காலத்திலே இங்கதான் எல்லாத்தையும் கழுவிலேத்திக் கொல்லுவா. கழுமரத்திலே செத்துப் போயிருப்பாளே அப்பம் கழுகுகள் வந்து சதை எல்லாம் கொத்திக் கொத்தி தின்றுபோட்டுப் போனபிறகு எலும்பெல்லாம் நாளாக ஆகப் பொடி உதுந்துதான் இப்படி மணலோட மணலா ஆகியிருக்கு."

"அப்படின்னா ஆயிரம் பேர் செத்திருப்பாளா?"

"சீ போடி. ஆயிரம் பேரா? பத்தாயிரம், இருபதாயிரம், எத்தனையோ ஆயிரம் பேர் செத்திருந்தாத்தான் இவ்வளவு எலும்புப்பொடி இருக்க முடியும்."

எப்படி அவ்வளவு பேர் சாக முடியும்? அவ்வளவு பேரையும் யார்தான் கொன்னிருப்பா? எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியல்லன்னு விட்டுட்டேன்.

தினமும் சாயங்காலம் அப்பா வரும்போது நான்தான் முதலில் பார்த்து "அப்பா வந்தாச்சு"ன்னு சொல்லணும். அதற்காக அந்த நேரத்தில் தெரு நடையிலேயே இருந்துக்கிட்டிருப்பேன். வந்ததும் அப்பா இரண்டு கைகளையும் நீட்டுவார். நான் மேலே ஏறி நிற்பேன். அப்பாவின் இரண்டு கன்னத்திலும் ஒவ்வொரு முத்தம். "ஆ மீசை குத்துது"ன்னு சொன்னா அப்பாவிற்கு சந்தோஷம்.

சும்மா இருக்கும்போதெல்லாம் அப்பா கால்மேல் கால் போட்டுக்கொண்டு மீசையை மேல்நோக்கி முறுக்கி விட்டுக் கொண்டிருப்பார். நாஞ்சில் நாட்டிலேயே அதுபோல் மீசை யாருக்கும் கிடையாதாம். இது அம்மாவோட பெருமை. அதனால் அப்பா மீசையைப் பார்க்கும்போது எனக்கும் பெருமைதான்.

ஆனால் அப்பா ஒரு 'தீவாளிப்புள்ளி' இது ஆத்தாவின் மாற்றமுடியாத அப்பிராயம்.

ஆத்தாவுக்கும் அவள் மக்கமாருக்கும் 'இரப்பாளித்தனம்' அதிகம். இது அப்பாவின் ஆழமான முடிவு.

அப்பா எல்லோரையும் கூட்டிக்கொண்டு அந்தப் பெரிய காரில் தான் சந்தோஷமா பேச்சிப்பாறை, கன்னியாகுமரி என்று புறப்படும்போதெல்லாம் அம்மா ஆரம்பித்து விடுவாள். "பவுன் விலை இருபது ரூபாய்னு ஏறிப்போச்சு. இவ தெரண்டு வருஷம் மூணாகப் போகு. ஒரு உருப்படியும் செய்து வைக்கல்ல. இந்த லட்சணத்திலே இந்த மாதிரிச் செலவெல்லாம் என்னத்துக்கு?"

"போடி, இது உங்க அம்ம புத்தி. செலவு என்ன பெரிய செலவுங்கிற?" அம்மா, அப்பா சண்டை முடிவதற்கும் எல்லோரும் காரில் ஏறி முடிந்திருக்கும்.

"சும்மையா சொன்னா தீவாளி குளிக்கிற குடும்பம்னு" முணுமுணுத்துக் கொண்டே பட்டுச்சேலையும் மஞ்சள் குங்குமம் எல்லாம் கலந்த வாசனையுமாகக் காரில் எறிக்கொள்வாள் அம்மா.

பேச்சிப்பாறையில் சைஃபன் பார்க்க ரொம்ப அதிசயமாயிருக்கும். எல்லோரும் தேக்கு இலையில் சாப்பிடுவோம். அதுவும் அந்தக் காட்டுப் பகுதியிலே மரத்தடியிலே எல்லோரும் சுற்றியிருந்து சாப்பிடும்போது அந்தச் சாப்பாட்டின் ருசியிருக்கே! குழந்தைகளுடன் இயற்கையையும் சாப்பாட்டையும் ரசிப்பதுதான் அப்பாவின் ஏக இன்பம் மாதிரித் தெரியும். நாஞ்சில் நாட்டிலேயே ஒருத்தருக்கும் அப்பா மாதிரி இங்க்லீஷ் பேசத் தெரியாது. இதுவும் அம்மாவின் மேன்மையான பெருமைகளில் ஒன்று. இன்னும் இதுமாதிரி நிறையப் பெருமைகள் உண்டு.

"ஆமா... முதமுதல்ல பாம்படத்தைக் கழத்தி கம்மல் போட்டது இந்த நாஞ்சி நாட்டிலேயே நான் தான்லா! புறவுதான் ஒவ்வொருத்திகளும் காதறுத்து கம்மல் போட ஆரம்பிச்சதே."

ஃபாஷனைப் பத்தியும் ஒரு பெருமை உண்டு.

மகளுக்குக் கல்யாணம் ஆகி மருமகன் வந்த பின்னும் அம்மா ரவிக்கை போட்டுக் கொண்டிருக்கிறாள்! முதல்முதலாக யாரும் செய்யாத காரியம். எல்லோரும் நின்னு குடும்ப போட்டோ எடுக்கையிலே ஆத்தாவின் பின்னால் அப்பாவும் நின்று... போட்டோவைப் பிறகு பார்த்த ஆத்தா அதிசயிக்கா! நாஞ்சில் நாட்டில் யாரு இப்படிச் செய்வா? அப்பாதான் அப்படிச் செய்திருக்காருன்னு அம்மாவிற்குப் பெருமை! இதெல்லாம், நிஜமா, பொய்யா?

அதாவது நாஞ்சில் நாட்டிலேயே தானும் தன்னைச் சார்ந்தவர்களும் தான் எல்லாவற்றிலும் முதன்மை என்கிறது எந்த அளவுக்கு நிஜம்? அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அம்மா சொல்கிற ஒவ்வொரு பெருமையையும் கேட்டுக் கேட்டு என் மனதைப் பெருமையால் நிறைத்துக் கொள்வேன். சொல்லப் போனால் சில விஷயங்களில் நானும் அம்மா மாதிரியே பெருமைப்பட ஆரம்பித்து விட்டேன். தலைமுடியை அழுந்த வாரி சடை பின்னி கடைசியில் கம்பளி நூலால் கட்டிக்கொள்வது தான் அன்று எல்லாப் பிள்ளைகளுடைய வழக்கமாயிருக்கையில் எனது கிராப் முடியில் முன்னால் ரிப்பன் வைத்து 'போ' கட்டியிருப்பேன். மற்றக் குழந்தைகள் அதைத் தொட்டுப்பார்க்கும்போது எனக்கும் அந்தப் பெருமை வரும். மற்றவர்களைவிட எதிலோ எப்படியோ நாம் மாத்திரம் வித்தியாசமானவர்கள் அல்லது உயர்ந்தவர்களோ என்ற எண்ணம் அடிக்கடி தோன்றி கர்வமடையச் செய்தது.

*****
-5-

"ஆமா, இப்படியே ஒண்ணையும் நெனைக்காம ஒங்க பாட்டுக்குச் செலவழிச்சுக்கிட்டே போனா இது எங்க போய் முடியும்?" - அம்மா.

"என்னடி உளறுக? இப்ப என்ன வேணும்ங்கிற?" - இது அப்பா.

அன்றைக்கு எனக்குக் காய்ச்சல். அதனால் பள்ளிக்கூடம் போக வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். சம்பாஷணை தொடர்கிறது.

"அவ தெரண்டு ரண்டு வரிஷமாச்சு. அடுத்தவளுக்கும் அன்னா இன்னான்னு ஒரு வருஷம் தொகையப்போகு. இப்படி குதிலுபோல கொமருகள் வீட்டிலே வச்சிட்டிருந்தா என்ன அர்த்தம்?"

"என்ன, என்ன அர்த்தம்? எல்லாம் தன்னால வருவாண்டு"

"ஆமா.. அதுதான் வந்தவனையும் வேண்டாம்னுட்டேளே?"

"ஹாங்! அது பின்ன என்னடி? அவனுக்குக் கிருஷிங்கறான். வெறும் வைக்கோல் படைப்பத்தான் பார்க்க முடியும். நாலு பேரோட பழகத் தெரியாது. நாலு இடம் போகத் தெரியாது. என்னடி அவனுக்குப் போய் பொண்ணக் குடுக்க முடியுமா?"

அக்கா நாலாம் பாரம்தான் படிச்சிருக்கா. எனக்குத் தெரியும். இதுவே பெரிய படிப்புப் போலிருக்கு! அந்த மாப்பிள்ளை எட்டாம் கிளாஸ்தான் படிச்சிருக்கானாம். அம்மா அப்புறம் ஒன்றுமே பேசவில்லை. அம்மாவும், "நியாயம்தான் சர்க்கார் சோலிக்காரனைப் பார்ப்பதுதான் நல்லதுன்னு" நினைச்சிருக்கணும்.

வடக்கு வீட்டில் உமயம்மையத்தைக்குப் பிள்ளைகளே பிறக்கவில்லை. அவள் குளிக்க ஆத்துக்குப் போகும்போது என்னையும் ஒக்கலில் தூக்கிக்கொண்டு போவாள். சினிமா பார்ப்பது அவளுக்கு ரொம்ப இஷ்டம். சில வேளைகளில் சினிமாப்புரை வரையிலும் நடத்திக் கூட்டிச் செல்வாள். டிக்கட்டு கொடுத்து உள்ளே போகுமிடத்தில் மட்டும் என்னை ஒக்கலில் தூக்கிக்கொள்வாள். அப்போதுதான் சின்னக்குழந்தை என்று எனக்கு டிக்கெட் கேட்க மாட்டானாம். அப்படி டிக்கெட்டுக்காரனை ஏமாத்திவிட்டோம்னு அத்தைக்கு ஒரே சந்தோஷம். தரைக்கு ஒரு சக்கரம் டிக்கட்டு. மேலே தட்டுக்குப் போனால் ஒரு பணம்.

அம்மா மாத்திரம் சினிமாவே பார்க்க மாட்டாள். அப்பாவும்தான். ஒரே ஒரு தடவை 'பேசும்படம்' வந்திருக்காமென்னு அந்த அதிசயத்தைப் பார்க்கலாமென்று சொல்லி அத்தைமார்களுடன் 'கிருஷ்ணலீலா' ஒண்ணே ஒண்ணு பார்த்திருக்காளாம், யப்பா! நான் எத்தனை சினிமாக்கள் பார்த்துவிட்டேன். 'சாந்த சக்குபாய்', 'சிந்தாமணி', 'கந்தலீலா', 'சகுந்தலா', சாவித்திரி' அந்த அத்தை இருக்காளே, அனேகமா எல்லா சினிமாவையும் இரண்டு தடவை பார்த்துவிடுவாள். அனேகமாக என்னோடுதான். சில நாட்களில் பாதி சினிமாவிலேயே நான் தூங்கிப்போவேன். தூங்காமல் முழுப்படமும் பார்த்தேன் என்றால் வீட்டில் வந்ததும் சொல்லிச் சொல்லித் தீராது. எப்படியோ இப்படியாக எனக்குச் சில இதிகாசப் பெண்களும் அறிமுகமானார்கள். எங்களிருவருக்கும் அத்தனை நெருக்கம் இருக்கும்போதும் ஒருநாள் உமயம்மையத்தை எனக்குச் சோறு பிசைந்து ஊட்டிவிட்ட போது, அம்மா,

"ஏண்டி இவ்வளவு நேரம் அங்கேயே இருந்த நீ?"

"யம்மா, அத்தை எனக்குச் சோறு பிசைஞ்சு தந்தா. நான் சாப்பிட்டேன்"

"ஏன் சாப்பிட்டே?" என்று அம்மா கோபமாகக் கேட்டாள்.

நான் ஏதோ குற்றம் புரிந்துவிட்டு வந்து நிற்பதுபோல் அக்கா, அண்ணன் எல்லோரும் என்னைப் பார்ப்பதுபோல் உணர்ந்தேன். இனிமேல் யார் வீட்டிலும் எது தந்தாலும் வேண்டாம் என்று சொல்லனும்னு எனக்கு கண்டிப்பான உத்தரவு.

ஒரு சமயம் ஒரு வீட்டில் சாப்பிடச் சொன்னபோது, "அம்மாதான் சாப்பிடக்கூடாது, வேண்டாம்னு சொல்லணும்னு சொல்லியிருக்கான்னு" உண்மையைச் சொன்னேன். அது அம்மாவிற்குத் தெரிந்ததும், வந்தவர்கள் போனதும் அம்மா, தான்சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேனென்று சொல்லலாமா என்று ஒரே ஏச்சு. பழையபடியும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டேன். ஏன்? நானாகத்தான் வேண்டாமென்று சொல்லணுமாம். என்னடா இது?

கோட்டாத்தில் எங்கள் வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி ஆராம்புளி ஆச்சி வீடு. ஆச்சிக்கு ஊரில் வயதான அம்மா செத்துப் போனாள். துட்டி கேட்க அம்மா போனாள். நானும் கூடவே போனேன். அம்மா அந்த ஆச்சியிடம், செத்துப்போன ஆச்சியின் அம்மாவைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். விளையாடுகையில் சில பையன்கள் செத்தமாதிரிக் கிடந்ததற்காக, நாக்கை வெளியே துறுத்தி, கண்களை உருட்டி விழித்து நிலைகுத்தி நின்றுவிடுவது மாதிரிச் செய்வதைப் பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் நிஜமாக யாரும் சாவதையோ செத்ததையோ நான் எங்கே பார்த்திருக்க முடியும்? ஆராம்புளி ஆச்சி சொன்னாள், 'சிலேப்பம்' இழுத்தது இரண்டு மூன்று நாட்களாக இழுத்ததாம். ஒவ்வொருத்தராக ஒவ்வொரு கரண்டி பால் வாயில் ஊத்தவும் மெல்ல மெல்ல சீவனடங்கிப் போச்சுன்னு மாத்திரம் சொன்னதும் எனக்குச் சப்பென்றிருந்தது. சே! சாவுன்னா இவ்வளவுதானா? பேசிக்கொண்டே ஆச்சி அடுக்களைக்குப் போனாள். அம்மாவையும் என்னையும் சாப்பிட அழைத்தாள்.

அம்மாவா சாப்பிடுவாள்?

"இப்போதான் சாப்பிட்டேன்."

ஆச்சி என்னைப் பார்த்து "நீயாவது ஒரு தோசை சாப்பிடேன் மக்கா". தாலத்தில் நல்ல மணமுள்ள சூடான தோசை. நல்ல மிளகாய்ப்பொடி. பப்படம் வறுத்த தேங்காய் எண்ணெய். சாப்பிட மனம் துடித்தது. தோசையையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்க்கிறேன். அம்மா கண்ணை உருட்டி ஆச்சிக்குத் தெரியாமல் என்னைப் பார்த்து, அந்தப் பார்வையாலேயே பயமுறுத்தினாள்.

"அவளும் இப்பம்தான் என்கூட சாப்பிட்டுட்டு வாராள்" - அம்மா.

அதன் பிறகும் ஆச்சி விடவில்லை. கட்டாயப்படுத்துகிறாள். நான் வீட்டிலே சாப்பிடவே இல்லை. அம்மா சொன்ன பொய்யை நானும் சொன்னேன். 'என்ன வந்தாலும் பொய் மாத்திரம் சொல்லவே கூடாது'ன்னு அப்பா எத்தனை தடவை சொல்லியிருக்கார். போதாக்குறைக்கு அம்மாவே ஹரிச்சந்திரன் கதை சொல்லித் தந்திருக்கிறாள். என்ன பயன்?

(நன்றி காலச்சுவடு பதிப்பகம்)

பா. விசாலம்
Share: 
© Copyright 2020 Tamilonline