Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |மார்ச் 2017|
Share:
மார்ச் 9ம் தேதி வந்தால் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவுக்கு வயது 33 ஆகியிருக்கும். கான்சாஸின் ஒலேதா பகுதியில் வாங்கிய வீட்டுக்குத் தன் கையால் வண்ணம் பூசி, தானே கராஜ் கதவையும் பொருத்தியிருந்தார். 6'2" உயரமான, எவரும் நேசிக்கத்தக்க அந்த இளைஞர் காதலித்துக் கைப்பிடித்த சுநயனாவை அழைத்துக்கொண்டு போய் மகப்பேறு மருத்துவரை அண்மையில்தான் பார்த்திருந்தார். தந்தையாகும் ஆசையில் இருந்தார் அவர். எல்லாக் கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது ஃபிப்ரவரி 22ம் தேதி இரவு. "என் நாட்டை விட்டுப் போ" என்று கூவியபடி ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது நண்பர் அலோக்கை நோக்கிச் சுடத் தொடங்கினான் 51 வயது ப்யூரின்டன். காயங்களோடு அலோக் தப்பிவிட, கனவுகளோடு மரணித்தார் ஸ்ரீனிவாஸ். உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் அதிர்ந்து போனார்கள்.

இளம் மனைவி சுநயனாவைப் பற்றிச் சொல்லவே வார்த்தையில்லை! எப்படி ஸ்ரீனிவாஸுடன் காதல் திருமணம் ஆனது என்பதில் தொடங்கி, அவரோடு வாழ்ந்த கனவு வாழ்க்கையை விவரித்துவிட்டு, "What is the government going to do to stop hate crime? And do we belong here?" என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார் அவர். நியாயமான கேள்விகள்தாம்.

ஒருவாரம் தாமதமாகத்தான் என்றபோதும், ஃபிப்ரவரி 27ம் தேதியன்று அமெரிக்கக் காங்கிரஸில் உரையாற்றிய அதிபர் டோனல்டு ட்ரம்ப், "சென்றவாரம் கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு நமக்கு எதை நினைவூட்டுகிறதென்றால், நாம் கொள்கைகளால் பிளவுபட்டிருந்தாலும், வெறுப்பையும் தீயதையும் கண்டிப்பதில் ஒற்றுமையாக இருக்கும் தேசம் என்பதைத்தான்" என்று பேசியிருக்கிறார். யூத சமுதாயக் கூடங்கள் தாக்கப்படுவதையும் யூதக் கல்லறைகள் சூறையாடப் படுவதையும் இதே உரையில் அவர் கண்டித்திருக்கிறார்.

கட்சி, கொள்கை, மதம், இனம், தோலின் நிறம், நாடு என்ற எந்த அடிப்படையும் இன்னொரு மனிதவுயிரை எடுப்பதற்குக் காரணமாக அமையக்கூடாது என்னும் முக்கியமான பாடத்தை ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் துயரமரணம் நமக்குப் போதிக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்த வெள்ளையரான இயான் க்ரில்லட் குறுக்கே வந்து தன் உடலில் புல்லட்டை வாங்கிக்கொண்டதும் இதையே மற்றொரு வகையில் அழுத்தமாக நமக்குக் கூறுகிறது. அன்பு, புரிதல், நல்லிணக்கம், செயற்கையான சுவர்களைக் கடந்த மனிதநேயம் ஆகியவைதாம் இன்றைய தேவை என்பதை இந்தச் சோகமான சமயத்தில் மீண்டும் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளலாம்.

*****
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை படைத்த 'சுழல்பந்துப் புயல்' அஸ்வின் ரவிச்சந்திரனின் சாதனைமீது ஒரு பார்வை, பதிப்புலகத்தில் காலடி வைத்து, நல்ல நூல்களை வெளியிட்டு வரும் ஜீவகரிகாலனோடு நேர்காணல், ஃபிரான்சில் பிறந்து இந்தியாவுக்கு வந்து ஆன்மீக அலைகளைத் தோற்றுவித்த ஸ்ரீ அன்னையின் வாழ்க்கைக் குறிப்பு, முப்பாலையும் முழுமையாக ஒப்பித்த குறள் இளவரசி சீதா ராமசாமி பற்றிய சுவையான தகவல்கள் என்று பல்வேறு அம்சங்களுடன் மீண்டும் தென்றல் உங்களை வந்தடைகிறது. வாசியுங்கள், நேசியுங்கள்!

வாசகர்களுக்கு யுகாதி, ஹோலி, காரடையான் நோன்பு வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

மார்ச் 2017
Share: 




© Copyright 2020 Tamilonline