Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
பதின்மவயதில் மனஅழுத்தம்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|நவம்பர் 2016|
Share:
Click Here Enlargeகவலை என்பதே தெரியாமல் துள்ளித்திரிய வேண்டிய பதின்மவயதினர் பலர் மனஅழுத்தமும், உளைச்சலும் கொண்டு அவதிப்படுவதைக் காண்கிறோம். தற்காலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியக் குடும்பங்களிலும், இந்தியா அல்லது வேறு கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய கலாசாரம் பரவும்போதும் மனவுளைச்சல் அதிகம் காணப்படுகிறது.

காரணங்கள்
கலாசார மற்றும் சமூக மாற்றங்கள்; தலைமுறை இடைவெளி; குடும்பச்சூழல் - இதில் பெற்றோர், உறவினர்களின் எதிர்பார்ப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; நண்பர்கள், நெருங்கிய உறவினர்களின் பழக்க வழக்கங்கள்; வேலைப்பளு, உரையாட, உறவாட மனிதர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் பெருகி வருதல்; குடும்ப வரலாறு; இவர்களைப் புரிந்துகொண்டு அனுசரித்துப் போகாத சூழல் (Lack of support systems) இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம்.

சிறுவர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் மனவுளைச்சல் ஏற்படும் என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. அதைமீறி அவர்களுக்கு மனவுளைச்சல் இருப்பதாக யாராவது சொன்னால் உடனே அதை மறுத்துவிடுவோம். ஒருவருக்குத் தலைவலி, பல்வலி, நீரிழிவு, ஆஸ்துமா அல்லது இருதயநோய் வருவதுபோல் மனவுளைச்சலும் வரலாம். எப்படி மற்ற நோய்களுக்கு மருத்துவரை நாடுகிறோமோ அதேபோல் மனநோய்களுக்கும் மருத்துவரை நாடியாக வேண்டும். இதில் பெரியவர், குழந்தை, பதின்ம வயதினர் என யாரும் விதிவிலக்கல்ல. மனநோய் நிபுணருடன் ஆலோசிக்க வெட்கப்படத் தேவையில்லை. மனஅழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிலருக்குத் தற்காலிகமாக இருக்கலாம். பலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடரலாம். அவரவர் நிலைமைக்கேற்ப மருந்தும், அறிவுரைகளும் மாறுபடும்.

பதின்மவயதினரிடம் இந்த நோய் சற்று மாற்றங்களுடன் காணப்படுகின்றது. அவர்களின் உடல், மனம் வளர்ந்து வருவதால், நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களால் அவர்களின் உணர்வுகள் மேலும் கீழுமாய் அலைபாயும். இதனால் நோய் வெளிப்படும் தன்மை பாதிக்கப்படும். குடும்பத்தில் சண்டை அல்லது பிரிவு இருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமல்லாமல் எந்தக் குடும்பத்திலும் மனஉளைச்சல் ஏற்படலாம். போதைப்பொருள், மதுப்பழக்கம் அதிகமாக இருக்கும் சமூகங்களில் மனநோய் அதிகமாகக் காணப்படும். இதைக் கண்காணிக்காமல் விட்டுவிட்டால் நோய் முற்றிவிடும் அபாயம் உள்ளது. பெற்றோர், உறவினர், நண்பர்களின் அன்பும் ஆதரவும் இல்லாதுபோனால் இவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகலாம். ஒரு சிலருக்கு மருந்துகள் மிகவும் அவசியம். மருத்துவரை அடிக்கடி பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு. தற்கொலை உணர்வைத் தூண்டுமளவு மனஅழுத்தம் முற்றலாம் அதனால் முளையிலேயே அதையறிந்து ஆதரவு கொடுக்க முயல்வோம்.

அறிகுறிகள்
எப்போதும் சோகமாக இருத்தல்
அடிக்கடி கோபித்தல்*
அழுகை அல்லது அடிக்கடி கண்ணீர் விடுதல்
கூட்டத்தில் இருந்து விலகிப்போதல்*
உலக விஷயங்களில் நாட்டம் குறைதல்
கவனக் குறைபாடு
உடல் வலி, சோர்வு*
சாப்பிடுவதிலும் தூங்குவதிலும் மாற்றங்கள்
தன்னைப்பற்றி இழிவாக நினைத்தல்*
பிறர் சொல்லும் சின்னச்சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி வருந்துதல்*
உற்சாகம் குன்றி இருத்தல்
மரணம் அல்லது தற்கொலை பற்றிய நினைவுகள்

(* இந்தக் குறியிட்ட அறிகுறிகள் பதின்மவயதினரிடம் அதிகமாகக் காணப்படும். எல்லா அறிகுறிகளும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம்.)
இந்த அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?
பதின்மவயதினரிடம் அவர்களின் மன உணர்வைப்பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும். அவர்களின் பதில்கள் உங்களால் ஒப்புக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் அவர்களை நேசிக்கவேண்டும். நேசிப்பதை அவர்களுக்கு வெளிப்படையாக உணர்த்தவும் வேண்டும். அறிவுரை சொல்வதுபோல் அல்லாமல் ஒரு நண்பரைப்போல் உரையாட வேண்டும். அவர்களைப் பேசவைத்துக் கேட்கவேண்டும். விடாமல் தொடர்ந்து பழகவேண்டும். தயங்காமல் அவர்களின் உணர்வுகளை அப்படியே ஏற்கவேண்டும். அவர்கள் உணரும் சோகமும், வலியும் நிஜம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் அப்படிக் கொடுக்கும் ஆதரவே மனவுளைச்சலுக்கு மிகச்சரியான மருந்து.

அடுத்த கட்டமாக மருத்துவரை நாடவேண்டும். மனவுளைச்சல் நிபுணர்களும், சமூகசேவகர்களும், மனநோய் மருத்துவர்களும் உதவுவர். வாராவாரம் இவர்களைப் பார்க்கவேண்டி வரலாம். எப்படி இருதயநோய் இருந்தால் அதற்கான நிபுணரைக் காணவேண்டுமோ, அதைப்போலவேதான் இதுவும் என்பதை உணரவேண்டும். குறிப்பாக ஆசியர்களிடையே மனவுளைச்சலைப் பற்றியும், மனநோய் நிபுணர்களைப் பற்றியும் தவறான கருத்து உலவிவருகிறது. இதெல்லாம் அவசியமில்லை என்ற கருத்து உள்ளது. நோயாளிகள் தங்கள் உணர்வை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவில்லை என்னும் தவறான முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

பதின்மவயதில் தற்கொலைகள் ஏன் அதிகம் காணப்படுகின்றன?
நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடாது. இதைப்பற்றிப் பேச நம்மில் பலர் அஞ்சுவதால் இந்த நோய் மூடி மறைக்கப்படுகிறது. அவ்வப்போது செய்தித்தாளில் இப்படி ஒரு செய்தியைப் படிக்கும்போது பகீரென்று உண்மை உறைக்கும். அமெரிக்காவில் ஒருசில இடங்களிலும் ஒருசில பள்ளி வட்டாரங்களிலும் கல்லூரிகளிலும் தற்கொலை அதிகமாய்க் காணப்படுகின்றது. ஒருசில கலாசாரங்களில் அதிகம் காணப்படுகின்றது. ஆசியர்களிடையே இது அதிகம். கலாசார வேறுபாடும், தலைமுறை இடைவெளியும் முக்கியக் காரணங்கள். நோய் இருப்பதாக ஒப்புக்கொள்ள மறுக்கும் சமூகமும் இன்னொரு காரணம். அதிக எதிர்பார்ப்புகளும் காரணம்.

பெற்றவர்கள் தாம் ஆசைப்படுவது போல் தம் பிள்ளைகள் இருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பைக் குழந்தைகள்மீது திணிப்பது முக்கியக் காரணமாகி வருகிறது. பதின்மவயதினரின் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் மதிப்புக் கொடுக்காமல் அவர்கள்மீதான கண்டிப்பை அதிகரிக்கும்போது சில எதிர்மறை எண்ணங்கள் உருவாகலாம். High achievers என்று சொல்லப்படும் பெருத்த வெற்றியைத் தேடும் மனம் உடையவர்களால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது போகலாம். வெற்றி என்பதன் பொருள் என்னவென்று நாம்தான் நிர்ணயிக்கிறோம். அதிகப் பணமும், அந்தஸ்தும், பெரிய படிப்பும், வேலையும் மட்டும் வெற்றியா? மனஅமைதியும், மகிழ்ச்சியும் இவற்றால் கிடைத்துவிடுமா? இந்தக் கேள்விகளை மனஅழுத்தம் உடையவர்களைவிட, அவர்களுடன் இருப்பவர்கள் கேட்டு, புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தரவேண்டும்.

மருந்துகள் அவசியம் என்று மருத்துவர் சொன்னால், பிறநோய்களைப் போலவே, மனநோய்க்கும் மருந்து உட்கொள்ள வேண்டும். நோயாளிகள் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். இவற்றை மீறியும் அசம்பாவிதம் ஏற்படும்போது, குற்ற உணர்வு கொள்ளாமல், மேலும் இதுபோல் ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசிக்க வேண்டும்.

நமக்குத் தெரிந்தவர் வீட்டில் இருப்பவர்களுக்கு மனவுளைச்சல் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளிக்கவேண்டும். சமூகம் என்பதை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை உணரவேண்டும்.

மனவுளைச்சலில் பாதிக்கப்படுவோர், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக அந்தரங்கமாகத் தொடர்புகொள்ள தேசிய அளவில் National Suicide Prevention Lifeline என்னும் அமைப்பு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இவர்களைத் தொலைபேசியில் அழைத்து அந்தரங்க ஆலோசனை பெறலாம்.
வலைமனை: suicidepreventionlifeline.org
தொலைபேசி: 1800-273-8255

இந்தக் கட்டுரையை எழுத எனக்குப் பெரிதும் உதவிய முகநூல் மருத்துவ நண்பர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 
© Copyright 2020 Tamilonline