Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
நீச்சல்காரன் (எ) ராஜாராமன்
சத்குரு ஜக்கி வாசுதேவ்
- வெங்கட்ராமன் சி.கே., சந்திரா போடபட்டி, மதுரபாரதி|நவம்பர் 2016|
Share:
சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்கள் உலகறிந்த இந்திய யோகி; வாழும் ஞானி. செப்டம்பர் 23, 1982 அன்று மைசூர் சாமுண்டி மலையில் இவருக்கேற்பட்ட ஆன்மானுபவம் (பார்க்க: பெட்டிச்செய்தி) இவரைப் புரட்டிப்போட்டது. 1983ல் ஏழு பேருக்கு இவர் நடத்தத் தொடங்கிய யோக வகுப்புகள் இன்று உலகநாடுகள் பலவற்றில் 'ஈஷா யோக' மையங்களாக விரிவடைந்து, ஆன்மீக, சமூகப் பணிகளைச் செய்துவருகிறது.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் விரிகுடாப்பகுதியில் 'Inner Engineering' - A Yogi's Guide to Joy என்ற நூலை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சத்குரு. அப்போது தென்றலுக்கெனச் சில மணித்துளிகளை ஒதுக்கி நம்மோடு தனிப்படப் பேசினார்.

முதலில் சத்குரு 'தென்றல்' எங்கிருந்து வெளியாகிறது என்பதை அன்போடு விசாரித்தார். கூறினோம். தென்றல் அமெரிக்காவெங்கும் செல்கிறது என்பதையும், அதன் 16வது ஆண்டில் இருக்கிறது என்பதையும் கூறினோம். புன்னகைத்தார். அவரோடு உரையாடக் கிடைத்த நேரம் எட்டரை நிமிடம்தான் என்றாலும் அது தென்றலுக்கென்றே ஒதுக்கப்பட்டது என்பதில் நமக்குப் பெருமிதம். அந்தச் சில நிமிடங்களிலும் அவர் கூறியவை மிகப் பொருள்பொதிந்தவையாக இருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா! வாசியுங்கள்...

*****


சி.கே.: யோகம், உள்நிலை விஞ்ஞானம் (Inner Engineering), ஆத்மா, மோட்சம் இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையனவா? அந்தத் தொடர்பைச் சற்றே விளக்குங்கள்.
சத்குரு: உள்நிலை விஞ்ஞானம் என்பது யோகம்தான். யோகம் என்பது தத்துவமோ, நம்பிக்கைகளின் தொகுப்போ, லட்சியமோ அல்ல. அது அகமுகமான அறிவியல். எப்படி வெளிநோக்கிய அறிவியல் தொழில்நுட்பம் உள்ளதோ, அதுபோலவே அகநோக்கிய அறிவியல் தொழில்நுட்பமும் உள்ளது. உள்நிலை விஞ்ஞானம் என்பது யோகத்தின் நவீனச் சொல்வடிவம். நவீனம்கூட அல்ல, நாம் அதை எப்போதுமே உடலின் அறிவியலாகக் கருதி வந்திருக்கிறோம். இப்போது இதனை ஆங்கிலத்தில் இந்தச் சொற்களால் அழைக்கிறோம். அவ்வளவுதான்.

முக்தி என்றால் விடுதலை. இதுவும் முக்தி குறித்ததுதான், 100 சதவிகிதம். உனது துயரங்களில் இருந்து உன்னால் விடுதலை பெற முடியவில்லை என்றால், வேறெதிலிருந்து நீ விடுபடப் போகிறாய்!

நீ ஆனந்தமாக இருந்தால் பலவகையிலும் விடுதலை பெற்றவனாக இருக்கிறாய் - துயரத்திலிருந்து விடுதலை; கட்டாயங்களிலிருந்து விடுதலை. ஆனந்தமாக இருக்கும்போது நீ அறிவார்ந்து செயல்படுவாய். அறிவார்ந்து செயல்பட்டால் அது உன்னை விடுவிக்குமே அல்லாது தளைப்படுத்தாது.

ஆக, மேற்கண்ட சொற்களெல்லாம் தொடர்புடையனவே. நோக்கமே அதுதான்.



சி.கே.: இந்தியப் பாரம்பரிய யோக முறையில் இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறதா?
சத்குரு: துல்லியமாக. வாழ்வுகுறித்த எல்லாவற்றையும் இரண்டு வகைகளில் கையாளலாம். ஒன்று, அதன்மூலம் ஒரு பிரச்சனையை உண்டாக்கலாம். மற்றது, அதிலிருந்தே தீர்வைக் காணலாம். அதை நீ தீர்வுகாணப் பயன்படுத்துகையில் அது யோகம் எனப்படுகிறது. அதை வைத்துப் பிரச்சனைகளை உருவாக்கினால், அதை 'தர்மம்' என்கிறோம்.

சி.கே.: ஞானத்தேடல் எல்லோருக்கும் பொருந்தி வருமா? இல்லை அதற்கேன்று தனிப்பட்ட தகுதி வேண்டுமா?
சத்குரு: அதற்கு புத்திக்கூர்மை தேவைப்படுகிறது. அதனால்தான் ஞானம், கர்மம், பக்தி, கிரியை எனப் பலவற்றை உள்ளடக்கியதாக உள்நிலை விஞ்ஞானம் இருக்கிறது. அப்படியிருக்கையில் அது பலருக்கும் ஏற்றதாக இருக்கிறது. ஒவ்வொருவரிடம் இவை ஒவ்வொரு விகிதத்தில் அமைந்திருக்கும். ஏனெனில், இது உடல், மனம், உணர்வுகள், ஆற்றல் ஆகியவை குறித்ததாக உள்ளது. ஒவ்வொருவருமே இந்த நான்கின் கலவைதான். அதனால் நேரடியாக ஞானத்தில் தொடங்கினால் அது வெற்றி தராது. ஏனென்றால் எல்லோரிடமும் அதற்கான கூரிய அறிவுத்திறன் இருக்காது. அவர்களுக்கு இந்த நான்குமே தேவைப்படும். அதனால்தான் உள்நிலை விஞ்ஞானம் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேர்மானம் எல்லோருக்கும் பொருந்திவரும்.

சி.கே.: யோகத்தின் இலக்காகிய மோட்சத்தை அடையச் சன்னியாசம் கண்டிப்பாகத் தேவையா?
சத்குரு: இதைப் புரிந்துகொள்ளுங்கள் - சன்னியாசம் என்பது ஏதோ குகையில் சென்று வாழ்வதல்ல. சம்சாரம் என்றால் சுழற்சி எனப் பொருள். சுழலில் சிக்கிக்கொண்டவன் சுற்றிச்சுற்றி வருவான், எங்கும் சென்று அடையமாட்டான். சுற்றியிருப்பவை மாறுகின்றன, ஆனால் அவன் இடத்தைவிட்டு நகர்வதில்லை. சன்னியாசத்தில் அவன் இந்தச் சுழற்சியிலிருந்து விடுபடுகிறான். குகையில் இருப்பதோ, நகரத்தில் இருப்பதோ அவனுடைய விருப்பம். நீ உண்மையிலேயே சுழலிலிருந்து விடுபட்டுவிட்டாயா என்பதுதான் கேள்வி. சன்னியாசம் என்பது ஒரு வாழ்க்கைப் பாங்கல்ல (life style), அது வாழ்க்கைப் பாதை (trajectory of life). சுழற்சியல்லாத பாதையில் நீ இருந்தால் அது சன்னியாசம். அது தேவையா? ஆமாம், 100 சதவிகிதம் தேவை. ஆனால், அதுவொரு லைஃப் ஸ்டைலா? இல்லை. சன்னியாசத்துக்கு உகந்த வாழ்முறையை நீ தேர்ந்தெடுக்க முடியுமா என்றால் 'ஆமாம்' என்பதுதான் பதில்.

ஒருவர் பல்கலைக்கழகத்தில் முக்கியமான துறையில் படிக்கச் சேருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அங்கே சிறிய வியாபாரம் ஒன்றைச் செய்யமுடியுமா, திருமணம் செய்துகொள்ளலாமா, ஆறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமா, இவற்றுடன் படிக்கவும் செய்யலாமா? ஆமாம், செய்யலாம். நீங்கள் அப்படிச் செய்வீர்களா? மாட்டீர்கள். இவற்றைச் செய்வதிலேயே உங்களை காலம் போய்விடும்; உங்கள் மனைவியும் ஆறு குழந்தைகளும் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்; உங்கள் வியாபாரத்திலும், காலத்தைப் பயன்படுத்துவதிலும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆக, பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமென்றால் நீங்கள் மற்ற எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிடுகிறீர்கள். பெற்றோரிடமிருந்து, குடும்பத்திலிருந்து விலகிப்போய், இரவெல்லாம் நூலகத்தில் உட்கார்ந்துகொண்டு, பார்ட்டிகளுக்குப் போகாமல், புத்தகத்தில் முழுகிவிடுவீர்கள், சரியா? அப்படி மனதைக் குவிக்காவிட்டால் எதையாவது சாதிக்கமுடியுமா என்பதுதான் என் கேள்வி.
சி.கே.: சாதிக்கும் ஆர்வமும், பொருள் சேர்த்தலும் உலகெங்கிலும் மக்கள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், பொதுநன்மைக்காகத் தியாகம், மனத்திருப்தி ஆகிய கருத்துக்களைப் பரப்புவதில் எப்படி வெற்றி காண்கிறீர்கள்?
சத்குரு: நான் தியாகம் அல்லது மனத்திருப்தி என்பவைபற்றிப் பேசுவதே இல்லை. மனிதர்கள் முழுமையாகப் பக்குவப்பட்டுவிட்டால் அவர்கள் மற்றொருவரைப் போல வாழ ஆசைப்பட மாட்டார்கள். வாழ்க்கை தனித்துவமானது, வெகு அழகானது. அது முழுமையாக மலராத காரணத்தால் வேறொருவரைப் போல இருக்க முயல்கிறார்கள். அதுதான் சோகம். மற்றவரைப்போல அல்லது மற்றவரைவிடச் சிறப்பாக இருக்க விரும்புவது ஒரு துயரமிக்க வாழ்க்கைமுறை.

சி.கே.: உங்கள் வழிமுறைகளையும் போதனைகளையும் எதிர்கொள்ளும் முறையில் இந்தியர்களுக்கும் இந்தியரல்லாதவருக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறதா?
சத்குரு: இன்றைக்குப் பார்த்தீர்களே. மனிதர் அனைவரும் ஒன்றுபோலவே எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் நான் அவர்களின் வாழ்க்கை என்னும் மிக அடிப்படையான அம்சத்தைக் குறித்துப் பேசுகிறேன். அதனால் பறவைகளும் விலங்குகளும்கூட என் கருத்தை சரியாகவே உள்வாங்குகின்றன.

சி.கே.: உங்களிடம் பலர் வருகிறார்கள். எல்லோருக்கும் உங்களிடம் தீர்வுகள் உள்ளனவா?
சத்குரு: எல்லோருக்கும் என்னிடம் பதில் இருப்பதாக நான் சொல்வதில்லை. என்னிடம் உனக்கான கருவிகள் உள்ளன, அவற்றைத் தருகிறேன் என்றுதான் சொல்கிறேன். "நான் சான் ஃப்ரான்சிஸ்கோ போக விரும்புகிறேன்" என்று நீங்கள் கூறினால், "நல்லது, நான் ஒரு கார் தருகிறேன்" என்கிறேன். நான் உங்களை வைத்து ஓட்டிச் செல்லமாட்டேன். ஓட்டுவது உங்கள் வேலை. நீங்கள் வழிதவறிப் போய்விட்டாலோ, கடலுக்குள் விழுந்துவிட்டாலோ நான் என்ன செய்யமுடியும்? ஒரு காரைக் கொடுத்து, அதை எப்படி ஓட்டுவது என்றும் சொல்லித் தருவேன். அதில் நீங்கள் பாலைவனத்துக்கோ, சமுத்திரத்துக்கோ, சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கோ போகலாம்.

(இந்தச் சுவையான கட்டத்தில் மேலும் பல பத்திரிகையாளர்கள் உள்ளே வரவே, நமக்கான பிரத்தியேக நேரம் முடிவடைந்தது.)

சந்திப்பு: சி.கே. வெங்கட்ராமன், சந்திரா போடபட்டி
தமிழில்: மதுரபாரதி

*****


சாமுண்டி மலை அனுபவம்...
தமது 25ம் வயதில் மைசூரிலுள்ள சாமுண்டி மலையில் ஏற்பட்ட ஆன்ம அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: "அந்தக் கணம்வரை 'இது நான், அது வேறொருவர்' என்ற எண்ணம் இருந்துவந்தது. முதல்முறையாக எது நான், எது நானல்ல என்பது எனக்குத் தெரியவில்லை. திடீரென்று நானே எல்லாமாக உணர்ந்தேன். நான் உட்கார்ந்திருந்த பாறை, நான் சுவாசித்த காற்று, எனது சுற்றுப்புறம் எல்லாமுமாக நானே வெடித்து வியாபித்தேன். இப்படிப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் போனதாக நினைத்தேன். ஆனால் நான் இயல்புநிலைக்குத் திரும்பியபோது நான்கரை மணிநேரம் ஆகிவிட்டது தெரிந்தது. முழு நினைவோடு, கண்களைத் திறந்துகொண்டு இருந்திருக்கிறேன், ஆனால் காலம் பறந்துவிட்டிருக்கிறது."
More

நீச்சல்காரன் (எ) ராஜாராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline