Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அத்தியாயம் 7: தமிழ் வித்வான் அம்மையப்பபிள்ளை அவர்கள்
- பி.ஆர். ராஜம் ஐயர்|அக்டோபர் 2016|
Share:
இப்பொழுது சிறுகுளத்தைவிட்டு மதுரைக்குப் போய்வருவோம். மதுரையில் நமக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டு சிறுகுளத்தில் நடக்கப்போகிற பெரிய கலியாணத்துக்கு மாப்பிள்ளை, சம்பந்தி முதலானவர்கள் வரும்போது அவர்களுடன் கூடவே வந்துவிடுவோம். நமக்கு மதுரைக்குப் போகவேண்டி பல்லக்கு, குதிரை இவை ஒன்றும் தேவையில்லை. முற்காலத்து ரிஷிகளிடத்தில் "கமன குளிகை" என்று ஒரு அருமையான வஸ்து இருந்ததாம். அதில் ஒன்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் எந்த இடத்துக்கு வேண்டுமோ அந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடுமாம். நமக்கு அம்மாதிரி குளிகைகளின் உதவிகூடத் தேவையில்லை. நினைப்பின் மாத்திரத்தில் இடம்விட்டு இடம்போக சாமர்த்தியமுண்டல்லவா!

மதுரையில் 'ஜில்லா ஸ்கூல்' என்று பெயர் வழங்கிய கவர்ன்மெண்டு காலேஜ் என்ற பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் ஒரு மூலையில் சில பெஞ்சுகளும் அவற்றின் மத்தியில் ஒரு நாற்காலியும் மேஜையும் போடப்பட்டிருந்தன. அந்த மேஜையின்மேல் சில மைக்கூடுகள் இருந்தன. 'டிங்டாங்' என்று பத்தாவது மணி அடித்தவுடன் அவ்விடத்தில் சுமார் இருபது பையன்கள் வந்து கூடினார்கள். அவர்கள் வந்து ஐந்து நிமிஷத்திற்குள் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகத்தையும் நீண்ட கறுத்த உருவத்தையுமுடைய ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் அந்தப் பள்ளிக்கூடத்துத் தமிழ்ப்பண்டிதர். அவர் பெயர் அம்மையப்பபிள்ளை. அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கலாம். அவர் பிறந்த ஊர் 'ஆடுசாபட்டி' என்று ஐந்தாறு வீடுகளும் ஒரு புளியமரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம். அவர் அகாத சூரர். எமகம், திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப்பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையிலகப்பட்டுவிட்டால் ராமபாணம் போட்டாற் போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச் சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.

ஒருகாலத்தில் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி தன் வசவுகளில் 'காரே, பூரே' என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொடுங்குகிற வழியாகவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்படமாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக, "அடா போடா, புஸ்தகமே, சிலேட்டே, பென்சிலே, கலப்பையே, மோர்க்குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே" என்று இப்படி வாயில் வந்த வார்த்தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி புதுவசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப்போனான். அதுபோல அம்மையப்பப்பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான பாட்டுகளைச் சொல்லி எதிராளியின் வாயை அடக்கிவிடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாவிட்டால் என்ன? அதனால் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால் அவருக்குச் சரியாக மகாவைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.

ஒருநாள் மதுரை கட்டைசெட்டி மண்டபத்தில் நமது புலவர் கம்பராமாயணத்தில் சீதாகல்யாணப் படலத்தை எடுத்துப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தற்செயலாய் தெருவழியே போன ராமபக்தன் ஒருவன், ராமன் என்ற பேரைக் கேட்டுவிட்டு "ராமகதை போலிருக்கிறது! கேட்போம்" என்று உள்ளே வந்தான். அப்பொழுது அம்மையப்பப்பிள்ளை வாயினின்றும் எச்சில் காத வழிக்குத் தெரிக்க, கண்கள் சிவந்து வெகு உக்கிரமான முகத்துடனும் கடூரமான குரலுடனும் அதிக உற்சாகமாய்ப் பிரசங்கம் செய்ய, வந்த ராமபக்தன், "ராம-ராவண யுத்தம்போலிருக்கிறது, அதுதான் இவர் இவ்வளவு கோபாவேசமாயிருக்கிறார், நல்ல பக்தர்போலும்" என்று இவரை மனதுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போதே, புலவர், "ராமன் சீதையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான். சீதையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான் ராமன்" என்று கைகளை வீசிக்கொண்டு கர்ச்சித்தார். அதைக்கேட்டு அந்த ராமபக்தன் திடுக்கிட்டு எழுந்து கண்களில் தீப்பொறி பறக்க, "ராமன் அப்படித்தான் சீதையைக் கலியாணம் செய்துகொள்வான். அதற்கு நீர் என்ன ஓய் கோபிக்கிறது!" என்று அதட்டிக்கொண்டு அவரை ஓங்கி அடிக்கச் செல்லவே, சுற்றியிருந்தவர்கள் அந்த ராமபக்தனைக் கைபிடித்திழுக்க, அவன், "விடுங்கள், சீதையை மணம் செய்ததற்கு இவ்வளவு கோபம் கோபிக்கிற சண்டாளனைக் கொல்லுகிறேன்" என்று சொல்ல, "அது கோபமல்ல, உள்ள சாந்தமே அவ்வளவுதான் அவருக்கு" என்று சொல்லி அவனைச் சமாதானப்படுத்தினார்கள். பிள்ளை அவர்களோ நடுநடுங்கி பாதிக்கலியாணத்தில் நிறுத்திவிட்டு "ராமன்பாடு, சீதைபாடு, அவர்கள் விஷயத்திற்கு நான் வரவில்லை. போதும் போதும்" என்று அன்றுமுதல் பொது ஸ்தலங்களில் கதாப்பிரசங்கம் செய்வதை நிறுத்திவிட்டார். இவ்விதம் சங்கீத ஞானம், சாரீர சம்பத்து, தமிழ் வித்வத்துவம் இவைகளில் இவர் சிறந்தவராயிருந்ததுமின்றி நல்ல புத்திமானாயும் இருந்தார்.

ஒரு காலத்தில் அவருக்கும் அம்மாபட்டிக் கவண்டயன் கோட்டைக் கவிராயருக்கும் "அன்னநடை என்று நடைக்கு விசேஷமாகக் கூறும் அன்னப்பட்சி உலகத்தில் தற்காலத்தில் உண்டா? இருக்குமானால் அது எது?" என்ற பெரிய விஷயத்தைப்பற்றி யுத்தம் நடந்தது. கவிராயர், "அன்னம் என்பது காக்கையாயிருக்கவேண்டும். ஏனெனில் காக்கையொன்றே பட்சிகளுக்குள் நடையிற் சிறந்ததாயிருக்கிறது; ஆனது பற்றிக் காக்கையே அன்னப்புள்ளாதல் வேண்டும்" என்று அதற்கு ஆதாரங்கள் காட்டிச் சாதித்தார். அம்மையப்பபிள்ளை, "அல்ல, அல்ல. அன்னம் என்றால் சாதம். அன்னமும் வெள்ளை. சாதமும் வெள்ளை. சாதத்திற்கே அன்னமெனப் பெயருண்டு. மேலும் அன்னமும் பட்சி, சாதத்தையும் நாம் பட்சிக்கிறோம் (சாப்பிடுகிறோம்). ஆதலால் சாதத்தையே அன்னமென்று - தட்டுபவனைத் தட்டான் என்று சொல்லியதுபோல் - உருவக நவிற்சியலங்காரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது" என்று அதற்குப் பிரமாதமாய் ஆயிரம் பாட்டுகளையெடுத்து ஆதாரம் காட்டி சண்டப்பிரசண்டமாய் ஆட்சேபித்தார்.

முதலில் இந்த யுத்தம் கடிதமூலமாகவே நடந்தது. பிறகு இரண்டு வித்வான்களும் நேரிலே மதுரையிலேயே சந்தித்து பத்துநாள் இரவும் பகலும் அண்டை வீட்டுக்காரரைத் தூங்கவிடாமல் யுத்தம் பண்ணினர்கள். கடைசியில் ஒருநாள் ராத்திரி அம்மையப்பபிள்ளை கவண்டயன் கோட்டைக் கவிராயரை, அன்னத்தைக் காக்கையென்று சொன்னதற்காக "காக்கை" யென்று பரிகாசம் செய்தார். அவர் இவரை அன்னத்தை சாதம் என்று சொன்னதற்காக "சாப்பாட்டுராமா" என்று பரிகாசம் செய்யவே, இவர் அவரை "கவிராயர் குரங்குராயர்" என்றார். (கவி என்றால் குரங்கு என்று அர்த்தம்.) அவர், இவருடைய அம்மைத்தழும்பு நிறைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி "அம்மையப்பப்பிள்ளை யென்றால் உமக்கே தகும்" எனவே, இவருக்குக் கோபமுண்டாகி அவரை அடிக்கச்சென்றார். கவிராயர் "உமக்கு நான் இளைத்தவனா?" என்று திருப்பி அடிக்க வந்தார். இதற்குள் காவல் காக்கும் போலீஸ்காரர்கள் இவர்களுடைய நிலைமையைக் கண்டு "தமிழ் வித்வான்கள் தர்க்கம், இதில் நாம் பிரவேசிக்கக்கூடாது" என்று அறியாமல், அநியாயமாய் அவர்களைப் பிரித்து விட்டுவிட்டார்கள்.

மறுநாள் காலைப்பொழுது விடியுமுன்னமேயே கவிராயர் ஒருவரும் அறியாமல் ஊர்போய்ச் சேர்ந்தார். அம்மையப்பபிள்ளை, அவர் ஒடிப்போய் விட்டாரென்று செவ்வையாய் விசாரித்துக்கொண்டு தான் அவரை வென்றுவிட்டதாகப் பெருமை பேசிக்கொண்டார். அம்மாபட்டியிலோ கவிராயர், அம்மையப்பப்பிள்ளையை ஜெயித்துவிட்டதாகப் பிரஸ்தாபம். அன்னப்பட்சியைப் பற்றிய தர்க்கம் இவ்வாறு முற்றிற்று.
இவ்வளவு பிரதாபத்தையுடைய அம்மையப்ப பிள்ளையவர்கள், பள்ளிக்கூடத்திற்கு வந்தவுடன் சுற்றுமுற்றும் கம்பீரமாகக் கடாட்சித்துவிட்டு தமது ஆசனத்திலெழுந்தருளினார். அவரைச் சுற்றியிருந்த வகுப்பு 'மெட்ரிகுலேஷன்' வகுப்பு. அப்பொழுது நளவெண்பா பாடம். அதில் சுயம்வரகாண்டத்தில் "கோதைமடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த" என்ற பாட்டைப் படித்துவிட்டு, தான் படித்ததைக் கேட்டு எல்லோரும் மெச்சுகிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தார். அந்த வகுப்பில் ராமசாமியென்ற ஒரு பையன் உண்டு. அவன் வெகு வேடிக்கையாய்ப் பேசுவதால் அவனைத் "தென்னாலிராமன்" என்று பையன்கள் கூப்பிடுவது வழக்கம். அந்தத் தென்னாலிராமன் வாத்தியார் குறிப்பையறிந்து "சுவாமி, இன்னொருதரம் படிக்கவேணும், கேட்கக் கேட்க இன்பமாயிருக்கிறது. புஸ்தகமோ நளவெண்பா! படிப்பதோ இன்னாரென்று சொல்ல வேண்டாம்" என, உபாத்தியாயர் உள்ளங் குளிர்ந்தவராய் "படிக்கிறது யார்? ஆடுசாபட்டி அம்மையப்பப்பிள்ளை என்று சொல்லேன்" என, பையன், "சுவாமி! தாங்கள் பேர் முழுவதும் நன்றாய்ச் சொல்லவேண்டும்" என்றதும் குரு, "என் பெயரா, சொல்லுகிறேன் கேள்: கடல் சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டி மகாவித்வான் அம்மையப்பப்பிள்ளை" என்றார், தென்னாலிராமன் (மெதுவாய்) "ஒரு வண்டி காணாதுபோல் இருக்கிறதே" என்று சொல்லிவிட்டு, "சுவாமி, முன்போல முழுவதும் சொல்லவில்லையே" என்றான்.

வாத்தியார் "நாழிகையாகிறது. மேலே சொல்வோம்" என, பையன், "முழுவதும் சொன்னால்தான்" என்றான். உடனே வாத்தியார், "கடல் சூழ்ந்த இந்நிலவலயத்திற்கு ஓர் திலகம் போன்ற ஆடுசாபட்டியில் அவதரித்த அண்டர் புகழும் அஷ்டாவதானம், அருந்தமிழ்ப் புலவர், மகாவித்வான் அம்மையப்பபிள்ளை அவர்கள். இப்பொழுது சரிதானா?" என்றதும் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். வாத்தியார் வாயில் கை பொத்திக்கொண்டு, "சிரிக்காதேயுங்கள், ஹெட்மாஸ்டர் வந்துவிடப் போகிறார்" என்று சொல்லிவிட்டு, மறுபடி பாட்டைப் படித்து "மாவிந்த நகரத்தில் ஸ்திரீகள் மார்பிலணிந்த சந்தனமானது அவர்கள் ஸ்நானம் செய்யும்பொழுது சேறாகித் தெருவெல்லாம் நிறைந்திருப்பதால் அந்நகரத்து வீதிகளில் செல்லும் யானைகள் அச்சேற்றில் வழுக்கி விழுகின்றன. அவ்வளவு சந்தனம், அவ்வளவு சேறு, பேஷான பாட்டு, ஆஹா!" என்று பிரசங்கித்துவிட்டு மறுபடியும் அந்தப் பாட்டைப் படிக்கப்போனர்.

அப்பொழுது தென்னாலிராமன் எழுந்து "சுவாமிகளே! ஒரு சந்தேகம், அந்த ஊரில் யானைகளே அந்தப் பாடுபட்டால், மனிதர்கள் நடப்பதெப்படி?" என்றான்.

வாத்தியார் - அந்த ஊரில் மனிதர்கள் நடப்பார்களோ! பல்லக்கு சவாரி செய்வார்கள். இந்த தரித்திரப் பட்டணங்களைப் போலவா?

தென்னாலிராமன் - சுவாமி, எல்லாரும் பல்லக்கேறினால் சுமக்கிறவர்கள் யார்? சுமக்கிறவர்கள் என்னமாய் நடப்பார்கள்?

வாத்தியார் - பல்லக்கு என்றால் பல்லக்கா? சாரட்டுகளில் சவாரி செய்வார்கள்.

தென்னாலிராமன் - அப்படியானால், குதிரைகள் வழுக்கி விழாதோ?

வாத்தியார் - இப்படியெல்லாம் கேட்டால் சரிப்படுமா? பாட்டில் மூன்று சங்கதிகள் சொல்லியிருக்கிறார், புகழேந்தியின் சாமர்த்தியமே சாமர்த்தியம். என்ன? அவ்வூரில் சந்தனம் ஏராளமாய்ப் பூசிக் கொள்ளுகிறார்கள். அது தெருவெல்லாம் சேறாகிறது, மூன்றாவது அந்த ஊரில் யானைகள் உண்டு.

இன்னொரு பையன் எழுந்து "சுவாமி, இன்னும் இரண்டு சங்கதிகளை விட்டுவிட்டீர்களே! அந்த ஊரிலேகூட ஸ்திரீகள் உண்டு, இரண்டாவது அவர்கள் கூட ஸ்நானம் செய்வது உண்டு" என்றான். வாத்தியார், "கலிகாலத்துப் பிள்ளைகள் மகா அதிகப்பிரசங்கிகள்" என்றார். தென்னாலிராமன், "யார் சுவாமி அதிகப்பிரசங்கி? பேச்சு மிஞ்சுகிறாற்போல இருக்கிறது!" எனவே, வாத்தியார் "அப்பா, நான்தான் அதிகப்பிரசங்கி, நீங்கள் எல்லாம் பெரியவர்கள்" எனக் கோபித்துக்கொண்டு, பின்னுள்ள பாட்டுகளை வாசித்து அதிவேகமாய் அர்த்தம் சொல்லிக்கொண்டு போகவே, பையன்கள் இவர் பிரசங்கத்தைச் சற்றும் கவனியாமல் சிலர் வம்பு பேசினார்கள். சிலர் அடுத்தமணிப் பாடத்தைப் படித்தார்கள், சிலர் தூங்கினார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் வாத்தியாருக்கும் தூக்கம் வந்துவிட்டது.

நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து

என்ற பாட்டைப் படிக்கத்தொடங்கி, "நாடி மடவன்னத்தை நல்லமயிற்" என வாசித்தார். "குழாம்" என்ற வார்த்தை தூக்கத்தில் போய்விட்டது. வாத்தியார் தலை இரண்டுதடவை ஆடிற்று. பிறகு அவர் திடுக்கிட்டுத் தன் சிவந்த கண்களை விழித்துக்கொண்டு "ஓடி வளைக்கின்ற தொப்பவே நீடியநல்" என்று வாசித்த பிறகு ஐந்து நிமிஷம் மெளனம். பிறகு சற்றுக் கண் விழித்துக்கொண்டு ஈனஸ்வரத்துடன், தூங்கவில்லை போலும், ஏதோ ஒன்றை யோசித்தவர் போலும் பாவனை பண்ணிக்கொண்டு, "அப்படியா! இப்பொழுது சரியாயிருக்கிறது" எனச் சொல்லிக்கொண்டே, "பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றி" என்று படித்தார். அப்புறம் பேச்சுமூச்சைக் காணோம். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சில பையன்கள் வாத்தியார் தூங்கிப் போய்விட்டார் என்ற செய்தியை மற்றவர்களுக்கும் பரவச்செய்யவே, கிருஷ்ணஸ்வாமி என்ற ஒரு பையன், "பேசாமல் இருங்கள், வேடிக்கையைப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் சீமைச் சுண்ணாம்பைப் பொடி பண்ணி சந்தடி செய்யாமல் தன் சிரிப்பையடக்கிக்கொண்டு மேஜையிலுள்ள, மைநிறைந்த ஒரு மைக்கூட்டிற்குள் போட்டு விட்டான்.

அந்த மை சற்று நேரத்திற்கெல்லாம் 'டபீர்' என வெடித்துப் பொங்கி அம்மையப்பப்பிள்ளையின் கண், மூக்கு, முகம் சட்டைகளிலெல்லாம் பாயவே, அவர் பாவம் திடுக்கிட்டு விழித்து, "இது எந்தப் போக்கிரிப் பையன் பண்ணின வேலை!" என்று எழுந்திருக்க, பையன்களெல்லாம் "கொல்" என்று சிரித்தார்கள்.

தென்னாலிராமன், வாத்தியார் நிலைமையைக் கண்டு பரிதபித்தவன் போலக் கிட்டச்சென்று, "அடடா, மூக்கு, முகம் எல்லாம் மையாய் விட்டதே. அதாவது போகிறது; சட்டையெல்லாம் மையாய் விட்டதே ஸார்!, இது எந்தப்பயல் பண்ணின வேலை. முட்டாள் பயல்கள். இருக்கிற ஒரு சட்டையிலும் மையைக் கொட்டிவிட்டால் அப்புறம் ஸார் நாளை என்ன பண்ணுவார் என்று அறியவேண்டாமா! நீங்கள் இருக்கிறபோதே யார்தான் இப்படிச் செய்யக்கூடும்? நீங்கள் இன்றைக்குத் தூங்கக்கூடவில்லையே!" என்று சமாதானம் பண்ண, வாத்தியார், "எந்தப்பயல் செய்தது? மரியாதையாய் உண்மையைச் சொல்லிவிடட்டும், மன்னித்துவிடுகிறேன். இல்லாவிடில் ஹெட்மாஸ்டரிடம் சொல்லிப் பேரையடிக்கச் சொல்லுவேன்" என்று பயமுறுத்தினார்.

முத்துஸ்வாமி என்ற பையன், "நீங்கள் ஹெட்மாஸ்டரிடம் போய்ச் சொல்லுங்கள் சுவாமி. அதுதான் சரி. இல்லாவிடில் உண்மை வெளிப்படமாட்டாது" என்றான்.

ராமையா என்ற பையன் "வாத்தியார் பள்ளிக்கூடத்தில் தூங்கினது உண்மையா?" என்றான்.

"நான் ஹெட்மாஸ்டரிடம் போகிறேன் பார்" என்று வாத்தியார் புறப்படவே, கிருஷ்ணஸ்வாமி, "நாங்கள் பார்த்தது போதாது, எல்லாரும் பார்க்கவேண்டுமல்லவோ இந்த வேஷத்தை! போங்கள், ஸார்" என்றான்.

லட்சுமணன் "அங்கே போனால் வாத்தியாருக்குத்தான் அபராதம் விழும். "மை கொட்டினபோது நீர் எங்கே போயிருந்தீர்?" என்று கேட்டால், "தூங்கிப் போய்விட்டேன்" என்று சொல்லுவாரோ, சொன்னால் அபராதம் நிச்சயம்" என்றான்.

வாத்தியார் ஒன்றும் செய்யத்தோன்றாமல் திரும்பத் தன்னிடத்திற்கு வந்து, "நாளை முதல் இப்படிச்செய்யுங்கள், சொல்லுகிறேன் வழி" எனவும், சுப்புக்குட்டி என்ற பையன், "நாளையும் செய்தால் இன்றைக்குப் பண்ணின மாதிரிப் பண்ணிவிடுவீர்களோ?" என்றான்

ஒரு பிராமணன் ஒருவர் வீட்டுக்குப் போய் "எனக்குச் சாதம் போடுகிறீர்களா அல்லது நேற்று அங்கே பண்ணினதுபோல் பண்ணிவிடட்டுமா?" என்றாராம்.

வீட்டுக்காரன் மனைவி பயந்து "அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிடாதேயும். நாங்கள் இருக்கிறோம் தெய்வமே!" என்று சொல்லி, "சாதம் போடுகிறேன். சாப்பிட்டுப்போம்" என்று உள்ளே அழைத்துப்போய் சாதம் போட்டாள். அவர் சாப்பிட்டு வெளியில் வந்தபிறகு "நேற்று என்ன பண்ணினீர் சொல்லும்" என்று கேட்க, அந்தப் பிராமணர், "சொல்லிவிடட்டுமா!" என, அம்மாள், "சாப்பிட்டாய் விட்டதல்லவோ, சும்மா சொல்லுங்கள்" என்றாள். பிராமணர் "நான் சொல்லியே விடுவேன்" என்று மறுபடியும் பயமுறுத்தினார். அம்மாள் "சொல்லுங்கள்" என்று கேட்க, "நேற்றைக்கா, இந்த இடதுகையிருக்கிறதல்லவோ அதை ஒரேயடியாய் தலைக்குயரம் வைத்துக்கொண்டு பட்டினியாகவே படுத்துக்கொண்டு விட்டேன்" என்றார் - என்று ஒரு கதையுண்டு. அதுபோல் வாத்தியார் கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தார். பலிக்கவில்லை.

ராமசுப்பன் என்ற பையன், "இல்லை... இல்லை. நாளை இப்படிப் பண்ணினால் அழுதுவிடுவார்" என்றான்.

தென்னாலிராமன் "சூ... சூ... சும்மா இருடா, அவரை இப்பொழுதே அழவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே. நாளை அழுகிறதாம்! நாளைமுதல் பள்ளிக்கூடத்தில் தூங்கினால்தானே! அவன் கிடக்கிறான் ஸார், நீங்கள் நாளைமுதல் தூங்காதேயுங்கள் ஸார்" என்று சொல்லிக்கொண்டு, அவர்மேல் படிந்திருக்கும் மையைத் துடைப்பவன்போல் அதை அவர் சட்டை முழுவதும் தேய்த்து அவர் முகத்திலும் கோரமாகத் தடவவே, அவர் பாவம், கண்டோர் நகைக்க நின்றார்.

பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய 'கமலாம்பாள் சரித்திரம்' நாவலிலிருந்து
Share: