Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தர்பாரி ராகம் (நாவலில் ஒரு பகுதி)
- சரஸ்வதி ராம்நாத், ஸ்ரீலால் சுக்ல|நவம்பர் 2016|
Share:
அத்தியாயம் 1
நகரத்தின் எல்லை இது. இங்கிருந்து தொடங்குவதுதான் இந்தியக் கிராமமெனும் பெருங்கடல். அங்கே ஒரு டிரக் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்ததுமே பாதைகளைப் பலவந்தமாய் மிதித்துச் செல்வதற்கென்றே இது பிறந்திருக்கிறதென்ற உறுதி ஏற்பட்டுவிடும். சத்தியம், அதாவது மெய்யைப் போலவே இதற்கும் பல தோற்றங்கள் இருந்தன. போலீஸ்காரன், தான் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் இந்த டிரக் நட்டநடுப் பாதையில்தான் நிற்கிறது எனச் சாதிக்கமுடியும். இன்னுமொரு புறத்திலிருந்து டிரைவர், இது பாதையின் ஓரத்தில்தான் நிற்கிறது என நிரூபிக்கவும் முடியும். இன்றைய நாகரிகத்தின்படி டிரைவர், டிரக்கின் வலது புறத்துக் கதவை, இறக்கையைப் போல் நன்றாய்த் திறந்து வைத்திருந்தது அதற்கு மேலும் அழகூட்டியது எனலாம். இது மட்டுமா? இது இங்கே நிற்கும் சமயத்தில் இன்னுமொரு வாகனம் இதைக் கடந்து சென்றுவிடும் என்ற ஆபத்துக்கும் இடமில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதையின் ஒருபுறத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இருந்தது. மற்றொரு புறத்தில் கூரைவேய்ந்த கடைகள். மரக்கட்டை, ஒடிந்துபோன தகரத் துண்டுகள் மற்றும் அங்கே கிடைக்கக் கூடிய தட்டுமுட்டுச் சாமான்களைக் கொண்டு நிறுவிய கடைகள் வரிசையாக நின்றன. அவற்றைப் பார்த்ததுமே இந்தக் கடைகளை எண்ணிவிடமுடியாது என்பது புரிந்துவிடும். பெரும்பாலான கடைகளில் மக்கள் விரும்பிப் பருகும் பானம் இருந்தது. அங்கு விரவி நின்ற தூசி, எண்ணெய்ச் சிக்கு, பலமுறை உபயோகித்த தேயிலைத்தூள், கொதிக்கின்ற தண்ணீர் ஆகியவற்றின் உதவிகொண்டு தயாரித்த அவ்வினிய பானம் தாராளமாய்க் கிடைத்தது. இரவு, பகல், காற்று, மழை, ஈ, கொசு போன்றவற்றின் இடைவிடாத தாக்குதல்களைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இனிப்புப் பலகாரங்களும் அங்கே இருந்தன. நம் நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் கைத்திறமைக்கும், விஞ்ஞான நுட்ப அறிவுக்கும் அவை ஒரு சான்றாக விளங்கின. எங்களுக்கு ஒரு நல்ல க்ஷவர பிளேடு தயாரிக்கும் நுட்ப அறிவு தெரியாமல் இருந்தாலும், மட்டமான சாமான்களை ருசிமிக்க உணவுப் பண்டங்களாக மாற்றுவது எப்படி என்ற உபாயம் இந்த உலகமுழுவதிலும் எங்களுக்கு மட்டுந்தான் தெரியும் என்பதை அவை பறைசாற்றின.

டிரக்கின் டிரைவரும், கிளீனரும் ஒரு கடையின் எதிரே நின்று தேநீர் பருகிக்கொண்டிருந்தனர்.

தூரத்திலிருந்தே ரங்கநாத் டிரக்கைப் பார்த்துவிட்டான். பார்த்ததுமே நடையில் வேகம் பிறந்துவிட்டது. இன்று ரெயில் அவனை ஏமாற்றிவிட்டது. தினமும்போல் லோக்கல் பாசஞ்சர் வண்டி இரண்டு மணிநேரம் தாமதித்து வரும் என நினைத்தே அவன் வீட்டிலிருந்து புறப்பட்டான். ஆனால் அது ஒன்றரை மணி நேரம் மட்டும் தாமதித்து வந்துவிட்டுப் போய்விட்டது. புகார்ப் புத்தகமெனும் சரித்திர ஏட்டில் தன் பங்கு வரலாற்றையும் பதித்துவிட்டு, ரெயில்வே அதிகாரிகளின் கேலிக்குப் பாத்திரமான நிலையில் அவன் ஸ்டேஷனை விட்டு வெளியேறினான். சாலைக்கு வந்ததும் டிரக் கண்ணிலே பட்டது. அவ்வளவுதான். அவன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அவன் டிரக்கை நெருங்கியபோது, டிரைவரும், கிளீனரும் தேநீரின் கடைசித் துளிகளை ருசித்துக்கொண்டிருந்தனர். இங்குமங்கும் பார்வையை அலையவிட்ட ரங்கநாத் இயன்றவரையில் தன் மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு, "டிரைவர், இந்த டிரக் சிவபால்கஞ்ச் பக்கம் போகுமா?" என்று வினவினான்.

டிரைவருக்கு நாவால் சுவைக்க இன்னும் தேநீரும், கண்ணால் பருகக் கடைக்காரியும் இருந்ததனால் அவன் அலட்சியமாகப் பதிலுரைத்தான்: "போகும்."

"என்னை அழைத்துப் போவாயா? பதினைந்தாவது மைலில் இறங்கிவிடுவேன். நான் சிவபால்கஞ்ச் போகவேண்டும்."

எதிரே அமர்ந்திருந்த கடைக்காரியிடம் தான் காண விரும்பியதையெல்லாம் ஒரே பார்வையில் அளந்துவிட்ட டிரைவர் தனது பார்வையை ரங்கநாத்தின்பால் திருப்பினான்.

"ஆகா! என்ன தோற்றம்! கதர்ப் பைஜாமா, தலையில் கதர்த் தொப்பி, கதர்ச் சட்டை, தோளிலிருந்து தொங்கும் பெரிய ஜோல்னாப் பை, கையில் தோல்பெட்டி!" டிரைவர் பார்த்துக்கொண்டே நின்றான். இமைக்கக்கூட இல்லை. பின்னர் ஏதோ யோசித்தவன்போல், "உட்காருங்க ஐயா! இதோ புறப்பட வேண்டியதுதான்" என்றான்.

கடாபுடா ஓசையுடன் டிரக் புறப்பட்டது. நகரத்தின் கோணல் மாணலான வளைவுகளிலிருந்து விடுபட்டதும் சற்றுத் தூரத்தில் நேரான, சீரான, சந்தடியற்ற பாதை வந்துவிட்டது. இங்கேதான் டிரைவர் முதல்முறையாக டாப் கியரைப் பிரயோகித்தான். ஆனால் அது நழுவி, நழுவி நியூட்ரலில் விழலாயிற்று. நூறுகஜ தூரம் செல்வதற்குள் கியர் நழுவிவிடும். ஆக்ஸிலேட்டரை மிதித்ததும் டிரக்கின் கர்புர் ஒசை அதிகரித்து, வேகம் குறைந்துவிடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த ரங்கநாத், "டிரைவர் சார்! உங்க கியர் நம்ம நாட்டு அரசாங்கம்போலத்தான் இருக்கிறது" என்றான்.

டிரைவர் சிரித்துக்கொண்டே இந்தப் பாராட்டுப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டான். ரங்கநாத் தான் கூற வந்ததை மேலும் தெளிவாக்க விரும்புபவன் போல் தொடர்ந்தான் "எத்தனை முறை டாப் கியரில் போட்டாலும், அது இரண்டு கஜ தூரம் சென்றதுமே நழுவி, தன் பழைய இருப்பிடத்துக்கு வந்துவிடுகிறதே!"

டிரைவர் சிரித்தபடி, "ஐயா ! ரொம்பப் பிரமாதமாய்ச் சொல்லிட்டீங்க!" என்றான்

இந்தமுறை கியரை டாப்பில் போட்டதும் ஒரு காலை 90 டிகிரி கோணத்தில் உயர்த்திக் கியரைத் தொடையின் கீழே அழுத்திக்கொண்டான். 'அரசாங்கத்தை நடத்தவும் இந்த நுட்பங்கள்தான் தேவை' எனச் சொல்ல விரும்பிய ரங்கநாத், விஷயம் கொஞ்சம் பிரமாதமாகப் போய்விடப் போகிறதே என்று அஞ்சியவன் போல் மெளனமாகிவிட்டான்.

டிரைவர் தன் தொடையைக் கியரிலிருந்து நகர்த்திப் பழைய இருக்கைக்குக் கொணர்ந்துவிட்டான். இம்முறை அவன் கியரில் ஒரு நீண்ட மரக்கட்டையை முட்டுக்கொடுத்து நிறுத்தினான். கட்டையின் ஒரு முனையைப் பேனலின் கீழே செருகி விட்டான். அவ்வளவுதான். டிரக் விரைந்தது. முழு வேகத்துடன் விரைந்த அதைத் தொலைவில் கண்டதுமே, சைக்கிள்காரன், வண்டியோட்டி, பாதசாரி என்று யாவருமே பயந்துபோய்ப் பாதையைவிட்டு ஒதுங்கிவிட்டனர். அவர்கள் அஞ்சி ஓடிய வேகத்தைப் பார்த்தால் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவது ஒரு சாதாரண டிரக் அல்ல, காட்டுத் தீயின் ஜ்வாலையோ, வங்கக்குடாக் கடலில் எழுந்ததொரு கடற்புயலோ, மக்களின் மீது ஏவிய, கண்டபடி வசைபாடும் ஊழியனோ அல்லது கொள்ளைக்கூட்டத்தினரோ என்று தோன்றியது. "மக்களே, உங்கள் ஆடு மாடுகளை, குழந்தை குட்டிகளை வீட்டிற்குள்ளே பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நகரத்திலிருந்து இப்பொழுதுதான் ஒரு டிரக் புறப்பட்டிருக்கிறது" என்று முன்னரே அறிவித்திருக்கவேண்டுமென நினைத்தான் ரங்கநாத்.

இதற்குள் டிரைவர், "சொல்லுங்க, ஐயா, என்ன விஷயம்? ரொம்ப நாட்களுக்குப் பிறகு கிராமத்துப் பக்கம் போகிறாப்போல இருக்குது" என்றான்.

ரங்கநாத் தன் புன்னகையினால் இந்த நல விசாரணையை ஊக்குவிக்கவே டிரைவர் தொடர்ந்தான். "ஐயா! இப்பொழுது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?"

"சும்மா, திண்ணையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்!"

டிரைவர் சிரித்தான்.

எதிர்பாராமல் ஒரு விபத்தே நேர்ந்திருக்கும். நல்லவேளை! தப்பியது. சுமார் பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். கோவணாண்டியான ஒரு பையன் டிரக்கின் சக்கரத்திலிருந்து மயிரிழையில் தப்பினான். எகிறிக் குதித்துப் பல்லியைப் போல் பாலத்தின்மீது போய் விழுந்தான். டிரைவர் இதனால் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லை. ஆக்ஸிலேட்டரை ஒரு மிதி மிதித்தவன் சிரித்துக்கொண்டே, "என்ன சொன்னீங்க? கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்க" என்றான்.

"சொன்னேனே, திண்ணையைத் தேய்க்கிறேன் என்று! இங்கிலீஷிலே இதைத்தான் ரிஸர்ச் என்று சொல்லுகிறார்கள். போன வருடம் எம்.ஏ. முடித்தேன். இந்த வருடம் ரிஸர்ச் செய்யத் தொடங்கியிருக்கிறேன்."

ஏதோ அலிவ்லைலா கதையைச் சுவாரசியமாய்க் கேட்டுக் கொண்டிருப்பவன் போல் புன்னகைதவழ டிரைவர் வினவினான்: "ஐயா! சிவபால்கஞ்சுக்கு என்ன விஷயமாய்ப் போறீங்க?"

"அங்கே என் மாமா இருக்கிறார். எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. கிராமத்தில் கொஞ்ச நாட்களிருந்து உடம்பைத் தேற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்."

இம்முறை டிரைவர் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான். பின்னர், "நல்லாக் கதை அளக்கறீங்க ஐயா" என்றான்.

ரங்கநாத் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தவாறே, "இதில் கதை அளக்க என்ன இருக்கிறது?" என்றான்.

ஒன்றுமே அறியாதது போன்ற இந்த பாவத்தைக் கண்ட டிரைவருடைய சிரிப்பு பின்னும் அதிகமாகிவிட்டது. சிரிப்புக்கிடையே, "நல்லாச் சொன்னீங்க, போங்க! சரி, இது கிடக்கட்டும். மித்தல் சாகிப் எப்படி இருக்கிறார்? சொல்லுங்க! ரிமாண்டிலிருந்தவன் கொலை விஷயம் என்ன ஆயிற்று?" என்று வினவியதும் ரங்கநாத்தின் ரத்தமே உறைந்துவிட்டது.

தழுதழுத்த குரலில், "எனக்கென்ன தெரியும் இதெல்லாம்? அந்த மித்தல் என்பவன் யார்?" என்று கேட்டான்.

டிரைவரின் சிரிப்பு ப்ரேக் போட்டதுபோல் நின்றுவிட்டது. டிரக்கின் வேகமும் சற்றுக் குறைந்துவிட்டது. ரங்கநாத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான். "உங்களுக்கு மித்தல் சாகிப்பைத் தெரியாதா?"

"தெரியாது."

"ஜயின் சாகிப்பை?"

"தெரியாது."
டிரைவர் ஜன்னல் வழியே காறி உமிழ்ந்துவிட்டுத் தெளிவான குரலில் கேட்டான். "நீங்கள் சி.ஐ.டி.யில் தானே வேலை பார்க்கிறீங்க?"

ரங்கநாத்துக்கு எரிச்சலாக வந்தது. "சி.ஐ.டி.யா? அப்படீன்னா என்ன?"

நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிய டிரைவரின் பார்வை, கண்முன்னே நீண்டு கிடந்த பாதையில் படிந்தது. சில மாட்டு வண்டிகள் ஊர்ந்துகொண்டிருந்தன.

எப்பொழுது, எங்கே சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே காலை நீட்டிப் படுத்துவிட வேண்டியதுதான் என்ற பொதுப்படையான சித்தாந்தத்தை நிறைவேற்றுபவர்களாய் வண்டிக்காரர்கள் காலை நீட்டிப் படுத்து, முகத்தைத் துணியால் மூடிய வண்ணம் உறங்கிக்கொண்டிருந்தார்கள். மாடுகள் தங்கள் திறமையினால் அல்லது பழக்கத்தினால் தம்பாட்டில் வண்டியை இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. இதுவும்கூட 'மக்கள்', 'மகேசன்' என்று பேசக்கூடிய விஷயங்கள்தான். ஆனால் ரங்கநாத்துக்கு எதையும் பேசக்கூடிய துணிவு இல்லை இப்பொழுது. அந்தச் சி.ஐ.டி. என்ற வார்த்தைகளே அவனை ஒரு கலக்குக் கலக்கி விட்டிருந்தன.

டிரைவர் முதலில் ரப்பர் ஹார்னை அழுத்தினான். பின்னர் ஆரோகண, அவரோகண ஸ்வரங்களில் ஒலிக்கும் ஹார்னை அழுத்தினான். நாராசமாயிருந்தது அந்த ஒலி.

ஆனால் வண்டிகள் நகரவில்லை. தன் வழியே மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தன. டிரக்கை வெகு வேகமாய் ஒட்டிக்கொண்டு வந்த டிரைவர், மாட்டு வண்டிகளைக் கடந்து செல்லவே விரும்பினான். ஆனால் வண்டிகளை நெருங்கியதுமே, தான் செலுத்திக்கொண்டிருப்பது டிரக்தான், ஹெலிகாப்டர் அல்ல என்பது தெரிந்துவிட்டது போலும். சட்டென பிரேக்கைப் போட்டான். பேனலில் செருகி வைத்திருந்த கட்டையைக் கீழே தள்ளினான். கியரை மாற்றியவன், வண்டிகளை உராய்வதுபோல் அவற்றைக் கடந்து விர்ரெனச் சென்றுவிட்டான்.

சற்றுத் தூரம் சென்றதும் வெறுப்பு நிறைந்த குரலில் கேட்டான்: "சி.ஐ.டி. இல்லையென்றால் இந்தக் கதரெல்லாம் ஏன் போட்டுக்கொண்டிருக்கிறீங்க நீங்க?"

ரங்கநாத் இந்தத் தாக்குதலில் பின்னும் சற்று வெலவெலத்துப் போய்விட்டான். இருந்தாலும் சகஜமான விசாரிப்பாகக் கருதுபவன் போல், "இந்தக் காலத்தில் எல்லாருந்தானே கதர் போடுகிறார்கள்" என்றான் நிதானமாக.

"சாதாரண ஆசாமி எவனும் கட்டுவதில்லையே!" என்ற டிரைவர் மீண்டும் ஒரு முறை காறி உமிழ்ந்தவன் கியரை டாப்பில் போட்டான்.

டிரக்கின் பின்புறமிருந்து வெகு நேரமாய் ஒரு ஹார்ன் ஒலித்துக்கொண்டே இருந்தது. ரங்கநாத் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். டிரைவரோ கேட்டும் கேளாதவன்போல் பாவித்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பின்னாலிருந்த கிளீனர் தொங்கிக் கொண்டே நகர்ந்து, டிரைவரின் காதருகிலே இருந்த ஜன்னலில் டிக் டிக்கெனத் தட்டி ஓசை எழுப்பியதும் டிரக்கின் வேகம் குறைந்துவிட்டது. பாதையின் இடதுபுறத்துக்கு டிரைவர் டிரக்கை மாற்றி விட்டான்.

ஹார்னின் ஒலி ஒரு ஸ்டேஷன் வாகனிலிருந்துதான் வந்து கொண்டிருந்தது. வலதுபுறமாக முன்னேறி வந்த அதன் வேகம் குறைய, வண்டியினுள்ளே இருந்து நீண்ட கரம் ஒன்று டிரக்கை நிற்கும்படி சைகை காட்டவே, இரண்டுமே நின்று விட்டன.

ஸ்டேஷன் வாகனிலிருந்து அதிகாரி போன்ற தோரணையுடன் ஒரு பியூனும், பியூன் போலிருந்த ஓர் அதிகாரியும் இறங்கினர். கூடவே காக்கி உடை அணிந்த இரு போலீஸ்காரர்களும் இறங்கினர். அவ்வளவுதான். சோதனை ஆரம்பமாகிவிட்டது. ஒருவன் டிரைவரின் டிரைவிங் லைசென்ஸைப் பிடுங்கினான். ரிஜிஸ்ட்ரேஷன் கார்டை இன்னொருத்தன் பறிமுதல் செய்தான். ஒருவன் டிரைவர் சீட்டின் முன்னாலிருந்த கண்ணாடியைத் தட்டிப் பார்த்தான். ஹார்னை அழுத்தினான். ஒருத்தன் பிரேக்கைச் சோதித்தான். ஃபுட்போர்டை ஆட்டிப் பார்த்தான். விளக்கைப் போட்டான். மணியை அடித்துச் சோதித்தான். அவர்கள் எதைப் பார்த்தாலும், எதில் கை வைத்தாலும் அது மோசமாய் இருந்தது. எதைத் தொட்டாலும் அது வேலை செய்ய மறுத்தது. நான்கு நிமிஷத்திற்குள் அந்த நான்கு பேரும் டிரக்கில் 40 குறைகளைப் பரிசோதித்து அறிந்துவிட்டனர். சோதனை முடிந்ததும் இறங்கிச்சென்று ஒரு மரத்தினடியில் கூடி நின்று விவாதிக்கலாயினர். விவாதத்தின் விஷயம்? 'எதிரியிடம் எந்தவிதமாய் நடந்து கொள்ள வேண்டும்' என்பதுதான்.

ரங்கநாத் சற்றுத்தள்ளி வேறொரு மரத்தின் அடியிலே போய் நின்றான். டிரைவருக்கும் "செக்கிங்" குழுவினருக்குமிடையே டிரக்கின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விவாதம் நடந்துகொண்டிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல டிரக்கின் கருவிகளை விட்டு நழுவிய விவாதம் நாட்டின் நிலை, மோசமான பொருளாதாரம் பற்றிய விஷயத்துக்கு வந்துவிட்டது. சற்றைக்கெல்லாம் அங்குக் கூடியிருந்தவர்கள் தனித்தனிக் குழுவாகப் பிரிந்தனர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் நிபுணர்போல் தனித்தனியே ஒரு மரத்தின் கீழே நின்று ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் சிந்திக்கலாயினர். நெடுநேர விவாதம். சிந்தனைக்குப் பின்னர் ஒரு மரத்தின் அடியிலே மீண்டும் திறந்தவெளி அரங்கம் கூடியது. சற்றைக்கெல்லாம் விவாதம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எனத் தோன்றியது.

கடைசியில் அதிகாரியின் வறட்டுக் குரல் ரங்கநாத்தின் காதில் விழுந்தது: "என்ன? அஷ் பாக்மியான்! என்ன சொல்லுகிறாய்? மன்னித்து விடலாமா?"

"வேறு என்ன செய்யமுடியும் சாகிப்? ஏதாவது ஒரு விஷயம் மோசமாயிருக்கிறதென்றால் சார்ஜ் செய்யலாம். எது எதுக்கென்று சார்ஜ் செய்வது?" சில நிமிஷம் ஏதேதோ பேசிய அதிகாரி முடிவில் கூறினார். "சரி, பண்டா சிங்! நீ போகலாம். உன்னை மன்னித்துவிட்டேன்."

"ஐயா ஒருவரால்தான் இப்படி நடந்துக்க முடியும்" என்று முகஸ்துதி பாடினான் டிரைவர்.

மரத்தடியில் நின்றுகொண்டிருந்த ரங்கநாத்தை அந்த அதிகாரி நெடுநேரமாய்க் கவனித்துக்கொண்டே இருந்தார். இப்பொழுது சிகரெட்டைப் புகைத்தவாறே அவனை நோக்கி வந்தவர், அவனை நெருங்கியதும், "நீங்களும் இந்த டிரக்கில் பிரயாணம் செய்கிறீர்களா?" என வினவினார்.

"ஆமாம்" என்றான் ரங்கநாத்

"உங்களிடம் சார்ஜ் எதுவும் இவன் வாங்கிக்கொள்ளவில்லேயே?"

"இல்லை."

"உங்கள் உடையைப் பார்த்ததுமே இது தெரிந்துவிட்டது. ஆனால் விசாரிப்பது என் கடமையல்லவா?" அவரைக் கிண்டல் செய்ய விரும்பிய ரங்கநாத் சொன்னான், "இது அசல் கதர் அல்ல. மில் கதர்."

"அரே சாகிப்! இதனால் என்ன? கதர் என்றால் கதர்தான். இதில் அசலாவது, நகலாவது?" என்றார் மரியாதையுடன்.

அதிகாரி அவ்விடம் விட்டகன்றதும் டிரைவரும், பியூனும் ரங்கநாத்திடம் வந்தனர். "சார்! இரண்டு ரூபாய் கொடுங்க" என்றான் டிரைவர்.

முகத்தைத் திருப்பிக்கொண்ட ரங்கநாத் கடுமை தொனிக்க, "ஏன்? நான் எதுக்காக ரூபாய் கொடுக்கணும்?" என்றான்

டிரைவர் பியூனின் கரத்தைப் பற்றி, "வாங்க, நீங்க வாங்க என்கூட" என்றவன், போகும்போது ரங்கநாத்தை நோக்கி, "உன்னால்தான் இன்னிக்குச் செக்கிங் நடந்தது. நீயே கஷ்ட காலத்தில் என்னிடம் இப்படிப் பேசுகிறாயே! இதுதான் நீ படித்த படிப்பா?" என்று கேட்டுக்கொண்டே சென்றான்.

தற்காலக் கல்வி இருக்கிறதே! அது வழியில் படுத்துக் கிடக்கும் நாய் மாதிரிதான். யார் வேண்டுமானாலும் அதை எட்டி உதைக்கலாம். இந்த டிரைவர்கூட அப்படித்தான். கடந்துகொண்டே அதை எட்டி ஓர் உதை உதைத்துவிட்டுப் பியூனுடன் டிரக்கை நோக்கிச் சென்றுவிட்டான்.

ரங்கநாத் பார்த்தான். மாலைப்பொழுது இறங்கிக்கொண்டிருக்கிறது. அவனுடைய தோல்பெட்டியோ டிரக்கில் இருக்கிறது. சிவபால்கஞ்ச் இங்கிருந்து குறைந்தபட்சம் ஐந்து மைலாவது இருக்கும். இவர்களுடைய நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் மிகத்தேவை என்பதை உணர்ந்ததும் அவன் கால்கள் டிரக்கை நோக்கி எட்டி நடைபோட்டன.

ஸ்டேஷன் வாகனின் டிரைவர் ஹார்னை அடித்து அடித்துப் பியூனை அழைத்துக்கொண்டிருந்தான். ரங்கநாத் இரண்டு ரூபாயை டிரைவருக்குக் கொடுக்க விரும்பியதும் அவன் அலட்சியமாகக் கூறினான். "இப்பக் கொடுக்கிறதா இருந்தா பியூனுக்குக் கொடுங்க. எனக்கு எதுக்கு ரூபாய்?" இதைக் கூறும்பொழுதே அவன் குரலில் காசைக் கரத்தால் தீண்டாத, "உன் காசு எனக்குத் தூசுக்குச் சமானம்" எனக் கூறும் சாதுக்களின் தொனி வந்துவிட்டது.

ரூபாயைப் பையில் போட்டுக்கொண்ட பியூன் பீடியைக் கடைசியாக இழுத்துப் புகைத்தபின், பாதி எரிந்த பீடித்துண்டை ரங்கநாத்தின் பைஜாமாவின் மீது வீசிவிட்டு ஸ்டேஷன் வாகனை நோக்கி நடந்துவிட்டான். அவர்கள் புறப்பட்ட பின், டிரைவர் டிரக்கை ஒட்டினான். இம்முறை கியரை டாப்பில் போட்டுவிட்டு ரங்கநாத்தின் கரத்தில் கொடுத்துவிட்டான்.

வண்டி ஓடியது. சற்று நேரத்துக்கெல்லாம் அந்திவேளையின் மங்கலான ஒளியில் பாதையின் இருபுறமும் உருட்டிவிட்ட மூட்டைகள் மாதிரி தெரிந்தன. அவை மூட்டைகள் அல்ல. பெண்கள்தாம் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர் என்பது தெரிந்தது. மிகவும் சாவகாசமாய் அரட்டை அடித்தவாறு காற்று வாங்கிக்கொண்டிருந்த அவர்கள், அதே சமயத்தில் மல, மூத்திரமும் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

பாதை ஒரத்தில் குப்பை கூளங்கள் நிறைந்து கிடந்தன போலும். மாலை நேரத்திய மென்காற்று, அந்த முடை நாற்றத்தின் சுமையால் கர்ப்பிணிப் பெண்ணைப்போல் தளர்நடை போட்டுக்கொண்டிருந்தது.

தொலைவிலே நாய்கள் குரைத்தன. கண்களுக்கெதிரே புகைமண்டலம் மேலே எழும்பிச் செல்வது தென்பட்டது. அவர்கள் ஒரு கிராமத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. இதுதான் சிவபால்கஞ்ச்.

ஹிந்தி மூலம்: ஸ்ரீலால் சுக்ல
தமிழில்: சரஸ்வதி ராம்நாத்
Share: