Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ரஜினிடா!
லட்சுமணன் கோடு
- பானுமதி பார்த்தசாரதி|ஆகஸ்டு 2016||(3 Comments)
Share:
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. தலைமுடி முழுவதும் வெளுத்துவிட்டிருந்தது. கழுத்து நரம்புகள் தூக்கிப் புடைத்துக் கொண்டிருந்தன. சரஸ்வதி நல்ல எலுமிச்சம்பழ நிறமாதலால் கழுத்தில் ஓடும் நரம்புகள் பச்சையாகப் பளீரென்று தெரிந்தன. தேகம் மிக ஒடுங்கிக் காணப்பட்டது.

முதுகில்கூடக் கொஞ்சம் கூன் விழுந்திருந்தது. நடக்கும்போதே மெதுவாக வளைந்துதான் நடக்கிறாள். அது அவளுக்கே நன்றாகத் தெரிந்தது. கைகளை லேசாகத் தடவிப் பார்த்தாள். காய்ந்த மூங்கில்போல மிக வறட்சியாக இருந்தது. "இன்னும் ஏன் கடவுள் என்னை அழைத்துக் கொள்ளவில்லை? நல்லவர்களுக்குத்தான் சீக்கிரம் உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை என்பார்கள். ஒருவேளை தான் நல்லவள் இல்லையோ? அல்லது கடவுள் ஒருவேளை என் எக்ஸ்பைரி தேதியை மறந்துவிட்டாரோ!" தனக்குள் சிரித்துக் கொண்டே தன் படுக்கையறையை விட்டு ஹாலுக்கு வந்தாள்.

பெசண்ட்நகர் கடற்காற்று பிய்த்து உதறியது. ஹௌஸிங் போர்டு அபார்ட்மெண்ட். சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்தான். ஆரம்பகாலத்தில் கட்டப்பட்டது. அதனால் ரூம், ஹால், சமையலறை எல்லாமே கொஞ்சம் பெரியதாக இருந்தன. முதன்முதலாக செல்கீரீட் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம். செங்கல்போல் கட்டிடம் பலமாக இருக்காது என்று எண்ணி யாரும் வாங்கவில்லை. அப்ளை செய்து முதல் டெபாஸிட் கட்டியவுடனே இவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

நாற்பது வருடத்துக்கு முன் தி. நகர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு மாதிரி இடங்கள்தான் சென்னையைச் சேர்ந்ததுபோல் தெரியும். பெசண்ட்நகர் போல் சென்னையை விட்டுக் கொஞ்சதூரத்தில் இருக்கும் ஏரியாக்களுக்கு பஸ் வசதியும் இருக்காது.

சுனாமி வருவதற்கு முன்பாகவே கட்டப்பட்டதாகையால் இவர்கள் அபார்ட்மெண்ட் கடலுக்கு வெகு அருகில் இருக்கும். கிரௌண்ட் ஃப்ளோர், முதல்மாடி என்று இரண்டே அடுக்குகள்தான். இதை வாங்கும்போது இவர்களின் ஒரே மகன் ராமச்சந்திரன் அமெரிக்காவில் எம்.எஸ். படித்துக் கொண்டிருந்தான். ரொம்பவும் கெட்டிக்காரன். ஸ்காலர்ஷிப்பிலேயே படித்துக் கொண்டிருந்தான்.

சரஸ்வதியும் கணவர் ரங்கராஜனும் ரெயில்வே ஊழியர்கள். சரஸ்வதி ரெயில்வே நிர்வாக அலுவலகத்தில் முக்கியமான பிரிவில் கண்காணிப்பாளர். கணவர் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர். நல்ல சம்பளம். சரஸ்வதியைவிட ரங்கராஜனுக்குச் சம்பளம் அதிகம். இருவருக்குமே அநாவசியச் செலவுசெய்ய மனம் வராது.

இந்த அபார்ட்மெண்ட் வாங்கும்போது, "சுலபமான மாதத்தவணையில் தானே வீடு வாங்குகிறோம். இரண்டு பெட்ரூம் அபார்ட்மெண்டே வாங்கலாம் சரஸ்வதி" என்றார் ரங்கராஜன்.

"வேண்டாங்க; இதுவே கடலுக்கு மிக அருகில் இருக்கிறது. பௌர்ணமியிலும், அமாவாசை இரவிலும் அடிக்கும் அலைகளின் ஓசை இரவில் கொஞ்சம் பயத்தைக் கொடுக்கிறது. நீங்கள் ஒரு வாரம்போல் கேம்ப் போகும்போது ரொம்பப் பயமாக இருக்கிறது. அதுவுமில்லாமல் உப்புக் காற்றினால் ஜன்னல் கம்பிகள், பீரோ எல்லாம் துருப்பிடித்துவிடும். வருஷா வருஷம் பெயிண்ட் அடிக்க வேண்டும். மெயிண்டனன்ஸே நிறைய ஆகும் என்கிறார்கள். அதுவுமில்லாமல் நானும் காலையில் வீட்டைவிட்டுப் போனால் திரும்ப இரவு மணி ஏழாகிவிடுகிறது. அதுவுமில்லாமல்..." என்று நிறுத்தினாள் சரஸ்வதி.

"அதுவுமில்லாமல்....?"

"ராமச்சந்திரன் படிப்பு முடிந்ததும் எப்படியும் அமெரிக்காவிலேயே வேலை வாங்கிவிடுவான். வேலை கிடைத்ததும் அங்கே அழைத்துக் கொள்வதாகக் கூறியிருக்கிறானே! அதற்கு இங்கே ஏன் பெரிய வீடு? கையிலிருக்கும் பணத்தை பேங்குல போட்டா வட்டியாவது வரும்" என்றாள் சரஸ்வதி.

ரங்கராஜன் கேலியாகச் சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க?"

"ஒண்ணுமில்லை; அது எப்படி இந்தக் காலத்துப் பெண்கள், உங்களை எந்தெந்த வழிகளில் சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்று இருபத்திநான்கு மணி நேரமும் யோசித்துக் கொண்டிருக்கும் கணவர்களைவிடப் பிள்ளைகளை அதிகம் நம்புகிறீர்கள்! ஆச்சரியம்தான்" என்றார். சரஸ்வதிக்கு அவர் கூறுவது அபத்தமாகத் தெரிந்தது. நம் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை நம்பாமல் எப்படி இருக்க முடியும் என்று நினைத்தாள்.

பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களும், பதவியில் இருந்தவர்களும் ராமச்சந்திரனுக்குப் பெண்கொடுக்க முன்வந்தனர். ரொம்பப் பெரிய இடத்திலோ, பெரிய பதவியில் உள்ளவர்கள், பெண்ணையோ எடுத்தால் நம்மை மதிக்கமாட்டாள் என்று சரஸ்வதியும், கணவரும் முடிவுசெய்தனர். அதனால் நல்ல நடுத்தரக் குடும்பத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்த பெண்ணைத் திருமணம் செய்துவைத்தார்கள். பார்த்தாலே மயங்கிவிழச் செய்யும் அழகி. இரண்டு சகோதரிகள்; ஒரே ஒரு அண்ணா; இதுதான் ரத்னாவின் - அதுதான் அவர்கள் மருமகள் பெயர் - குடும்பம். மற்றவர்கள் மயங்குகிறார்களோ என்னவோ ராமச்சந்திரன் மயங்கிவிட்டான். விழுந்தும் விட்டான்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து ரங்கராஜன் தம்பதிகள் தங்கள் இலாகாவின் அனுமதியுடன் இரண்டு மாத விடுப்பில் மகனுடன் இருக்கலாமென்று போனார்கள்.

அந்தநேரத்தில் ரத்னா எங்கும் வேலைக்குப் போகவில்லை. மாமனாரும், மாமியாரும் வந்திருப்பதாகவே நினைக்கவில்லை. இவர்களை மதிப்பதாகத் தெரியவில்லை. காலையில் ஒன்பது மணிக்குத்தான் படுக்கையிலிருந்தே எழுந்திருப்பாள். பிறகு குளித்து, உடை மாற்றிக்கொண்டு வருவதற்குள் மணி பத்தாகிவிடும்.

இதற்குள் சரஸ்வதியே காலை டிபன், மதியம் சாப்பாடு எல்லாம் தயார் செய்துவிடுவாள். ரத்னா சாப்பிட்டுவிட்டுத் தன் அறையில் போய் உட்கார்ந்து லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருப்பாள்.

ரங்கராஜன் ஒருநாள் பொறுக்க முடியாமல் ரத்னா எதிரிலேயே, "ராமச்சந்திரா, தினம் உங்கம்மாவே சமையல் செய்யறாளே, ஏன் ரத்னாவுக்கு சமைக்கத் தெரியாதா? தெரியாதென்றாலும் உங்கம்மாவுடன் கூட இருந்து பேசிச் சிரித்துக் கொண்டு, சமையலையும் கற்றுக் கொள்ளலாமே? நாங்கள் வருவதற்குமுன் என்ன செய்தீர்கள்? நாங்கள் போனபிறகு என்ன செய்வீர்கள்?" என்றார்.

"அப்பா, ரத்னா அவர்கள் வீட்டில் கடைக்குட்டி. அதனால் அவளுக்கு சமைக்கத் தெரியாது. நீங்கள் வருவதற்கு முன் நானே சமைத்துவிடுவேன்."

"இது எங்கள் பிரச்சனை மாமா. இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?" என்றாள் ரத்னா வெடுக்கென்று. மகன் வாயே திறக்கவில்லை.

அதற்குமேல் ரங்கராஜன் ஒன்றும் பேசவில்லை. சரஸ்வதி ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். அவளையும் அடக்கிவிட்டார். பிளைட் டிக்கட்டை ஒரு மாதம் முன்னே மாற்றிக்கொண்டு, மனைவியோடு சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

யாரிடமும் பிள்ளையைப் பற்றியோ, மருமகளைப் பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. "அந்த நாட்டு சீதோஷ்ணம் ஒத்து வராததால திரும்பி வந்துட்டோம்" என்று கூறி அமைதியாகிவிட்டார். "மதியாதார் வீட்டுப்படியை பெற்ற மகனே ஆனாலும் மிதிக்கக்கூடாது சரஸ்வதி" என்றார் ரங்கராஜன் மனைவியிடம்.

ஒருநாள் அமெரிக்காவிலிருந்து ஃபோன். ராமச்சந்திரன் தான். ரங்கராஜன் ஸ்பீக்கரை ஆன் செய்து, சரஸ்வதியைப் பேசச் சொல்லிவிட்டு பால்கனியில் போய் உட்கார்ந்துகொண்டார்.

சரஸ்வதி ஃபோனில், "உன் அப்பாவிடம் ரத்னா மரியாதையில்லாமல் பேசியது தவறு" என்றாள்.
"அவள் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லையே அம்மா! எங்கள் பிரச்சனையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என்றுதானே கேட்டாள். நான் உங்கள் பிள்ளையாகவே இருந்தாலும் ஒரு கோட்டைத் தாண்டி நீங்கள் வந்தால் எங்கள் திருமண வாழ்க்கைதான் பாதிக்கும், புரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லி ஃபோனை பட்டென்று வைத்துவிட்டான்.

ரங்கராஜன் எழுந்துவந்து சரஸ்வதியைப் பார்த்தார். அவள் முகம் கோபத்தினாலும் அவமானத்தினாலும் சிவந்திருந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரங்கராஜன் அன்றே தொலைபேசி அலுவலகத்தில் தொடர்பைத் துண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆளுக்கொரு விலையுயர்ந்த செல்போனை வாங்கி வந்துவிட்டார்.

"சரஸ்வதி, இதற்கெல்லாம் வருத்தப்படாதே! காலம் மாறிவிட்டது. வயதானால் நாம் அவர்களைத்தான் சார்ந்து வாழவேண்டுமென்று நினைக்காதே! நாம் இருப்பது நம்மை வளர்த்த பூமி. வயிற்றில் பிறந்த பிள்ளைமட்டும் உறவென்று நினைக்காதே. நாம் யாரிடம் அன்பு காட்டுகிறோமோ அவர்கள் எல்லாம் நம் உறவினர்கள்தான்" என்று ஆறுதல் கூறினார்.

அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளுடனே தன் பொழுதைக் கழித்தார். சேமிப்பிலிருந்து வரும் வட்டியுடன், இருவர் சம்பளமும் சேர்ந்து தலைக்குமேலே வெள்ளம் என்று சொல்வதுபோல் நிறையப் பணம் சேர்ந்தது.

ரெயில்வே பாஸில் இந்தியா எங்கும் பயணம் செய்தனர். ரங்கராஜன் ரிடையர் ஆனார். நிறைய வருடங்கள் சர்வீஸ் செய்ததால் பென்ஷன், கிராச்சுவிடி, பி.எஃப். எல்லாம் நிறையவே கிடைத்தன. மொத்தத்தையும் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்தார். அவர் ரிடையர் ஆகி வீட்டில் தனியாக இருந்தால் அவருக்கு மிகவும் தனிமையாக இருக்கும் என்பதால் சரஸ்வதியும் வாலண்டரி ரிடயர்மெண்ட் எடுத்துக்கொண்டாள்.

வீட்டிற்கு மிக அருகில் அனாதை ஏழைக் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்று இருக்கிறது. முதலில் எப்போதாவது ஒருமுறை கணவன், மனைவி இருவரும் போவார்கள். பிறகு அடிக்கடி போக ஆரம்பித்தார்கள். அதை ஒரு ட்ரஸ்ட் நடத்துகிறது. உடல் உழைப்பாலும், பணத்தினாலும் இருவரும் அந்த இல்லத்திற்கு உதவி செய்து வந்தார்கள்.

ரங்கராஜன் ஒருநாள் காலை எழுந்திருக்கும்போதே மிகவும் களைப்பாக இருந்தார். சரஸ்வதி அவரைத் தொட்டுப் பார்த்தாள். ஜுரம் இல்லை. ஆனால், நிறைய வேர்த்திருந்தது. ஜன்னல் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிட்டு மின்விசிறியின் வேகத்தையும் அதிகப்படுத்தினாள்.

"காப்பி கொண்டு வருகிறேன். சாப்பிடுங்கள். பிறகு நான் டாக்டருக்குப் போன் செய்து அபாயிண்ட்மென்ட் வாங்குகிறேன்" என்று சொல்லிவிட்டு சமையலறைக்குப் போய் காஃபி எடுத்து வந்து அவரிடம் கொடுக்க வந்தால், கண்களை மூடித் தூங்குவதுபோல இருந்தார். யாருக்கும் எந்தந் தொந்தரவும் கொடுக்காமல் எல்லாம் முடிந்துவிட்டது. அப்போதும் அந்த ஆசிரமத்து நிர்வாகிகளும் குழந்தைகளும்தான் துணையாக நின்றனர்.

பிள்ளையும் மருமகளும் தங்கள் ஒரே ஆண்குழந்தை ஸ்ரீதருடன் வந்தனர். ராமச்சந்திரன் மட்டும் தன் அம்மாவுடன் இருந்தான். மருமகள் அம்மா வீட்டிற்குப் போய் பதினாறாம் நாள் காரியத்திற்குத்தான் வந்தாள். வீட்டில் இருந்த உறவினர் சப்தமும் அழுகையும் குழந்தையை பயமுறுத்திவிடும் என்றான் ராமச்சந்திரன்.

சரஸ்வதி எதையும் கண்டுகொள்ளவில்லை.

கேட்டால் மட்டும் என்ன! எதுவும் மாறப்போவதில்லை. வீண் விரோதம்தான் மிஞ்சும் என்று அமைதியாக இருந்தாள்.

"அம்மா, நீ எங்களோடு வந்துவிடு. இங்கே யார் இருக்கிறார்கள். நான் க்ரீன்கார்டு பண்ணிவிடுகிறேன். இந்த பெசண்ட் நகர் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்டை விற்றுவிடலாம். ரத்னாவுக்கு இந்த வீடே பிடிக்கவில்லை. உன் ரிடையர்மெண்ட் பெனிஃபிட், அப்பாவுடையது, எல்லாவற்றையும் போட்டு அமெரிக்காவில் வங்கிக்கடனில் நான்கு படுக்கையறை கொண்ட தனிவீடாக வாங்கிவிடலாம்" என்றான்.

ஆனால், அந்தமுறை அவன் எடுத்துவந்த ஒருமாத விடுப்பில் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்பாவின் காரியங்களை முடித்துவிட்டு ராமச்சந்திரன், "அம்மா, வீட்டு டாகுமெண்ட், பாஸ் புத்தகம், உன் பாஸ்போர்ட் எல்லாம் என்னிடம் கொடுத்துவிடு. நான் பத்திரமாய் வைத்துக்கொள்கிறேன்" என்றான்.

"எல்லாம் லாக்கரில் இருக்கிறது. பாஸ்போர்ட் மட்டும்தான் வீட்டில் இருக்கிறது" என்றாள் சரஸ்வதி.

"ஃப்ளைட்டுக்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. நாம் வேண்டுமானால் டாக்ஸி வைத்துக் கொண்டு அவற்றை எடுத்து வந்துவிடலாமா?" ரத்னா கேட்டாள்.

"எதற்கும் அவசரப்பட வேண்டாம். பாஸ்போர்ட்தான் கையில் இருக்கிறதே; அது போதும்" என்றாள், சரஸ்வதி மெதுவாக.

"ஏன் எங்களை நம்பவில்லையா?" என்றாள் ரத்னா வெடுக்கென்று.

"ரத்னா, இந்த விஷயத்தில் தலையிடாதே! என்னுடைய இந்த சோகமான நேரத்தில் ஏதாவது வீண்வார்த்தை வந்துவிடும்" என்றாள் சரஸ்வதி.

ரத்னாவோடு அவள் அம்மாவும் கிளம்பி வந்தாள். "ராமச்சந்திரா, உன் மாமியார் வருவதாகச் சொல்லவேயில்லை?" என்றாள் சரஸ்வதி.

"ஒவ்வொன்றுமா அம்மா சொல்லிக் கொண்டு இருப்பார்கள்! நீ பிள்ளை வீட்டுக்கு வருவதுபோல், அவர்கள் பெண் வீட்டுக்கு வருகிறார்கள். இதில் என்ன இருக்கிறது?" என்றான்.

ரத்னா ஒருத்தியையே சமாளிக்க முடியாது. இப்போது இவள் அம்மா வேறு. குழந்தையை சரஸ்வதியிடம் விட்டுவிட்டு ரத்னாவும் அவள் அம்மாவும் காரை எடுத்துக்கொண்டு ‘பர்ச்சேஸிங்’ என்று காலை பத்துமணிக்கே கிளம்பி விடுவார்கள்.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, சரஸ்வதி செய்து வைத்திருப்பதைச் சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டைக்கூட எடுக்காமல் டேபிள் மேலேயே போட்டுவிட்டு மிகவும் களைப்பாக இருக்கிறதென்று போய்ப் படுத்துக்கொள்வார்கள். டைனிங் டேபிளைப் பார்த்தால் மாட்டுத்தொழுவம் போல் கீழே இறைந்து மேலே கொட்டியிருக்கும். எல்லாருக்குமாகச் சமைக்கும்போது கூடக் கோபம் வராது. டைனிங்டேபிள் இருக்கும் அவலநிலையைப் பார்த்தால்தான் மிக எரிச்சலாக இருக்கும். குழந்தை ஸ்ரீதரையும் நாள்பூராவும் இவள் கண்காணிப்பிலேயே விட்டுவிட்டுப் போய் விடுவதால் சரஸ்வதி மிகவும் களைத்துவிட்டாள்.

பேரக்குழந்தைதான். சரஸ்வதிக்கும் அவன்மேல் மிகவும் பாசம் உண்டுதான். இருந்தாலும் அவளுக்கும் வயதாகிறது. அன்புகூடக் காட்டவேண்டாம். அக்கறையும் இல்லையென்றால் என்ன செய்வது?

"மதியாதார் வாசலைப் பெற்றமகனே ஆனாலும் மிதிக்கக்கூடாது" என்ற கணவரின் சொல்லை மறந்து அங்கே வந்தது மிகப்பெரிய தவறு என உணர்ந்தாள்.

அன்று சனிக்கிழமை. ராமச்சந்திரனும் வீட்டிலிருந்தான். சரஸ்வதி வழக்கம்போல் காலை ஆறுமணிக்கே எழுந்து காஃபி சாப்பிட்டுவிட்டு, குளித்து சமையலையும் முடித்துவிட்டாள். காலை மணி பத்தாகியிருந்தது. ராமச்சந்திரன்தான் எழுந்து வந்தான். மற்றவர்களுக்கு இன்னும் விடியவில்லை போலும்.

வழக்கம்போல் பிள்ளைக்கு காஃபியைக் கொடுத்துவிட்டுத் தன் பாஸ்போர்ட்டையும் ஃப்ளைட் டிக்கட்டையும் எடுத்துக்கொண்டு அவன் எதிரில் அமர்ந்தாள்.

"என்னம்மா, கையில் பாஸ்போர்ட்?"

"நான் சென்னை போவதற்கு டிக்கட்டை அட்வான்ஸ் செய்துவிடு."

இதற்குள் ரத்னாவும் அவள் அம்மாவும் எழுந்து வந்தனர்.

"நான் உங்களுக்கு கிரீன்கார்டு அப்ளை செய்யப்போறேனே அம்மா" என்றான் ராமச்சந்திரன்.

"அதெல்லாம் வேண்டாம்ப்பா. இந்தியாவில் உள்ள பான்கார்டும், ஆதார்கார்டுமே போதும். இதெல்லாம் எதற்கு?".

"உங்களுக்கு திடீரென்று உடம்புக்கு ஏதாவது வந்தால், இங்கேயென்றால் நல்ல மருத்துவமனைகள் இருக்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்வோம்," என்றாள் ரத்னா.

சரஸ்வதிக்கு சிரிப்பு வந்தது. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை.

"நாங்கள் இந்தியாவிற்கு அடுத்த வருடம்தானே அம்மா போவோம். இப்போது நீங்கள் எப்படித் தனியாகப் போவீர்கள்?"

"வீல்சேர் அஸிஸ்டென்ஸ்தான் இருக்கிறதே! அதை வைத்துக்கொண்டு நான் போய்விடுவேன். நான் சொன்னதைச் செய்" என்றாள் எரிச்சலோடு சரஸ்வதி.

"நாங்கள் உங்களை எவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்கிறோம். சென்னையில் நீங்கள் உடம்பு சரியில்லை என்று படுத்துக்கொண்டால், எங்களால் அடிக்கடி லீவ் போட்டுவிட்டு, ஃப்ளைட் சார்ஜ் செலவு செய்துகொண்டு வரமுடியாது" ரத்னா.

"நீ வேலைக்குப் போவதுமில்லை, ஒன்றுமில்லை. ஃப்ளைட் சார்ஜைப் பற்றி, விடுமுறை எடுப்பதைப் பற்றிப் பேசுகிறாய். எல்லாவற்றையும் என் பிள்ளை பார்த்துக்கொள்வான். நீ கொஞ்சம் பேசாமல் இரு" என்றாள் சரஸ்வதி.

"அம்மா, அவள் என் மனைவி. எனக்குள்ள கஷ்டங்களைத்தானே அவள் சொல்கிறாள். நீங்கள் இப்படிப் பேசுவது அவளை அவமானப்படுத்துவது போலாகும்." என்றான் ராமச்சந்திரன் கடுமையாக.

"ஏண்டா, ஒவ்வொன்றிற்கும் அவள் ஏதாவது ஏடாகூடமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள். அவளைக் கேட்பதை விட்டுவிட்டு என்னிடம் வாக்குவாதம் செய்கின்றாயே!" என்றாள் சரஸ்வதி.

"நீ உன் வழக்கப்படி லிமிட்டைத் தாண்டித்தான் அம்மா பேசுகிறாய். நீ எனக்கு மதிப்புக் கொடுப்பதுபோல அவளுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டும். லட்சுமணன், ராமாயணக் கதையில் போட்ட கோடுபோல் அவரவர்க்கு ஒரு கோடு போட்டுக்கொண்டால் எல்லைமீறிப் பேசமாட்டீர்கள்" என்றான் கடுமையாக.

சரஸ்வதிக்கு கோபத்தில் முகம் சிவந்துவிட்டது. எப்படி அசிங்கப்படுத்துகிறான்! அவமானத்தில் வார்த்தையே வரவில்லை.

"என் டிக்கட்டை முதலில் எவ்வளவு சீக்கிரம் அட்வான்ஸ் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

அடுத்த வாரமே ஒருநாள் விமானத்தில் காலியிடம் கிடைத்து கிளம்பிவிட்டாள்.

இரண்டு வருடம் கழித்து குழந்தை ஸ்ரீதருக்கு மொட்டையடித்து காதுகுத்தத் திருப்பதிக்குப் போகவேண்டுமென்று வந்தவர்கள் சென்னை வந்தார்கள். நேரே மாமியார் வீட்டில்தான் போய் இறங்கினான் ராமச்சந்திரன். சரஸ்வதியிடம் ஃபோனில் பேசிவிட்டு இரண்டு நாள் கழித்துத்தான் வீட்டுக்கு வந்தான்.

"அம்மா, நான் பெரிய வீடாக வாங்கிவிட்டேன். அதற்கு மாதத்தவணை மிக அதிகமாக வருகிறது. எனக்கு ரொம்பப் பணநெருக்கடி. அதனால் உன் வங்கி பிக்ஸட் டெபாசிட்டை முறித்து அந்தப் பணத்தைக் கொடுத்தால் பாதிக்கடன் கழித்துவிட்டு, மீதித் தவணைகள் கட்ட வசதியாக இருக்கும்" என்றான்.

"நீ சம்பாதித்து இதுவரை எங்களிடம் ஏதாவது கொடுத்திருக்கிறாயா, உன் அப்பாதான் வாங்கியிருக்கிறாரா?"

"இல்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?"

"மகனே, நாங்கள் உன்னைப் படிக்கவைத்து நல்லமுறையில் வளர்த்துவிட்டோம். நீங்கள்தான் சம்பாதித்து பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும். பெற்றோர்கள் சேமிப்பில் வயதான காலத்தில் பிள்ளைகள் கேட்பது அநாகரிகம்."

"இதில் என்ன அநாகரீகம்? பெற்றோர் சேமிப்பெல்லாம் பிள்ளைகளுக்குத்தானே! உங்களுக்கு வீடு இருக்கிறது. உங்கள் பென்ஷன், அப்பாவின் ஃபேமிலி பென்ஷன் இரண்டுமே உங்களுக்கு வெள்ளம்."

"நீ எங்களுக்குக் கோடுபோட்டாய் அல்லவா - லட்சுமணன் கோடு! அதைத் தாண்டி என்னை வரக்கூடாதென்றாய். அதேமாதிரிதான் உங்கப்பா உயில் எழுதி அதைப் பதிவுசெய்து உனக்கு ஒரு லட்சுமணன் கோடு போட்டிருக்கிறார். வங்கியில் டெபாஸிட் பணம் எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால் அதற்குமட்டும் உபயோகிக்கலாம், ஆனால் மீதியுள்ள மொத்தப்பணமும் பக்கத்திலே உள்ள ஏழை அநாதைக் குழந்தைகள் ஆசிரமத்திற்குத்தான் என்று. இந்த சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்தான் என் காலத்திற்குப் பிறகு உனக்கு என்று வெகு அழுத்தமாகக் கோடு போட்டிருக்கிறார். போதுமா?"

அன்று போனவன்தான். அதற்குப்பிறகு வரவில்லை. எப்போதாவது ஒருநாள் ஃபோன் செய்வான். பணம் கொடுத்திருந்தால் வந்திருப்பானோ? அதுவும் சந்தேகம்தான். ரத்னா போடும் கோட்டைத் தாண்டி வரவேண்டுமே!

ஆசிரமத்து நிர்வாகிகளும், குழந்தைகளும்தான் உதவி, சந்தோஷம் எல்லாம். பெற்றோர்களால் தூக்கி வீசப்பட்ட ஆசிரமத்துக் குழந்தைகள் கொடுத்த சந்தோஷத்தை, ஊணுறக்கம் பாராமல் வளர்த்த தன் பிள்ளையால் கொடுக்க முடியவில்லையே! சரஸ்வதி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

பானுமதி பார்த்தசாரதி,
கோப்பல், டெக்சஸ்
More

ரஜினிடா!
Share: 
© Copyright 2020 Tamilonline