Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன்
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2016|
Share:
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக் கொடுக்கத் தக்கதில்லை" (உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், அத்: 127; பக்: 420) என்று சொல்லி, அவனைக் கட்டிப்போட முயன்று, கண்ணன் விசுவரூப தரிசனம் காட்டி எல்லாம் முடிந்ததன் பிறகு, கர்ணனைக் கண்ணன் ஒரு தேரிலே ஏற்றிக்கொண்டு தனியானதொரு இடத்துக்குச் சென்று, கர்ணனுடைய பிறப்பை அறிவிக்கிறான். இது, குந்தி கர்ணனை அணுகுவதற்கு முன்னாலேயே நடக்கிறது. தன் பிறப்பைப்பற்றிக் கண்ணன் வாய்மொழியாகத் தெரிந்துகொண்ட கர்ணன் சொன்ன மறுமொழியில் ஒரு பகுதியை மட்டும் அனைவரும் மேற்கோள் காட்டுகிறார்கள்; அனைத்துப் பதிப்பிலும் இது இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பகுதியைக் கும்பகோணம் பதிப்பில் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள்: "ஓ! கிருஷ்ணரே! நீர் நினைப்பதுபோல எல்லாவற்றையுமே அறிகிறேன். தர்மசாஸ்திரங்களின் நிச்சயத்தினால் தர்மமாகப் பாண்டுவின் புத்திரனே ஆகிறேன். ஓ! ஜனார்தனரே! கன்னிகையானவள் ஸூரியனிடமிருந்தும் என்னைக் கர்ப்பத்தில் தரித்தாள். அவள், பிறந்தவனான என்னை ஸூரியனுடைய சொல்லாலேயே விட்டுவிட்டாள். ஓ! கோவிந்தரே! அவ்விதம் பிறந்த நான் தர்மத்தினாலே பாண்டுவுக்கு புத்திரனாகிறேன்." (மேற்கூறிய பர்வங்கள், அத்: 141; பக்: 465). கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் இது: I know all that thou hast said unto me. Morally, I am the son of Pandu, as also in consequence of the injunctions of the scriptures, as thou, O Krishna, thinkest. My mother, while a maiden, bore me in her womb, O Janardana, through her connection with Surya. And at the command of Surya himself, she abandoned me as soon as I was born. Even thus, O Krishna, I came into the world. Morally, therefore, I am the son of Pandu. (www.sacred-texts.com/hin/m05/m05141.htm).

கர்ணனை நதியில் விடுவது என்று குந்தி எடுத்த முடிவு, சூரியனுடைய சொற்படி என்ற மிகமுக்கியமான குறிப்பு - கர்ணன் வாய்மொழியாகவே (கண்ணனிடம் அறிந்துகொண்ட விதத்தின்படி) - இங்கே கிடைக்கிறது. இதன்பிறகுதான் வளர்ப்புத் தந்தையான அதிரதன் கண்டெடுத்து ராதையினிடத்தில் கொடுத்தது, ராதைக்கு அவனிடத்தில் உண்டான அன்பினால் பால் பெருகியது முதலான நாம் அறிந்த மற்ற மொழிகளைக் கர்ணன் சொல்கிறான். இங்கே, "தர்மத்தின்படி நான் பாண்டுவின் புத்திரன் என்பதை உணர்கிறேன்" என்று கர்ணன் சொல்வது கவனத்தில் நிறுத்தவேண்டிய கருத்து.

இதன்பிறகு, கர்ணன் தான் ஏன் பாண்டவர் பக்கத்துக்கு வரமுடியாதவனாக இருக்கிறான் என்பதை விளக்கும்போது, "என்னை முறைப்படி வளர்த்தவர்கள் அதிரதனும் ராதையுமே. அவர்களுக்கே நான் பிண்டம் அளிப்பதற்கான (இறுதிக் கிரியைகளைச் செய்யும்) கடமையுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு வசுஷேணன் என்று பெயர் வைத்து, முறைப்படியான மற்ற கருமங்களைச் செய்வித்து, ஸூத குலத்திலிருந்தே எனக்கு மனைவிமார்களை விவாகம் செய்வித்து, எனக்கு அவர்களிடமிருந்து மக்களும் பேரன் பெயர்த்திகளும் உண்டாகியிருக்கிறார்கள். என் முதல்கடமை அவர்களுக்கு உரியதாகிறது. அதற்குமேல், ஓ! கிருஷ்ணரே! துர்யோதனனை அடுத்துத் திருதிராஷ்டிரருடைய அரண்மனையில் நான் பதின்மூன்று வருடங்கள் சிறிதும் தடையில்லாமல் ராஜ்யத்தை அனுபவித்தேன்...... துர்யோதனன் என்னையடுத்து ஆயுதங்களில் முயற்சியையும் பாண்டவர்களுடன் கலகத்தையும் செய்தான். ஓ! அச்சுதரே! ஆகையால் யுத்தத்தில் இரண்டு தேராளிகள் ஒருவரையொருவர் எதிர்க்கின்ற த்வைரதம் என்னும் போரில் என்னை அர்ஜுனனுக்கு முக்கியமான பகையாகி எதிர்த்துச் செல்லவேண்டியவனாக வரித்தான்" (மேற்படி இடம்).

"இத்தனை நடந்ததற்குப் பிறகு துரியோதனனுக்கு வஞ்சகம் செய்வதில் எனக்குச் சம்மதமில்லை. அவனோ என்னை நம்பியே இந்த யுத்த முயற்சியில் இறங்கியிருக்கிறான். அர்ச்சுனனோடு நடக்கவிருக்கும் யுத்தத்தில் அவனை எதிர்ப்பதற்காகவே என்னை அமர்த்தியிருக்கிறான். இந்தச் சமயத்தில் அவனைக் கைவிட்டுவிட முடியாது. அதற்கும் மேலாக ஒன்று சொல்கிறேன் கண்ணா. இந்தச் சமயத்தில் நான் அணிமாறுவது எனக்கு மட்டுமல்லாமல் அர்ச்சுனனுக்கும் சமமான அவமானமாகும். அவனை அவமானப்படுத்த வேண்டாம். ஆகவே நான் அணி மாறவில்லை; துரியோதனன் பக்கத்திலேயே நின்று போரிட விரும்புகிறேன்" என்று கர்ணன் சொன்னது நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே. இதற்குப்பிறகு அவன் சொல்வதில் ஒரு பகுதி பல பதிப்புகளில் விடுபட்டிருக்கிறது. அதையும் பாருங்கள்:
"ஓ மதுஸூதனரே! இந்த விஷயத்தில் ஆலோசனையை மறைவாக வைத்துக்கொள்ளக் கடவீர். ஓ! யாதவநந்தனரே! இவை எல்லாவற்றையுமே நன்மையாக நினைக்கிறேன். தர்ம புத்தியுள்ளவனும், இந்திரியங்களை அடக்கியவனும் அரசனுமான அந்த யுதிஷ்டிரன், என்னைக் குந்தியினுடைய முதலில் உண்டான புத்திரனாக அறிவானானால், ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஓ மதுஸூதனரே! பகைவரை அடக்குபவரே! நான் பெரிதும் செழித்ததுமான அந்த ராஜ்யத்தை அடைந்தாலும் துர்யோதனனுக்கே கொடுப்பேன். எவனுக்கு ஹ்ருஷீகேசர் நாதரோ, எவனுக்கு அர்ஜுனன் போர்வீரனோ, தர்மாத்மாவான அந்த யுதிஷ்டிரனே நிலைபெற்ற அரசனாக இருக்க வேண்டும்." (மேற்படி அத்: 141; பக்: 467).

அரசோ உண்மையில் யுதிஷ்டிரனுக்கு உரியது. நான் குந்தியின் மூத்தமகன் என்று அறிந்துகொண்டால், தர்மபுத்திரன் அரசை ஏற்கமாட்டான், என்னிடத்தில் கொடுத்துவிடுவான். நானோ, அதை துரியோதனிடத்தில்தான் கொடுப்பேன். ஆட்சியில் என்றென்றும் நிலைத்து நீடிக்கவேண்டியவன் யுதிஷ்டிரனே. ஆகவே, இந்த உண்மை நமக்குள்ளேயே இருக்கட்டும். பாண்டவர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியக்கூடாது என்று கர்ணன் கண்ணனிடம் வாக்குறுதி வாங்கிக்கொள்கிறான். இதற்குப்பிறகு, நடக்கவிருக்கிற போரை ஒரு மிகப்பெரிய வேள்வியாக உருவகித்து, அந்த வேள்வியில் அர்ச்சுனனுக்கு என்ன பங்கு, கண்ணனுக்கு என்ன பங்கு, பீமனுக்கு என்ன பங்கு என்றெல்லாம் விரிவாகப் பேசுகிறான். நடக்கவிருக்கும் யுத்தமாகிய வேள்வியில் என்னென்ன கோரங்களெல்லாம் நிகழவிருக்கின்றன என்று விவரிக்கிறான். கடைசியில் "நான் துர்யோதனுடைய பிரியத்திற்காகப் பாண்டவர்களை நோக்கிக் கடுமையான வார்த்தைகளைச் சொன்னதாகிய கெட்ட காரியத்தினால் தபிக்கிறேன்" என்று வருந்துகிறான்.

இந்தக் காரணத்தால்தான் கிருஷ்ணனை அடுத்துக் குந்தி வந்து தானே அவனுடைய தாய் என்று அறிவித்த சமயத்தில், ஏதுமறியாதவன் எப்படி நடந்துகொள்வானோ அப்படி, சந்தேகத்தோடு அவளைப் பார்க்கிறான்; சூரியனே குந்திக்குச் சாட்சி சொல்கிறான்... இப்படித் தொடர்கிறது. அரசு யுதிஷ்டிரனுக்கே உரியது என்பதற்கு இதற்குமேல் எந்தச் சான்றும் தேவையில்லை. கர்ணனும் இந்த உண்மையை அறிந்தே இருந்திருக்கின்றான்.

கர்ணன் கொடுக்கும் அதிர்ச்சிகள் இத்துடன் நிற்கவில்லை. உலகத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகிறவர்கள், துரியோதனன், துச்சாதனன், சகுனி, நான் ஆகிய நால்வருமே என்று அறிவித்து, மேலும் சிலவற்றைச் சொல்கிறான். அவற்றையும் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline