Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
சூசகமாகச் சொல்லுங்கள், அறிவுரை வேண்டாம்
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஜூன் 2016|
Share:
அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய அருமையான சிநேகிதியின் சார்பாக எழுதுகிறேன். அவள் என் co-worker. தமிழ்நாட்டைச் சேர்ந்தவளில்லை. கணவர் தமிழர். மூன்று வருடங்களுக்கு முன்னால் என் நிறுவனத்தில் வேலைபார்க்க வந்தாள். நான் அவளுடைய சூபர்வைசர். பார்த்தவுடனேயே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. பயமும், தயக்கமும் நிறைந்த பெரியகண்கள். மென்மையான குரல். கடமை என்பதைத் தாண்டி அவளுக்கு நிறையக் கற்றுக்கொடுத்தேன். கிரீன் கார்டு கிடைக்காததால், அமெரிக்காவுக்கு வந்து, இரண்டு வருடம் வீட்டில் இருந்தாள். பையனுக்கு ஐந்து வயது என்று நினைக்கிறேன். பெண்ணுக்கு ஒரு வயது. கணவருக்கு ஐ.டி. நிறுவனத்தில் வேலை. முதல் சில மாதங்களுக்கு நான் என்ன ஃப்ரெண்ட்லி ஆக இருந்தாலும், என்னை ஒரு பாஸ் ஆகத்தான் பார்த்தாள். மரியாதை, பயத்துடன் இருந்தாள். அந்தக் கண்களில் இருந்த தேக்கம் என்னவென்று தெரியவில்லை. அவள் பெண்ணின் பிறந்தநாளுக்குக் கூப்பிட்டிருந்தாள். போனோம் (எனக்கு இரண்டு பையன்கள். ஒருவனுக்கு 9 வயது. அடுத்தவனுக்கு 7). அங்கேயும், அவள் கணவரிடம் கொஞ்சம் பயந்துகொண்டு பேசியது போலத்தான் தோன்றியது. அவள் இயல்பே அப்படி இருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

போனமாதம் அவளுக்குப் பதவிஉயர்வு கொடுக்க நான் முயற்சிசெய்தேன். அவளுடைய தயக்கம், பயம் அதற்குத் தடையாக இருந்து, அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒருநாள் அவளைத் தனியாக ஒரு ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்று கண்டிப்பாகப் பேசினேன். எப்படி, பிறர் உதவிசெய்தாலும் அவள் முன்னுக்கு வரமுடியாமல் இருக்கப் போகிறாள் என்பதை எடுத்துச் சொன்னேன். முதலில் மிகவும் சோகமாகக் கண்ணீர் விட்டாள். அப்பப்பா, அவளிடமிருந்து விஷயத்தை வரவழைப்பதற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது. அவள் கதையைக் கேட்டபின் அவளை அப்படியே கட்டிக்கொண்டேன். எத்தனை துன்பங்களைச் சந்தித்திருக்கிறாள்!

ஐந்து வயதில் அப்பா, அம்மா இருவரும் ஒரு விபத்தில் போய்விட்டார்கள். சித்தப்பா, சித்தி வீட்டில் வளர்ந்தாள். சித்தப்பா நல்லவர். சித்தி ஓ.கே. அவர்களுக்கும் பணக்கஷ்டம். அதனால் அவர்களின் குழந்தைகள் போட்ட ஆடைகள்தான் இவளுக்கு வரும். 12 வயதில் வயதுக்குவந்தாள். மிகவும் அழகாக இருப்பாள். சித்தப்பா பையன் இவளையே சுற்றிச்சுற்றி வந்தான். சித்தி பயந்துபோய் வேறு உறவினர் வீட்டுக்கு இவளை அனுப்பிவிட்டாள். படிப்பு கெட்டது. இவளுக்கிருந்த பணத்தை வைத்து ஒரு ஹாஸ்டலில் சேர்த்து மறுபடியும் படிக்க வைத்தார் சித்தப்பா. BSc படிக்கும்போதும் ஆண்கள் தொந்தரவு. முடித்தவுடன், வந்த வரனைப் பார்த்து கல்யாணம் செய்துவிட்டார்கள். அந்தப் பையனுக்கு 'heart-condition' என்று சொல்லவில்லை. அவன் இரண்டு வருடம்தான் உயிரோடு இருந்தான். கையில் ஆறுமாதக் குழந்தை. அவன் அப்பா, அம்மா, குழந்தையைக் காப்பாற்ற பெங்களூரில் ஒரு வேலையை எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் இப்போதுள்ள கணவர் இங்கிருந்து, அவள் நிறுவனத்திற்குத் தொழில் விஷயமாகச் சென்றிருக்கிறார். இவள் அழகில் மயங்கி எத்தனையோ உத்தரவாதங்கள் கொடுத்து சித்தப்பா, சித்தி, மாமனார், மாமியார் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டு இங்கே அழைத்துவந்தார். முதல் ஐந்து வருடங்கள் பையனிடம் மிகவும் அன்பாக இருந்தாராம். அப்புறம் இந்தப் பெண் பிறந்தபிறகு அவன்மேல் ஒட்டுதல் குறைந்து போய்விட்டதாம். பையன் ஆசையாக 'அப்பா' என்று கட்டிக்கொள்ளும்போது, அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவளுக்கு மிகவும் பயமாக இருக்கிறது அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறதோ என்று. அவனுக்கு இன்றும் அவர் தன் சொந்த அப்பா இல்லை என்று தெரியாதாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவளுடைய முதல் கணவருக்கும், இந்தக் கணவருக்கும் ஒரே பெயர். இவளுக்கு வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே இருந்ததால், யாரையும் தட்டிக்கேட்க தயக்கமாகவும், பயமாகவும் இருக்கிறது.

அவளிடம் பேசி முடித்தபின், எனக்கு ஏதோ நாவலைப் படித்து முடித்த உணர்ச்சிதான் இருந்தது. அவளுக்கு உதவிசெய்ய வேண்டும். அவள் பயம் நியாயமானது. இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் கணவர் அந்தப் பையன்மீது, மிகச்சிறிது 'பாராமுகமாக' இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. கேக் வெட்டும்போது, தன் பெண்ணை பெருமையாகத் தூக்கிக்கொண்டு நின்றார். பையனைத் தேடவில்லை. இவள்தான் தேடிப்பிடித்து நிறுத்திக் குடும்ப ஃபோட்டோ எடுத்துக்கொண்டாள்.

அந்தக் கணவரிடம் எப்படிப் பேசுவது, அழகுக்காக இவளைத் திருமணம் செய்துகொண்டு, அந்தக் குழந்தையைப் பாசமாகப் பார்க்கவில்லை என்றால் எப்படி அந்தக் குடும்பம் இணைந்து இருக்கும்? உங்கள் கருத்து தேவை.

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே,

மிகவும் சங்கடமான நிலை. பணத்தைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால், பாசத்தை எப்படிக் கட்டாயப்படுத்துவது? அந்தப் பாசம் உள்ளத்தில் தானாக ஊறவேண்டும். நம்மில் நிறையப்பேர், நம் ரத்தம், நம் சொந்தம், நம் சொத்து என்று நினைத்தால்தான் பாசத்தை வளர்த்துக் கொள்கிறோம். இது மிகவும் துரதிருஷ்டமான நிலை. அந்தத் தோழியின் பயம் நியாயமானதுதான். இதுபோல நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற தாய்களுக்கு என்னால் ஆதரவு கொடுக்க முடிந்ததே தவிர, அந்தத் தந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. நான் செய்திருந்தால் இருக்கும் உறவும் அறுந்து போயிருக்கும். என்னால் முடிந்தவரை, அவர்கள் வீட்டில் அந்தப் பையன் இருந்தால் அந்தத் தந்தையின் எதிரில் மிகவும் பாராட்டிவிட்டு, அந்தத் தந்தையையும் பாராட்டிவிட்டு வருவேன். இப்போது அந்தப் பையன் பெரியவனாகி தனக்கென்று குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டான். அந்தத் தாய்க்கும் இது பழகிப்போய், வருத்தப்படுவதை மறந்துவிட்டாள்.

உங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். முடிந்தால் அந்தக் குழந்தையை வரவழைத்து இவர்களுக்குள் ஒரு bonding ஏற்படுத்துங்கள். அவர்கள் வீட்டுக்குப் போகும் வாய்ப்புக்களில் எல்லாம், அந்தத் தந்தையின் பராமரிப்பில் எப்படி இந்தப் பையன் அருமையாக வளருவான் என்பதை சூசகமாகச் சொல்லுங்கள். அட்வைஸ் என்பதே இருக்கக்கூடாது., பெண் பிறந்த மோகத்தில் அந்தத் தந்தை சிறிது அங்கே பாசத்தை அதிகமாகக் காட்டலாம். அப்புறம் திரும்பி இந்தப் பையனை ஆசையுடன் கவனித்துக்கொள்ளலாம். எதுவுமே இப்போது சொல்ல முடியாது. உங்கள் தோழியின் வருத்தத்துக்கு வடிகாலாக இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்
Share: 
© Copyright 2020 Tamilonline