Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
துஷ்யந்த் ஸ்ரீதர்
சவிதா வைத்யநாதன்
- ரிஷி குமார், மீனாட்சி கணபதி|ஜனவரி 2016|
Share:
கூப்பர்டினோ நகரத்தின் புதிய துணைமேயர் திருமதி. சவிதா வைத்யநாதன். 2014ல் கூப்பர்டினோ நகர்மன்றக் கவுன்சில் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதல் இந்திய அமெரிக்கப் பெண், 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கூப்பர்டினோ ரோட்டரி சங்கத்தின் தலைவர் எனப் பல பெருமைகளைக் கொண்டவர் சவிதா. சமூகசேவையில் ஈடுபாடு கொண்ட இவர், Board of West Valley Community Services, DeAnza College commission ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். Cupertino Rotary Global Elegance, Cupertino Diwali, Cupertino Fall Festival, The Lunar Day Parade போன்ற நிகழ்வுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். DECA இவருக்கு சிலிக்கான் வேல்லி கம்யூனிட்டி லீடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. புதுடில்லியின் செயின்ட் ஸ்டீவன்ஸ் கல்லூரியில் கணிதத்தில் B.A.(Hons), லக்னோ பல்கலைகழகத்தின் B.Ed., சான் ஹோசே பல்கலைக்கழகத்தின் MBA ஆகியவை இவரது கல்வித்தகுதிகள். சமூகசேவையில் ஈடுபடுமுன், உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர், வங்கி அதிகாரி, பெண் தொழில்முனைவோர் மைய அதிகாரி ஆகிய பொறுப்புகள் வகித்துள்ளார். வாருங்கள் அவரோடு உரையாடலாம்....

தென்றல்: கூப்பர்டினோ நகரத் துணைமேயர் பதவிக்கு தேர்வானமைக்கு வாழ்த்துக்கள். டிசம்பர் 1 அன்று பதவி ஏற்றபொழுது எப்படி உணர்ந்தீர்கள்?
சவிதா: நன்றி! சான்ட க்ளாரா கவுன்டியின் D.A. எனக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது ஏதோ கனவுலக நிகழ்வுபோல் இருந்தது. கூப்பர்டினோ மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்துத் தேர்ந்தெடுத்தது, சக நகர்மன்ற உறுப்பினர்கள் இந்தப் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தது இரண்டையும் நான் பெரிய கௌரவமாக நினைக்கிறேன். பதவி ஏற்றபொழுது, இதிலுள்ள பொறுப்புகள், அரங்கிலிருந்த என் குடும்பம், நண்பர்கள், மற்றும் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த என் நலம்விரும்பிகள் ஆகியோர் என் மனதில் நிறைந்திருந்தனர். எனது தேர்வு இங்குள்ள இந்திய அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. புலம்பெயர்ந்த ஒரு சமூகம் முதலில் காலூன்ற முயற்சிக்கும், பின் பொதுவாழ்க்கையில் ஈடுபடும்.கே: நீங்கள் கூப்பர்டினோவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறீர்கள். இந்த நகரத்தின் 60,000 பேர்களில், 16,000 பேர் சீன அமெரிக்கர்கள், 13,000 இந்திய அமெரிக்கர்கள் என வளர்ந்துள்ளது. இந்தத் தேர்தலில் இனம் ஒரு பொருட்டாக இருந்ததா?
ப: கூப்பர்டினோ சமுதாயம், ஒருவரது நிறம், இனம் ஆகியவற்றைவிட அவர்களது திறமை மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றை அதிகம் மதிக்கிறது. நான் தேர்ந்தெடுக்கப்பட இதுதான் காரணம் என நினைக்கிறேன். இந்திய அமெரிக்கர்களுக்கு தங்களில் ஒருவர் போட்டியிடுவது பெருமைக்குரிய விஷயமாக இருந்தது உண்மைதான். இது அவர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்தது. வாக்காளர் சந்திப்புகளில், இந்திய அமெரிக்கர்கள் உட்பட எல்லோருமே, முக்கியப் பிரச்சனைகள் பற்றி தீவிரமாகப் பேசினர். ஓட்டுகள் கிடைக்கவோ, கிடைக்காமல் போகவோ எனது இனம் ஒரு காரணம் எனத் தோன்றவில்லை. இந்திய அமெரிக்கர்கள், குறிப்பாக இளைஞர்கள், என்னைத் தயக்கமில்லாமல் அணுக அது உதவியது உண்மைதான். தனிப்பட்ட மற்றும் பொதுப் பிரச்சனைகள் பற்றி என்னுடன் அவர்கள் பேசினர். அவர்களில் பெரும்பாலோர் இங்கு வளர்ந்தவர்களல்லர். இந்திய அரசியலைப் போலத்தான் இங்கும் இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. என்னால் அவர்களுக்கு உள்ளூர் அரசியல், நகர்மன்ற உறுப்பினரது பொறுப்பு இவற்றை விளக்கமுடிந்தது.

கே: தேர்தல் பிராசார அனுபவம் எப்படி இருந்தது? கூப்பர்டினோவை முன்னிறுத்தி ரோ கன்னா காங்கிரஸுக்குப் போட்டியிட்டார். அவருடன் இணைந்து செயல்பட்டது உதவியதா? இந்திய அமெரிக்கர்கள் பொது இலக்கிற்காக இணைந்து வேலை செய்வது எவ்வளவு முக்கியம்?
ப: ஒரு பெரிய அலை எழும்போது எல்லாப் படகுகளையும் அலைக்கழிக்கும். அதுபோல் ரோ கன்னாவின் பிரசாரம் எல்லா உள்ளூர்ப் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அதிபர் தேர்தல் வருடமல்ல என்றபோதும் நிறையப்பேர் தேர்தலைப்பற்றி பேசினார்கள். தேர்தலில் பங்கேற்றனர்.

நான் மிகவும் தாமதமாகத்தான் போட்டியிட முடிவுசெய்தேன். என் பிரசாரக் குழுவில், என் கணவர் தலைமையில் நிறைய நண்பர்கள் வேலைசெய்தனர். அதில் ரோ கன்னாவின் அறிவுரை மிகவும் உதவியது. அதேசமயம் நகர்மன்றக்குழு தேர்தலின்போது நான் உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில் கவனம் செலுத்தி, காங்கிரஸ் தேர்தலிலிருந்து என்னை வேறுபடுத்திக் காட்ட வேண்டியிருந்தது. "Vote for Savita" என்ற வாசகம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்திருந்தேன். ஆனாலும், வாக்காளர்களின் கவனத்தைக் கவர்வதும், நானும் ஒரு போட்டியாளர், ரோ கன்னாவின் குழுவில் உள்ள தன்னார்வத் தொண்டரல்ல என விளக்குவதும் கடினமாகத்தான் இருந்தது. எனக்கு உதவிய இளந்தொண்டர்களும் இதே சவாலை எதிர்கொண்டனர். நாங்கள் ஒவ்வொரு பிரச்சனையையும், தேசிய-உள்ளூர் தேர்தல்களுக்கிடையேயான வித்தியாசங்களைப் பற்றி விளக்கிச்சொல்லும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம்.கே: நீங்கள் கூப்பர்டினோ ரோட்டரி சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்துள்ளீர்கள்? அத்தனை பெரிய பதவியை எப்படி அடைந்தீர்கள்? அது நகர்மன்றத் தேர்தலில் உதவியதா?
ப: "கர்மண்யேவ அதிகாரஸ்தே மா ஃபலேஷூ கதாசன| மா கர்மஃபலஹேதுர்பூ: மா தே ஸங்கோsஸ்த்வகர்மணி||" என்ற பகவத்கீதை ஸ்லோகம் என்னை வழிநடத்துகிறது. "வேலை செய்யமட்டுமே உனக்கு உரிமை உண்டு, அதன் பலன்களில் இல்லை. உனது கர்மத்தின் பலன்களுக்கு நீயே காரணம் என ஒருபோதும் கருதாதே. ஆனால் உன் கடமைகளைச் செய்யாமலும் இருந்துவிடாதே" என்பது இதன் பொருள்.

நான் நகரத்திலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் பல வருடங்களாகத் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறேன். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இது எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்ற எண்ணம்தான் இருந்ததே தவிர, ஒரு பெரிய இலக்கை அடைய உதவும் வழி என்ற எண்ணம் இருந்ததில்லை. கூப்பர்டினோ ரோட்டரி சங்கம் "Service above Self" என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் உன்னத உறுப்பினர்களைக் கொண்டது. எதைச்செய்தாலும் உடல், மன ஈடுபாட்டுடன் செய்பவர்கள். இப்படியொரு குழுவின் தலைமை கிடைத்தது பெரிய கௌரவம். வட கலிஃபோர்னியாவின் 100க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்களில், ஓர் இந்திய அமெரிக்கப்பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவே முதல்முறை. இது கூப்பர்டினோ ரோட்டரி சங்கம் எல்லா இன, பால் மக்களையும் இனங்கண்டு பேணும் நன்னோக்குக் கொண்டது என்பதைக் காட்டுகிறது. இதுவொரு முக்கியமான மைல்கல். ஆனால் முற்றிலும் கூட்டுமுயற்சி. சங்க உறுப்பினர்கள் என் பணிகளை அங்கீகரித்து, என்னை நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ஊக்குவித்தனர். அவர்களுடைய பின்பலமும், பல்வேறு சங்கங்களின் ஒத்துழைப்பும் நான் நகர்மன்றத் தேர்தலில் வெற்றிபெற உதவியது.
கே: நீங்கள் யாரை முன்மாதிரியாகக் கருதுகிறீர்கள்?
ப: நான் தொடர்ந்து மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். உலக அளவிலும், நமது சமூகத்திலும் நிறையப்பேர் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல்சாரா சிலரிடமிருந்தும் நான் வெற்றிக்குத் தேவையான வாழ்வியல் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். யார் பெயரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற பயத்தால் நான் ஒருவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அவர்களைப் பின்பற்றி என்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

கே: ஒரு சிறந்த தலைவருக்குத் தேவையான முக்கிய குணாதிசயங்கள் என்னென்ன?
ப: மக்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பெரியதாக சாதிக்க வைப்பதுதான் தலைமைப் பண்பு. ஒவ்வொருவரும் தனித்தனியே எதைச் சாதிப்பார்களோ, சேர்ந்து சாதிப்பது அதைவிட அதிகமாக இருக்கவேண்டும். ஒரு தலைவர் தன்னால் எது முடியும், எது முடியாது என அறிந்திருக்க வேண்டும். உங்கள் பலம் எதில் உள்ளதோ அதை இட்டு நிரப்புபவர்களை உங்கள் அணியில் இணைக்கத் தயாராக இருக்கவேண்டும். தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது. ஒவ்வோர் அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்டு அடுத்தமுறை சிறப்பாகச் செய்ய முயலவேண்டும்.

எதிலும் பேரார்வம் வந்துவிட்டால் எல்லோரும் தமக்கான தனிப்பட்ட வழிமுறையைக் கண்டறிவார்கள். நான் நிறைய இளைஞர் மற்றும் முதியோர் அமைப்புக் கூட்டங்களுக்குச் செல்கிறேன். இளைஞர்களுக்குச் சிறிது உதவி தேவைப்படுகிறது. முதியவர்களுக்கு அவர்கள் கூறுவதைக் கேட்க யாரேனும் தேவைப்படுகிறார்கள்.கே: இந்திய அமெரிக்கர்கள் அரசியலில் வெற்றிபெற உங்கள் அறிவுரை என்ன? குறிப்பாக உங்களை ஒரு முன்மாதிரியாகப் பார்த்து, நாளை தானும் பெரிய பதவிக்குப் போட்டியிடக் கனவுகாணும் இளம்பெண்களுக்கு.
ப: இளையோருக்கு, குறிப்பாக பெண்களுக்கு, என்னுடைய அறிவுரை இதுதான். உங்களுக்கு எதில் அதீத ஈடுபாடு உள்ளது என்பதைக் கண்டறியச் சிறிது நேரம் செலவிடுங்கள். அதை வாழ்வின் ஒரே குறிக்கோளாகக் கொள்ளுங்கள். அதுவே உங்களை வழிநடத்தட்டும். நீங்கள் வெற்றியும், மகிழ்ச்சியும் பெறுவீர்கள். முடியாது எனச் சொல்பவர்களை உங்கள் பாதையில் குறுக்கிட விடாதீர்கள்.

திரு. ரிஷி குமார் சாரடோகா நகர்மன்றக் கவுன்சில் உறுப்பினர், சமூகசேவகர். இவரது 'bike safety workshop' குழந்தைகள் பள்ளிக்கு சைக்கிளில் பாதுகாப்பாகச் செல்ல உதவுகிறது; வறண்டகாலப் பயிர்கள் குறித்துக் கருத்தரங்குகள் நடத்துகிறார்; ஆவணப்படங்கள் திரையிடுகிறார்; திறன்தேடல் போட்டிகள் நடத்துகிறார்; தீபாவளி, நவராத்திரி டாண்டியா விழாக்கள் நடத்துகிறார்; தியானம், யோகம், ஹிந்தி, பாலகோகுலம் எனப் பல இலவச ஞாயிறு வகுப்புகள் நடத்துகிறார். உயர் தொழில்நுட்ப மேலதிகாரியான ரிஷி, விரிகுடாப்பகுதி அமெரிக்க ஜனநாயகக் கிளப்பின் (www.baiadc.org) தலைவரும் ஆவார். அவரது வலைமனை: www.RishiKumar.com

நேர்காணல்: ரிஷி குமார், சாரடோகா, கலிஃபோர்னியா
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


என்னைக் கவர்ந்த மேற்கோள்கள்
"உலகில் நீ காணவிரும்பும் மாற்றமாக நீயே இரு"
- மஹாத்மா காந்தி

"நீ சொன்னதை மறந்துவிடுவார்கள், நீ செய்ததை மறந்துவிடுவார்கள். ஆனால் நீ அவர்களை எப்படி உணரவைத்தாய் என்பதை மறக்கவே மாட்டார்கள்"
- மாயா ஏஞ்சலூ

"உனது எண்ணங்களைக் கவனி. அவையே வார்த்தைகளாகும். உனது வார்த்தைகளைக் கவனி, அவையே செயல்களாகும். உனது செயல்களைக் கவனி அவையே பழக்கமாகும். உனது பழக்கங்களைக் கவனி, அவையே உனது நடத்தையாகும். உனது நடத்தையைக் கவனி அதுவே உனது விதியாகும்."
- மார்கெரெட் தாட்சர்

*****


நாம் செய்யவேண்டியது என்ன?
இந்திய அமெரிக்கர்கள் இணந்து செயல்படுவது அவசியம். இங்கு நாம் வெற்றிகரமான சிறுபான்மையினர். அதை நாம் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவ ஒன்றிணைவதைப் போல் இங்கும் உதவி முயற்சிகளில் நிறைய ஈடுபடவேண்டும். இந்திய அமெரிக்கர்கள் இங்கு மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வீடற்றோர் காப்பகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் போன்றவற்றை அமைக்க நிதி உதவவேண்டும். இந்நாடு நம்மை வரவேற்று, நமக்கு வெற்றி வாய்ப்புகளைத் தந்துள்ளது. நம்மையடுத்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் அதே வாய்ப்புகளைப் பெறச்செய்து, அவர்களது கனவுகளை நனவாக்குவது நமது கடமை. இதை நமக்காகவும், நமது சந்ததியினருக்காகவும் செய்வது அவசியம். வெற்றிகரமான சமூகங்களே ஒரு தேசத்தை பலமடையச் செய்கின்றன.

- சவிதா வைத்யநாதன்

*****


அரசியலும் நோக்கமும்
அரசியலில் நுழைய விரும்புவோருக்கு சமூகசேவையே முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். ஓர் அரசியல் தலைவரின் நோக்கானது இனம், பால், மதம், தனிவிருப்பம் இவற்றையெல்லாம் கடந்ததாக இருக்கவேண்டும். நீங்கள் ஒரு சமுதாயம் முழுவதற்குமாகச் சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள். இனம், மதம், பால் போன்ற வேற்றுமைகள் உங்களை பலவீனப்படுத்துவதோடு செயலிழக்கவும் செய்துவிடும். ஒன்றுபட்டால் பலமும் வெற்றியும் தேடிவரும்.

- சவிதா வைத்யநாதன்
More

துஷ்யந்த் ஸ்ரீதர்
Share: 
© Copyright 2020 Tamilonline