| மறுபக்கம் 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இனமும் விஷமும் |    |  
	                                                        | - உமா ![]() | ![]() அக்டோபர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  "கமலா அடுத்த வாரம் என் நண்பன் சொன்ன வரன் விஷயமா ஒருவர்  நம்மை பார்க்க வரதாச் சொல்லி இருக்கார். அதுக்குள்ள நீ அவளைத் தயார் பண்ணி வை' என்று சொன்னபடி ராமன் அலுவலகத்துக்குக் கிளம்பினார். 
 'இங்க பாருங்க, பிரியாவை உங்களுக்குத் தெரியாதா? நான் சொன்னால் எரிந்து விழுவாள். நீங்களே அவகிட்ட பேசுங்க' என்றாள் கமலா.
 
 ராமன் அவள் சொன்ன பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, "பார்க்கலாம்; எல்லாம் ஈச்வரன் செயல். பயப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரியா உடனே வெளியே வந்து, "இங்க பாருங்க. இது என் விஷயம். நான் தீர்மானிக்க வேண்டியது. என்னை யாரும் கன்வின்ஸ் பண்ண முடியாது" என்றபடி வேகமாக வெளியே சென்றாள்.
 
 கமலா ராமனிடம் "பார்த்தீங்களா? இந்த ஆட்டதுக்கு நான் வரல. நீங்களாச்சு, உங்க பெண்ணாச்சு" என்று கூறியபடி குக்கரின் விசில் சத்தத்திற்கு விடை அளிக்கச் சமையலறைக்குச் சென்றாள்.
 
 ஆனாலும் பிரியா சொன்னதை அசை போட்டவாறே, பிஞ்சு வெண்டைக்காயைப் பொரியலுக்கு நறுக்க ஆரம்பித்ததவள், 'ஆ...' என்று அலறியபடிக் கத்தியைக் கீழே போட்டாள். கத்தி பதம் பார்த்த விரலில் இருந்து இரத்தம் பீறிட்டது. அவள் அலறலைக் கேட்ட ராமன், "ஏன் இப்படிக் கத்தறே?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார். விரலில் இரத்தத்தைப் பார்த்தவுடன் கொஞ்சம் சுருதியைக் குறைத்து "ஏம்மா, பார்த்து நறுக்கக் கூடாதா? எங்கே நினைவு?" என்றவர் அவள் முகத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றார்.
 
 கமலாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்து "எனக்கு சரண்யா நினப்பு வந்துட்டுது' என்றபடி குழாயைத் திறந்து, இரத்தம் வந்து கொண்டிருந்த விரலைத் தண்ணீரில் காட்டினாள். சற்றுநேரம் சென்றபின் வாணலியில் வெண்டைக்காயை வதக்கலானாள். எண்ணங்கள் பின் நோக்கி நகர்ந்தன...
 
 சரண்யாவும், பிரியாவும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தனர். சரண்யா திருமணமாகிப் போனதும், வீட்டில் இருந்த சந்தோஷம் குறைய ஆரம்பித்தது. நல்ல வரன், நல்ல குடும்பம், பிக்கல் பிடுங்கல் இல்லை என்று எண்ணித்தான் சரண்யாவை ஆனந்துக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் வண்ணக் கனவுகளுடன் போன சரண்யாவின் கனவு விரைவிலேயே வெளிறிப் போயிற்று.
 
 அந்தக் குடும்பச் சூழ்நிலை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. ஆனந்தின் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி  இருந்தனர். இவள் ஒட்ட நினைத்தால்கூட யாரும் ஒட்டவில்லை. எது, என்ன என்று ஒன்றும் புரியவில்லை. ஆனந்த் எதற்குக் கத்துவான், என்ன கோபம் என்று ஒன்றும் புரியாது. சில நாட்கள் வீட்டுக்கு வரமாட்டான். மாமியார் மாமனாரோ இவள்  இருப்பதையே லட்சியம் பண்ணாமல் அவர்கள் சாப்பிடுவதும், வெளியில் போவதுமாக இருந்தனர்.
 
 ஆனந்த் வீட்டுக்கு வந்தாலும் இவளை வேசி போல்தான் நடத்துவான். எல்லார் முன்னாலும் அவளைக் கேலி செய்வான். சரண்யா ஒருநாள் பொறுமை மீறி மாமியார் மாமனாரிடம் ஆனந்தைப்பற்றிப் பேச, அவர்கள் கொதித்து எழுந்தனர். "நீ ஒன்றும் அவனைப் பற்றிப் பேச வேண்டாம்; அவனுக்கு ஏற்ற பெண் நீ இல்லை. ஏதோ போனால் போகிறது என்று உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டோம். பேசாமல் நீ அவன் சொல்றபடி நடந்தால் உனக்கு நல்லது" என்று கூறி அவள் குடும்பத்தையும் அவதூறாகப் பேசினர். சரண்யாவின் கண்கள் கலங்கின.
 
 இதற்கு மேல் ஒரு படி போனான் ஆனந்த். ஒருநாள் அவளை ஒரு பார்ட்டிக்கு அழைத்துப் போய் தன் பதவி உயர்வுக்காகப் பேசியபடி உயர் அதிகாரிக்குச் சரண்யாவை அறிமுகப்படுத்தினான். அவர் தண்ணியில் மிதந்தபடிச் கொச்சையாக பேசியவாறே அவளை அணைக்க முயற்சி செய்தார். இதை ஆனந்த் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான். அவனது திட்டத்தைப் புரிந்துகொண்ட சரண்யா, அவமானம் தாங்காமல் அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தபின் அப்பாவுக்கும், போலீசுக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டாள்.
 
 வெண்டைக்காய் கருகிய வாசம் வரவே கமலா இவ்வுலகத்திற்கு வந்தாள். இது நடந்து மூணு வருஷம் ஓடிவிட்டது. பிரியாவிற்கும் வயது ஏறிக்கொண்டே போகிறது.
 
 ஆனால் பிரியாவோ அக்காவின் கசந்த வாழ்க்கையை நினைத்து, தனக்குக் கல்யாணமே வேண்டாம், நான் உங்களுடனே இருக்கேன் என்கிறாளே! ஈச்வரா, ஏதாவது ஒரு நல்ல வரன் வந்து அவளுக்குக் கல்யாணம் நடக்கணும். நீதான் அவளைக் காப்பாத்தணும் என்று வேண்டிக் கொண்டாள்.
 
 அந்த நேரத்தில் தொலைபேசி மணி அடித்தது. பிரியாதான் கூப்பிட்டாள். "அம்மா சாயங்காலம் ஆ·பிசில் ஒரு விருந்து இருக்கு. நீ ரெடியா இரு. நான் வந்து அழைத்துப் போகிறேன்" என்று கூறித் தொலைபேசியை வைத்ததும் கமலா டிவியை முடுக்கினாள். அதில் எதையோ பார்த்த படியே தன்னையும் அறியாது தூங்கி விட்டாள். பூக்காரி வந்து குரல் கொடுத்ததும் எழுந்து பூ வாங்கிவிட்டு மணியைப் பார்த்தாள். அடாடா, மணி அஞ்சு ஆகிவிட்டதே என்று கிளம்பத் தயாரானாள்.
 | 
											
												|  | 
											
											
												| பிரியா "அம்மா ரெடியா?" என்று கேட்டபடியே உள்ளே வந்தாள். 
 திறந்த புல் வெளியில் நிறைய விளக்குகள் மின்னின. மெல்லிசை, பலவகை கேம்ஸ், அரட்டை என உற்சாகமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. எல்லோரும் தட்டுக்களை ஏந்தி அதில் விதவிதமான உணவு வகைகளைப் பரப்பி, கேலியும் கிண்டலுமாக அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 
 திடீரென்று 'பாம்பு பாம்பு ' என்று ஒரு அலறல். அருகில் மழைபெய்து தேங்கிக் கொண்டிருந்த இடத்தில் ஒரு பாம்பு. உடனே அனைவரும் அடி, பிடி என்று ஒரே ஓட்டமாக ஓடினர். ஆனால் பிரியா அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
 
 கமலா ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து, 'பிரியா, சீக்கிரம் வா. நாமளும் போகலாம்' என்றாள்.
 
 அவள் "அம்மா.. ஏன் பயப்படறே? அது வெறும் பச்சைப் பாம்புதான். விளக்கு வெளிச்சத்தில் நம்மைப் பார்த்து அது தான் பயப்படுது. இதற்குப் போய் எல்லோரும் இந்த ஆர்ப்பாட்டம் பண்றாங்க. பாம்பில் விஷம் இல்லாத இனமும் இருக்கு" என்றாள்.
 
 கமலாவின் மனதில் ஒரு பொறி தட்டியது.
 
 "ஆமாண்டா கண்ணா. நீ சொல்றதும் சரிதான். பாம்பு இனம் அது. அதனால்தான் எல்லோருக்கும் பயம். அதே போல்தான் மனித இனமும். ஒரு போலிஸ்காரர் தவறு செய்தால் உடனே நமக்கு போலிஸ் மேலேயே நம்பிக்கை போயிடுது. எல்லோரும் இப்படித்தான்னு முடிவு கட்டிடறோம். எல்லாத்துக்கும் காரணம் மனசுதான். மத்தவங்க பயந்தபோது நீ ஏன் பயப்படலே? வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு அனுபவம். அதே அனுபவம் இன்னொருவருக்கு வருவது சற்றுக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல் நாமும் வாழப் பழகிக்கணும், இல்லையா?" என்று கேட்டாள் கமலா.
 
 பிரியா தலையை ஆட்டி "ம்..." என்றபோது யோசனை நிரம்பியிருந்தது.
 
 தன் மகளின் கையைப் பிடித்து நடந்த கமலாவின் மனதில் பிரியாவைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
 
 உமா குமார்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மறுபக்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |