Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
இயற்கை அன்னையின் சீற்றம்
- மணி மு.மணிவண்ணன்|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlarge"இயற்கை அன்னையின் சீற்றம் அவ்வப் போது அமெரிக்கா மேல் பாயும்... ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னரும் அமெரிக்கர்கள் வருமுன் காப்பது எப்படி, வந்ததைச் சமாளிப்பது எப்படி என்று சிந்திக் கிறார்கள்... மக்கள் உயிரைப் பெரிதாக மதிப்பவர்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொரு பேரழிவுக்குப் பின்னரும், இன்னும் ஓர் உயிரைக்கூட இது போன்ற பேரழிவுகளால் இழக்கக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்." இப்படித்தான், ஜனவரி '05 புழைக்கடைப் பக்கத்தில், சுனாமியின் தாக்குதலுக்குப் பின்னால், இந்தியா, தமிழ்நாடு அரசுகளின் மெத்தனமான நிவாரண முயற்சி பற்றி வருந்தி, இந்தியாவுக்கு அமெரிக்காவை முன்னுதாரணமாகக் காட்டி எழுதியிருந்தேன்.

செப்டம்பர் 2005, காட்ரீனா சூறாவளித் தாக்குதலில் நியூ ஆர்லியன்ஸ் மாநகரே மூழ்கி விட்டது; ஏழை மக்கள்அல்லாடினர்; எண்ணற்ற உடல்கள் சாக்கடை நீரில் ஒரு வாரம் மிதந்தன; மருத்துவ மனைகளும், முதியோர் இல்லங்களும் தங்களைக் காத்துக் கொள்ள இயலாத நோயாளிகளைக் கைவிட்டன; மலையென மக்கள் நம்பியிருந்த மாநகர, மாநில, நாட்டு அரசு அமைப்புகள் எல்லாமே தடுமாறின. டிசம்பர் '04 சுனாமியின்போது பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வாடியிருந்த வெளிநாட்டு மக்களுக்கு 48 மணி நேரத்துக்குள் நிவாரணம் அளிக்க முடிந்த அமெரிக்க வல்லரசால் தன் நாட்டுக்குள் அரற்றிக் கொண்டிருந்த தம் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பது உலகையே திகைக்க வைத்தது.

மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், இயற்கையின் தாக்குதல்களுக்கும் உள்ள வேறுபாடு வெகுசிலதான். முன்னதில், குற்றவாளி களைப் பிடிக்கும் வேலை மட்டுமல்லாமல், தொடர்ந்து எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வருமோ என்றும் பார்க்க வேண்டியிருக்கும். ஆனால், பாதிக்கப் பட்டோரைப் பத்திரமான இடத்துக்குக் கொண்டு சேர்ப்பது, அவர் களுக்கு உணவும் உறைவிடமும் அளிப்பது போன்ற அடிப்படை நிவாரண முயற்சி களுக்கு நாம் அரசுகளைத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. காட்ரீனாவின் தாக்குதலும், நியூ ஆர்லியன்ஸ் அணை உடைந்ததும் முன்னெச்சரிக்கையோடு வந்தவை. இதையே கோட்டை விட்ட அரசுகள், எச்சரிக்கையில்லாமல் வரக்கூடிய நிலநடுக்கம், பயங்கரவாதத் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனவோ!

பேரழிவுகளைச் சமாளிப்பது என்பது நம்மில் சிலருக்குப் பழகிப் போன ஒன்று. 1990 சான்டா பார்பரா காட்டுத்தீ, 1992 லாஸ் ஏஞ்சலஸ் கலவரம், 1994 நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம் என்று சில நெருக்கடிகளைச் சமாளித்த நேரடி அனுபவம் எனக்கு உண்டு. சான்டா பார்பரா காட்டுத்தீ மலையில் புகைந்து கொண்டிருக்கும்போது அலட்சியமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், காட்டாறு போல் தீ ஆறாய்ப் பெருகி நகர்ப் புறங்களின் வீடுகளை அலட்சியமாய் விழுங்கி விட்டு, யு.எஸ். 101 பெருஞ்சாலையின் ஆறு ஒழுங்கைகளையும் தாண்டி எங்கள் வீதிப் பக்கத்தை எட்டியபோது அலறியடித்து ஓடத் தொடங்கினோம். "வானத்தைக் கருமையாக்கி, சாம்பல் மழையாய்ப் பொழிய, கொழுந்து விட்டு எரியும் ஆயிரக் கணக்கான நாக்குகளோடு ஆறாய்ப் பெருகி வந்த காட்டுத் தீ" என்று அந்தக் காட்சியை முன்னொரு முறை வர்ணித்திருந்தேன். அப்போதும், காட்டுத்தீ கபளீகரம் செய்த தென்னவோ ஏழை, நடுத்தர மக்கள் குடியிருப்புகளைத்தான். பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடுகள் அடர்ந்திருந்த ஹோப் ரான்ச் பகுதியில் காட்டுத்தீ நுழைய விடாமல் போராடி வெற்றி கண்டனர் தீயணைக்கும் படையினர்.

லாஸ் ஏஞ்சலஸ் கலவரத்தின்போது நகரத்தலைவர் டாம் பிராட்லி, ஆளுநர் பீட் வில்சன், அதிபர் ஜார்ஜ் (அப்பா) புஷ் நகர மக்களை அம்போ என்று விட்டுவிட்டனர். டெமக்ராட் டாம் பிராட்லிக்கும், போலீஸ் துறைக்கும் பிணக்கு. பெய்ரூத் நகர் போல் பற்றி எரிந்த லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வில்சனுக்கும், அப்பா புஷ்ஷ¤க்கும் ஏனோ உடனடியாகத் தோன்றவில்லை. சட்டம், ஒழுங்கு பற்றி மேடைதோறும் பறைசாற்றும் ரிபப்ளிகன் கட்சியினருக்கு, டெமக்ராடிக் லாஸ் ஏஞ்சலஸ், சிறுபான்மையினர் கலவரத்தால் பற்றி எரிந்தது வேடிக்கையாய் இருந்திருக்கும். அப்போதும்கூட, கலவரம் உள்நகரப் பகுதிகளின் எல்லையைத் தாண்டாமல் பார்த்துக் கொண்டனர். சான் ·பெர்னாண்டோ வேல்லியும், லாஸ் ஏஞ்சலஸை அண்டிய செழிப்பான கடற் கரைப் பகுதிகளும் காவல்துறை அரண் வகுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொண்டன. தேசியப் படையின் டாங்கிகள், ஆடி அசைந்து, நான்கு நாட்கள் கழித்து, கலவரம் ஆர்ப்பரித்து அடங்கிய பின்னால் வந்தன.

அரசாங்கங்கள் வேறு என்ன செய்கின்றனவோ இல்லையோ, பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முறையாகச் செய்யவேண்டும். அமெரிக்காவில் அரசாங்கங்கள் அதைக்கூடச் செய்யாத துப்புக் கெட்டவை என்ற முடிவுக்கு வந்தனர் பலர். பெரும்பணக் காரர்கள், தனிப்படை திரட்டியோ, அல்லது அரசாங்கத்தை அசைத்தோ தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்த வர்கள். நடுத்தர வகுப்புகள் குறைந்தது தப்பித்து ஓடிப் புகலிடம் தேடிக்கொள்ள வாவது திறமையுள்ளவை. ஆனால், ஏழை களும், வசதிகளற்ற சிறுபான்மையினரும், அமெரிக்காவில் நாதியற்றவர்கள்தாம் என்ற எண்ணம் வேரூன்றத் தொடங்கியது.
1994 நார்த்ரிட்ஜ் நில நடுக்கம் நம்பிக்கையற்றோர் மனதை மாற்றியது. அரசாங்கம் உண்மை யிலே செயலாற்றக் கூடியதுதான்; ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல், எல்லோரையும் பாதுகாக்கும் மனமும் செயலும் கொண்டது அரசாங்கம் என்று பலரை நம்பவைத்தது அதிபர் கிளின்டன் தலைமையில் இயங்கிய அரசாங்கம். கூட்டாட்சி நெருக்கடி நிவாரண அமைப்பு (FEMA) போன்ற சோம்பேறி அமைப்பையும் சுறுசுறுப்பாக்கி, நொறுங்கிக் கிடந்த லாஸ் ஏஞ்சலஸ் மாநகருக்குப் புத்துயிர் கொடுத்து, தனியார் அமைப்புகளைப் போல திறமையுடன் செயலாற்றும் தன்மையுள்ளது அரசாங்கம் என்று கிளின்டன் நிரூபித்தார்.

இன்றைய அதிபர் ஜார்ஜ் (மகன்) புஷ் 2001-ல் பதவியேற்றபோது, அமெரிக்கா எச்சரிக்கையுடன் எதிர் நோக்க வேண்டிய மூன்று பேரழிவுகள் என்ற பட்டியலில் இருந்தவை: நியூ யார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல், நியூ ஆர்லியன்ஸ் நகர் மேல் சூறாவளியின் தாக்கம், சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் நிலநடுக்கம். செப்டம்பர் 11-ல் நியூ யார்க் மேல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த போது அதைத் தடுத்திருக்க வேண்டியது முந்தைய கிளின்டன் அரசு என்று தப்பித்துக் கொண்டார் அதிபர் புஷ். நியூ ஆர்லியன்ஸ் நகரம் காட்ரீனா சூறாவளித் தாக்குதலால் மூழ்கியதற்கு நியூ ஆர்லியன்ஸ் மாநகர, லூயீசியானா மாநில ஆட்சிகளோடு தனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று வாய் வார்த்தைக்காவது சொல்லியிருக்கிறார் அதிபர் புஷ். பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் வாழும் எங்களுக்கு நிலநடுக்கத்தைப் பற்றி எண்ணும் போது பகீர் என்று இருக்கிறது.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline