Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeசமீப காலத்தில் பல நிறுவனங்கள் இணைந்துள்ளன (merged) அல்லது வாங்கப் பட்டுள்ளன (acquired). பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடும் (Initial Public Offering-IPO) நிறுவனங்கள் மிகவும் சிலவே. நன்கு வளர்ந்து வரும் ஆரம்ப நிலை நிறுவனங்கள், என்றைக்காவது இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால்தான் அவற்றில் மூலதனமிட்டவர்களுக்கு முதலீட்டின் பேரில் வருமானம் (return on investment) கிடைக்கிறது. இந்த நிறுவனங்களுக்கான இரண்டு வழிகளைப் பற்றி என்னிடம் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அவர்களுக்கான விடை இதோ:

கேள்வி: இப்போது திடீரென மென்பொருள் (software) துறையிலும் மின்வலை மற்றும் மின்வலைப் பாதுகாப்பு (networking and network security) துறைகளிலும் பல நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன அல்லது இணைந்துள்ளனவே ஏன்?

பதில்: உண்மைதான். மென்பொருள் துறையில் சமீப காலத்தில் பலப்பல நிறுவன இணையல்களும் விற்பனைகளும் நடந்துள்ளன. பெரிய நடவடிக்கைகளில் Oracle/PeopleSoft மற்றும் Symantec/Veritas பற்றிக் குறிப்பாகச் சொல்லலாம். இவை தவிர பல சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. மின்வலைத் துறையில் பல ஆரம்ப நிலை நிறுவனங்கள் சமீபத்தில் பெரிய மின்வலை நிறுவனங்களால் வாங்கப் பட்டுள்ளன. Juniper நிறுவனம், போன வருடம் NetScreen என்னும் பெரிய நிறுவனத்தையே கூட வாங்கியது; மேலும், இந்த வருடம், Peribit மற்றும் Redline என்னும் இரு சிறு நிறுவனங்களை ஒரே சமயத்தில் வாங்கியதாக அறிவித்தது! Citrix மிகச் சமீபத்தில் NetScaler என்னும் ஒரு தொடக்க நிலை நிறுவனத்தை வாங்கியது. Cisco நிறுவனம் பலப் பல சிறு நிறுவனங்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது! உதாரணத்துக்கு AireSpace மற்றும் Fineground நிறுவனங்களை வாங்கியதைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு பல நிறுவனங்களை வாங்குதற்கு மூல காரணம் ஒன்றுகூட்டல் (consolidation) என்னும் வணிக நடப்பு. அதாவது, ஒரு துறையில் பலப்பல சிறிய நிறுவனங்கள் போட்டி போடுவதற்குப் பதிலாக, ஒரு சில பெரிய நிறுவனங்களே போட்டியிடும் நிலைமை. வாணிக உலகில் மற்ற எந்தத் துறையிலுமே இந்நிலை என்றைக்காவது ஒரு நாள் வந்தே தீர்கிறது. பல துறைகளில் ஒன்றுகூட்டல் ஏற்பட்டு பல பதின்வருடங்கள் (decades) ஆகிவிட்டன.உயர் தொழில்நுட்பம் (Hi-tech) எனப்படும் மின்னியல் மற்றும் தொடர்பு (electronics and communications) சார்பான துறைகளில் இப்போது நிகழ்ந்து வருகிறது அவ்வளவுதான்.

ஒவ்வொரு துறையும் புதிதாக ஆரம்பித்து வேகமாக வளரும்போது பல நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். அத்துறையின் சிறுசிறு மூலைகளிலும் பத்து நிறுவனங்கள் போட்டியிட்டு வளர்வது வழக்கம். ஆனால் அத்துறை வளர்ந்து, அதன் வளர்ச்சி வேகம் குறையும் போது பல நிறுவனங்கள் தோல்வியுற்று மூடப் படுகின்றன, அல்லது பெரும் வெற்றியடைந்த நிறுவனத்தால் விழுங்கப்பட்டு மேற்கொண்டு வளர்ச்சிக்குக் காரணமாகின்றன.

'மூன்றின் சட்டம்' (law of three) என்று ஒன்று உண்டு. ஓரளவு முதிர்ச்சி பெற்ற ஒவ்வொரு வணிகச் சந்தையிலும் (commercial market) மூன்றே மூன்று பெரிய நிறுவனங்கள் தான் பொது வெற்றியடைய (general success) இடம் உள்ளது. மீதி நிறுவனங்கள் மூடப்படும், வாங்கப்படும் அல்லது அத் துறையின் மிகச் சிறிய மூலையில் (niche market) சிறிய அளவில் லாபத்துடன் நடத்தப்படும்.

உதாரணமாக உந்து வண்டிகள் (cars) உற்பத்தி செய்யும் துறையைப் பற்றிச் சொல்லலாம். ஒரு காலத்தில் பத்துக் கணக்கான நிறுவனங்கள் உந்து வண்டி களைத் தயாரித்து விற்று வந்தன. ஆனால் இப்போது அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் என்றால் மூன்றுதான்: General Motors, Ford, Daimler Chrysler. அதில் கூட Chrysler நிறுவனம் ஜெர்மனியின் Daimler நிறுவனத் தோடு இணைய வேண்டியதாகி விட்டது. கம்ப்யூட்டர் துறையிலும் கூட எல்லா விதமான System-களையும் தரக் கூடிய நிறுவனங்கள் IBM, HP, மற்றும் ஓரளவுக்கு Dell. அவ்வளவுதான். Sun நிறுவனத்தின் ஒளியும் மங்கிக் கொண்டுதான் வருகிறது!

இம்மாதிரி பல துறைகளையும் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப் பல துறைகளிலும் உபரியை விளைவித்த அதே வணிக சக்திகளால் தான் மென் பொருள் மற்றும் மின்வலைத் துறைகளிலும் இப்போது கூடுதல் ஏற்பட்டு, சிறு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்குள் அடக்கமாகி ஒரு சில மாபெரும் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன.

இத்தகைய கூடுதல் ஏன் ஏற்பட வேண்டும், அதற்குக் காரணமான வணிக சக்திகள் என்ன என்று நீங்கள் யோசிக்கக் கூடும். அதற்குப் பற்பல காரணங்கள் உள்ளன. அவை அத்தனையையும் ஆராய வேண்டு மானால் ஒரு புத்தகமே தேவையாகிவிடும்! அதனால், இப்போது மென்பொருள் மற்றும் மின்வலைத் துறைகளில் முக்கியமான சில காரணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

நிறுவனக் கூடுதலுக்கு மிக முக்கியமான ஒரு காரணம் வாடிக்கையாளர்களின் விருப்பம். அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள், பல சிறு நிறுவனங் களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக ஒரு சில முக்கியமான பெரும் நிறுவனங்களிடமிருந்து மட்டும் வாங்கும் மனப்பான்மை. ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அதற்கும் பல காரணங்கள் உள்ளன.

சிறு நிறுவனங்கள் இன்றைக்கு இருக்கும், நாளைக்கு வெற்றி போதவில்லை என்றோ, மூலதனம் மிக அதிகத் தேவை என்றோ மூடப்படலாம். அப்படி மூடப்பட்டால் வாங்கும் நிறுவனங்கள் பயன்படுத்தும் பொருளை மாற்றி மற்ற மின்வலை சாதனத்தையோ அல்லது மென் பொருளையோ பயன்படுத்த எல்லாப் பணியாளர்களுக்கும் பயிற்சி தர வேண்டி யிருக்கும். அவர்களது புள்ளி விவரத் தொகுப்பை அந்தப் புது மென்பொருளில் பதிவு செய்யப் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்ய நேரிடலாம். பெயர்பெற்ற ஒரு பெரும் நிறுவனத்தின் விற்பொருளைப் பயன் படுத்தினால் அந்த மாற்றல் அபாயம் குறையும் என்று நிறுவனத்தின் வாங்கும் மேலாளர்கள் பொதுவாக எண்ணுகிறார்கள்.

மேலும், முன்பு ஒரு காலத்தில் மெயின் ·ப்ரேம் கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமானால் "IBM-இடமிருந்து வாங்கினால் உனக்கு வேலை போகாது" ("You never get fired for buying IBM" என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரைக்கு நாம் "Cisco/Microsoft/Oracle-இடமிருந்து வாங்கினால் வேலை போகாது" என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது, எதையாவது பெயர் தெரியாத புது நிறுவனத்திடமிருந்து வாங்கிவிட்டு அதனால் ஏதாவது பழுதானால் வாங்கிய வருக்கு வேலை போய்விடும் என்ற பயமிருக்கும். அதனால் பெயர் பெற்ற பெரும் நிறுவனத்திலிருந்து மட்டும் வாங்குவார்கள்.

அதற்கு மூல காரணம் FUD எனப்படுவது - பயம், தடுமாற்றம், சந்தேகம் (Fear, Uncertainty, Doubt). அதை வைத்துத்தான். பெரும் நிறுவனத்தினர், "நீங்கள் எங்களிட மிருந்து வாங்கினால் வாங்கும் கருவிகள் எல்லாம் ஒன்றாக வேலை செய்யும் - அதற்கு நாங்கள் பொறுப்பு. வேறு சாதனங்களை வாங்கி எங்கள் சாதனங்களோடு பயன் படுத்தப் பார்த்தால் என்ன ஆகுமோ? அதை அப்புறந்தான் பார்க்க வேண்டும்" என்று பயமுறுத்தி விடுவார்கள். வாங்கும் அலுவலர் களும், "நமக்கு ஏன் இந்த வீண் தலைவலி" என்று ஒரு துறைக்கான பொருட்களை ஒரே நிறுவனத்திலிருந்து மட்டும் வாங்கச் சொல்லி (standardize) விதியே இட்டு விடுவார்கள்! அதற்குக் கைமாறாக அந்த நிறுவனம் விலையில் அதிகத் தள்ளுபடியும் தரும்.

மற்ற நிறுவனங்களிலிருந்து வாங்க வேண்டுமானால் ஒரு பெரிய விதிவிலக்குக்கு மனு போட்டு, அதற்கான சமாதானங்களைச் (justification) சொல்லித்தான் வாங்க வேண்டும்.

மேலும் பெரும் நிறுவனங்களின் பெரிய அளவே அவைகளுக்கு மிகுந்த வணிக அனுகூலம் அளிக்கிறது. பெரிய வாடிக்கை யாளர்கள் அத்தகைய நிறுவனங்கள் வெறும் விற்பவர்களாக (mere vendors) மட்டும் இல்லாமல், தங்களின் வணிக நோக்கத்தைப் பூர்த்தி செய்யத் தேவையான பொருட் களையும் சேவைகளையும் தரும் சக்தியுள்ள நல்ல கூட்டாளிகளாக (strategic business partner) இருப்பார்கள் என நம்புகிறார்கள். அது மட்டுமல்லாமல், வணிகக் கூட்டாளி களான System Integrators, value added reseller channel partners, மற்றும் சாதனங்களின் பயனைப் பெருக்கக் கூடிய மற்ற விற்பனை நிறுவனக் கூட்டாளிகளும் (eco-system vendor partners) கூட நிறைய அளவில் விற்கக் கூடிய நிறுவனங்களுக்கும் சாதனங்களின் மேல் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு அதுவே சரியான பலன் கொடுக்கும் என அவர்கள் நினைப்பது சகஜந்தானே.

இது என்ன, பெரிய "முட்டை முதலா, கோழி முதலா" போன்ற கதையாக இருக்கிறதே! வாங்குபவர்கள் பெரிய நிறுவனங்களிலிருந்து மட்டுமே வாங்குவோம் என்று பிடிவாதம் பிடித்தால் சிறு நிறுவனங் களுக்கு ஏது வாய்ப்பு? அப்படியானால் ஒரு சிறு நிறுவனமும் பிழைக்க முடியாதே. ஆனால் உண்மை நிலை அப்படியில்லையே, சில சிறு நிறுவனங்கள் வளர்ந்து பெரிய நிறுவனங்கள் ஆகின்றனவே, அது எப்படி என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரிதான்.

நிலைபெற்ற நிறுவனங்கள் (established enterprises) சிறு நிறுவனங்களிடமிருந்து வாங்குவதேயில்லை என்று சொல்லிவிட முடியாது. பெரிய நிறுவனங்களிடம் கிடைக்காத பண்புகள் உள்ள விற் பண்டங்களை சிறு நிறுவனங்களிடமிருந்து வாங்குவதுண்டு. ஆனால் அத்தகைய பண்புகள் குறைந்த அளவே மாறுபட்டால் வாங்குவதில்லை. வாங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்தல் ஏற்படும் அளவுக்கு பிரமாதமாக இருந்தால்தான் வாங்குவார்கள். மேலும், அப்படி வாங்க ஒரு சில நிபந்தனை கள் உண்டு. அந்த நிபந்தனைகளுக்கு அந்தச் சிறு நிறுவனங்களும் அவைகளின் விற்பண்டங்களும் உட்பட முடியுமானால் அத்தகைய விற்பனை சாத்தியமாகிறது.

Geoffrey Moore எழுதிய Crossing the Chasm (பெரும்பிளவைத் தாண்டுதல்) என்னும் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம், அல்லது அதன் கருத்தைக்களைக் கேள்விப் பட்டிருக்கலாம். அந்தப் புத்தகத்தில் எவ்வாறு ஒரு புதுத் தொழில்நுட்பம் மெருகேறி பொது வணிகத்தில் வெற்றிபெற முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரித்துள்ளார் மூர். எல்லாப் புதுத் தொழில் நுட்பங்களும் சிறு நிறுவனங் களிலிருந்து தான் வருகிறது என்பதில்லை. (Apple நிறுவனத்தின் iPod அதற்கு அத்தாட்சி!). ஆனால் சிறு நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு புது தொழில் நுட்பத்தை வைத்துத்தான் அவற்றின் பொருட்களை உருவாக்குகின்றன என்பதால் இந்த விஷயத்துக்கு அந்தப் புத்தகத்தின் கருத்துக்கள் மிகவும் பொருந்துகின்றன.
Crossing the Chasm புத்தகத்தின்படி ஒரு சிறு நிறுவனம் முதலில் தன் தொழில் நுட்பத்தை, எல்லாவற்றையும் முந்திரிக் கொட்டைகளாக முதலில் பயன்படுத்தும் நிறுவனங்கள் அல்லது மக்களுக்கு (innovators) விற்பார்கள். அவர்கள் அந்தப் பொருளில் சில பிழைகள் இருப்பினும் பொறுத்துக் கொண்டு வாங்கிப் பயன் படுத்துவார்கள் அவர்களிடமிருந்து அறிந்து கொண்டதை வைத்து அந்தப் பொருள் இன்னும் நல்லதாக்கப்படும். அதனால் அதைப் பயன்படுத்தும் கூட்டம் சற்று பெரிதாகும்.

அவர்களை early adoptors என்று கூறுவார்கள். ஆனால், அவர்களைத் தாண்டிப் பொதுவாகப் பெரிய அளவில் விற்க வேண்டுமானால் early majority எனப் படும் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துகொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். அந்தப் பொது விற்பனை (mainstream market) நிலையை வந்து அடைவது ஒரு பெரிய பள்ளத்தைத் தாண்டுவது போலாகும். அதைத்தான் மூர் Crossing the Chasm என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பெரும் விற்பனை அடையும் தொழில்நுட்பங்களும் நிறுவனங்களும் மிகச் சிலவே. ஏராளமானவை ஆரம்பத்தில் early adoptors-இடம் ஓரளவு வெற்றி பெற்று விட்டு, பள்ளத்தாக்கைத் தாண்ட முடியாமல் நொடிந்து மறைந்தே போய் விடுகின்றன, அல்லது பெரும் நிறுவனங்களின் சாதனங் களில் ஒரு சிறிய அம்சமாகிவிடுகின்றன (become a feature).

இந்த வழி நடப்பு, வணிக நிறுவனங்களின் நிலைக்கு, சார்ல்ஸ் டார்வினின் இயற்கைத் தேர்ந்தெடுப்புக் கோட்பாடாக (law of natural selection) செயல்படுகிறது என்றே கூறலாம்! பல நிறுவனங்களில் வெகு நாளாகப் பயன் படுத்தப் படக் கூடிய பொருட்களைத் தயாரித்து பல்லாண்டுக் கணக்காக தாக்குப் பிடிக்கும் சில சிறு நிறுவனங்கள்தாம் புகழ் பெற்ற பெரும் நிறுவனங்களின் வரிசையில் தாங்களும் ஒரு பெருமை மிக்க இடம் பிடிக்க முடியும்.

அப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விட முடியாது அல்லவா? அவ்வப்போது சில தொடக்கநிலை நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று நிலை பெற்ற நிறுவனங் களாகின்றன. உதாரணமாக: Intel, Oracle, Microsoft, Cisco, Dell, சமீபகாலத்தில் Yahoo, Google - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அப்படி வளர்வதற்குத் தாண்ட வேண்டிய சுவர் மிக உயரம் (அல்லது பள்ளத்தாக்கு மிக அகலம் என்றும் சொல்லலாம்!) கடந்த ஐம்பது வருடங்களில் உயர் தொழில்நுட்பத் துறையில் ஆரம்பிக்கப் பட்டதில் குறைந்த சதவிகித நிறுவனங்களே அப்படித் தாண்டிப் பொதுப்பங்கு (public) நிறுவனங்களாகியுள்ளன; அவற்றில் முன்பு குறிப்பிட்டபடி மிகப் பெரும் நிறுவனங்களாகி நிலை பெற்றவை இன்னும் மிக மிகக் குறைவு.

இப்போது என்னவென்றால், மென் பொருள் துறையிலும் மின்வலைத் துறை யிலும் புதுக் கண்டுபிடிப்புக்களின் வேகம் குறைந்து அத்துறைகள் முதுநிலை (maturity) பெற்றிருப்பதால், பொதுப்பங்கு நிலை அடைவதற்குத் தாண்ட வேண்டிய சுவர் இன்னும் உயர்த்தப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த ஒன்றுகூட்டல் (consolidation) அதிகமாகியுள்ளது. முதலீட்டுக்குப் பலன் பெறுவதற்கும், நிறுவனம் முழுவதும் தோல்வியடையாமல் ஓரளவுக்காவது நல்ல முடிவுக்கு சென்ற டையவும் நிறுவன விற்பனையே பொதுவான வழியாகியுள்ளது.

ஒரு நிறுவனம் வளர்ந்து பொதுப்பங்கு நிலையை அடைய என்னென்ன பண்பு களை அடைய வேண்டும்; அதற்கு மேலும் வளர்ந்து பெரும் நிறுவன நிலையை அடைவது எவ்வாறு; அவ்வாறு வளரா விட்டால் ஏன் ஒன்றுகூட்டல் அவசிய மாகிறது; அத்தகைய நிறுவனம் ஒரு பெரும் நிறுவனத்தால் வாங்கப்படும் போது என்ன ஆகிறது - இவை பற்றி இனிவரும் பகுதிகளில் விவரிப்போம்.

கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்)
Share: 




© Copyright 2020 Tamilonline