Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 16)
- சந்திரமௌலி|ஆகஸ்டு 2015|
Share:
Click Here Enlargeபரத் அறியாத உண்மை

இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டமுள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான கல்வித்தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை எப்படியோ முடித்து ஒரு குமாஸ்தா வேலைக்கு முயற்சிக்கிறான். அதிர்ஷ்டவசத்தால் 'கேந்திரா மோட்டார்ஸ்' நிறுவனர் விஷ்வனாத்தின் மகள் கேந்திராவுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்து, அவள் மனதில் இடம்பிடிக்கிறான். உலகைப் புரட்டிப்போடும் எரிபொருள் தேவையில்லா வாகன எஞ்சின் தயாரிக்கும் ப்ராஜெக்டைத் துவங்கிய விஷ்வனாத், தன் குழுவில் பரத்தை சேர்த்துக்கொள்கிறார். போட்டிக்கம்பெனியான வெளிநாட்டு கே.டி..கே மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விஷ்வனாத்தின் முயற்சியைக் குலைக்கும் சதியில் ஈடுபடுகிறார்கள். அதில் ஒன்று பரத்தைத் தீர்த்துக்கட்டிவிட்டு, அந்த இடத்தில் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அமர்த்தி, விஷ்வனாத்தின் ரகசியங்களைத் திருடுவது. இந்தச் சதியில் தற்செயலாக பரத்தின் நண்பன் மனோகரின் தந்தை கனகராஜ் உயிரிழக்கிறார். விடுப்புமுடித்து அலுவலகம் திரும்பும் பரத்தைத் தன் குழுவிலிருந்து நீக்கிவிட்டதாக விஷ்வனாத் கூறுகிறார். இதன் உண்மைக் காரணம் அறியாத பரத் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பாட்டி வள்ளியம்மாளைச் சந்திக்கப் போகிறான். பரத் அறியாத உண்மை என்ன?

*****


கேந்திரா விஷ்வனாத்தின் முகத்தை நேராகப் பார்க்காமல், பெண்மையின் இயற்கை வெட்கத்தோடு "வந்து டாடி, வந்து நான் பரத்தை லவ் பண்றேன். அவரைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்" என்றாள்.

"ப்ராவோ, கன்க்ராடுலேஷன்ஸ் மை சைல்ட், சாரி மை டாட்டர். என்கிட்ட இதை போல்டா சொன்ன பாரு அதுதான் என் வளர்ப்பு. ஆனா அதை எதுக்கு இவ்வளவு வெக்கப்பட்டுகிட்டு சொல்றே, இத நான் சொல்லிக்குடுக்கலையே!"

"இல்லை டாடி, நீங்க இதை இவ்வளவு ஈசியா எடுத்துப்பீங்கனு நான் எதிர்பார்க்கவேயில்லை."

"சில்லி, கேந்திரா மோட்டார்சோட எதிர்கால CEO மாதிரி பேசமாட்டேங்கிற, கோடம்பாக்கம் ஹீரோயின் மாதிரி பேசுற. இது உன் லைஃப். யாரு உன் பார்ட்னர்னு டிசைட் பண்றதுக்கு உனக்குமட்டும்தான் அதிகாரம் இருக்கு. அது யாராயிருந்தாலும், ரைட்டோ, தப்போ உன் சாய்ஸ். அதோட மொத்த முடிவும், விளைவுகளும் உன்னையும் உன் பார்ட்னரையும் சேர்ந்தது." அந்த அறையில் மவுனமாக ஓடிக்கொண்டிருந்த டிவியின் டிஸ்கவரி சேனலைக் காட்டி, "இதுல பாரு, காட்டுல மிருகங்கள் எவ்வளவு சுதந்திரமா திரியுது. தன்னோட இணை யாருனு அதுகளே தீர்மானம் பண்ணுது. அப்பா, அம்மா கிட்ட சுத்தி இருக்கிறவங்க கிட்டேயெல்லாம் கேட்டு, அந்தஸ்து பாத்தெல்லாம் லவ் பண்றதில்லை. ஆஃப்டர் ஆல் ஒரு அனிமலுக்கு இருக்கிற சுதந்திரம் கூடவா மனுஷங்களுக்கு கிடையாது?" என்றார். சர்வசாதாரணமாக அந்தப் பெரியமுடிவை ஆசீர்வதித்தார் விஷ்வனாத். "தேங்க்யூ சோ மச் டாடி, ஐ லவ் யூ சோ மச்" என்று கேந்திரா அவரை அணைத்துக்கொண்டாள்.

அவளைச் சம்பிரதாயமாக உச்சிமுகர்ந்த விஷ்வனாத் "சரி, பரத் உன்னை லவ் பண்றானா? அவன்கிட்ட நிச்சயம் ஒரு ஸ்பார்க் இருக்கு. அவனை என்னோட லைஃப் டைம் அச்சீவ்மெண்டா நினைக்கிற ப்ராஜெக்டை வெற்றிகரமா முடிக்க பெரிய அளவுல நம்பியிருக்கேன். இப்ப அதைவிட பெரிய என் உயிரை அவனை நம்பி ஒப்படைக்கணும்னு நெனைக்கும்போது நாம ரெண்டுபேருமே அந்த பரத்தை ஒரேமாதிரி நம்பியிருக்கோம்னு தெரியுது" என்றார்.

"வெளிப்படையா இன்னும் லவ் டிக்லேர் பண்ணலை டாடி. ஆனா அவருக்கும் என்மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க ப்ராஜக்ட் முடிஞ்சதும் இதைச் சொல்லிக்கலாம்னு நெனைச்சேன். ஆனா, அதுக்கு இப்ப வெயிட் பண்ணமுடியாதுனு தோணுது."

"மேலே சொல்லு" என்றவாறு தன் பைப்பைப் பற்றவைத்தார் விஷ்வனாத். ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளப்போகிறொம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னால் உடனே அவர் பைப்பைப் பற்றவைப்பது வழக்கம். கேந்திராவின் குரலிலிருந்தே தான் ஒரு பிரச்சனையைக் கேட்கப்போகிறோம் என்று உணர்ந்து கொண்டுவிட்டார்.

"பரத்தைக் குறிவச்சுதான் கொஞ்சநாள் முன்னால தாக்குதல் நடந்தது. அதுல தவறி பாவம் பரத் வீட்டுஓனர் கனகராஜ் செத்துட்டாரு. ஆனா பரத்தை இந்த ப்ராஜக்ட்டுலேருந்து அப்புறப்படுத்திட்டு அவர் எடத்தைக் காலி பண்ணினா, நீங்க வேற யாரையாவது அங்க சேக்க வெண்டிவரும். அப்ப தங்களுக்கு வேண்டிய ஆளை அங்க கொண்டுவந்து உங்க ஆராய்ச்சியோட ரகசியங்களை உள்ளிருந்து தெரிஞ்சிக்கிறதுதான் இதுக்குப் பின்னால இருக்கிற பிளான்."

"நீ ஏதோ விபரீதமா கற்பனை பண்ணிட்டு எதுக்கோ எதையோ முடிச்சு போடுற."

"இல்லை, இதுக்குப் பின்னால கேடிகேயோட கார்பரேட் ரவுடியிசம் இருக்கு. கேடிகே CEO ரிச்சர்டோட பெர்சனல் செக்ரடரி கைலாஷ் இதுல நேரடியா சம்பந்தப்பட்டிருக்கார்."

"அப்ப போலீசுல இதை ஏன் ரிப்போர்ட் பண்ணலை"

"ப்ரூவ் பண்ணக்கூடிய அளவுக்கு ஆதாரம் கிடைக்கலை. கிடைச்சாலும் அதை எப்படி சரிக்கட்டறதுனு அவங்களுக்கு நல்லாத் தெரியும். இது பரத் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. உங்களோட லைஃப்டைம் அச்சீவ்மென்ட்னு சொன்னீங்களே, அந்த ரிசர்ச்சையே அபகரிக்கிற அபாயம் இதுல இருக்கு."

"ஸ்டில், எனக்கு ஏனோ நம்பிக்கை வரலை. இந்த ஆராய்ச்சியை காலி பண்ணனும்னா அவங்க என்னையோ, இல்லை ஏன் டாக்டர் மித்ரனையோ, இல்லை வாணியையோ குறிவைக்காம, பரத்தைமட்டும் ஏன் குறி வைக்கணும்?"

"அவங்க நோக்கம் உங்க ஆராய்ச்சியைக் காலி பண்றது இல்லை. நீங்க அதைத் தொடர்ந்து செய்யணும். அதோட ரிசல்டை நீங்க நம்ம கம்பெனிமூலமா வெளியிடறதுக்கு முன்னாலே, அதைக் கைப்பத்தறதுதான் அவங்க நோக்கம். அதுக்கு ஈசி டார்கெட் பரத். பரத்தை ரீப்லேஸ் பண்றது சுலபம்."

"ஐ திங்க் யூ ஹேவ் அ பாயிண்ட். ஆனா எனக்கு நம்பிக்கையில்லாத யாரையும் இந்த ஆராய்ச்சில நான் சேக்கமாட்டேன். பரத்துக்கே ஏதாவது ஆனாகூட நான் அவனுக்கு ரீப்லேஸ்மெண்ட் இல்லாம இந்த ஆராய்ச்சியை, நாள் கடந்தாவது முடிப்பேன்."

"பரத்துக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது டாடி. அவரை நீங்க உங்க ஆராய்ச்சிலேருந்து விலக்கிடுங்க. அதுக்கப்புறம் அவரை யாரும் சீண்டமாட்டாங்க. ஆனா, அவரை விலக்க இதுதான் காரணம்னு அவருக்குத் தெரியவேண்டாம். தெரிஞ்சா, பிடிவாதாமா இதுக்குக் காரணமானவங்களைத் தேடுறேன் அது இதுனு கெளம்பலாம்."

"ஓகே, இதுக்காகத்தான் பரத்தை நீ லவ் பண்ற விஷயத்தை என்கிட்ட சொன்னியா? சரி இதுனால அட்லீஸ்ட் உன் லவ் என்னனு எனக்குத் தெரிஞ்சுதே. நீ நிம்மதியா இருக்கறதுக்காக பரத்தை இந்த ஆராய்ச்சிலேருந்து விலக்கிடறேன். ஆனா, அவன் இல்லாம இந்த ப்ராஜெக்ட் இன்னும் ஒரு வருஷமாவது டிலே ஆகும். வேற யாரையும் நான் நம்பவும் முடியாது. இந்தத் தாமதத்துக்கு நான் கம்பெனி போர்டுல ஒப்புதல் வாங்கணும். குறிப்பா கோபால்கிட்ட. இட் இஸ் கோயிங் டு பி எ ப்ராப்ளம்." அவர் எண்ண ஓட்ட வேகத்துக்கு இணையாகப் புகையை சட், சட்டென்று இழுத்துப் பிடித்தார்.
அப்போது அவரது இன்டர்காம் மெலிதாக இருமுறை ஒலித்தது. வெளியே யாராவது வந்தால் அதுவும் முக்கியமானவர்களாக இருந்தால் அந்த நேரத்தில் விஷ்வனாத்தை அழைக்க அவரது காரியதரிசிக்கு உத்தரவாயிருந்தது.

"இந்த நேரத்துல யார் வந்திருக்காங்க?" ரிசீவரை எடுக்காமல் ஸ்பீக்கரில் போட்டு "எஸ் விஷ்வனாத் ஹியர்" என்றார் மிடுக்காக.

"சாரி டு பாதர் யூ அட் திஸ் அவர் சார். வினய் உங்களை அர்ஜெண்டா பாக்கணும்னு வந்துருக்கார். அனுப்பவா?"

"வினய்?" இண்டர்காமை ம்யூட்டில் போட்டுவிட்டு கேந்திராவைப் பார்த்து, "உனக்கு ஏதாவது தெரியுமா?" என்றார்.

கேந்திரா கேள்வி, ஆச்சர்யக் குறிகளை முகத்தில் தொங்கவிட்டு, உதட்டைப் பிதுக்கி "தெரியாது" என்று மவுனத்தில் சொன்னாள்.

அன்ம்யூட் செய்துவிட்டு, "வரச்சொல்லுங்க." என்று சொல்லி இன்டர்காமை அணைத்தார். சொல்லி சரியாக ஆறு வினாடிகளுக்குள் வினய் பரபரப்போடு அறைக்குள் நுழைந்தான். தலைகலைந்து, சாதாரண டீ ஷர்ட், ஜீன்சில் தன் படபடக்கும் உடலை மறைத்திருந்தான். பாதி தூக்கத்தில் எழுந்து வந்தவன் போலிருந்தவனைச் சற்றே ஆசுவாசப்படுத்த "ஹே வினய், என்ன சர்ப்ரைஸ் இந்த நேரத்துல! எனிதிங் டு டிரிங்க்?" என்றார் விஷ்வனாத்.

மூச்சிரைப்பு முழுதும் அடங்காமல், "நோ தேங்க்ஸ் அங்கிள்" என்றவன், அந்த அறையில் கேந்திராவும் இருப்பதைக் கண்டு, "கேந்த்ரா ஹாய், நல்லது, நீ இங்க இருக்கறது ரொம்ப நல்லது" என்று பீடிகை போட்டான்.

"ரிலாக்ஸ் வினய். மொதல்ல உக்காரு." அவர் பார்த்து வளர்ந்த பையனாதலால் சுவாதீனமாகத் தோளில் கை வைத்து "எதுவானாலும் ஃப்லாஷ் நியூஸ் மாதிரி பட்னு விஷயத்தை சொல்லு, சுத்தி வளைக்காதே" என்றார் விஷ்வனாத்.

இன்னும் குழப்பத்தோடே இருந்த வினய், "பட்னு சொல்லணும்? பட்னு?" என்று இழுத்துவிட்டு, "ஓகே, உடனே நீங்க எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி எனக்கும் கேந்திராவுக்கும் நாளைக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லுங்க" என்றான்.

"வினய் என்ன சொல்றே?" கேந்திரா வெடித்தாள் "எதுக்காக இப்படி உளர்றே? இப்ப உன் விளையாட்டுக்கெல்லாம் நேரமில்லை."

"நோ வினய் சீம்ஸ் டு பீ சீரியஸ்" விஷ்வனாத் குறுக்கிட்டு, "வினய் இவ்வளவு பட்னு சொல்லியிருக்க வேண்டாம். கொஞ்சம் விவரமாவே சொல்லு" என்றார்.

"கேந்திரா மோட்டார்ஸ் பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கு. கொஞ்சநாளாவே நம்ம ஷேர் விலையெல்லாம் குறைஞ்சதே, அப்ப கேடிகே கிடைச்ச ஷேரெல்லாம் வாங்கிப் போட்டுட்டாங்க. இப்ப கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகத்தை கைல எடுத்துக்க ஒரே தடை நீங்களும், என் அப்பாவும் மட்டும்தான்."

"இது தெரிஞ்ச விஷயம்தானே. நானும், உன் அப்பா கோபாலும் மெஜாரிட்டி ஷேர்ஸ் கண்ட்ரோல் வச்சிருக்கோம். நானோ, அவனோ எங்க ஷேர்ஸை விக்காதவரை, நிர்வாகத்தை வேறயாரும் எடுத்துக்கமுடியாது. நான் என் ஷேர்சை விக்கிறதா இல்லை. கோபாலும்..."

"யெஸ், அப்பாவை கேடிகே, சக்கரவர்த்தி மூலமா கொஞ்ச கொஞ்சமா அசைச்சிட்டாங்க. ஷேர் விலை குறைஞ்சிட்டே வர்றதும், கொஞ்சநாளா உங்களுக்கும் அப்பாவுக்கும் நடுவுல இருக்கிற மனஸ்தாபமும், ஆயில் க்ரைசிஸ் தொடர்றதும் அப்பாவை அசைச்சிடுச்சு. அதுமட்டுமில்லாம உங்க புது எஞ்சின் தயாரிப்பு முடிஞ்சதும் நீங்க மொத்த நிர்வாகத்தையும் கையில எடுத்துக்கிட்டு அவரை ஒதுக்கிடுவிங்க, அதுக்கப்புறம் அவருக்கும், அவருக்கப்புறம் எனக்கும் எந்த மதிப்பும் இந்த கம்பெனில இருக்காதுனு அவரை நம்ப வெச்சிட்டாங்க."

"ஷாக்கிங்கா இருக்கு, வினய். கோபால் முன்னமாதிரி இல்லைனு எனக்குத் தெரியும். ஆனா அவன் இவ்வளவு ஈசியா சஞ்சலப்பட்டு நாங்க யாரை எதுத்து தலையெடுத்தமோ, அந்த கேடிகேவுக்கே எங்க வாழ்நாள் உழைப்பை விக்கற அளவுக்குப் போவான்னு நினைக்கவேயில்லை. ஆனா ஒண்ணு, அவன் அப்படி சலனப்பட்டாலும், நீ என்னை நம்பி இந்த ராத்திரில ஓடிவந்து உன் அப்பாவைப் பத்தியே எங்கிட்ட சொல்ற பாரு. இது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் குடுக்குது."

"அப்பா எங்க மொத்த ஷேரையும் விக்கிற அக்ரிமெண்டுல கையெழுத்து வாங்க என்கிட்ட இன்னிக்கு வந்தார். எனக்கும் பங்கு இருக்கிறதால நல்ல வேளையா எனக்குத் தெரியவந்தது. அப்பதான் அவர் இந்த கம்பெனில நமக்கு இனி எதிர்காலம் இல்லை. நல்ல விலைக்கு ஷேரை வித்துட்டு புதுசா ஏதாவது வேற தொழில் நாமே ஆரம்பிக்கலாம்னு சொன்னார்."

"ஷேர் விலை குறைஞ்சா, நல்ல விலைக்கு அதை விக்கிறது ஒரு பிசினஸ் முடிவுமாதிரி தெரிஞ்சாலும், நம்ம ஷேர் விலை குறைஞ்சதுக்கு காரணமே கேடிகேதான்னு கோபால் ஏன் புரிஞ்சுக்கலை. அவங்கமட்டும் நிர்வாகத்தை எடுத்துக்கிட்டாங்கன்னா என் ஆராய்ச்சியோட பலனை அப்படியே எடுத்துக்கலாம்னு பாக்கறாங்க. கேடிகே ஒரு வெளிநாட்டுக் கம்பெனி. நாம இந்தியாவுலேயே தயாரிக்கிற புது எஞ்சினோட உரிமைய குறுக்குவழியில சொந்தமாக்கிக்க பாக்குறாங்க. நமக்குள்ள இருக்கிற வேற்றுமைய ஊதிவிட்டு நம்மையே அடிமைப்படுத்தற அதே பழைய தந்திரம்."

"இதெல்லாம் அப்பாவுக்கு புரியற நிலைமை இப்ப இல்லை. அவரை என்னால கன்வின்ஸ் பண்ணமுடியாதுனு அவர் பேசினதுலேருந்து தெரிஞ்சது. அவரை ஷேரை விக்காம தடுக்க ஒரே வழி, அவர் உங்களோட மறுபடி இணக்கமாறதுதான்னு எனக்குத் தோணித்து. உடனே துணிஞ்சு ஒரு பொய் சொன்னேன்."

"பொய்யா?"

"ஆமா, பொய்தான். நானும் கேந்திராவும் காதலிக்கிறோம். கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகத்துல கொஞ்சம் முன்னுக்கு வந்துட்டு வெளிப்படையா சொல்லலாம்னு முடிவுபண்ணி, எங்க காதலை மூடி வச்சிருந்தோம். இப்ப நீங்க ஷேரை வித்துட்டா, ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் விரோதம் வரும். அப்புறம் கேந்திராவை நான் கல்யாணம் பண்ணமுடியாது. நானும் கேந்திராவும் சேர்ந்து இந்த கம்பெனிய பிற்காலத்துல நிர்வாகம் பண்ணமுடியாதுனு சொன்னேன்."

"பிரில்லியன்ட். வினய் உனக்குக்கூட தலைக்குள்ள நல்லா வேலை செய்யுது. ஆனா ஒண்ணு சொல்லு, என்னை நீ நிஜமாவே லவ் பண்ணலை?" இறுக்கத்தைத் தளர்த்துவதாக கேந்திரா புன்முறுவலோடு வினயை கிண்டல் செய்தாள்.

"இந்த மூஞ்சியெல்லாம் எவன் லவ் பண்ணுவான்? யாராவது நடுரோடுல கார் ரிப்பேர் பண்றவன் வேணா பின்னாலயே அலைவானாயிருக்கும்" என்று கண்ணடித்தான் வினய்.

"யூ நாட்டி, பூனைமாதிரி இருந்துக்கிட்டு எல்லாம் தெரிஞ்சு வெச்சுருக்கே?"

"நான்தான் முன்னாலேயே சொல்லியிருக்கேனே. நீ யாரை வேணா லவ் பண்ணு, கல்யாணம் பண்ணு. ஆனா இந்த ஜென்மத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நான்தான். அதே மாதிரி என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நீதான்" இதைச் சொல்லும்போது எப்போதும் குறும்பாக இருக்கும் வினயின் கண்கள் லேசாகக் கலங்கின.

"ஐ எம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ வினய். எவ்வளவு பெரிய டிசாஸ்டரைத் தடுத்துருக்க?"

"இன்னும் முழுக்க தடுக்கலை அங்கிள். எங்க அப்பா நான் சொன்ன பொய்யை முழுசா நம்பணும்னா, உடனே எனக்கும், கேந்திராவுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணுங்க. அது உங்க புது எஞ்சின் தயாரிச்சு முடிக்கிறவரைக்கும் அவரை நிறுத்தி வைக்கும். புது எஞ்சின் சக்சஸ்ஃபுலா தயாரிச்சதும், நம்மள யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. அப்ப உண்மையைச் சொல்லிக்கலாம்."

கேந்திராவும், விஷ்வனாத்தும் ஆமோதித்து தலையசைத்தார்கள். "இந்த உண்மை நம்ம மூணு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது. சக்கரவர்த்திக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் நாம கோபாலை இழந்துடுவோம்" என்றார் விஷ்வனாத்.

"டாடி, பரத்கிட்ட?"

"நோ, பரத் உன்கிட்ட இந்த நேரத்துல நெருக்கம் காட்டாம இருக்கிறது நல்லது. கோபாலுக்கு உண்மையைச் சொல்றபோது, பரத்துக்கும் சொல்லிக்கிலாம். எனிவே நீ இன்னும் உன் லவ்வை அவன்கிட்ட சொல்லலையே, அதனாலே இந்த திட்டத்தைப்பத்தி பரத்கிட்ட சொல்லவேணாம்" தீர்மானமாகச் சொன்னார் விஷ்வனாத்.

(தொடரும்)
Share: 
© Copyright 2020 Tamilonline