Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2015||(5 Comments)
Share:
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர் அங்கே அரக்கு வாசனை வீசுவதை உணர்ந்தார். புதிதாக வண்ணமடித்த வீட்டுக்குள் போகும் யாரும் இதை உணர்ந்திருக்கிறோம். அங்கே பெயின்ட்வாசம் வீசும், அதைப்போலத்தான். அதுமட்டுமல்ல. "யுதிஷ்டிரர் அந்த வீட்டைப் பார்த்து, நெய், அரக்குகளோடு சேர்ந்த கொழுப்பின் நாற்றத்தை மோந்து, இது நெருப்பினுக்காகச் செய்யப்பட்டது என்பதைப்பற்றி பீமஸேனனுக்குச் சொன்னார்." (ஆதிபர்வம், அத்: 158; பக்: 593).

தங்களை உயிரோடு எரிக்கத்தான் அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த பீமன், அங்கிருந்து உடனே கிளம்பிவிடவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைக் காட்டி, தாமதிக்காமல் இப்போதே கிளம்பிவிடலாம் என்று சொல்லும்போது, தர்மன், "இப்போதைக்கு நாம் உண்மையை உணர்ந்துகொண்டோம் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் சிலகாலம் இங்கேயே வசிப்போம். நமக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தால் புரோசனன் இந்த மாளிகைக்கு உடனடியாகத் தீ வைத்துவிட்டானானால் நாம் அனைவரும் உதவுவதற்கு ஆளில்லாமல் அகப்பட்டுக்கொள்வோம். இப்போது அதிகாரம் அவன் கையில் இருக்கிறது. பொக்கிஷம் அவனிடத்தில் இருக்கிறது. நமக்கு இப்போதைக்குத் துணைவர் இல்லை. அவன் முழு ஏற்பாட்டையும் செய்துகொண்டு காத்திருக்கிறான். எனவே, நாம் இந்தப் பாபியையும் (புரோசனனையும்) அந்த துரியோதனன் என்னும் பாபியையும் ஏமாற்றுவதற்காகக் கருத்து வெளிப்படாமல் பற்பல இடங்களில் வசித்தல் வேண்டும். அதன்பொருட்டு நாம் வேட்டையே காரியமாக இந்த பூமியில் திரிவோம். அதனால் நாம் ஓடுவதற்கு வழிகள் தெரிந்து போம். இப்போதே பூமிக்குள் மிக்க ரஹஸ்யமாக ஒரு சுரங்கம் செய்வோம். அதில் நாம் மறைந்து புறப்பட்டுப் போகும்போது நம்மை அக்கினி தகிக்காது. நாம் இந்த வழியில் ஓடுவதைப் புரோசனனும் பட்டணத்திலுள்ள ஜனங்களில் ஒருவரும் அறியாமலிருக்கும்படி நாம் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டும்" என்று சொன்னார். (மேற்படி, பக்: 596)

"குளிரைப் போக்கக்கூடிய ஒன்று காடுகளில் வளைகளுக்குள் பதுங்கியிருக்கும் எலி முதலானவற்றை அழிக்காது. முள்ளம்பன்றி, சுரங்கத்தில் புகுந்துகொண்டு தீயிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். நடந்து போகிறவன் வழிகளை அறிந்துகொள்வான்; நட்சத்திரங்களால் திசைகளை அறிவான்" என்று விதுரன் சொன்னதைப் புரிந்துகொண்டு, எப்போதும் வேட்டையிலேயே பொழுதைக் கழிப்பதுபோல் காடுகளில் உலவிக் கொண்டிருந்தால், காட்டின் பல தடங்களை நுணுக்கமாக அறிந்து கொள்ளலாம். பார்வைக்கு வேட்டைக்குப் போவதைப் போலத் தோன்றினாலும், வரவிருக்கும் ஆபத்துக்கு நாம் மறைமுகமாகத் தயாராகலாம் என்ற நோக்கத்தில் தர்மபுத்திரன் பேசினாலும், பகற்பொழுது முழுவதையும் பாண்டவர்கள் வேட்டையில் கழிப்பதற்கான இன்னொரு காரணமும் விரைவிலேயே வந்து சேர்ந்தது.

பாண்டவர்களுக்கு உதவுவதற்காக விதுரர் கனகன் என்ற சுரங்க வேலைக்காரனை அனுப்பினார். கனகன் என்பவனுடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. அவன் சுரங்கம் தோண்டுகிறான். ஆகவே அவன் தனக்கு வேண்டிய வேலைக்காரர்களையும் கூட அழைத்து வந்திருந்தான் என்பது தெளிவு. கனகன் தர்மபுத்திரனோடு தனியிடத்தில் பேசி, "இந்தப் புரோசனன் கிருஷ்ணபக்ஷம் சதுர்தசி ராத்திரியில் உமது க்ருஹத்தின் இந்த வாயிலில் புரோசனன் தீ வைக்கப் போகிறான்" (மேற்படி, அத்: 159) என்று தெரிவித்தான். அதாவது அடுத்து வரப்போகும் அமாவாசைக்கு முந்தையநாள் இரவு என்பதன்று குறிப்பு. ஏதோ ஒரு அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில் இது நடக்கும் என்று பொருள். அதற்கான வாய்ப்புக்காகத்தான் புரோசனன் காத்திருக்கிறான் என்று உணர்த்தினான்.

இப்போது, இந்த கனகன் சுரங்கம் தோண்ட வேண்டுமானால் அது புரோசனனுக்குத் தெரியாமல் நடக்க வேண்டும். புரோசனனோ, பாண்டவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை விடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறான். பாண்டவர்கள் வேட்டைக்குப் போய்விட்டால்? புரோசனனும் கூடப்போவான். இங்கே கனகனுக்குச் சுரங்கம் தோண்டுவதற்கான வசதியும் வாய்ப்பும் ஏற்படும். பாண்டவர்கள் வேட்டையிலேயே பொழுதைக் கழிப்பதால் உண்டாகும் இன்னொரு லாபம் இது.
இப்படிப் பாண்டவர்கள் வேட்டைக்குப் போய், புரோசனனும் அவர்களைத் தொடர்ந்து போனதும் கனகன் தன் வேலையைத் தொடங்குவான். "அந்த வீட்டின் நடுவில் அதிகப் பெரியதாயிராததும் கதவுகள் உள்ளதும், பூமிக்கு ஸமமாக இருப்பதனால் யாருக்கும் தெரியக்கூடாததுமான துவாரத்தை உண்டாக்கினான். புரோசனனிடம் உள்ள பயத்தினால் அந்த துவாரத்தை மறைவாகவே செய்தான். கெட்ட எண்ணமுள்ள அந்தப் புரோசனன் எப்போதும் அந்த வீட்டின் வாயிலிலேயே வசித்துக் கொண்டிருந்தான். ராஜாவே! அந்தப் பாண்டவர்களனைவரும் இரவுமுழுவதும் ஆயுதபாணிகளாகவே அங்கே வசித்தனர். பாண்டவர்கள் பகலில் வேட்டையாடிக் கொண்டு காட்டுக்குக் காடு திரிந்தனர்" (மேற்படி, பக்: 597). சிக்கனமான வார்த்தைகளால் ஏராளமான விவரங்கள் இந்த வாக்கியங்களுக்குள் செறித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பாருங்கள். On hearing these words, the miner said, 'So be it,' and carefully beginning his work of excavation, made a large subterranean passage. And the mouth of that passage was in the centre of that house, and it was on a level with the floor and closed up with planks. The mouth was so covered from fear of Purochana, that wicked wretch who kept a constant watch at the door of the house. The Pandavas used to sleep within their chambers with arms ready for use, while, during the day, they went a-hunting from forest to forest.

சுரங்கம் பார்வைக்குத் தெரியாத வண்ணமும், அதே சமயம் வீட்டுக்கு நடுவிலும் அமைக்கப்பட்டது. அது நடுவில் அமைந்திருந்தால்தான், தீ வைக்கப்படும்போது பாண்டவர்கள் எங்கிருந்தாலும் நடுப்பகுதிக்கு விரையமுடியும் என்பது காரணம். புரோசனன் எப்போதும் பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு வெளியே படுத்துக் கொண்டான். பாண்டவர்களும், அவசரத்துக்குப் பயன்படும்படியாகத் தங்கள் படுக்கைக்குப் பக்கத்திலேயே ஆயுதங்களை வைத்துக்கொண்டு உறங்கினார்கள். பகலில் காடுகளுக்குச் சென்று வேட்டையாடினார்கள். இப்போது இதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

இப்படியாக அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் ஏதோ ஒரு மாதம் இரண்டு மாதமல்ல, ஒருவருட காலம் வசித்தார்கள். இதற்கு நடுவில் புரோசனனும் சும்மா இருக்கவில்லை. குந்தியையும் பாண்டவர்களையும் கண்காணிப்பதற்காக ஒரு வேட்டுவப் பெண்ணை அமர்த்தியிருந்தான். அவளுக்கும் ஐந்து மகன்கள். அவர்களும் பாண்டவர்களோடு சேர்ந்து வசித்துக் கொண்டிருந்தார்கள். பல பதிப்புகளில் சொல்லப்படுவதைப்போல, அரக்கு மாளிகைகுத் தீ வைப்பதற்கு முதல்நாள் இரவு வந்து தங்கிய ஏதுமறியாதவர்கள் அல்லர் அவர்கள். ஒருவருட காலம் இவ்வாறு கழிந்தது. தீ வைப்பதற்கு உரிய நாளை எதிர்பார்த்துப் புரோசனன் காத்திருந்தான். இந்த ஆட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களால்தான் உயிர்தப்ப முடியும். சிவாஜியைக் கொல்ல அஃப்ஸல் கான் குத்துவாளை மறைத்து வைத்துக்கொண்டும், அஃப்ஸல்கானை வீழ்த்துவதற்காக சிவாஜி புலிநகத்தை அணிந்துகொண்டும், இருவரும் நேசத்துடன் உரையாடிக் கொண்டிருக்கையில் சிவாஜி முந்திக்கொண்டதைப் போன்றதொரு தருணமிது. இப்போது அந்த வேட்டுவப்பெண் பற்றியும் சிறிது மூலநூல் சொல்வதன்படி பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline