Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
காந்தி புன்னகைக்கிறார்
- விழியன்|ஆகஸ்டு 2015|
Share:
சென்னை தாம்பரம் ரயில்நிலையம். ஜமுனா ஜூஸ் லாண்ட். மாலைவேளை. கூட்டம் அதிசயமாகக் குறைச்சலாக இருந்தது. மோகன், பாபு இருவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டு இருந்தனர்.

"அண்ணே! எவ்வளவு ஆச்சு!" - மோகன்

"இரண்டு மாதுளம் - 20 ரூபாய் தம்பி."

"இருபது ரூபாவா, என்ன அண்ணே, மாசம் ஒருக்கா இப்படி வெல ஏத்தறீங்க?"

"த்தோடா! ஊர்ல விலைவாசி ஏறுது, நாங்களும் ஏத்தறோம்பா. எங்க பொழப்பும் போகணும் இல்லை!"

பர்சை துளாவியதில் பதினைந்து ரூபாய் இருந்தது சில்லரையாக. மற்றும் ஒரு ஐநூறு ரூபாய் இருந்தது.

"பாபு ஒரு அஞ்சு ரூபாய் இருக்கா? இல்லைனா, இந்த ஐநூறு ரூபாய் நோட்டை உடைக்கணும்டா."

"இல்லடா, பாங்க்ல எடுத்தாத்தான் உண்டு..."

"சரி, இரு நான் போய் சில்லரை வாங்கிட்டு வரேன்."

கால்மணி நேரமாகச் சில்லரை கிடைக்கவில்லை, கடைசியாக ஒரு கடையில் கிடைத்தது. ஜமுனா ஜூஸ் லாண்ட் கடைக்காரரிடம் காசைக் கொடுத்துவிட்டு வண்டியில் கிளம்பினர். Yamaha R135. மோகன் வண்டி. மோகன் கொஞ்சம் களைப்பாய் இருந்ததால் பாபு ஓட்டிக்கொண்டு வந்தான். தங்கியிருந்த வீட்டின் அருகில் வண்டி சென்றுகொண்டிருந்தது.

"பாபு வண்டியை நிறுத்துடா, சலவைக்குப் போட்ட துணிகளை வாங்கிட்டுப் போயிடலாம். அந்த ரசீதை நீதான வச்சிருக்க, எங்க அது?"

"பின்னாடி பர்சுல இருக்குபார் மோகன். அப்படியே எடு".

சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர்.

வீட்டைத் திறந்து உள்ளே போகும்போதே "பாபு , நீ இப்படி பண்ணுவேன்னு நினைத்துக்கூட பார்க்கலை. கடையில அஞ்சு ரூபா கேட்டதற்கு இல்லைன்னு சொல்லிட்ட. கால்மணி நேரம் தண்டமாப் போச்சி, அதைவிட அலைச்சல். ரசீதை எடுக்கும்போதுதான் உன் பர்சுல கசங்கின அஞ்சு ரூபாய் இருந்ததைப் பார்த்தேன். ஏன், நான் கேட்டபோது கொடுக்கவேண்டியது தானே? உன்னை எவ்வளவு பெருமையா நினைத்திருந்தேன். கிராமத்தில் இருந்து ஒரு இளைஞன் கஷ்ட்டப்பட்டு வந்து, இப்ப ஏதோ சமாளிக்கும் அளவிற்குச் சம்பளம் வாங்கற. நல்ல நண்பனாத்தான உன்னை நடத்தினேன். அப்புறம் எதுக்கு இப்படிச் செய்தாய்? ஏன்டா? பதில் சொல்லு? ஏன் யாரச்சும் இளிச்சிகிட்டு வந்து கொடுத்தாளா?" - அதிகம் பேசிவிட்டான் மோகன். தவிர்த்திருக்கலாம் இந்த வார்த்தைகளை.

பாபு அமைதியாக மனமுடைந்து தன் அறைக்குச் சென்றான். கையில் கிடைத்த புத்தகத்தைப் புரட்டினான். மனம் அதில் லயிக்கவில்லை. நினைவுகள் ஆறுமாதங்களுக்கு பின்நோக்கி நகர்கின்றது. .

வேலை கிடைத்து முதல்முறையாக வீட்டிற்கு மூன்று மாதம் கழித்துச் செல்கிறான். அப்பா பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

"யாருப்பா குமரப்பட்டி இறங்கு, இறங்கு".

பேருந்து நின்றது.

"பாபு! நல்லா இருக்கியா?" பையை வாங்கியபடி குரல் நடுக்கத்திலேயே அப்பாவிற்கு வேகமாக வயோதிகம் வருவதை உணர்ந்தான்.

"நல்லா இருக்கேன். வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க? எங்க மதனும் லதாவும் காணல? ஸ்கூல்ல இருந்து வரலையா?"

அப்பாவும் மகனும் நடையைக் கட்டினர் வீட்டை நோக்கி. தெருவெங்கும் விசாரிப்புகள்.

"பாபு பட்டணம் எப்படி இருக்கு?"

"பாபு தலைவர் விஜய நேரில் பார்த்தாயா?

"கோமதி புள்ளயா? மூணு மாசமாச்சு இல்ல ஊரவிட்டுப் போய்?"

"ஆமா பாட்டி"

வீடுவந்தது. அம்மா திண்ணையில் காத்திருந்தாள். கொஞ்சம் இளைத்துத்தான் போயிருந்தாள். நினைவுதெரிந்த நாள் முதலாய் ஓடாய் உழைப்பவள்.

"பாபு... என்னப்பா இளைத்துவிட்ட? வேளா வேளைக்கு நீ ஒழுங்காச் சாப்பிடுகிறாயா? வா மொதல்ல சாப்பிடு. அப்புறமா மற்றவை பேசுவோம். வேலை எப்படி ராசா இருக்கு? ஒன்னும் பளு ஜாஸ்தி இல்லையே?"

விடாமல் பாசமழை. எல்லாவற்றிற்கும் லேசான புன்னகை.

"அடுத்தமுறை வரும்போது மோகன் தம்பியையும் கூட்டிட்டு வா. தலைக்கு எண்ணெய் வெக்கிறது இல்லையா? இப்படியா வெச்சிருப்ப? நாளைக்கு சீக்காய் போட்டு கசக்கறேன்."

"உங்க அம்மாக்கு தலகால் புரியாது பாபு மகன் வந்த சந்தோஷத்தில. முதல்ல கைகால் கழுவிட்டு வா. சாப்பிடு. அப்புறம் அம்மாவும் பையனும் கொஞ்சிப்பீங்க."
சாப்பிட்டுச் சிறிதுநேரம் கண்ணயர்ந்தான். வறுமை கோரதாண்டவம் ஆடவில்லை என்றாலும் கும்மாங்குத்து ஆடுகிறது. அப்பா மளிகை கடையில் கணக்கராகப் பணிபுரிகிறார். சொல்லும்படியான வருமானம் இல்லை. பாபு தலைதூக்கினால் அவரின் பாரம் குறையும். மதன் 12ம் வகுப்பு படிக்கிறான். லதா பத்தாவது. இந்தக்காலத்தில் மூன்று பிள்ளைகளைப் படிக்கவைப்பது சுலபமா என்ன? பாபுவின் சம்பளம் அவன் மாதச் செலவிற்கும், படிப்பிற்காக வாங்கிய லோனுக்குமே சரியாக இருக்கிறது. பல்லைக் கடித்து மாதம் ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு அனுப்புகிறான்.

"அண்ணா! எப்ப வந்த? நல்லா இருக்கியா?" லதா. மூன்று மாதத்தில் இவள் வளர்ந்திருந்தாள்.

"லதா.. லதா கண்ணு.. ஒழுங்கா படிக்கிறியாமா? எங்க மதன்?"

"அவன் சைக்கிள் பஞ்சராகிடுச்சு. கடைல இருக்கான். என்ன வாங்கிட்டு வந்திருக்க? வாண்ணா நம்ம கடைவரைக்கும் போய்வரலாம். ஒரு நல்ல ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தாண்ணே. பழசு துருப்பிடிச்சுப் போச்சு."

கடைக்குப் போகும்வழியில் மதன் எதிர்பட்டான்.

"என்னடா தள்ளிட்டே வர?"

"நிறைய பஞ்சர் போட்டாச்சாம், அதனால புது ட்யூப்தான் போடணுமாம். 40 ரூபாய் ஆகுமாம். ஒருவாரம் கழிச்சிப் போட்டுக்கிறேன். நீ எப்பண்ணே வந்த?"

"இந்தா 50 ரூபா. போய் முதல்ல ட்யூப மாத்து."

சைக்கிள் இல்லாமல் பள்ளிக்கூடம் போவது எவ்வளவு கஷ்டமென பாபுவிற்குத் தெரியும்.

இரவு உணவிற்குப் பின்னர் பாபு மாடிக்குச் சென்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மதன் தயங்கித் தயங்கி பாபு அருகே வந்தான். "அண்ணா! அடுத்தமுறை வரும்போது உன் பழைய பேண்ட் இரண்டு கொண்டுவா. என் பேண்ட் எல்லாம் சின்னதாகிவிட்டது. டிரவுசர் போட்டா பசங்க கேலி பேசறாங்க. அப்பா அம்மா கிட்ட சொல்லாத. கஷ்டப்படுவாங்க. சரியா?"

"ம்ம்"

இருட்டின் போர்வையில் பாபுவின் கண்ணீர் மறைக்கப்பட்டது.

இரண்டு நாள் போனதே தெரியவில்லை. அம்மாவின் கையால் சாப்பாடு, அப்பாவின் அறிவுரைகள், அனுபவங்கள், தம்பி, தங்கையின் சேட்டைகள், குறும்பு, கோரிக்கைகள், பால்ய சினேகிதர்களின் பேச்சு, அரும்பு வயதில் நோட்டம் விட்ட மஞ்சுவின் கல்யாண சோகங்கள்.... கிளம்பும்போது மீண்டும் லதா நினைவுபடுத்தினாள், தனக்குத் தாவணி வேண்டுமென, யாருக்கும் தெரியாமல்.

அப்பா "பத்திரமா இரு தம்பி. காலம் கெட்டுக்கெடக்கு. மதனுக்கு நல்ல காலேஜ் ஏதாச்சும் விசாரி. காசுக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியல. சரி... சரி... சீக்கிரம் வா, 5.30 மணி பஸ்சை விட்டா ராவுக்குதான் பஸ் இருக்கு" பைகளை சைக்கிளில் வைத்துவிட்டு தள்ளிக்கொண்டு நடந்தார்.

"அம்மா வரேன்மா! உடம்பை பார்த்துக்கொள்."

"எனக்கு என்னபா இருக்கு, நீ பத்திரமா இரு. ரோட்ல போறச்ச பாத்துப் போ" கையில் ஏதோ நொந்தினாள். பேருந்தில் போகும்போதுதான் திறந்து பார்த்தான். கசங்கிய ஐந்து ரூபாய்.

ஆறுமாதம் ஆன பின்னரும் இன்னும் செலவழிக்காமல் வைத்திருந்தான்.

டொக்..டொக்..

நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு இழுக்கப்பட்டான். வெளியே மோகன்.

"சாரிடா பாபு. ஏதோ கோபத்தில் என்னென்னமோ பேசிட்டேன். I am very sorry டா. நீ இதைப்பத்தி என்கிட்ட முன்னரே சொல்லி இருக்க. நான்தான் மறந்துட்டேன். கோபம் கண்ணை மறைத்துவிட்டது."

"மோகன், இது ஒரு சாதாரண காகிதம்தான். இதுக்கு இவ்வளவு மதிப்புத் தரவேண்டிய அவசியம் இல்ல. ஆனா இந்தக் கசங்கின நோட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தெரிவதெல்லாம். அம்மாவோட களங்கமற்ற அன்புதான். எதையும் எதிர்பார்க்காத பாசம்தான், என்னதான் பையன் சொந்தக் கால்ல நின்னாலும் அவ தருகிற பாசத்திற்கு எல்லைகள் இல்லைன்னு சொல்லுகிற காகிதம். இதைப் பார்க்கின்ற போதெல்லாம் என் குடும்பம், வீடு, தம்பி, தங்கை, அப்பாவின் கஷ்டம் எல்லாம் கண்ணுமுன்னாடி வரும். தேவையில்லாமல் செலவுசெய்ய நேரும்போது இந்தக் காசை பர்சில் பார்த்தவுடன் ச்சே… நம்மள நம்பி அங்க நாலு ஜீவன் நிற்கிறது. நமக்கு இந்தச் செலவு தேவைதானா என்று யோசிக்க வைக்கிறது. இப்போதைக்கு என் குடும்பத்தைக் காப்பாத்தணும், அப்புறம் என்னால முடிச்ச மட்டும் சுத்தி இருக்கிறவங்களுக்கு உதவணும். இதுக்கு எல்லாம் உந்துகோல் இந்த ஐந்து ரூபாய் தான்."

பர்சில் இருந்து மேசைமீது வந்த அந்த ஐந்து ரூபாயில் காந்தி புன்னகைக்கிறார்.

விழியன்
Share: 
© Copyright 2020 Tamilonline