|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ  என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம். அதைத் தேடும்பொழுது கீழ்க்கண்ட ஐயங்களுக்கும் விடை தெளிவோம்: 
 ஒற்றை, வெற்றி, கொற்றம் போலும் சொற்களில் இரண்டு றகரத்தையும் (ற், றி) வெவ்வேறாக உச்சரிப்பது ஏன்? ஆங்கிலத்தில் vetri, kotram என்று எழுதுவது அதைத் தெரிவிக்கிறது. பள்ளியில் பயிலும்பொழுது பலருக்கும் இந்த ஐயம் உண்டு. ஒரே எழுத்துக்கு இரண்டு ஓசையுள்ள எழுத்து றகரம்தானோ என்று!
 
 ஆங்கிலமொழியின் t என்ற எழுத்துக்குத் தமிழ்மொழியில் இணையானது டகரமா?
 
 றகரம் ஒருவகை ரகரமா? இல்லையா?
 
 1. றகரத்தை உச்சரிப்பது எப்படி?
 
 றகரத்தை உச்சரிப்பதில் இன்று பெரும்பாலோர் தவறு செய்கின்றனர். றகரத்தைப் பலரும் ரகரத்தை அழுத்திப் படபடக்கச் செய்து ஒலிக்கிறார்கள். ஆனால் றகரம் ரகரத்தின் ஒரு வகை ஓசையில்லை. ரகரம் இடையெழுத்து; அதனால் அறைகுறையாகக் காற்றை அடைத்து வாய்வழியே வெளிவிடும். ஆனால் றகரம் வல்லெழுத்தாகும்; அதாவது அதை உச்சரிக்கும் பொழுது காற்று முழுதும் அடைபட வேண்டும். தொல்காப்பியம் தெளிவாகச் சொல்கிறது றகரம் பிறக்கும் முறையை:
 
 அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
 றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்
 (தொல்காப்பியம்: எழுத்து: 94)
 
 [அணரி = அண்ணாந்து, மேலெழுந்து; ஒற்ற = தொட; ஆயிரண்டும் = அவ்விரண்டும்]
 
 அதாவது, நாக்குநுனி மேலெழுந்து மேற்பல்லின் பின்னுள்ள அண்ணத்தை  ஒற்றுவதால் (தொடுவதால்) பிறக்கும்.
 
 2. ஆக றகரமும் னகரமும் பிறக்கும் முறை ஒன்றே?
 
 றகரமும் னகரமும் ஒரே இடத்தில் பிறப்பவை. அதனால் தான் அவற்றை அடுத்தடுத்துச் சோடியாக மெய்யெழுத்து வரிசையில் கோத்துள்ளது. க-ங, ச-ஞ, ட-ண, த-ந எல்லாம் அப்படியே. றகரத்திற்குக் காற்றை முழுதும் அடைக்கவேண்டும்; னகரம் மெல்லெழுத்து என்பதால் சிறிது மூக்கின் வழியே காற்றை வெளிவிடவேண்டும்.
 
 3. வெற்றி என்பதன் முதல் றகரத்தை (ற்) சரியாகத்தானே ஒலிக்கிறோம்?
 
 ஆமாம், உண்மை. ஆனால் அதை அடுத்து வரும் றி என்னும் எழுத்தைப் படபடத்த ரகரமாக ஒலிக்கின்றனர் பலர். அங்கே தான் பிசகு நேர்கிறது. பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர் அப்படி ஒலிப்பினும் இன்னும் சில வட்டாரங்களில் சரியாக உச்சரிக்கின்றனர்: அதாவது இரண்டாவது றகரத்தையும் முதல் றகரம்போல் உச்சரிக்கின்றனர். பழகாதவர்களுக்கு இது கேட்பதற்கு வேறு மாதிரி இருக்கும். ஒருவிதத்தில் இரண்டு டகரங்களை (வெட்டி) உச்சரிப்பதுபோல் இல்லாமலும் மற்ற விதத்தில் இரண்டு தகரங்களை (வெத்தி) உச்சரிப்பதுபோல் இல்லாமலும் இருக்கும். இரண்டுங் கெட்டான் போல் இருக்கும். அது நுனிநாவில் பேசுவது தெளியக் கேட்கும். அதனால்தான் குற்றம் என்பது சிதையும்பொழுது குத்தம் என்று பேசுகிறது.
 | 
											
												|  | 
											
											
												| 3. ஆங்கில t-யும் தமிழின் றகரமும் எப்படித் தொடர்புடையவை? 
 வெற்றி என்பதற்குச் சரியான ஓசை ஆங்கிலத்தில் vetti என்பதை ஆங்கிலமுறையில் உச்சரித்தால் கேட்கும் ஓசையாகும்! ஆமாம் தமிழ்மொழியின் றகரம் ஆங்கிலமொழியின் t என்பதன் நேராகும்! ஆங்கிலமொழியின் t என்னும் எழுத்தையும் றகரம் போலவே ஒலிக்கவேண்டும்: நுனிநாவை மேற்பல்லின் பின்னுள்ள அண்ணத்தில் (alveola) ஒற்றி ஒலிக்கவேண்டும். சொல்லுக்கிடையில் தகரம் நலிவதுபோல் றகரமும் அவ்வாறே நலியும் (d என்பதுபோல் ஒலிக்கும்).
 
 4. டகரத்தை அல்லவா நாம் ஆங்கில t/d-க்கு இணையாக எழுதுகிறோம்?
 
 ஆங்கிலத்தின் t/d என்னும் எழுத்தை இந்தியமொழியினர் பலரும் இந்திய மொழிகளில் உள்ள டகரம் போல் உச்சரிப்பதால் இதுவும் குழம்பியுள்ளது இந்தியப் பேச்சில். அதாவது இந்தியமொழிகளில் டகரமானது நாநுனியைப் பின்னே வளைத்து வாயுச்சியைத் தொடுவதால் பிறப்பது (retroflex).  இதைத் தவிர்த்துச் சரியாக t/d-ஐ உச்சரித்தால் ஆங்கிலத்தை நுனிநாவில் பேசுவதாகச் சொல்லும் பாணி பிறக்கிறது. இக்காலத்தில் டகரத்தை நாவை வளைத்து உச்சரிக்காமல் இருப்பது பெருகி அது றகரத்தை உச்சரிப்பதுபோல் உச்சரிக்கிறார்கள்! ஆனால் அது றகரத்திற்கு உரியதென்று தெரிவதில்லை! றகரத்தை ரகம்போல் உச்சரிக்கிறார்கள்.
 
 5. சரி, ஒற்றையாக வரும் றகரத்தை எப்படி உச்சரிப்பது?
 
 மேற்சொல்லியதில் மாற்றம் ஏதுமில்லை. அதை ஆங்கிலத்தின் t மற்றும் d போலவே உச்சரிக்கவேண்டும். அதாவது pity, potential, ready, muddy போன்றவற்றில் உள்ள t/d போல் ஒலிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக அறம் என்பதை pa-da-m (அல்லது pa-ta-m) என்பதுபோல் உச்சரிக்கவேண்டும். பறவை என்பதை pa-da-vai (அல்லது pa-ta-vai) என்றும், நன்றி என்பதை na-n-di (அல்லது nan-ti) என்பதுபோலும் உச்சரிக்கவேண்டும்.
 
 6. இப்பொழுது Toronto-விற்கு வருவோமே?
 
 மேற்கூறியவற்றில் இருந்து ஆங்கில t/d-க்குத் தமிழ்மொழியின் நேரொலி றகரம் ஆகும் என்பது தெளிவு. எனவே Toronto என்பதை றொறான்றோ என்றே (சரியாக) உச்சரிப்பவர்கள் எனவே அவ்வாறே எழுதுகின்றனர்! எழுதவேண்டும். உண்மையிலேயே திருத்தமாக எழுதினால் Canada என்பது கனறா என்று எழுதும்.
 
 7. இதைப் பழக என்ன செய்யவேண்டும்?
 
 'செந்தமிழும் நாப் பழக்கம், வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்! முதலில் றகரம் ரகரம் என்பதையும், ஆங்கில t/dக்கும் தமிழ்மொழி டகரத்திற்கும் தொடர்பில்லை என்பதயும் உள்ளத்தில் நிறுத்தவேண்டும். அடுத்து அதற்கிசைய நாவின் நுனியைப் பழக்கினால் எல்லாம் செம்மையாகும்.
 
 பெரியண்ணன் சந்திரசேகரன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |