|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| கப்பலுக்குக் கல்லாய்க் காத்திருந்த பத்தினி 
 [சிலப்பதிகாரத்தின் 'வஞ்சினமாலை' என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். சென்ற தவணையில் கரிகால்வளவன் மகள் ஆதிமந்தி தன் கணவன் ஆட்டனத்தியைக் காவிரியிடமிருந்து மீட்ட நிகழ்ச்சியைப் பார்த்தோம். இப்பொழுது நான்காவது பத்தினியைப் பார்ப்போம்.]
 
 கண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் பிறந்த நான்காவது பத்தினியைப் பற்றிக் கூறுகிறாள். இந்த அதிசயப் பத்தினியைப் பற்றி ஆதிமந்திபோல் மற்ற நூல்களிலிருந்து அதிகச் செய்திகள் கிடைக்கவில்லை. முதலில் கண்ணகியின் சொற்கள்:
 
 ...மன்னி
 மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
 கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள்
 
 (சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை: 15-17)
 
 [மன்னி = தங்கியிருந்து; மலி = நிறைந்திரு; கானல் = கடற்சோலை; கலன் = கப்பல்]
 
 கடல்வாணிகம் பெருகிய பூம்புகார்:
 
 பூம்புகார் கடற்கரையில் அமைந்த துறைமுகப் பட்டினம் என்பது தெரிந்ததே. அதன் இன்னொரு பெயராகிய காவிரிப்பூம்பட்டினம் என்பதில் கடலோர ஊர்ப்பெயரான பட்டினம் என்ற சொல் உள்ளதைக் காணலாம். பூம்புகார் நகரம் கடல்வாணிகத்திற்குப் பெயர்போனது. அங்கே யவனர் என்று அழைக்கும் கிரேக்கரும் உரோமானியரும் வணிகத்திற்கு வந்து மொய்த்ததைச் சிலப்பதிகாரத்திலேயே காண்கிறோம்:
 
 கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
 பயனறவு அறியா யவனர் இருக்கை
 
 (சிலப்பதிகாரம்:5:9-10)
 
 [கயவாய் = கழிமுகம், ஆறு கடலிற் கலக்கும் முகம்; மருங்கு = பக்கம்; பயன் = வளம்; அறவு = அற்றுப்போதல், இன்மை]
 
 “கழிமுகப் பக்கத்தில் காண்பவரைத் தடுக்கும் அழகுடன் செழிப்பான யவனர் குடியிருப்பு” என்று இளங்கோவடிகள் சொல்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| திரைகடலோடிய கணவன்: 
 அத்தகைய பூம்புகாரிலிருக்கும் ஆடவன் ஒருவன் தானும் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஊக்கத்தால் பொருளீட்டத் தானும் கடல்யாத்திரை மேற்கொள்ளத் துணிந்தான். தமிழ்க் குடும்பத் தலைவன் தனக்கென்று மட்டும் பொருளீட்டாமல் அறம் ஆற்றும் நோக்கத்தைப் பெரிதாகக் கருதுபவன் என்பதை இலக்கியங்களால் அறிகிறோம்.
 
 இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல்
 வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
 பொருளே காதலர்
 
 (அகநானூறு:53)
 
 [கரத்தல் = மறைத்தல்; வலிப்ப = நினைப்ப, துணிய]
 
 அதாவது “இல்லாதவர்க்கு இல்லை என்று தம்மால் இயன்றதை மறைத்தலைச் செய்யமுடியாத தம் நெஞ்சம் செல்லத் துணிந்து என்னைவிடப் பொருளே மேல் என்று காதல் கொண்டவர்” தன் தலைவர் என்று அகநானூற்றில் தலைவி ஒருத்தி புலம்புகிறாள்.
 
 பெண்கள் கடற்செலவு செல்வதில்லை:
 
 ஆயினும் அவன் தன் மனையாளை உடனழைத்துச் செல்லமுடியவில்லை. ஏனெனில் அக்காலத்தில் பெண் தன் கணவனுடன் கடற்செலவு செல்வதில்லை. அது பெரிய நெறிமுறையாகவே இருந்தது. அதைத் தொல்காப்பியத்தில் பொருளிலக்கணப் பகுதியில்
 
 முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
 
 (தொல்காப்பியம்:பொருள்:அகம்:37)
 
 [முந்நீர் = கடல்; வழக்கம் = யாத்திரை; மகடூஉ = மகளிர்]
 
 அதாவது “கடல்யாத்திரை பெண்ணோடு இல்லை” என்கிறது. அது அக்காலக் கப்பற் பிரயாணம் குடும்பத்தோடு செல்வதற்கு இசைந்ததாக இல்லை என்பதை அடியாகக் கொண்டதாகும்; கப்பற்பிரயாணம் ஆண்கள் சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தபொழுது பெண்களும் குழந்தைகளும் எங்கே?
 
 எனவே அந்தப் பூம்புகார் வணிகன் மனைவி அவன் சென்றவுடன் அவன் வரும் வரையில் துறைமுகத்தின் அருகில் கடற்கரைக் கானலில் மணலில் அமர்ந்து காத்திருந்தாள். அவள் தோழியும்
 
 ... நீகான்
 மாட ஒள்ளெரி மருங்கு அறிந்து ஒய்ய
 ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
 கழியாமையே அழிபடர் அகல
 வருவர் மன்னால் தோழி
 
 (அகநானூறு: 255)
 
 [நீகான் = மாலுமி; மாட ஒள்ளெரி = கலங்கரை விளக்கம்; ஒய்ய = செலுத்த; அழிபடர் = மிகுந்தசோகம்]
 
 “மாலுமி கலங்கரைவிளக்கம் இருக்கும் பக்கம் அறிந்து கப்பலைச் செலுத்த, வினைசெய்யப் பிரிந்த காதலர் நாள்பல கழிக்காமல் உன் சோகம் அகல வருவார் தோழி!” என்று நம்பிக்கை சொல்லியிருக்கவேண்டும்!
 
 வழிமேல் விழிவைத்த கற்சிலையோ?
 
 எனவே இந்தப் பத்தினியும் துறைமுகத்துக்கு வரும் மரக்கலன்களைப் பார்த்துக்கொண்டு கானலிலேயே தங்கி இருந்தாள்; நாள், வாரம், மாதம் எல்லாம் கடந்து ஆண்டுகள் பல கழிந்தும் அங்கேயே இருந்தாள்; கற்சிலையோ என்று ஊரார் வியக்கும் வண்ணம் ஆழ்ந்த நினைப்பில் அமிழ்ந்து இருந்தாள்!
 
 கடைசியில் அவள் கணவனின் மரக்கலமும் வந்து சேர்ந்தது. அவன் பத்தினியும் தன் கல்லுருவத்தை நீத்து அசைந்தாள்; கணவனைச் சேர்ந்தாள் அந்த மங்கலக் கற்பினாள்!
 
 பெரியண்ணன் சந்திரசேகரன்,
 அட்லாண்டா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |