|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| மதுரையில் பாண்டியன் அவையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தரையில் எறிந்து அதினின்று தெறித்த மாணிக்கப் பரல் பாண்டியன் உதட்டில் பட்டபின் பாண்டியன் அது தன் அரசியின் சிலம்பு இல்லை, தன் பொற்கொல்லன் பொய்சொல்லிக் கோவலனைக் கொன்றுவிட்டான் என்று உணர்கிறான்; உடனே தான் நீதி தவறியதை நொந்து “யானோ அரசன்? யானே கள்வன்!” என்று வினாவிக் “கெடுக என் ஆயுள்” என்று சபித்து உயிர்விடுகிறான். அடுத்து அவன் தேவியும் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று கூறித் தானும் கீழே வீழ்ந்து உயிர்துறக்கிறாள். 
 கண்ணகியின் சபதம்
 
 ஆனால் அவள் இறந்ததை அறியாத கண்ணகி கோபத்தோடு அந்தப் பாண்டிமாதேவியை நோக்கிப் பேசுகிறாள்; அவ்வாறு சொல்லியதுதான் வஞ்சினமாலை என்னும் சிலப்பதிகாரக் காட்சி. வஞ்சினம் என்றால் சூளுரை அல்லது சபதம் என்று பொருள்.
 
 அந்த வஞ்சினமாலையில் முதற்பகுதியில் தான் பிறந்த பூம்புகார் நகரப் பத்தினிப் பெண்களின் சிறப்பைக் கூற அவர்களுள் ஏழு பேரின் நிகழ்ச்சிகளைச் சொல்கிறாள் கண்ணகி; அதன் பின்னர்த் தன் சூளுரையை உரைக்கிறாள்: “யானுமோர் பத்தினியே ஆமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்; என் பட்டிமையும் காண்குறுவாய்” (பட்டிமை = குறும்பு) என்று சபதம் சொல்லி மதுரையை எரிக்கிறாள். இந்த வஞ்சினமாலைக் காதை சிறியதே; 57 அடிகள்தான் உடையது; ஆனால் மிக வலிமை வாய்ந்தது; பெண்கள் இதைத் தினமும் ஓதினால் வீரம் வெளிப்படும்; தீயவர்கள் அணுகார்.
 
 வன்னிமரத்தைத் திருமணச் சாட்சிக்கு வரவழைத்த பத்தினி!
 
 நாம் அந்த ஏழு பத்தினிகளையும் வரிசையாகக் காண்போம். முதலில் வன்னிமரத்தையும் சமையற்கட்டையும் சான்றாக வரவழைத்த பத்தினியைக் காண்போம். கண்ணகி சொல்கிறாள்:
 
 “... .... ... நற்பகலே
 வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக
 முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்...”
 [நற்பகல் = பட்டப்பகல்; மடைப்பளி = மடைப்பள்ளி = சமையற்கட்டு; சான்று = சாட்சி; மொய் குழல் = நிறைந்த கூந்தல்]
 
 அதாவது “பட்டப் பகலில் வன்னி மரத்தையும் சமையற் கட்டையும் சாட்சியாக வரவழைத்து முன்னே நிறுத்திக் காட்டிய நிறைந்த கூந்தலுடையாள்” என்று சொல்கிறாள். அந்த நிகழ்ச்சி என்ன? இது அடிப்படையில் அந்தப் பத்தினிப் பெண்ணை அவள் திருமண நிகழ்ச்சி நடந்த முறையைச் சுட்டி இன்னொருத்தி அவமதித்தபொழுது அவள் தன் கற்பின் வலிமையால் சான்றாக வன்னி மரம் முதலானவற்றை வரவழைத்ததாகும்.
 
 இது பற்றி இரண்டு வகையாகச் சொல்லுவார்கள். இரண்டுமே சிலப்பதிகாரத்திற்குச் சில நூற்றாண்டுகள் பின்வந்த திருஞான சம்பந்தரை (கி.பி. 7-ம் நூற்றாண்டு) ஈடுபடுத்தித்தான் விளக்கமுடிகிறது. ஆயினும் இரண்டுமே அடிப்படையில் ஒற்றுமை உடையவை; ஆகவே அவர்க்குமுன்பு இருந்த வரலாற்றின் அடிப்படையைத் தெளிவாக யூகிக்கமுடிகிறது. மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் தொகுத்துக் கூறுவது திருவிளையாடற்புராணம் என்னும் நூல். இரண்டு நூல்கள் அப் பெயரில் உண்டு. ஒன்று தேவாரச் சுவடிகளைச் சிதம்பரம் கோவில் அந்தணர்கள் பூட்டிவைத்ததால் கறையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மீதியைக் காத்துத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இயற்றியது (கி.பி. 12-ம் நூற்றாண்டு); மற்றது நாயக்கர் காலத்தில் இருந்த பரஞ்சோதியார் இயற்றியது (கி.பி 17-ம் நூற்றாண்டு). நாம் பின்னதிலுள்ள செய்தியைக் காண்கிறோம் இங்கே. அதில் கடைசியாகக் கூறும் திருவிளையாடல் “வன்னியும் கிணறும் இலிங்கமும் வரவழைத்த படலம்” ஆகும்.
 
 பட்டினத்தில் மாமன்மகள் மதுரையில் அத்தை மகன்!
 
 சோழநாட்டின் ஒரு கடற்கரைப் பட்டினத்தில் (பூம்புகாரோ?) இருந்த ஒரு பெரிய வணிகனுக்கும் அவன் மனைவிக்கும் பலநாள் குழந்தைப் பேறில்லை; பிறகு ஒரு பெண்பிள்ளையைப் பெற்றனர். அவ்வணிகனின் சகோதரி மதுரையில் இருந்தாள்; அவள் மகனுக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது; ஆயினும் தவம்புரிந்து பெற்ற தன் மகளை அவனுக்கே கொடுப்பேன் என்று இந்தச் சோழவணிகன் ஊராரிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அப்படியிருக்க அந்தத் திருமணம் நடக்குமுன்னமே வணிகன் இறந்தான்; கற்புடைய அவன் மனைவியும் அவனோடு இறக்கத் துணிந்தாள்.
 
 இதனை ஊரார் ஓலையெழுதி மதுரையில் உள்ள சகோதரி மகனுக்கு அனுப்பி மாமன் மகளை வந்து மணந்து செல்லுமாறும் அவளுடைய அளவற்ற செல்வத்தையும் உடன்கொண்டு செல்லுமாறும் தூதனுப்பினர். அவனும் மிகவருந்திப் பின்னர்த் தாய்மாமன் ஊராகியசோழப் பட்டினத்திற்குச் சிலஉறவினரோடு வந்தான். வந்து மாமனின் இழப்பை விசாரித்தான்; பெண்ணின் உறவினர் அவளை மணந்துகொண்டு மதுரைக்குக் கூட்டிச்செல்ல வேண்டினர்; ஆனால் அவன் அவளை மதுரைக்குக் கொண்டு சென்றபின் அங்கே சுற்றத்தார் முன் மணப்பதாகச் சொன்னான். ஊராரும் அவ்வாறே வணிகன் மகளையும் அவள் செல்வத்தையும் அவள் அத்தைமகனோடு வந்த சுற்றத்தாரோடு மதுரைக்கு அனுப்பினர்.
 
 புறம்புயக்கோவிலில் தங்கலும் பாம்பு கடித்தலும்
 
 மதுரை போகும்பொழுது தன் சுற்றத்தாரை நீங்கள் முன்னே செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டுத் தன் ஏவலாளர் சிலரோடும் தன் மாமன்மகளை மெதுவாக இட்டுச்சென்றான். அப்படிப் போகும் பொழுது நடுவில் புறம்புயம் என்னும் ஊரில் உள்ள கோவிற்கிணற்றில் நீராடி அங்கிருந்த வன்னிமரத்தடியில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அந்தச் சிவன் கோவிற்படியில் தலைவைத்துத் தூங்கினான் இரவில்.
 
 அப்பொழுது பாம்பொன்று அவனைக் கடித்து அவன் மாய்ந்தான். உடனிருந்தோர் எல்லாரும் அரற்றினர். அவன் மாமன்மகளோ அப்பொழுதும் நாணத்தால் அவனைத் தொடாமல் ஒதுங்கி நின்று அம்பு தைத்த மயில்போல் துயருற்று இடிவிழுந்தவள் போல் விழுந்து புலம்பினாள். “என்நாயகனே, ஓ! என்னிரு கண்மணியே, ஓ! மன்னா, ஓ! விடஅரவின் வாய்ப்பட்டாயோ? என்னை விடுத்து எவ்வண்ணம் ஒளிப்பதே, ஓ!” என்று அரற்றினாள்; “தலைவா! பொன்நாட்டின் மடவாரைப் புணர்வதற்கோ என்னை இந்நாட்டில் இருத்தி என வஞ்சித்துப் போயினவாறு என்னே?!” [அரவு = பாம்பு; பொன்நாடு = சுவர்க்கம்] என்று வினவினாள்.
 
 “உன் அன்புமாமன் என்னைப் பெற்றபொழுதே உறவினர் அறிய உனக்கே மனைவியென்று பேசிப் பின்னர்த் தன் மனைவியோடு உயிரிழந்தான்; நானும் அதேபோல்தான்; என் காதலுயிராகிய நீ போகவும் என் வெற்றுடம்பு எப்படியிருக்கும்? நான் உடன் இறப்பேன்!” என்று புரண்டழுதாள்.
 
 ஞானசம்பந்தர் காதுக்கு எட்டியது!
 
 இவ்வாறு அவளும் உடன் இருந்தவர்களும் புலம்புவதைக் கேட்டு அந்த ஊரே விழித்துக்கொண்டது. அச்சமயம் ஊரூராகச் சென்று வரும் திருஞானசம்பந்தர் அங்கே ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அவருக்கு இந்த அழுகையொலி காதில் எட்டியது. ஆள்விட்டு அனுப்பி உசாவிக் கோவிலுக்கு வந்தார்.
 
 வந்து அவளை “நீ யார்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். அவளும் அவரை வணங்கித் தன் குடும்ப மரபையும் தன்பெற்றோர் தன்னை இந்த மருகனுக்கென்றே மணம்பேசியதையும் அவ்வாறு திருமணத்தை முடிக்கும் முன்னரே அவர்கள் இறந்துபோனதையும் பின்னர்த் திருமணத்திற்கு மதுரை செல்லும்பொழுது இங்கே நேர்ந்ததையும் எடுத்துக் கூறினாள்.
 
 பிறகு அவள் உறுதியாகத் தன்மாமன் மகனோடு தானும் இறந்துவிடுவாள் என்பதை உணர்ந்து அவள் காதலனை உயிர்ப்பிப்பதே சரியென்று எண்ணினார் திருஞானசம்பந்தர்; தம் அருளால் அந்த மாமன்மகனை நோக்கிப் பாம்பின் நஞ்சும் அவன் உடலிலிருந்து வெளியேற்றினார். அவன் உறங்கி எழுந்ததுபோல் விழித்தெழுந்தான். எல்லாரும் ஞானசம்பந்தரைத் தொழுதனர். மணமகளும் பொற்கொடிபோல் இன்பமாக ஒருபுறம் ஒதுங்கி நின்றாள்.
 | 
											
												|  | 
											
											
												| சான்றில்லாமல் எப்படி மணப்பேன்?! 
 அவள் தன் மணமகன் இறந்தபொழுதும் மீண்டும் உயிர் பெற்ற பொழுதும் தான் அவனுக்கு மாமன்செல்வியாய் முறையிருந்தும் அவனைத் தீண்டாத நிலைமையும், அன்பும், கற்பின் தன்மையையும் வியப்போடு கவனித்தார் உமையின் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர்.
 
 தலைவனை இறந்தபோதும் தனியுயிர் பெற்ற போதும்
 சிலைநுதல் காதன் மாமன் செல்வியாய் இருந்தும் தீண்டா
 நிலைமையும் அன்பும் கற்பின் நீர்மையும் வியந்து நோக்கி
 மலைமகள் ஞானம் உண்டார் வணிகனை நோக்கிச் சொல்வார்”
 (திருவிளையாடற் புராணம்: 64:28)
 
 [சிலை = வில்; நுதல் = நெற்றி; நீர்மை = தன்மை; மலைமகள் = உமை]
 
 பிறகு அவனை நோக்கிச் சொல்லினார்: “வருக! வணிக மரபிற்கு மணிபோன்றவனே! உன் மாமன் தந்த திருமகள் போலும் இவள் உனக்கு இன்பம் வரும்நாளிலும் துன்பம் வரும் நாளிலுமன்றி என்றுமே உன்னைத் தொட உரிமையுள்ளவள்! இங்கேயே இவளைத் திருமணம் முடித்துக்கொண்டு போவாயாக!” என்றார்.
 
 ஆனால் அவனோ தயங்கினான்; ஞானசம்பந்தரைப் பார்த்துச் சொல்லினான்: “ஐயனே! எம் குல வணிகர்கள் யாருமில்லாமல் வேறு சான்றுகளும் இல்லாமல் இவளை எப்படி மணம் முடிப்பேன்?” என்று வணங்கினான்.
 
 (தொடரும்)
 
 பெரியண்ணன் சந்திரசேகரன்,
 அட்லாண்டா.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |