|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| [முன்பு பெண்ணைக் கொடுப்போரின்றியும் திருமணச் சடங்குவது நடத்துவது உண்டு என்று தொல்காப்பியம் சொல்வதைக் கண்டோம். அடுத்து எழுப்பிய வினா: அவ்வாறு பெற்றோர் கூட இன்றி நடக்கும் திருமணச் சடங்கு ஒரு சடங்கா என்று. அது வேண்டவே வேண்டாமே!] 
 தொல்காப்பியர் சொல்வது: ஆமாம், வேண்டவே வேண்டாந்தான்! திருமணச் சடங்கு என்னும் கரணம் ஒன்று முன்பு இல்லை. பெரியவர்கள் அதை அமைத்தது எப்பொழுது?
 
 "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
 ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
 (தொல்காப்பியம்: பொருள்: 22:4)
 
 [வழு = பிறழ்ச்சி; ஐயர் = சான்றோர்; யா = கட்டு, அமை; கரணம் = சடங்கு; என்ப = என்பர்]
 
 அதாவது "பொய்யும் வழுவி நடத்தலும் தோன்றிய பின்னர் சான்றோர் திருமணச் சடங்கு என்பதை அமைத்தனர் என்று சொல்வர்" என்கிறார். இங்கே கவனிக்க வேண்டியது தொல்காப்பியரே "என்ப" என்று அவருக்கு வெகுகாலம் முன்பு நடந்ததாகக் கேள்விப்பட்டதுபோல் கூறுவதாகும்.
 
 பொய் என்றால் என்ன?
 
 அதற்கு இளம்பூரணர் என்னும் தொல்காப்பிய உரைகாரர் "பொய்யாவது செய்ததனை மறைத்தல்" என்கிறார். இங்கே அந்தப் பொய்யானது: தன்னைக் காதலித்த மங்கையிடம் உன்னுடன் வாழ்வேன் என்று சொல்லிக் காதலித்து அதன் பிறகு "அவ்வாறு காதலிக்கவில்லை, அவள் வேறு யாரோ" என்று மறைத்தலாகும்.
 
 வழு என்றால் என்ன?
 
 "வழுவாவது செய்ததன்கண் நில்லாது தப்பியொழுகுதல்" என்கிறார் இளம்பூரணர். அதாவது காதலிக்கிறேன் என்று சொல்லி உடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவளுடன் வாழ்க்கை நடத்துவதில் நில்லாமல் அவளைக் கைவிட்டு நடப்பதாகும்.
 
 இளம்பூரணர் முதல் ஊழியில் (யுகத்தில்) திருமணச் சடங்கின்றியே நடந்ததென்றும் அடுத்த யுகத்தில்தான் பொய்யும் வழுவும் தோன்றியதால் திருமணச் சடங்கினைப் பெரியோர் கட்டினர் என்று சொல்கிறார். சிலர் ஊழி என்பது முதல் இடை கடை என்ற தமிழ்ச்சங்கக் காலங்களைக் குறிக்கிறது என்றும் கருதுவர்.
 
 கட்டுப்பாட்டு வாழ்க்கை:
 
 இத்தலைப்பில் முதுபெருந்தமிழறிஞர் நா. சுப்புரெட்டியார் சொல்லுவார்: "பழங்காலத்தில் மேற்கூறியவாறு தம் வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்து வாழ்க்கை நடத்தி வருங்கால் காலக் கடப்பில் ஒரு சிலர் நெறிதவறி நடக்கத் தலைப்பட்டனர். காதலித்த மங்கையைக் காதலிக்கவில்லை என்று கூறினர். களவொழுக்கம் ஒழுகி வாழ்க்கை நடத்திய பிறகு துணைவியைக் கைவிடவும் செய்தனர். அதுகண்ட குலப்பெரியோர்கள் இப்பொல்லாத நோய் பலரிடையேயும் பரவக்கூடுமென்று அஞ்சி ஒரு விதக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். பலர் முன்னிலையில் தம் பெண்ணைப் பெற்றோர் உடன்பட்டுக் கொடுக்கவேண்டும் என்ற ஒரு முறையை உண்டாக்கினர். இதைத்தான் தொல்காப்பியர் "கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது"	என்று கற்பியல் முதல் நூற்பாவில் குறிப்பிட்டார். இக்கட்டுப் பாட்டின்படியே எல்லாத் தமிழர்களும் ஒழுகிவந்தனர்." ('தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை', பக்கம் 182, நா. சுப்புரெட்டியார், பழனியப்பா பிரதர்சு, 1964).
 
 திருமணச் சடங்கு கட்டுவது ஆணையா பெண்ணையா?
 
 வழுவி நடப்பவளைக் குலமகளாகத் தமிழர் ஏற்றதில்லை. அவ்வாறு தலைவியர் நடப்பதை நினைத்தும் பார்ப்பதில்லை தமிழிலக்கியம். ஆனால் மற்ற நாகரிகங்கள் அப்படியில்லை. கிரேக்கக் காவியமான "இலியாடு" (Illiad) தன் தலைவியாகத் திராய் நகரத்து அரசியான எலென் என்பவளைக் கொண்டது. அதில் அவள் மெனெலாவுசு என்னும் கணவனோடு வாழ்ந்தாலும் பாரிசு (Paris) என்னும் மாற்றானோடு ஓடிவிடுகிறாள். நம் இலக்கியத் தலைவியைத் தமிழர் அங்ஙனம் நினைக்கவும் மாட்டார்கள். ஏனெனில் தலைவிக்கு உரிய இலக்கணங்களில்
 
 உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினினும்
 செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று
 (தொல்காப்பியம்:களவியல்:22)
 
 என்று கருதுபவர் தமிழர்கள். உயிரினும் சிறந்தது நாணம்; நாணத்தினும் கற்பு உயர்ந்தது என்பது தொல்காப்பியம் கண்ட தலைவியின் குணம். ஆனால் நாமோ சீதை, கண்ணகி என்று கற்பு வழுவாத தலைவிகளை அன்றி வேறறியாத இலக்கியங்கள் படைத்திருக்கிறோம்; அதுமட்டுமன்றி அவர்கள் போன்றவர்களைத் தலைவியராகக் கவிதை பாடுவதே தூயமொழி என்று இலக்கணமே வகுத்துவிட்டோம்! மேற்கண்ட கிரேக்கக் காவியத் தலைவி எலெனுக்கும் தன்னையே மதிக்கத் தோன்றவில்லை: அவளை மீண்டும் அடைவதில்(!) அவள் கணவனுக்கும் ஓடிப்போனவனுக்கும் நடக்கும் போட்டியைக் கவனிக்கும் காட்சியில் அவள் தன்னைப் பொதுமகள் என்றே வைதுகொள்கிறாள்! நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகமில்லை என்ற வை சொல் பொய்யாகுமோ?
 | 
											
												|  | 
											
											
												| சுப்புரெட்டியாரும் தம் மேற்கூறிய விளக்கத்தில் "மங்கையைக் காதலிக்கவில்லை" என்று ஆண் செய்யும் பொய்யைத்தான் சொல்கிறார். எனவே தலைவனைத்தான் தலைவியோ தோழியோ ஐயப்படுவர், அவன் களவில் காதலித்துப் பிறகு ஊரறிய மணவாழ்க்கை நடத்த விரும்பாமல் தலைப்படுகிறானோ என்று. தலைவியைத் தலைவன் பக்கம் அவ்வாறு ஐயப்படுவதில்லை. ஊரார் தலைவியின் காதலை அறிந்து பேசுவதைக் கேட்டும் தலைவன் திருமணத்திற்கு நாள் கடத்துவதைக் கண்டு தலைவியின் தோழி "நீ அன்று கடற்கரைக் கானலிலே இவள் தோள்களின் புத்தம்புது அழகை உண்டு கடல் அறியக் கரி (சான்று) காட்டி ‘உன்னையே மணப்பேன்’ என்று சொன்ன சூளுரையும் பொய்யோ?" என்று கடிந்து அறிவுறுத்துவாள்: 
 தோள் புதிது உண்ட ஞான்றைச்
 சூளும் பொய்யோ கடல்அறி கரியே?
 (அகநானூறு: 320)
 
 [ஞான்றை = காலத்தில்; சூள் = சபதம்; கரி = சான்று, சாட்சி]
 
 ஆனால் அவ்வாறு உண்மையாகவே ஒரு மங்கையைக் காதலித்துப் பிறகு அவளைத் தெரியாது என்று சொன்ன ஒருவனை என்ன செய்தார்கள் சங்கக்காலத்தில்? அதற்குக் கள்ளூருக்குச் செல்வோம்! அங்கே அவன் தலையில் என்ன கொட்டுகிறார்கள் என்று பார்ப்போம்!
 
 பெரியண்ணன் சந்திரசேகரன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |