|  | 
											
											
												| 
                                                        
	                                                        | பவ்ஹாரி பாபா |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2024 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| மகான்களிலும் ஞானிகளிலும் பல வகையானவர்கள் உண்டு. இறைவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டாலும் தம்மை நாடி வந்த பலரது வாழ்க்கை சிறக்கவும், அவர்கள்  ஆன்மீக வாழ்க்கையில் உயர்வடையவும் வழிகாட்ட என்றுமே தயங்கியதில்லை. அப்படிப்பட்ட மகான்களுள் ஒருவர் பவ்ஹாரி பாபா (Pavhari Baba). 
 பவ்ஹாரி பாபா 1798-ல் ஜோன்பூரில் உள்ள பிரேமாபூர் என்ற சிற்றூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவர் மேற்கல்வி பயில்வதற்காக அவரது சித்தப்பாவால் காசிப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நைஷ்டிக பிரம்மச்சாரியான சித்தப்பா பவ்ஹாரி பாபாவைத் தனது வாரிசாகவே கருதி வளர்த்தார். பாபா கல்வியை முடித்தும் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தார். இளவயது முதலே  ஆன்மீக ஆர்வம் கொண்டிருந்த அவர், ஒரு துறவியாக வேண்டுமென விரும்பினார். சித்தப்பா மறைந்ததும் முறைப்படி அவருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்துவிட்டுத் தன் ஊரைவிட்டுப் புறப்பட்டார். பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். கத்தியவாரில் உள்ள கிர்னாரில் ஒரு மகானிடமிருந்து யோக தீட்சை பெற்றார். காசி மகான் ஒருவரிடமிருந்து சன்யாச தீட்சை பெற்றார்.
 
 பின் காசிப்பூர் திரும்பியவர் சித்தப்பா தனக்கு அளித்திருந்த நிலத்தில் கீழே ஒரு குகையை அமைத்துக் கொண்டு அதில் நிஷ்டையில் ஆழ்ந்தார். உணவு, குடிநீர் ஏதுமின்றிக் கடுந்தவத்தில் ஈடுபட்டார்.
 
 ஒருநாள் இரவு பாபா ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது திருடன் ஒருவன் அங்கே வந்தான். கையில் கிடைத்த பொருட்களை மூட்டை கட்டினான். அவன் அவற்றை எடுத்துக்கொண்டு போக இருந்த நேரத்தில் பாபா கண்விழித்தார். உடனே அவன் பயந்துபோய் மூட்டையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான்.
 
 அவன் திருடன் என்பதையும் அவன் வந்த நோக்கத்தையும் அறிந்த பாபா, அவன் கட்டி வைத்திருந்த மூட்டையுடன் அவனை வேகமாகத் துரத்திச் சென்றார். பல மைல் தொலைவு துரத்திய பின் அவனைக் கண்டு, அவனிடம் அந்த மூட்டையை அளித்தார். பின் "இவை அனைத்தும் உன்னுடையவை, என் கடவுளே. இவற்றை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கைகூப்பி வேண்டினார். திருடன் மனம் மாறினான். நாளடைவில் பவ்ஹாரி பாபாவின் சீடர் ஆனான்.
 
 ஜனவரி 1890ல் சுவாமி விவேகானந்தர், நரேந்திரனாக இருந்த காலகட்டத்தில் பவ்ஹாரி பாபாவைச் சந்திப்பதற்காகக் காசிபூர் சென்றார். பாபாவின் எளிமை, அன்பு, அடியவர்களுடன் பழகும் விதம் என அனைத்தும் விவேகானந்தரை மிகவும் கவர்ந்தன. பாபாவால் ஈர்க்கப்பட்ட அவர், அவரது சீடராக ஆகி விடுவது என முடிவு செய்திருந்தார். ஆனால் தீக்ஷைக்கு முந்தைய நாள் அவரது கனவில் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சோகமான முகத்துடன் காட்சியளித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் மட்டுமே தனக்கான குருவாக இருக்க முடியும் என்பதை உணர்ந்த விவேகானந்தர் தீக்ஷையை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் குருதேவருக்கு அடுத்த நிலையில் அவர் பவ்ஹாரி பாபாவை மதித்தார்.
 
 காசிப்பூர் ஆசிரமத்திலேயே சில வாரங்கள் தங்கிய விவேகானந்தர் பவ்ஹாரி பாபாவைப் பற்றி, ‘பவ்ஹாரி பாபா அல்லது காற்றையே உணவாகக் கொண்ட பெரியார்’ என்ற தலைப்பில் சிறு நூல் ஒன்றை எழுதினார். அந்நூலில் சுவாமி விவேகானந்தர் பாபா உணவு உண்ணாமல் இருந்ததைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுகிறார்: "அவர் (பாபா) பகல் முழுவதும் தமது ஆச்ரமத்தில் வேலைசெய்துவிட்டுத் தமக்கு மிகப் பிரியமான ஸ்ரீராமபிரான் பூஜையையும் முடித்துக்கொண்டு நல்ல உணவுகளைச் சமைப்பார். சமையல் செய்வதில் ௮வர் அபூர்வ திறமையைப் பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. பிறகு பகவதார்ப்பணஞ் செய்த உணவு முழுவதையும் தமது நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பார். நாள் முழுவதும் அவர்களுடைய செளகரியங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்து, இரவில் அனைவரும் உறங்கிய பிறகு அவர் மெதுவாக வெளிவந்து கங்கை நதியை நீந்தி மறுகரையை அடைவார். அங்கு இரவு முழுவதையும் தியானம், ஜபம் முதலிய சாதனைகளைச் செய்துகொண்டே கழித்துவிட்டு விடிவதற்குள் ஆச்ரமத்திற்குத் திரும்பிவந்து தமது நண்பர்களுக்கு நித்திரை தெளிவிப்பார். உடனே மறுபடியும் தினசரிக் கடமையான ‘அதிதி பூஜை’ (பிறரைத் தொழுவது) ஆரம்பமாகி விடும்."
 
 பாபாவைப் பற்றி மேலும் சுவாமி விவேகானந்தர், "அவர் உட்கொண்ட உணவோ, அளவிற் குறைந்துகொண்டே போனது; கடைசியில் மிகக் கசப்பான சில தழைகளும் கொஞ்சம் மிளகுமே தினப்படி ஆகாரமாயின. சிலநாள் கழித்து, கங்கை நதியின் மறுகரையிலுள்ள காடுகளுக்கு ஒவ்வோர் இரவும் செல்லும் வழக்கத்தை விட்டு, தமது குகையிலேயே அவர் வெகுநேரம் தங்கியிருக்கலானார். பல நாட்கள், ஏன்? பல மாதங்கள்கூட அவர் குகையினுள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். இங்ஙனம் குகையில் கழித்த நீண்டகாலத்தில் அவர் எதை உட்கொண்டு வாழ்ந்தாரென எவரும் அறியவில்லை; இதன் பயனாகவே ஜனங்கள் பவாஹாரி பாபா என்ற பெயரை அவருக்களித்தனர். (பவ என்றால் காற்று; ஆஹாரி என்றால் புசிப்பவன்; பாபா என்றால் தந்தை அல்லது பெரியார் என்று பொருள்)." இது பேச்சு வழக்கில் பவ்ஹாரி ஆனது.
 
 ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் பவ்ஹாரி பாபாவிடம், "நீங்கள் ஏன் துறவறத்தை விட்டு வெளியே வந்து சமுதாய நலனுக்காகச் சேவை செய்யக் கூடாது?" என்று கேட்டார். அதற்கு பாபா, "உடல் தொடர்பான உதவி ஒன்றுதான் சாத்தியமான உதவி என்று நீங்கள் கருதுகிறீர்களா? உடலின் செயல்பாடு இல்லாமலேயே ஒரு மனம் மற்ற மனங்களுக்கு உதவுவது சாத்தியமில்லையா?" என்று எதிர்க் கேள்வி கேட்டார்.
 
 பாபாவின் பதிலில் இருந்த ஆழ்ந்த உண்மையை உணர்ந்த விவேகானந்தர் மௌனமானார். பின்னொரு சமயம், பாபா அடிக்கடி ஹோமம், பூஜை முதலியன நிகழ்த்துவது பற்றிக் கேட்டதற்கு பாபா, புன்னகைத்தவாறே, "இவை எல்லாம் தனிப்பட்டவரின் நன்மைக்காகச் செய்யப்படுபவை என்று ஏன் நினைக்க வேண்டும்? பிறர் நன்மைக்காக, உலக நலனுக்காக இவற்றையெல்லாம் ஒருவன் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்.
 
 பவ்ஹாரி பாபா காற்றையே உணவாக உண்டு வாழ்ந்தார். அவர் தமது இருப்பித்தை விட்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே தவத்தில் ஆழ்ந்தும், நாடி வரும் மக்களுக்கு நல்வழி காட்டியும் வந்தார். நாளடைவில் மக்கள்முன் தோன்றுவதையும், அடிக்கடி குகையை விட்டோ, அறையை விட்டோ வெளிவருவதையும் குறைத்துக் கொண்டார். தமது வாழ்க்கையின் கடைசிப் பத்து வருடம் முழுவதும் அவர் மனிதர் பார்வைக்கே சிறிதும் அகப்படாமல் மறைந்து வாழ்ந்தார். ௮வரது அறைக்கு முன்புறம் சில கிழங்குகளையும் கொஞ்சம் வெண்ணெயையும் அடியவர்கள் வைப்பர். எப்போதும் சமாதியில் ஆழ்ந்திருக்கும் பாபா இரவில் என்றேனும் சமாதி கலைந்து மேலே வந்தால் அந்த உணவை எடுத்துக் கொள்வார். இல்லாவிட்டால் அவை அறைக்கு வெளியே காய்ந்த நிலையிலேயே இருக்கும். அவர் குகைக்குள் சமாதியில் ஆழ்ந்திருந்தால் இந்த உணவும் தேவைப்படாது.
 
 வாழ்வாங்கு வாழ்ந்த பவ்ஹாரி பாபா, தனது வாழ்வின் நோக்கம் பூர்த்தியானதாக உணர்ந்த நிலையில், ஒருநாள் தனது ஹோமகுண்டத்திலேயே தன் உடலை ஆஹுதி செய்து அக்னிக்குத் தன் உடலைச் சமர்ப்பித்து விட்டார். இது குறித்துச் சுவாமி விவேகானந்தர், "தமது அந்திமகாலம் சமீபித்து விட்டதென்பதை முன்பே அறிந்த அம்முனிவர் தமது மரணத்திற்குப் பின்னும் மற்றவருக்குச் சிறிதும் சிரமமளிக்க மனமற்றவராய்ச் சரீரமும் மனமும் பூரண சுவாதீனத்தில் இருக்கும்பொழுதே தமது யாகத்திற்கு இந்தக் கடைசி அர்க்கியத்தைச் செய்திருக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மகாஞானியின் வாழ்க்கையை நம் போன்ற சாதாரண மானுடர்கள் எப்படி அளவிட முடியும்? மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும் கூடத்தான்.
 
 (தகவல் உதவி: பவாஹாரி பாபா, சுவாமி விவேகானந்தர், தமிழில் இராமகிருஷ்ணன் பி.ஏ. சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு, பதிப்பு: 1929)
 | 
											
												|  | 
											
											
												| பா.சு. ரமணன் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |