|  | 
											
											
												| 
                                                        
	                                                        | சமயோசித புத்தி |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| ஒருமுறை ஒரு வணிகரை அணுகி ஸ்ரீதேவியும் மூதேவியும் தம்மைக் கடவுளர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர் இருவரையும் வணங்கி, "எனது எளிய இருப்பிடத்துக்கு நீங்கள் வருகைதந்த காரணம் என்னவோ!" எனக் கேட்டார். "எங்கள் இருவரில் அதிக அழகானவர் யாரென்று நீங்கள் தீர்ப்புச் சொல்லவேண்டும்" என்றார் ஸ்ரீதேவி. 
 தான் ஓர் இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டதை வணிகர் புரிந்துகொண்டார். எரியும் நெருப்பா, எண்ணெய்ச் சட்டியா என்பதுபோன்ற நிலை! ஸ்ரீதேவிதான் அதிக அழகு என்று கூறினால் மூதேவி கோபித்துக்கொண்டு சபித்துவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால் ஸ்ரீதேவி அவரைவிட்டுப் போய்விடுவாள். ஆனாலும் அவர் சமாளித்துக்கொண்டு, "உங்கள் இருவர்மீதுமே எனக்குப் பெருமதிப்பு உண்டு. நான் சொல்வதைக் கேளுங்கள், அப்போதுதான் நான் சரியாகத் தீர்ப்புச் சொல்லமுடியும்" என்றார்.
 
 இருவரும் ஒப்புக்கொண்டனர். "ஸ்ரீதேவித்தாயே! நீங்கள் வாசற்படிக்குச் சென்று, அங்கிருந்து உள்ளே நடந்து வாருங்கள். மூதேவித்தாயே! நீங்கள் இங்கிருந்து வாசலை நோக்கிச் செல்லுங்கள். நான் உங்கள் இருவரையும் அருகிலிருந்தும் தொலைவிருந்தும் சரியாகப் பார்க்கட்டும்" என்றார் வணிகர்.
 
 இரண்டு தேவியரும் அவர் கூறியபடியே நடந்து காட்டினர். நன்றாகப் பார்த்த வணிகர் "ஸ்ரீதேவியம்மா! நீங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வெகு அழகாக இருக்கிறீர்கள். மூதேவியம்மா! நீங்கள் வீட்டைவிட்டுச் செல்லும்போது அத்தனை அழகு!" என்றார்.
 
 தனக்கு வந்த இக்கட்டை அந்த வணிகர் மிகத்திறமையோடு சமாளித்துவிட்டார். அதேநேரத்தில் அவர் தேவியரின் மனதையும் புண்படுத்தவில்லை. அவருடைய சமயோசித புத்தியை அவ்விருவரும் வெகுவாகப் பாராட்டினர். ஸ்ரீதேவி அவருடைய இல்லத்தில் தங்கியிருக்க, மூதேவி மகிழ்ச்சியோடு வெளியேறினார்.
 
 மிகப்பெரிய பிரச்சனை நம்மை அச்சுறுத்தும்போது, நமக்குள்ளே பார்வையைத் திருப்பி, அமைதியாகச் சிந்தித்தால் ஓர் ஒளிக்கதிர் தோன்றி நமக்கு வழிகாட்டும்.
 | 
											
												|  | 
											
											
												| - ஸ்ரீ சத்திய சாயிபாபா 
 நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2015
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |