|
| தென்றல் பேசுகிறது... |
   |
- | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
அமெரிக்க அரசின் பணிகள் ஸ்தம்பித்துள்ளன (shut down). 6 வாரங்களில் இதன் காரணமாக நாட்டுக்கு GDP இழப்பு $7 பில்லியன் ஆகுமாம். இது 8 வாரங்களில் $14 பில்லியன் மீட்க முடியாத இழப்பாகிவிடுமாம். 670,000 ஃபெடரல் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். மீண்டும் பணிக்குத் திரும்பினாலும் இடைக்கால ஊதியம் கொடுக்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. 730,000 ஃபெடரல் ஊழியர்கள் சம்பளம் பெறாமலே பணியைச் செய்து வருகிறார்கள். எக்கச்சக்கமான இறக்குமதி வரிகள், எக்குத்தப்பான குடிவரவுக் கொள்கை ஆகியவற்றாலும் ஏராளமான பணி இழப்புகளும், பண வீக்கமும், பொருளாதார நலிவும் ஏற்பட்டு வருகின்றன. இந்தக் காரணங்களால் அடி வாங்கியிருக்கும் மெகா நிறுவனங்களிடமிருந்து சுமார் $300 மில்லியன் டாலரை அன்பளிப்பாகப் பெற்று, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் 90,000 ச.அடியில் அதிபரின் கனவுத் திட்டமான 'Golden Ball Room' நிர்மாண வேலை தொடங்கிவிட்டது. இந்த அரசு எதற்கு அதிக முக்கியத்துவம் என்பதைக் கணிக்க இந்த ஒப்பீடு போதுமானது. நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.
★★★★★
பாரத மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளது. வாழ்த்துக்கள். அரையிறுதி வெற்றிக்கு முக்கியப் பங்களித்த ஜெமைமா ரோட்ரிகஸை வியந்து கொண்டிருக்கும் நேரத்தில், இறுதிப் போட்டியில் 58 ரன்களும், 38 ரன்களுக்கு 5 விக்கெட்களும் எடுத்த தீப்தி ஷர்மாவும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. மகளிர் கிரிக்கெட் அதிகம் கவனம் பெறாத நிலையில் இந்த வெற்றி எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் திமிர்ந்து நிற்கவும் வைத்துவிட்டது என்பதில் ஐயமில்லை.
★★★★★
இந்த இதழோடு 'தென்றல்' அமெரிக்காவில் தமிழ் மற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறோம். இதில் கோவிட் தொற்றுக்காலத்துக்கு முன்வரை சுமார் 20 ஆண்டுகள் அச்சிதழாக அமெரிக்காவின் 38 மாநிலங்களைச் சென்றடைந்து கொண்டிருந்தது. விளம்பரதாரர்கள், தென்றல் மீது கொண்ட அன்பினால் தம் ஊரில் அதைக் கடைகளுக்குக் கொண்டு சென்ற நல்லுள்ளங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய சமூக அமைப்புகள் அனைத்துக்கும் மனதின் ஆழத்தில் இருந்து நன்றி கூறி மகிழ்கிறோம்.
★★★★★
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அவதார நூற்றாண்டில், அவரைக் குறித்த நெகிழவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்புக் கட்டுரை இந்த இதழின் மணிமகுடம். அலமாரி பகுதியில் விநோதமான விமானப் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார் 'சோமலெ'. காதலின் மற்றொரு பரிமாணத்தைத் தொடுகிறது 'காயத்ரி' சிறுகதை. வழக்கமான மற்ற அம்சங்கள் அனைத்தும் அணி செய்கின்றன. |
|
|
தென்றல் நவம்பர் 2025 |
|
|
|
|
|
|
|
|
|
|