|
| தென்றல் பேசுகிறது... |
   |
- | ஜூலை 2023 |![]() |
|
|
|
|
 |
"சென்ற முறை நான் இங்கே வந்தபோது உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் பாரதம் 10-வது இடத்தில் இருந்தது. இன்றைக்கு 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் 3-வது இடத்தைப் பிடிக்கும். பாரதம் பெரிதாக மட்டுமல்ல விரைவாகவும் வளர்கிறது" என்று பாரதப் பிரதமர் மோதி அமெரிக்கப் பாராளுமன்றங்களின் கூட்டமர்வில் கூறியபோது யாவரும் எழுந்து நின்று கைதட்டினர். அத்தோடு நிற்கவில்லை. "பாரதம் வளரும்போது உலகமே வளர்கிறது" என்று அறிவித்த அவரது பரந்த பார்வை அங்கிருந்தோரை நிறுத்தாமல் கரகோஷம் செய்ய வைத்தது. உற்சாகம், உழைப்பு, தளராத நம்பிக்கை, சரியான திட்டமிடல் என்னும் இவற்றையெல்லாம் தாண்டி, அனைவருள்ளும் துடிப்பைத் தூண்டும் ஆன்மசக்தியை மோதியிடம் காணமுடிகிறது என்றால் மிகையல்ல. தொழில்நுட்பம், ராணுவம், மாசற்ற ஆற்றல், முக்கியத் துறைகளில் இணைந்து செயலாற்றுதல் என்று பலமுனைகளிலும் ஒப்பந்தங்கள் பாரதம் மற்றும் அமெரிக்காவின் நடுவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்டன. இந்தியாவை அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் எதுவும் தவிர்க்கவோ அசட்டை செய்யவோ முடியாதென்பதை இந்த விஜயம் தெளிவுபடுத்தியது.
★★★★★
ஜூன் 11 அன்று ஃபிலடெல்ஃபியா அருகே I-95 நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுவது, ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்குவது, கணக்கற்ற விமான காலதாமதங்கள் இவற்றையெல்லாம் கேட்டால் எங்கோ பின்தங்கிய நாட்டின் சம்பவங்களோ என்று தோன்றலாம். இல்லை, இவை சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற அசம்பாவிதங்கள் என்றால் நம்பமுடிகிறதா? செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியில் கற்பனைக்கும் எட்டாத ஆச்சரியங்கள் நடைமுறைச் சாத்தியங்களாக மாறிக்கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில் இத்தகைய வழுக்கல்கள் ஏற்க முடியாதவையாக உள்ளன. அரசும் நிர்வாகமும் பெல்ட்டை வரிந்து கட்டிக்கொண்டு சரியான வழிமுறைகளை வகுத்து, கறாராக அமல்படுத்தி நமது தலைகளை மீண்டும் நிமிரச் செய்யவேண்டும்.
★★★★★
பன்முக இலக்கியச் செயல்வீரர் வி.ர. வசந்தனை இந்த இதழில் சந்திக்கிறோம். மலேசியாவின் முன்னோடிப் படைப்பாளி என். பழநிவேலு அவர்களது வாழ்க்கை நமக்கு வியப்பளிப்பதாக இருக்கும். பகவான் ரமணருடனே இருந்து அவரது வாழ்க்கைச் சரிதத்தை முதலில் எழுதிய பி.வி. நரசிம்ம சுவாமி அவர்கள் திடீரென்று காணாமல் போனதைப் படிக்க உங்களுக்கும் ஆச்சரியம் ஏற்படும். சற்றே வித்தியாசமான 'தர்மராஜன்' சிறுகதை உங்கள் மனதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தலாம். |
|
|
வாசகர்களுக்கு குரு பூர்ணிமா மற்றும் மொஹரம் பண்டிகை வாழ்த்துகள்.
தென்றல் ஜூலை 2023 |
|
|
|
|
|
|
|
|
|
|