|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தென்றல் பேசுகிறது... |    |  
	                                                        | - ![]() | ![]() ஆகஸ்டு 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| இம்ரான் கானின் கிரிக்கெட் ஆட்டத் திறனைப் பார்த்து வியந்திருக்கிறோம். அவரது மனிதநேயச் செயல்பாடுகளைக் கேட்டுப் பாராட்டியிருக்கிறோம். நல்ல கம்பீரமான 'ஆல் ரவுண்டர்'. அவர் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் போகிறார். "சக கிரிக்கெட்டரும் எனது நண்பருமான ஒருவர் பாகிஸ்தானியப் பிரதமராவதில் எனக்கு மகிழ்ச்சி" என்கிறார் கபில்தேவ். தேர்தலுக்குப் பிறகு தனது முதல் தொலைக்காட்சி உரையில் இம்ரான் கான், தொழில் செய்வதை எளிமையாக்குதல், வறுமையை ஒழித்தல், ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே சட்டம், லஞ்ச ஒழிப்பு என்பதாகப் பலவகைகளிலும் 'சரியான வார்த்தைகளை' உதிர்த்தார். சீனாவைத் தாராளமாகப் புகழ்ந்த அவர், இந்தியாவைப் பற்றி மிகவும் கவனமாகவே பேசினார். "காஷ்மீரத்து மக்கள் மிகவும் 'மனித உரிமைகள் மீறலுக்கு' உள்ள்ளாக்கப் பட்டிருக்கின்றனர்" என்று சொல்லவும் தவறவில்லை. அதே நேரத்தில் இந்தியாவோடு வர்த்தக உறவுகளைச் சரியாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தன் நாட்டின் ஜனநாயகத்தை வாழ்த்தி அவர் பல்லவி பாடினாலும், அவர் பதவிக்கு வந்ததே பாகிஸ்தானிய ராணுவத்தின் உதவியோடுதான். எனவே தனது திட்டப்படிச் செயல்பட அவருக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கும் என்பதில் பொதுவாகச் சந்தேகம் உண்டு. தனது முதல் உரையில் அவர் "என்னை இந்திய ஊடகங்கள் பாலிவுட் வில்லன் அளவுக்குக் காட்டுகிறார்கள்" என்றார். இல்லை, நாம் அவரைக் கதாநாயகனாகப் பார்க்கவே விரும்புகிறோம். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் இந்தியாவுடன் நட்புறவுக்கும் சரியான காலடிகளை அவர் எடுத்து வைக்கட்டும். அதற்கு நமது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். 
 *****
 
 அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் கிரேக்க நாட்டிலும் அடங்க மறுக்கும் காட்டுத் தீ, ஐரோப்பிய நாடுகளில் மிதமிஞ்சிய வெப்பம், ஜப்பானில் சூறாவளி, இந்தியாவில் பெருவெள்ளம், வேறு பல இடங்களில் நிலநடுக்கம் என்று வரையரையின்றி இயற்கையின் சீற்றம் பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. மனிதன் இயற்கையை அவமதிக்கும் போது (உதாரணங்கள்: பிளாஸ்டிக் சுனாமியில் இயற்கையை அமிழ்த்துதல், கரியமில வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்தாமை) இயற்கை மனிதனை எதிர்த்துச் சீறுகிறது. இயற்கை ஜடமல்ல. அது தனக்கென்று அறிவும், சட்டதிட்டங்களும் கொண்ட முழுமையான அமைப்பு (System) அது. அதில் குறுக்கிட்டால், அதன் போக்கிலேயே "ஆடிக் கறக்காவிட்டால்" அதற்கான விலையை நாம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. மனித இனம் இதனை அறியாமலில்லை. ஆனால், ஒவ்வொருவரும் வேறொருவர் இதைச் செய்யட்டுமே என்று இருப்பதாகத் தோன்றுகிறது. அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கும் அமெரிக்கா, இதையும் போர்க்கால அடிப்படையில் உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்று, இயற்கையின் சமநிலையை மீட்க ஆவன செய்யவேண்டும். வருமுன் காத்தல் அறிவுடைமை.
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| 'Life of Pie' படத்திற்காக இந்தியாவில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்ய இயக்குநர் ஆங் லீ விரும்பியபோது அதற்காக அவர் நாடியது சென்னையின் ஒலி வடிவமைப்பாளரான சாயி ஷ்ரவணத்தைத்தான். அந்தப் படத்தின் இசையமைப்பாளருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது, அதில் இவருக்கும் பங்கு இருந்தது. இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய ஒலிச்சிற்பியாகப் பிரபலமடைந்து வரும் சாயி ஷ்ரவணத்தின் நேர்காணல் பல ஆச்சரியமான விவரங்களை நமக்குத் தருகிறது. 1970லேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த முனைவர் கணபதி சண்முகம் மண்ணியல் (Geology) துறையில் தமது ஆராய்ச்சிகளாலே உலக அளவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். 250 பரதநாட்டிய அரங்கேற்றங்களை நிகழ்த்திச் சாதனை புரிந்துள்ள ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி நிறுவனரும் குருவுமான விஷால் ரமணி அவர்களைப் பற்றிய கட்டுரை முக்கியமானது. இந்திய சுதந்திரநாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில் ஒரு த்ரில்லரைவிட விறுவிறுப்பாக ஓடும் விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர் அவர்களைப் பற்றிய கட்டுரையைத் தருவதிலும் பெருமிதம் அடைகிறோம். 
 வாசகர்களுக்கு இந்தியச் சுதந்திர நாள், ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்.
 
 தென்றல் குழு
 
  ஆகஸ்டு 2018
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |