|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ராதாவும் அவரது மகனும் |    |  
	                                                        | - சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை ![]() | ![]() ஜனவரி 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ். தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை
 
 எனது தாயாரின் தந்தை வழிப் பாட்டியின் பெயர் ராதா. 1865ல் பிறந்த அவருக்கு ஆறுவயதில் திருமணம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணத்தினால் இளம்பெண்கள் விதவைகளாவது தவிர்க்க முடியாததாக இருந்ததது. ராதாவும் தன் இருபதாவது வயதில் விதவையானார். அன்றைய சமூகம் விதவைகளை அன்போடு பார்க்கவில்லை. குடும்பச் சொத்திலும் அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்களில் பலர் வறுமையில் சிரமப்பட்டனர். விதவை மறுமணம் என்பது கேள்விப்பட்டிராத செய்தி.
 
 ராதாவுக்கு ஒரு பெண் இருந்தாள். தவிர, ஒரு சித்தப்பா மகனை ராதா சுவீகாரமாக எடுத்துக் கொண்டார். இந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் எனது பாட்டனரான தாராசந்த் டிக்கு. அவருக்கு ஆங்கிலக் கல்வி கற்பித்து அவனை ஒரு அரசாங்க அதிகாரியாக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். பட்டப் படிப்புக்காக ஸ்ரீ பிரதாப்சிங் கல்லூரிக்கு அனுப்பினார்.
 
 
 ராதாவின் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருந்தது. கணவரின் சொத்திலிருந்து பங்கு எதுவும் கிடைக்கவில்லை. அவருக்குத் தனிப்பட்ட வருமானம் எதுவுமே இல்லை. அவரது பெற்றோர்கள் வைத்துவிட்டுப் போன வீடுதான் இருந்தது. மேலும் அவர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் வீட்டிற்குள்தான் இருப்பார்கள். வெளியே போக நேர்ந்தால் முகத்திரையுடன் பல்லக்கில்தான் செல்வார்கள். இதனால் அவர் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.|  |  | ஒவ்வொரு நாள் இரவும் சாப்பாட்டிற்குப் பிறகு எட்டு மணி முதல் நள்ளிரவு வரை பெண்களின் சங்கீதம் நடைபெற்றது. இதில் ஆடவர்கள் கலந்து கொள்வதற்குத் தடை. |  |  | 
 அண்டை அயலாரின் உதவியுடன் தன் வீட்டின் அடித்தளத்தில் பஷ்மினா என்ற கம்பளியை நூற்க ஆரம்பித்தார். அடுத்த வீட்டுக்காரர் அதைக் கொண்டு போய் விற்று அதற்குரிய தொகையை வாங்கி வந்து அம்மையாரிடம் கொடுப்பார். இப்படி அவர் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினார். தாயாரின் கஷ்டங்களை நன்கு உணர்ந்திருந்த தாராசந்த் நன்கு படித்தார். ஸ்ரீநகர் ஸ்ரீபிரதாப்சிங் கல்லூரியின் பட்டப்படிப்புக்கான தேர்வுகளை எழுதினார். அதே வருடம் வனத்துறை அதிகாரிக்கான தேர்வும் எழுதினார். அந்தத் தேர்வின் சில பகுதி முதல் பாலத்திலும் (Ameera Kadai), சங்கராச்சாரியார் குன்றின் உச்சியிலும் நடந்தது. அவர் தன் தாயாரை நினைத்தபடியே ஓடி முதலிடம் பெற்றார். வன அதிகாரியாகத் தேர்வு பெற்றார். பின் வனப்பராமரிப்பு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
 
 திருமணச் சடங்குகள்
 
 தாத்தா தாராசந்த் டிக்கு என் பாட்டி தாராவை 1900ல் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய, தூரத்து உறவினர்கள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே வந்து திருமணத்துக்கான பணிகளில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு வீடு, சடங்கு முறைப்படி சுத்தம் செய்யப்பட்டது. இதன் பிறகுதான் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்கக் குடும்பத்தினர் வெளியே சென்றனர். திருமணத்திற்கு பதினைந்து தினங்களுக்கு முன்பு கண்ணேறு படுவதை விலக்கவும், தெய்வங்களை அழைப்பதற்குமான நிகழ்ச்சி நடைபெற்றது. அது முதிய மாதர்களால் நடத்தப்பட்டது. சங்கீதம் இசைக்கப்பட்டது. இளம்பெண்கள் வீட்டின் பிரதான வாயிலை அலங்கரித்து வெளிப்புறச்சுவர்களில் புனிதச் சின்னங்களையும், சுலோகங்களையும், ஓம் என்பதையும் வரைந்தனர். மாவிலை, தென்னை ஓலைத் தோரணங்களை வெளிவாயிலில் கட்டினர். பெரிய ரங்கோலிக் கோலங்கள் போடப்பட்டன. அரிசி, காய்கறிகள் சேர்த்துப் பெரிய பானைகளில் கிச்சடி தயாரிக்கப்பட்டு உறவினர்களுக்கும் அண்டை அயல் வீட்டாருக்கும் வழங்கப்பட்டன.
 
 ஒவ்வொரு நாள் இரவும் சாப்பாட்டிற்குப் பிறகு எட்டு மணி முதல் நள்ளிரவு வரை பெண்களின் சங்கீதம் நடைபெற்றது. இதில் ஆடவர்கள் கலந்து கொள்வதற்குத் தடை. ஆனால் எப்படியாவது அவர்கள் கிராதி வழியாகவாவது தலையை நீட்டி எட்டிப் பார்த்து விடுவர். பெண்கள், ஆண்களைப் போல் உடை அணிந்து ஆண் உறவினர்களைக் கேலி செய்து நையாண்டிப் பாடல்களைப் பாடுவர். காதல் பாடல்களையும் பஜனைப் பாடல்களையும் பாடுவர். இதை சமூகக் கட்டுப்பாட்டில் அடக்கி வைக்கப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு என்று கூறலாம். அதன் பின் விருந்து. பெரிய பாத்திரங்களில் நொறுக்குத் தீனிகளை சுற்றிச் சுற்றி வந்து அங்கிருப்போருக்கு வழங்குவர்.
 
 தாரா பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்தாள். தினசரி அவளுக்கு சந்தனம், குங்குமப்பூ, மஞ்சள், பால், வாசனைத் தைலம் ஆகியவை கலந்து குளிக்க வைக்கும் சடங்கு நடந்தது. பாதங்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டது. மணமகளின் பாதமும் அவளுடைய முகம்போலவே வசீகரமாக இருக்க வேண்டும். பாதங்களில் வெடிப்போ வீறலோ தெரியக்கூடாது.
 
 திருமணத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்பாகவே விருந்து நடைபெற்றது. விருந்துக்குப் பிறகு தாராவின் அத்தை முதலில் மணமகளின் பாதங்களிலும் கைகளிலும் மருதாணி இட்டார். இதற்கு பதிலாக மணமகள் குடும்பத்திலிருந்து அன்பளிப்புகள் பெற்றுக் கொண்டாள். பிறகு அவள் விருந்தினர்களுக்கும் மருதாணி வழங்கினாள். விருந்தினர்கள் அவளுக்குச் சிறு தொகை ஒன்றை வழங்கினர். அன்றைய தினம் பெண்களின் சங்கீத நிகழ்ச்சி இரவு முழுவதும் நீடித்தது. இது திருமணத்தின் மகிழ்ச்சிகரமான பகுதியாக இருந்தது.
 | 
											
												|  | 
											
											
												| திருமணத்திற்கு முதல் நாள் 
 திருமணத்திற்கு முதல் நாள் மணமகளைக் நீராட்டும் சடங்கு நடந்தது. அதைத் தொடர்ந்து யாகம். எல்லாப் பொருள்களும் பூஜையில் வைக்கப்பட்டு, குடும்பப் புரோகிதர் கடவுளை வேண்டி அழைத்து மணமகளையும் சீர்வரிசைப் பொருள்களையும் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்தார். காஷ்மீரில் திருமணம் இரவில்தான் நடைபெறுவதுதான் வழக்கம். காலையில் ஐந்து வயது மணமகளைத் தாய்மாமன் தூக்கிச் சென்று, பல்லக்கில் வைத்துக் கணவன் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். பின் மணப்பெண் அன்றைய தினமே திரும்பி வந்து, பூப்படையும்வரை பெற்றோர் வீட்டில் வசிப்பாள்.
 
 பெயர் மாற்றம்
 
 
 ஐந்து வயதுத் தாராவுக்குத் திருமணம் ஆனபின் அவள் பெற்றோருடன்தான் வசித்து வந்தார். ஆயினும் சிவராத்திரி, புத்தாண்டு போன்ற சமயங்களில் புக்ககத்திலிருந்து வரும் பல்லக்கில் கணவன் வீட்டிற்கு அழைத்து வரப்படுவாள். இப்படி வந்திருக்கும் சமயத்தில் தாராவிற்கு ஆடைகள் (துணி) பணம் பரிசுகளாக வழங்கப்படும். அங்குள்ள குழந்தைகளோடு விளையாடுவாள். அந்தப் பையன்களில் யார் அவள் கணவன் என்பதே அவளுக்குத் தெரியாது. உண்மையில் அவள் தன் கணவனின் சிறிய தந்தையர்களில் ஒருவரையே மணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணி இருந்தாள்.|  |  | தனது பதினான்காவது வயதில் தன் மாமியார், நாத்தனாருடன் வசிக்க வந்ததும்தான், அந்த விளையாட்டுப் பையன்தான் தன் கணவன் என்று அடையாளம் தெரிந்து கொண்டாள். |  |  | 
 அடிக்கடி ஒரு சிறுவன் இவளைக் கேலி செய்து கொண்டிருந்ததால் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அவனுடைய முரட்டுத்தனமான நடவடிக்கைகள் பற்றித் தன் தாயாரிடமும் மாமியாரிடமும் புகார் செய்தாள். இறுதியில் தனது பதினான்காவது வயதில் தன் மாமியார், நாத்தனாருடன் வசிக்க வந்ததும்தான், அந்த விளையாட்டுப் பையன்தான் தன் கணவன் என்று அடையாளம் தெரிந்து கொண்டாள். அவனுடைய கவனிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்ததை எண்ணி வருந்தினாள். தாராவின் கன்னிப் பெயர் தேவகி. திருமணத்தின்போது அது தாராவாக மாற்றப்பட்டது. ஏனென்றால் மணமகளுக்குத் திருமணம் புதிய ஜனனம் என்று கருதப்படுகிறது. இந்தப் புதிய அடையாளத்தினால் முந்தைய வாழ்க்கைத் தடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுப் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. புதியபெயர் கணவன் பெயருடன் நன்கு பொருந்துவதாக இருக்கும். எங்கள் அடுத்த வீட்டுக்காரர் துர்காநாத்தின் மனைவி, துர்காவதி. மாமா மோகன்லாலின் மனைவி, மோகன் ராணி. சித்தப்பா பியாரிலாலின் மனைவி, பியாரி. அந்த வகையில் தேவகி, தாராசந்தின் மனைவியாகி, தாராவாக மாறினாள்.
 
 (தொடரும்)
 
 ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
 தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |