|  | 
											
											
												| 
                                                        
	                                                        | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மோசச் சகுனி கெலித்தனன் |    |  
	                                                        | - ஹரி கிருஷ்ணன் ![]() | ![]() பிப்ரவரி 2017 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஜயந்தம் என்ற இடத்தில் தருமபுத்திரனுடைய மயமண்டபத்தை ஒத்த சிறப்புகளை உடைய மண்டபம் கட்டப்பட்டது. நாம் முன்னரே சொன்னதைப்போல ஏற்பாடு செய்தவன் துரியோதனன்; அழைத்தவன் துரியோதனன் அல்லன், திருதிராஷ்டிரன்; அதற்குத் தூது போனவன் விதுரன். மண்டபம் காண வருமாறு அழைத்து, அதன் பின்னணியில் இப்படியொரு நோக்கம் இருப்பதாக விதுரர் சொல்லும்போதே தருமபுத்திரர் 'இதை எப்படி ஏற்பது' என்று தயங்கியதையும் பிறகு 'பெரியவர்கள் என்ன சொன்னாலும் தட்டமாட்டேன்' என்று தான் முன்னர் செய்த சபதத்தின் காரணமாக வருவதற்கு ஒப்புக்கொண்டதையும் கண்டோம். 
 இங்கே வந்து சேர்ந்ததும், ஏற்பாடு செய்த துரியோதனனோ அழைத்தவனான திருதிராஷ்டிரனோ தருமனைச் சூதாட்டத்துக்கு அழைக்கவில்லை; மாறாக சகுனி அழைக்கிறான். இந்தச் சமயத்தில் அங்கே திருதிராஷ்டிரன் உள்ளிட்ட பெரியவர்கள் யாருமில்லை. சூதாட்டம் தொடங்கும்போதுதான் அவர்கள் உள்ளே நுழைகிறார்கள். "சகுனி யுதிஷ்டிரரை நோக்கி, 'ராஜனே! யுதிஷ்டிரனே! சபையில் ஆட்டத்துளி விரிக்கப்பட்டிருக்கிறது. எல்லாரும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காய்களை உருட்டி விளையாடுவதற்குச் சமயம் கொடுக்கவேண்டும்" என்று சொன்னான். (பாரதம், தொகுதி 2, ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 84, பக்: 266). இதைத்தான் பாரதி பாஞ்சாலி சபதத்தில் "கச்சையொர் நாழிகையா - நல்ல - காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்* என்று எழுதுகிறான். கச்சை என்பது மூலத்தில் சொல்லப்பட்டுள்ள சூதாட்டத் துணியைக் குறிக்கும். மூலத்திலும் சரி, பாஞ்சாலி சபதத்திலும் சரி, தருமன் உடனடியாக மறுக்கிறான். யுதிஷ்டிரர், "இவ்வுலக மார்க்கங்களில் எப்போதும் திரிந்துகொண்டிருக்கும் அஸிதரும் தேவலருமாகிய முனி சிரேஷ்டர்கள் 'சூதர்களுடன் மோசமாகச் செய்யும் சூதாட்டமானது பாவம், யுத்தத்தில் தர்மமாக ஜயிப்பதுதான் சிலாக்கியமானது. சூதாடுவது சிலாக்கியமன்று" எனக் கூறுவதாக மூலநூல் குறிப்பிடுகிறது (மேற்படி அத்: 85). பாரதியும் இதை அப்படியே, "தேவ லப்பெயர் மாமுனி வோனும் செய்ய கேள்வி அசிதனு முன்னர்//காவ லர்க்கு விதித்த தந்நூலிற் கவறு நஞ்செனக் கூறினர் கண்டாய்" என்றே பாடுகிறான். இதற்குப் பிறகு நடக்கும் வாதங்கள் பாஞ்சாலி சபதத்தில் அப்படியே இருக்கின்றன. இந்தப்பகுதி முழுக்கவே நேரடி மொழிபெயர்ப்பாகவே கருதத்தக்கது.
 
 இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'கற்றறிந்த பண்டிதர்கள் வாதிடும்போது, நன்கு கற்றவர் வெல்கிறார்; அவரளவுக்குக் கல்லாதவர் தோற்கிறார். வாட்போர் முதலானவற்றிலும் அப்படியே. வித்தை தெரிந்தவன் வெல்கிறான். குறைந்தவன் தோற்கிறான்' என்றெல்லாம் பாரதியின் சகுனி எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறானோ, அது அத்தனையும் மூலத்தில் இருக்கிறது. இதற்குப் பிறகு சகுனி தருமனைச் சீண்டிப் பார்க்கும் classic உத்தியை மூலம் இவ்வாறு சொல்கிறது: "அப்படி நீ என்னிடம் வருவதை மோசமாக நினைப்பாயின், உனக்குப் பயமிருக்குமாயின் ஆட்டத்தை விட்டுவிடு" என்று சொன்னான். பாரதி இதை அப்படியே கவிதை வடிவத்தில் மொழிபெயர்க்கிறான்: "வல்லமர் செய்திடவே - இந்த மன்னர்முன்னே நினை அழைத்துவிட்டேன்//சொல்லுக வருவதுண்டேல் - மனத் துணிவிலையேல் அதுஞ் சொல்லுகென்றான்". இதற்குப் பிறகுதான் தருமன் "அரசனே! அழைக்கப்பட்ட பிறகு நான் திரும்புவதில்லை. இது நான் வைத்துக் கொண்டிருக்கும் விரதம். விதி பெரிது. விதியின் வசத்தில் நான் இருக்கிறேன். எனக்கு எதிர்ப் பந்தயம் வைப்பவன் யாரென்று தெரிந்தபிறகு ஆட்டம் நடக்கலாம்" என்று சொன்னதாக பாரதம் பேசுகிறது (மேற்படி அத்: 85).
 | 
											
												|  | 
											
											
												| அப்போதுதான் துரியோதனன், 'ஆடப்போவது சகுனி; பந்தயம் வைக்கப் போவது நான்' என்பதைச் சொல்கிறான். "யுதிஷ்டிரர் 'ஒருவருக்காக மற்றொருவன் ஆடுவது தவறாக எனக்குத் தோன்றுகிறது. தெரிந்தவனே! (கற்றறிந்தவனே) அதைத் தெரிந்துகொள். அப்படியும் இஷ்டமிருந்தால் நடக்கட்டும்' என்றார்." (மேற்படி அத்: 85). இத்தனையும் முடிந்து, தருமபுத்திரன் சூதாட்டத்துக்குச் சம்மதம் தெரிவித்த பின்னால்தான் திருதிராஷ்டிரனும் மற்ற பெரியவர்களும் அரங்கத்தில் நுழைகிறார்கள். "சூதாட்டம் ஆரம்பிக்கப்படும்போது அவ்வரசர்கள் அனைவரும் திருதிராஷ்டிரனை முன்னிட்டுக்கொண்டு அந்தச் சபைக்குப் போயினர். ஜனமேஜயரே! பீஷ்மர், துரோணர், கிருபர், சிறந்த புத்திமானான விதுரர் இவர்கள் மட்டும் மனத்தில் அதிகத் திருப்தியில்லாமல் திருதிராஷ்டிரனை அனுசரித்தனர்" என்று 86ம் அத்தியாயம் தொடங்குகிறது. 
 இனி, சூதாட்டம் முழுக்கவும் பார்க்கவேண்டாம், நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் ஆட்டம் நெடுகிலும், சகுனி ஒவ்வொரு பொருளை வெல்லும்போதும் வியாசர் தவறாமல் 'சகுனி மோசமான முறையைக் கடைப்பிடித்து வென்றான்' என்பதை ஒத்த வாக்கியத்தைச் சொல்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மாதிரிக்கு ஓரிடம்: "Hearing these words, Sakuni ready with the dice, and adopting unfair means, said unto Yudhishthira, 'Lo, I have won!" www.sacred-texts.com. இந்தச் சுட்டியிலுள்ள பகுதியை மட்டுமாவது படித்துப் பாருங்கள். 'adopting unfair means' என்ற சொற்கள் எப்படித் திரும்பத் திரும்பப் பயில்கின்றன என்பது தெரியும். இந்தத் தவணையின் தலைப்பே பாரதியின் பாஞ்சாலி சபதம் சகுனிக்குக் கொடுக்கின்ற நற்சான்றிதழிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.
 
 இனி நாட்டையெல்லாம் இழந்த தருமன் தம்பியரையும் மனைவியையும் வைத்திழந்த சிக்கலான கட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு முன்னால் சூதாட்ட விதிமுறைகள் என்று பாரதம் நெடுகிலும் படித்துப் புரிந்துகொண்ட சில விதிமுறைகளையும் பேசவேண்டியிருக்கிறது. அவற்றில் முக்கியமான இரண்டைச் சொல்கிறேன். மற்றவற்றை அவசியம் நேரிடும் இடங்களில் பார்ப்போம்.
 
 * சூது சமமானவர்களுக்கு இடையில் மட்டுமே நடக்கவேண்டும். அரசனுக்கும் அரசனுக்கும் இடையில் மட்டும்தான் ஆட்டம் நடக்கலாம். அரசனும் அடிமையும் ஆட நேர்ந்தால், பந்தயம் வைக்காமல்தான் ஆடவேண்டும். (ஒருவேளை அடிமை வென்றுவிட்டால் அரசனுடைய நிலை இக்கட்டாகிவிடும் என்பதால் இந்த விதி.)
 
 *சூதாட அழைத்தவன், ஒருபோதும் 'இன்ன பொருளை வைத்து ஆடு' என்று சொல்லி அதை வைத்து ஆடும்படிக் கேட்கக்கூடாது. பந்தயத்தில் வைப்பவன் தனக்கு உரிமையான பொருளை—உடைமையும் ஆன பொருளை-தன் விருப்பப்படி மட்டுமே வைக்கவேண்டும். அதை, சூதாட அழைத்தவன் வற்புறுத்தியோ ஆசைகாட்டியோ கேட்கின்ற காரணத்தால் வைக்கக்கூடாது; வைத்தால் செல்லாது.
 
 ஆடுபவன் ஒருவன்; பந்தயம் வைப்பன் இன்னொருவன் என்னும்போதே முறைமை தவறிப் போகிறது. மேற்படி முக்கியமான விதிகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதுதான் கேள்வி. இதைத்தான் பாஞ்சாலி சபையில் கேட்கிறாள்.
 
 (தொடரும்)
 
 ஹரி கிருஷ்ணன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |