|  | 
											
											
												| 
                                                        
	                                                        | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: யாருக்கு வேண்டும் மக்கள் ஆதரவு! |    |  
	                                                        | - ஹரி கிருஷ்ணன் ![]() | ![]() ஏப்ரல் 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| துரியோதனனுடைய பொறாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பாரதியின் பாஞ்சாலி சபதமே துரியோதனன் பொறாமையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொறாமை அதற்கெல்லாம் மிகப் பல்லாண்டுகள் முன்னரேயே கிளைபரப்பத் தொடங்கிவிட்டது. பாஞ்சாலியின் திருமணத்துக்கு முன்னர் நடந்ததுதான் அரக்கு மாளிகை சம்பவம். 'ஜது க்ரஹம்' என்று வியாசர் குறிப்பிடும் இந்த மாளிகை வாரணாவதத்தில் கட்டப்பட்டது. இந்த வாரணாவதத்துக்குப் பாண்டவர்களை எப்படியாவது அனுப்புவதற்காக திருதிராஷ்டிரனின் சம்மதத்தைப் பெறுவதற்காக துரியோதனன் துடிக்கிறான். 'அனுப்புவது' என்பது மேம்போக்கான பேச்சு. 'நாடு கடத்துவது' என்பது உண்மையான நோக்கம். இதை exile என்றே கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். விவரங்களைத் தருகிறேன். அதற்கு முன்னர், இதற்கு இட்டுவந்திருக்கிற சம்பவங்களை வரிசைப்படி பார்ப்போம். 
 துரோணரிடம் முறைப்படி பயிற்சி முடிந்ததும், துரோணர் பாண்டவர்களிடமும் கௌரவர்களிடமும் குருதட்சிணையாக துருபத ராஜனை (ஆமாம், அதே பாஞ்சாலன், திரௌபதியின் தகப்பனைத்தான்) சிறையெடுக்கும்படி கேட்கிறார். இது பலருக்கும் தெரிந்த கதைதான். துரோணரும் துருபதனும் இளம்பருவ நண்பர்கள். அந்தச் சமயத்தில், தான் அரசனாகப் பதவியேற்றதும் துரோணருக்குப் பாதிராஜ்யம் தருவதாக துருபதன் சொல்கிறான். இவர்கள் வளர்ந்தபிறகு துரோணர், கிருபரின் தங்கையான கிருபியை மணந்துகொண்டு அஸ்வத்தாமனை மகனாகப் பெறுகிறார். துருபதன் அரசனாகிறான். அஸ்வத்தாமனுக்குப் பாலும் ஊட்டமுடியாத வறிய நிலையில், பழைய நண்பனிடம் உதவி பெறுவதற்காகத்தான் வருகிறார் துரோணர். இந்த, 'பாதிராஜ்ய' வாக்குறுதியை அவர் நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்ளவில்லை. எளியமுறையில் உதவி பெறத்தான் வந்தார். ஆனால், 'நட்பென்பது சமமான அந்தஸ்து உள்ளவர்களிடம் மட்டுமே தொடரக்கூடியது. நான் இளம்பருவத்தில் விளையாட்டாகச் சொன்னதை நினைவு வைத்துக்கொண்டு நட்புப் பாராட்ட வந்தீரோ?' என்று துருபதன் அவரை அவமதித்துவிடுகிறான். தன் சீடர்கள் மூலமாக அவனை வென்று, அவர்கள் குரு தட்சிணையாகச் செலுத்திய அவனுடைய அரசில் பாதியைத் தான் எடுத்துக்கொண்டு மீதியை துருபதனுக்கே கொடுத்து, 'இப்போது நீயும் நானும் சம அந்தஸ்து உள்ளவர்களாகி விட்டோம். எனவே நாம் நண்பர்களே' என்று துரோணர் தன் பகையை முடித்துக்கொண்டார். துருபதனின் கோபம் ஆறவில்லை. யாகம் செய்து துரோணரைக் கொல்வதற்காக திருஷ்டத்யும்னனையும், அர்ஜுனனை மணப்பதற்காக (என்று அவர் நிச்சயித்துக் கொண்டு) திரௌபதியையும் பெறுகிறார். இதைப் பின்னொரு சமயத்தில் முழுமையாகப் பார்ப்போம்.
 
 கௌரவர் நூற்றுவர்தாம் முதலில் துருபதன்மேல் படையெடுத்துச் சென்றனர். அவர்களை துருபதன் எளிதில் முறியடித்து விரட்டிவிட்டான். இப்படிப் போனவர்களில் துரியோதனன், துச்சாதனன் மட்டுமல்லாமல் கர்ணனும் அடக்கம் என்பது நினைவில் வைக்க வேண்டிய ஒன்று. பிறகு பாண்டவர்கள் ஐவரும் படையெடுத்துச் சென்று துருபதனை வெல்கிறார்கள். துரோணர்-துருபதன் கதை ஒருபுறமிருக்க, தருமபுத்திரனுக்கு இளவரசுப் பட்டமும் கட்டப்படுகிறது. (முறைப்படி இளவரசுப் பட்டம் தருமபுத்திரனுக்குக் கட்டப்படுகிறதே ஒழிய, துரியோதனன் ஒரே ஒருநாள்கூட இளவரசனாகவும் பட்டம் கட்டப்பட்ட நிலையில் இருந்ததில்லை என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். டாக்டர் KNS பட்நாயக், துருபதன் வெல்லப்பட்டதும், தருமபுத்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டதும் ஒரே தினத்தில் என்று குறிப்பிடுகிறார். இரண்டு சம்பவங்களின் போதும் தருமபுத்திரனுடைய வயது முப்பத்தோரு வருடமும் ஐந்து நாட்களும் என்று குறிக்கப்படுகிறது. (hindunet.org)
 
 வியாசபாரதம் ஆதிபர்வம் ஸம்பவ பர்வத்தின் 151ம் அத்தியாயத்தில் பின்வருமாறு சொல்லப்படுகிறது: 'கௌரவபுத்திரராகிய யுதிஷ்டிரர் ராஜ்யத்தை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரென்றறிந்து அவருக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகஞ் செய்வதற்காக த்ருதராஷ்டிரன் மந்திரிகளுடன் ஆலோசனை செய்தான். அப்போது, அந்த த்ருதராஷ்டிரனுடைய புத்ரர்கள் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டனர். ராஜரே! பிறகு ஒரு வருஷத்தின் முடிவில் பாண்டுபுத்திரராகிய யுதிஷ்டிரர் த்ருதராஷ்டிரனால் யௌவராஜ்ய பட்டாபிஷேகம் செய்யப்பெற்றார்.' (மஹாபாரதம் தொகுதி 1, பக்கம் 566) இவ்வாறு தருமபுத்திரன் யுவராஜாவாகப் பட்டம் கட்டப்பட்டதை வைசம்பாயனர் ஜனமேஜயருக்குச் சொல்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| தருமபுத்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டதும், மக்கள் பேசிக் கொண்டதை இதற்கு அடுத்ததான 152ம் அத்தியாயத்தில் பாரதம் பின்வருமாறு சொல்கிறது: 'அந்தக் காலத்தில் நகரத்து ஜனங்கள், பாண்டு புத்ரர்கள் குணங்களெல்லாம் சேர்ந்திருப்பதைக் கண்டு அவர்களின் குணங்களைப் பற்றி ஸபைகளில் பேசினார்கள். அப்போது நாற்சந்திகளிலும் ஸபைகளிலும் ஜனங்கள் கூடி, ராஜ்யலாபம் பெற்ற பாண்டு புத்ரர்களில் ஜ்யேஷ்டரான யுதிஷ்டிரரைப் பற்றிப் பேசினர். 'அறிவே கண்ணாக உடைய த்ருதராஷ்டிர ராஜன் கண்ணில்லாமையால் முன்னமே ராஜ்யம் அடைந்திருக்கவில்லை. அவன் இப்போது ராஜாவாவது எப்படி? ஸத்ய ஸந்தரும் சிறந்த நியமம் உள்ளவருமாகிய சந்தனு புத்ரரான பீஷ்மர், முன்னே ராஜ்யத்தை மறுத்துவிட்டு இப்போது ஒருக்காலும் அங்கீகரிக்க மாட்டார்; ஆதலாம் நாம் இளையவரும் முதிர்ந்த குணமுள்ளவரும், ஸத்யமும் தயையும் உள்ளவருமாகிய பாண்டுபுத்ரர்களில் ஜ்யேஷ்டரை இப்போது ராஜ்யாபிஷேகம் செய்யவேண்டும். அதுதான் ஸரி......'என்றனர்.' (மேற்படி, பக்கம் 570) தருமபுத்திரனுக்கு இப்போதுதான் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் உடனடியாகவே, 'அரசு பாண்டுவுக்கு உரியது. திருதிராஷ்டிரனுக்கு உள்ள குறையால் அவனுக்கு முதலில் பட்டம் சூட்டப்படவில்லை. இப்போது மட்டும் அவன் அரசானாக இருப்பது எவ்வாறு? உடனடியாக தருமபுத்திரனையே அரசனாகப் பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும்' என்று பேசத் தொடங்கிவிட்டனர். நீதியை மக்கள் அறிந்துதான் இருந்தனர். ஒருவன் மூத்தவன் என்ற ஒரே காரணமே அவன் அரசனாவதற்குப் போதாது என்பதை நாம் இதற்கு முன்னால் 'மூத்தவனே அவனி காத்தவனா' என்ற தலைப்பில் பேசியிருக்கிறோம். ஒருவன் அரசனாவதற்கு (1) உடல், மனத் தகுதிகளைப் பெற்றிருத்தல், (2) அந்தச் சமயத்தில் அரசனாயிருப்பவன், ஆட்சியை இவனிடத்தில் ஒப்படைக்கச் சம்மதித்தல், (3) சம்பந்தப்பட்டவன் அரசேற்கச் சம்மதித்தல் (4) இதற்கு மக்கள் தங்களுடைய அங்கீகாரத்தை வழங்குதல் என்ற நான்கு கட்டங்களைத் தாண்டியாக வேண்டும் என்பதைப் பார்த்தோம். 
 இங்கேயோ அரசு திருதிராஷ்டிரன் வசத்தில் இருந்தாலும் அவன் முறைப்படி பட்டம் கட்டப்பட்டவன் அல்லன். மக்களோ, அரசை யுதிஷ்டிரன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எல்லா இடங்களிலும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே பொறாமையால் புழுங்கிக் கொண்டிருந்த துரியோதனனுக்கு இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திருதிராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்துப் பின்வருமாறு பேசுகிறான்: 'பாண்டு முன்னே தன்னுடைய குணங்களினால் தந்தையினிடமிருந்து ராஜ்யத்தைப் பெற்றான். உமக்குக் கண்தெரியாமை என்னும் குற்றம் இருந்ததால் உமக்குரிய ராஜ்யத்தை நீர் அடையாமல் போனீர். இந்தப் பாண்டவன் (தருமபுத்திரன்), பாண்டுவின் தாயபாகமாக ராஜ்யத்தை அடைந்தான், அவன் புத்திரன் நிச்சயமாக ராஜ்யத்தை அடைந்தவனே. அவன் புத்திரனும் அவனுக்குப் புத்திரனும் அவ்வாறுதான். அரசரே! ஆதலால் நாங்கள், எங்கள் ஸந்ததிகளுடன்கூட ராஜவம்சமில்லாமல் உலகத்தில் அவமதிக்கப்பட்டிருப்போம். ராஜரே! எப்படிச் செய்தால் நாங்கள் எப்போதும் பிறர் அன்னத்திற்குக் காத்திருந்து நரகம் போன்ற துக்கத்தை அனுபவிக்காமல் இருப்போமோ, அப்படிப்பட்ட நீதியை நீங்கள் செய்யவேண்டும்.' அதாவது, 'உனக்குக் கண்பார்வை இல்லை என்ற ஒரே குற்றத்துக்காக, நாங்களும் எங்கள் சந்ததியினரும் அரசுரிமை பெறாமல் போகக்கூடாது. உமக்கு மட்டும் கண்பார்வை இருந்திருந்தால், இது அத்தனையுமே எங்களைத்தானே சேரவேண்டும்' என்பது துரியோதனனுடைய ஆதங்கம். துரியோதனனுக்கு 'தாங்கள் அரசராக முடியாமல் போயிற்றே' என்பதைக் காட்டிலும், 'தருமபுத்திரனும் அவனுடைய சகோதரர்களும் அரசேற்கிறார்களே' என்ற தவிப்புதான் அதிகமாக இருந்தது. அதுவும் தற்போதைய சூழலில் தருமபுத்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டுள்ளது. மக்கள் அதற்குள்ளாகவே தருமபுத்திரனை அரசனாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இதைத்தான் துரியோதனனால் தாங்கமுடியவில்லை.
 
 மேலும் பார்க்கலாம்...
 
 ஹரி கிருஷ்ணன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |