| 
                                            
												|  |  
												|  |  
	|  |  
	|  |  
												| திருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு திகைப்பு, முரண்கள். ஓர் அதிகாரத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். இன்னொன்றில் சொல்லப்படும் கருத்து நம்மைத் தூக்கிவாரிப் போடச் செய்யும். அது அவர் முதலில் சொன்ன கருத்துக்கு முற்றிலும் எதிரானதாக வந்து விழுந்திருக்கும். இது சரியா அது சரியா என்ற குழப்பம் எழும். இப்படிச் சில எதிர்-இணைகள் திருக்குறளில் உள்ளன. தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன். இவையெல்லாம் முரண்கள் அல்ல. திருவள்ளுவர் வாக்கில் தவறு இருக்கச் சாத்தியமே இல்லை. இப்படிப்பட்ட முரண்களுக்கு வேறோரிடத்தில் விடையை வைத்திருப்பார். வள்ளுவர் வைக்காவிட்டால், உரையாசிரியர் பரிமேலழகர் கட்டாயம் வைத்தே இருப்பார். அந்த விடையைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் உண்மையான ஆர்வலனுக்கு முன்னால் உள்ள சவால். 
 ஆனால், திருக்குறளை வாசிப்பவருக்கு இந்த உண்மையை விளங்கிக் கொள்ளப் பல காலம் பிடிக்கும். நல்லதோர் ஆசானின் வழிகாட்டலின்றி, சரியான பார்வையை அடைவது, குறிப்பாக இந்த மாதிரியான முரண்-இணைக் குறட்பாக்களைப் பொருத்தவரை, சாத்தியமே இல்லை. இப்படிப்பட்ட முரண்-இணைகளில் ஒன்று என்னை வெகுகாலமாகப் படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு நான் தீர்வுகண்ட வழியைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் குறளை நாம் எல்லோருமே, சொல்லிச் சொல்லி, அதன் பொருள் கூர்மை மழுங்கும் அளவுக்கு மிகமிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறோம். எதற்கும், எந்த மாதிரியான சூழலுக்கும் நாவின் நுனியில் வந்து நிற்கும் குறள் இது:
 
 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423)
 
 அறிவுடைமை அதிகாரத்தில் வரும் குறள். என்ன சொல்கிறது என்று நான் விளக்கவே தேவை இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மூன்று மிக அடிப்படையான கருத்துகளை முன்வைக்கிறது இந்தக் குறள். எந்தச் செய்தியைக் கேள்விப் பட்டாலும், அது என்ன செய்தி, சொன்னது யார் என்பதைச் சார்ந்தே அதன் பொருளை மனத்தில் வாங்கிக் கொள்ள முயல்வது நம் எல்லோருக்கும் இயல்புதான். மிகப்பல சந்தர்ப்பங்களில், பேசப்படும் பொருள் என்ன, அதை யார் பேசுகிறார்கள் என்பதன் அடிப்படையில், பொருள் மாறுபாடு ஏற்படும் சாத்தியம் அதிகமாகவே உண்டு. எடுத்துக் காட்டாக, இரண்டு எதிரி நாடுகள் ஒரே செய்தியை வெளியிடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். (எல்லா எதிரி நாடுகளுக்கும் பொருந்துவதுதான் இது) ஒரே செய்தி இரண்டு வேறு வடிவங்களை எடுத்திருக்கும். ஒவ்வொருவருடைய பார்வையிலும், உள்நோக்கத்திலும், உலகத்தின் கண்முன்னால் தம்மை எப்படிக் காட்டிக் கொள்ளவேண்டும் என்று அந்தந்த நாடு அல்லது குழு அல்லது பிரிவு நினைக்கிறதோ, அதற்குத் தகுந்த வகையில் அந்தச் செய்தியின் வடிவம் அமையும். இரண்டு பக்கமுமே--இந்த இரண்டிலும் நேரடியாகத் தொடர்பில்லாதவர்களுக்கு--நியாயம் போலத்தான் காட்சியளிக்கும்.
 
 சற்று எளிமையாகச் சொன்னால், ஏதோ ஒரு வன்முறை நிகழ்ந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட நாடு வெளியிடும் அறிக்கைக்கும், பாதிப்பை ஏற்படுத்திய குழு வெளியிடும் அறிக்கைக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. இரு ஒருவகையில் தன் நிலையின் நியாயத்தை எடுத்து வைத்தால், அது இன்னொரு வகையில் தன் நியாயத்தை எடுத்து வைக்கும்.
 
 ஆக, கேட்பவருக்கு, யார் சொல்வது உண்மை, யார் 'பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே' என்ற வகையில் பேசுகிறார்கள் என்ற மயக்கம் ஏற்படுவது இயல்பு. இது போன்ற சமயங்களில் என்ன செய்கிறோம்? பேசப்படுவது என்ன பொருள்? அதை யார் சொல்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு, 'இது நிச்சயமாக உள்நோக்கம் கொண்டது.' 'இதில் நியாயம் இருப்பது வெளிப்படை' என்ற வகையில் முடிவுக்கு வருகிறோம்.
 
 அது கிடக்கட்டும்.. வள்ளுவர் சொன்னது வேறு எதையோ... அதைக் கொண்டுவந்து இதனுடன் முடிச்சுப் போடுவது எப்படிப் பொருந்தும் என்று ஒருவேளை யாருக்காவது தோன்றினால், வள்ளுவம் கால தேச எல்லைகளைக் கடந்தது என்ற அடிப்படைக் கருத்தை இங்கே நினைவுறுத்த விரும்புகிறேன். அவர் சொல்லியிருப்பது, இன்று நம் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும் ஒட்டியே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.
 
 இப்போது, நம்முடைய மேற்படி எடுத்துக் காட்டில், வள்ளுவர் வலியுறுத்துவதைப் பொருத்தினால், 'சொல்லப்படுவது எந்தப் பொருள் என்பதைப் பார்க்காதே; சொல்பவன் யார் என்பதைப் பார்க்காதே' என்ற கடுமையான இலக்கணத்தை மேற்கொண்டு, 'சொல்லப்படும் பொருளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதைப் பார்' என்ற அறிவுரைக்குச் செவிசாய்ப்போம். 'இந்தச் செய்தியின் பின்னணி இது. இந்தச் சம்பவம் இன்ன காரணத்தால் நடந்தது. இன்ன செயல்பாட்டின் எதிர் விளைவே இந்தச் செயல். ஆனால், முதலில் நடந்த செயலுக்கும் இப்போது நடந்திருக்கும் எதிர்ச் செயலுக்கும் இசைவு அல்லது அளவு (proportion) சமமாக இருக்கிறதா அல்லது அளவுக்கு அதிகமாக, நியாயமற்ற முறையில் இருக்கிறதா, அதற்கு இது தீர்வாகுமா என்றெல்லாம் சிந்திததன் பிறகே, 'அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண' முற்படுகிறோம். இதுவே அறிவுடைமையின் இலக்கணம் என்று வள்ளுவர் வகுத்திருக்கிறார். அது எவ்வளவு துல்லியமாக இன்றும், இனியெப்போதும், விளங்குகிறது, விளங்கப் போகிறது என்றெல்லாம் சிந்தித்தால், இந்த மனிதருடைய தொலைநோக்கும், தன் கருத்தை வெளியிட இவர் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் சொற்களும் நமக்கு மூச்சடைக்க வைக்கின்றன.
 |  
												|  |  
												| ஆனால், இந்த அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னால் கல்லாமையைப் பற்றியும் ஓர் அதிகாரம் உள்ளது. அதில் வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்கிறார். இதையும் நாம் மிக நன்றாகவே அறிவோம். 
 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
 கொள்ளார் அறிவுடை யார் (குறள் 404)
 
 இதற்கான சில உரைகளைப் பார்க்கலாம்:
 'கல்லாதவன் தன்னை அறியாமல் சிலசமயம் வெளிப்படுத்தும் ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை மிகச் சிறந்தது போல் தோன்றினாலும் அதனை அறிவுடையார் நுண்ணறிவு என்று ஏற்றுக் கொள்ளார்.' (திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, அமெரிக்க வெளியீடு).
 '(பிறர் சொல்லித் தந்ததை மனப்பாடம் செய்துகொண்டு) சொந்தக் கல்வியில்லாதவன் மிக நல்ல கருத்துகளைப் பேசிவிட்டாலும் அறிவுடையவர்கள் அவனைக் கற்றவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் (நாமக்கல் கவிஞர்).
 'The man without instruction may be as wise as thou pleasest; but the wise will attach no value to his opinions' (வவேசு ஐயர்).
 'Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not attend to it' (Rev. Drew and John Lazarus).
 
 இந்தக் குறளில், ஒட்பம், அறிவுடையார் என்று இரண்டு தனித்தனிப் பிரிவுகள் தென்படுகின்றன. அப்படியென்றால், ஒட்பத்துக்கும் அறிவுடைமைக்கும் ஏதோ நுட்பமான வேறுபாடாவது இருந்தே ஆகவேண்டும். ஒட்பம் என்றால் என்ன என்பதை மிகப் பெரும்பாலான உரையாசியர்களும் வரையறை செய்யாமல் பலவகையான சொற்களால் அதை விவரிக்க முற்படுகிறார்களே ஒழிய, தீர்மானமாக, ஒட்பம் என்பது இந்த வகை; அறிவுடைமை என்பது இந்த வகையைக் குறிக்கும் என்று பிரித்து அடையாளம் காட்டாமல் விட்டுவிடுகிறார்கள். நாமக்கல் கவிஞர் உரையின் பிற்பகுதி திட்பமாக அமைந்திருந்தாலும், முற்பகுதி, குழப்புகிறது. அடைப்புக் குறிக்குள் அவர் சேர்த்திருக்கும் (பிறர் சொல்லித் தந்ததை மனப்பாடம் செய்துகொண்டு) என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 'பிறர் சொல்லித் தருவதை மனப்பாடம் செய்வதும்' கல்வியே. சொல்லப் போனால், 'கற்றலிற் கேட்டல் நன்று' என்று வள்ளுவர் பேசியிருக்கிறார். நாமக்கல் கவிஞர் உரையில், பிறர் சொல்லித் தந்ததை மனப்பாடம் செய்துகொண்டு, அதாவது, பொருளை மனத்தில் வாங்கிக்கொள்ளாத ஒருவன், என்று வருவித்துக் கொண்டு உரைகாண முயன்றாலும், அவர் கூறும் 'சொந்தக் கல்வி' என்றால் என்ன பொருள் என்பதற்கு இன்னொரு உரையைத்தான் தேட வேண்டியிருக்கிறது. 'ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை' என்ற விளக்கம் 'இன்னதைத்தான் குறிக்கிறது' என்று தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது. வவேசு ஐயர், ரெவரன்ட் ட்ரூ, ஆன்ட்ரூஸ் போன்றவர்கள், தீர்மானமாக 'கல்லாதவனுடைய சொல்லை அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று சொல்லிவிடுகிறார்கள்.
 
 அப்படியானால், 'யார்யார்வாய்க் கேட்பினும்' என்ற இலக்கணத்துக்கு இது பொருந்துகிறதோ? சொல்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, அந்தப் பொருளின் மெய்யான பொருளைக் காண முற்படுவதுதான் அறிவு என்று சொல்லிவிட்டு, இப்போது, கல்லாதவனை அறிவுடையார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால் பொருத்தமாக இல்லையே! In other words, the first statement is unconditional in that it liberates the statement from its subject as well as its speaker, whereas the second statement becomes conditional, in that it excludes an illiterate person. ஒன்று 'கல்லாதான்' என்ற தன்மையை, 'யார்யார்வாய்க் கேட்பினும்' என்பதிலிருந்து விலக்க வேண்டும். அல்லது, யார்யார்வாய் என்பதில் உள்ள யார்யார் (யாராக இருந்தாலும்) என்பது சிலரை விலக்கியே சொல்லப்படுகிறது என்றாவது தெளிவுபட வேண்டும்.
 
 இந்தக் குழப்பம் எனக்கு நெடுநாள் இருந்தது. பேராசிரியர் நாகநந்தி அவர்களை என் இருசக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு அவர் வீட்டிலிருந்து கல்லூரிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு, அப்படியே என் அலுவலகத்துக்குப் போவதை ஒரு வழக்கமாக நான் வைத்திருந்த காலம் அது. ஆசிரியர் வண்டியிலிருந்து கல்லூரி வாசலில் இறங்குகிறார். எனக்கும் அலுவலகம் போகும் அவசரம். அப்போது, அந்த நெருக்கடியில் ஏதோ ஓர் உந்துதலால் இந்தக் கேள்வியை ஆசிரியரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே, 'பரிமேலழகர் உரையை எடுத்துப் பாருங்களேன். அதில் 'ஏரலெழுத்துப் போல்வதொரு விழுக்காடு ஆகலின்' அப்படின்னு சொல்றாரே, ஏரல் எழுத்துன்னா என்னன்னு நினைக்கறீங்க?' என்று கேட்டுவிட்டு அந்த வழக்கமான குறும்புப் பார்வையை வீசினார். பிறகு இருவருக்கும் நேரமாகிவிட்டதால், அவரவர் திக்கில் பிரிந்துவிட்டோம்.
 
 நான் ஒரு குழப்பத்திலிருந்து விடுபட இவர் உதவியை நாடினால் இப்போது ஒரு புதுக்குழப்பம்! ஏரல் எழுத்தாமே! அப்படியென்றால்? இரவு வீடு திரும்பியதும் முதல் காரியமாகச் சென்னை பல்கலைக் கழக லெக்சிகனை எடுத்துப் புரட்டினால், ஏரல் என்பதற்கு snail, கிளிஞ்சில் என்று பொருள் சொல்லியிருக்கிறது! நத்தை, சங்குப் பூச்சி என்றெல்லாம் பொருளை விரித்துக் கொள்ள முடியும்தான். அப்படியானால் ஏரலெழுத்து என்றால்? நத்தை எழுத்தா? அதென்னது அது?
 
 கேள்விக்கு பதிலாக இன்னொரு கேள்வியைப் போட்டுவிட்டு ஆசிரியர் கல்லூரிக்குள் சென்றுவிட்டார். அப்புறம் ஒவ்வொரு முறையும் பேச்சு திசை திரும்பிவிடும். இந்த ஏரல் எழுத்துக்கான பொருளை நான் அவரிடமிருந்து அறிவதற்கு முன்னாலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து அமரலோகமும் சென்றுவிட்டார். இங்கே, விடைகாணாத கேள்விக்குமேல் கேள்வியுடன் நான்!
 
 இந்தக் கேள்வி, எதிர்பாராத கணத்தில், எதிர்பாராத நிகழ்ச்சியின்போது விடுபட்ட கதையுடன் வருகிறேன். சந்திப்போம்.
 
 ஹரி கிருஷ்ணன்
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |