| 
                                            
												|  |  
												|  |  
												|  திரு. “சோமா” சிவராமகிருஷ்ணன் சோமசேகர், உலகப் புகழ் பெற்ற மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில், விண்டோஸைப் பல மொழிகளில் பதிப்பித்தல் மற்றும் விண்டோஸ் வெளியீட்டுப் பொறுப்புள்ள நிறுவனத் துணைத்தலைவராகப் பணி புரிகிறார். இவரது மேற்பார்வையில்  ஹைதராபாதில் உள்ள இந்திய மைக்ரோசா·ப்ட் ஆய்வு மேம்பாட்டு மையம் (R & D Center) செயல்படுகிறது. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியற் கல்லூரியின் முன்னாள் மாணவர். மிகுந்த செல்வாக்குள்ள சாதனையாளர்கள் வரிசையில் வரும் இவரைத் தென்றல் சார்பில் தொலைபேசி மூலம் பேட்டி கண்டோம். 
 தென்றல்: வணக்கம் திரு. சிவராமகிருஷ்ணன் சோமசேகர் அவர்களே! தென்றல் வாசகர்களின் சார்பில் உங்களோடு உரையாடுவதில் மகிழ்கிறோம். உங்கள் பெயரை ஆங்கிலத்தில் Sivaramakichenane Somasegar என்று மைக்ரோசா·ப்ட் வலைத்தளம் குறிப்பிடுகிறது.  இந்தப் பெயருக்குப் பின்னால் ஏதேனும் சுவையான தகவல் உண்டா!
 
 சோமா:(சிரிப்பு) என் இயற்பெயர் சோமசேகர். என் அப்பாவின் பெயர் சிவராமகிருஷ்ணன்.  இந்தியாவில் எஸ். சோமசேகர் என்றிருந்த என் பெயரை இந்த நாட்டில் சிவராமகிருஷ்ணன் சோமசேகர் என்று நீட்டியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாண்டிச்சேரியில். என் அப்பா பிறந்து வளர்ந்த போது அது ·பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்தது.  என் அப்பாவின் பெயரைப் பதிவு செய்தபோது அவர்கள் ·பிரெஞ்சு மொழியில் எப்படி எழுதுவார்களோ அப்படி எழுதியிருக்க வேண்டும். அதை என் தாத்தாவும் அப்பாவும் மாற்றவில்லை. அதனால், என் தலைமுறையிலும் அவர் பெயரை அப்படியே எழுதுகிறேன்.
 
 தென்றல்:உங்கள் குழந்தைப்பருவம், பள்ளி நாட்கள் பற்றி...
 
 சோமா: என் அப்பா, அம்மா இருவரும் பாண்டிச்சேரி. அப்பா அரசு மருத்துவமனையில் தொழில்நுட்பத் தொழிலாளி (medical technician). அம்மா இல்லத்தரசி. நான் முதல் பிள்ளை. 12ம் வகுப்பு வரை பாண்டிச்சேரியில் படித்தேன். பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் எஞ்சினியரிங் (மின்னணு, தகவல் தொடர்புப் பொறியியல்) துறையில் பட்டம் பெற்றேன்.  மேற்படிப்புக்கு அமெரிக்கா வந்தேன். லூயீசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங்கில் மாஸ்டர்ஸ் (முதுநிலைக் கணினிப் பொறியியல்) படிப்பு முடித்து ப·பலோ, நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. (முனைவர்) பட்டப் படிப்புக்கு வந்தேன். சென்னையும், லூயீசியானாவும் போன்ற வெப்பமான இடங்களிலிருந்து பழக்கப்பட்ட எனக்கு ப·பல்லோவின் கடுமையான குளிர் தாங்க முடியவில்லை. ஒரு குளிர்காலத்துக்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பட்டப் படிப்புக்குத் தேவையான பாடங்களைப் படித்து முடித்து விட்டாலும், பட்ட ஆய்வில் மனம் ஈடுபடவில்லை. அப்போதுதான் மைக்ரோசா·ப்டில் வேலை கிடைத்தது.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்ட் வேலை டாக்டர் பட்டத்தை விடப் பெரியது என நினைத்தீர்களா?
 
 சோமா:அப்போது அப்படித் தெரியவில்லை.  அந்த நேரத்தில் பிஎச்.டி. பட்டத்தை விடுவது குழப்பமாகவே இருந்தது. 1988-ல் மைக்ரோ சா·ப்ட் பற்றிப் பல்கலைக்கழகங்களில், ஏதோ எம்.எஸ்.டாஸ் செய்யும் சின்ன நிறுவனம் என்று மட்டும் தெரியும். அதனால், முனைவர் பட்டத்தை முடிக்காமல் மைக்ரோசா·ப்டில் சேர்வது என்ற முடிவு சரிதானா என்று அப்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், எதுவாயிருந்தாலும் ப·பல்லோவின் குளிரைவிடத் தேவலாம் என்ற முடிவுக்கு வந்தேன்! (சிரிப்பு). ஆனால்,  மைக்ரோசா·ப்டில் சேர்ந்த முதல் ஆறு மாதம் பிஎச்.டி. யை முடிக்கலாமா என்று தினமும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும் நாம் வளர்ந்த பண்பாட்டின் தாக்கத்தினால் படிப்பைப் பாதியில் நிறுத்தியது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால், படிப்பை நிறுத்திவிட்டு மைக்ரோசா·ப்ட் போன்ற ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தது சரியா என்று குழம்பினேன்.  அப்போதெல்லாம் டெக் (DEC),  எச்.பி. (HP), ஐ.பி.எம். (IBM) போன்ற நிறுவனங்கள்தாம் பெரிய நிறுவனங்கள்!
 
 தென்றல்: நீங்கள் கிண்டியில் சேர்ந்த போது கம்ப்யூட்டர் அல்லது கணினித் துறை மீது இந்தியாவில் இப்போது இருக்கும் மோகம் இருந்திருக்காதே!
 
 சோமா: இல்லை! கிண்டியில் இருந்து பட்டம் பெற்ற பிறகுதான் நான் முதன் முதலாக பர்சனல் கம்ப்யூட்டர் என்ற தனியாள் கணினியைப் பார்த்தேன்! கிண்டியில் எனக்குத் தெரிந்ததெல்லாம் IBM 360 மெயின் ·ப்ரேம் என்ற தலைமைக் கணினிதான்.  பட்டப் படிப்பில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் இந்தக் கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்பித்தார்கள். பஞ்ச் கார்டு என்ற துளை அட்டையில் துளை போட்டு, கணினி மையத்தில் புரோகிராமை சமர்ப்பித்தால், மறுநாள்தான் கணினியிலிருந்து விடை கிடைக்கும்!
 
 தென்றல்: அமெரிக்க மேற்படிப்புக்கும், மைக்ரோசா·ப்ட் வேலைக்கும் எந்த அளவுக்கு, கிண்டி பொறியியற் கல்லூரியின் பயிற்சி உங்களைத் தயார் செய்திருந்தது?
 
 சோமா: நல்ல கேள்வி! (சிரிக்கிறார்). கிண்டியில் படிக்கும்போது நானே இதைப் பற்றி வியந்ததுண்டு. நமக்கோ கம்ப்யூட்டர் படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அடிப்படைப் பொறியியல், மெக்கானிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ் என்றெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோமே. நாம் படிப்பதற்கும் நாளை செய்யப்போகும் வேலைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று கவலைப் பட்டதுண்டு! ஆனால், நாம் படிக்கும் அடிப்படைப் பொறியியல் கோட்பாடுகள் வீண் போவதில்லை. எப்படிப் பார்த்தாலும், எந்தத் துறையிலும், இவை நமக்குப் புதிர்களை விடுவிக்கும் வழிமுறைகளைக் கற்பிக்கின்றன. கிண்டியில் நான் பெற்ற அடிப்படைப் பயிற்சிதான் எனக்கு அமெரிக்காவில் மிகவும் உதவியாக இருந்தது.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்டில் வேலை கிடைக்க அதன் கடினமான நேர்காணலைத் தாண்டியாக வேண்டுமே! அதைப் பற்றிச் சொல்லுங்களேன்.
 
 சோமா: பொதுவாகப் பல நிறுவனங்களில் நேர்காணலில் ஒரு பாதியாவது உங்கள் அனுபவத்தையும் படிப்பையும் பற்றிக் கேள்வி கேட்பார்கள்.  மறுபாதி புதிர்கள், மற்ற கேள்விகள் கேட்பார்கள். ஆனால், மைக்ரோசா·ப்டில் மிஞ்சிப்போனால் 5% அனுபவத்தையும் படிப்பையும் பற்றிக் கேட்பார்கள். மற்ற நேரமெல்லாம், புதிர்கள் கொடுத்து விடுவிக்கச் சொல்லுவார்கள்; இதை எப்படிச் செய்வாய், அதை எப்படிச் செய்வாய், இதற்கு எப்படிப் புரோக்ராம் (செய்நிரல்) எழுதுவாய், அதற்கு எப்படிப் புரோக்ராம் எழுதுவாய் என்றுதான் கேட்பார்கள். ஆனால், நேர்காண அழைப்பதற்கும் முன்பு தொலைபேசியில் கேள்விகள் கேட்டுத்தான் தேர்ந்தெடுப்பார்கள். என்னையும் முதலில் தொலைபேசியில் அழைத்துப் பல கேள்விகள் கேட்டுத்தான் மைக்ரோசா·ப்டுக்கு நேர்காண வரவழைத்தார்கள். “சும்மா புறப்பட்டு வாருங்கள், நாலைந்து பேரைச் சந்தித்து ‘ஜாலியாய்’ உரையாடலாம். நாங்கள் என்ன செய்கிறோம் என்று சொல்லுகிறோம், உங்களைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்கிறோம்” என்றார்கள். இது வரை மற்ற எந்த நிறுவனத்துக்கும் நேர்காணலுக்கு நான் போனதில்லை என்பதால், இதுதான் எனக்கும் முதலும் கடைசியுமான நேர்காணல் அனுபவம்! நானும் அப்போது மைக்ரோசா·ப்ட் அக்கறைப்பட்டுக் கொண்டிருந்த இண்டெல் 80386 பிராசசரைப் பற்றிப் படித்துக் கொண்டு போனேன்.
 
 நேர்காணல் காலையில் 8:30 மணிக்குத் தொடங்கியது. காலையில் மூன்று பேருடன் தனித்தனியான நேர்காணல். யாருமே, நான் எப்படி இருக்கிறேன், எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறேன், சியாட்டல் பிடித்திருக்கிறதா என்று மருந்துக்கும் அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லை. உனக்கு எந்தக் கம்ப்யூட்டர் லாங்குவேஜ் (கணி மொழி) தெரியும்? இதை எப்படிச் செய்வாய், அதை எப்படிச் செய்வாய், இதற்கு எப்படி ப்ரோக்கிராம் எழுதுவாய், இந்தப் புதிருக்கு விடை என்ன, என்று பூம், பூம், பூம் என்று தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து விட்டார்கள். அடுத்து மதிய உணவுக்கு அழைத்துப் போனார்கள். அங்கேயும் நாப்கின்னில் ஒரு புதிரை எழுதி அதை எப்படி விடுவிப்பாய் என்ற கேள்வி! (சிரிப்பு). சரி, சாப்பிட்டு இளைப்பாரலாம் என்றால், சாப்பாட்டுக்குப் பின்னர் மூன்று பேர் என்னைக் கேள்வி கேட்கத் தயாராக இருந்தார்கள். ஒரு வழியாக, மாலை 7 மணிக்கு எல்லாக் கேள்விகளும் முடிந்தன!
 
 பிறகு ப·பல்லோவுக்குத் திரும்பிய பின், இன்னொரு மேலாளர் அழைத்து, உன்னைப் பற்றி நல்ல கருத்து நிலவுகிறது.  நீ எங்கள் குழுவோடு நேர்காணத் திரும்பி வருகிறாயா என்று கேட்டார்! படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது, வேண்டுமானால் டிசம்பரில் மீண்டும் வருகிறேன் என்றேன். அதுவரை எங்களால் பொறுக்க முடியாது என்று அவர் என்னோடு இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் கேள்விகள் கேட்டார்.  எல்லாவற்றுக்கும் விடையளித்த பின்னால், நீ கட்டாயம் எங்கள் குழுவைச் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நல்ல வேளையாக, மீண்டும் போகத் தேவையில்லாமலேயே வேலை கொடுத்து விட்டார்கள்.
 |  
												|  |  
												| தென்றல்: திறமையுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க இது போன்ற நேர்காணல்கள் மைக்ரோசா·ப்டுக்கு உதவியிருக்கின்றனவா? 
 சோமா: நிச்சயமாக! கல்லூரிகளில் இருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மைக்ரோசா·ப்ட் வியக்கத்தக்க வெற்றி கண்டிருக்கிறது. அனுபவமுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இந்த நேர்காணல்கள் துணை புரிந்திருக்கின்றன. ஆனாலும் அதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.
 
 தென்றல்: பட்டங்கள் பல பெற்ற பேராசிரியர்களையும் இது போலத்தான் கேள்வி கேட்பீர்களா?
 
 சோமா: ஆமாம். அதில்தான் சிக்கலே. 15 வருடம் அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை மதித்து உயர் மட்டக் கருத்துகளைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். எளிமையான, தொடக்க நிலைக் கேள்விகள் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். ஆனால் இன்னாருக்கு இது தெரியும் என்று கற்பனை செய்வதை விட அவரைக் கேள்வி கேட்டு உறுதி செய்வது எங்கள் முறை. இதனால், தவறான முடிவுகள் செய்து எங்களுக்கும் வேலை தேடி வந்தவருக்கும் பிற்கால ஏமாற்றத்தைத் தவிர்க்க முடிகிறது.  இருந்தாலும், அனுபவமிக்கவர்களை நேர்காணுவதை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை வெகு அதிகம் என்று பல கட்டுக் கதைகள் நிலவுகின்றனவே!  ஐஐடி50 விழாவிலும் திரு. பில் கேட்ஸை இது பற்றிக் கேட்டார்கள் அல்லவா! உண்மையில் எவ்வளவு இந்தியர்கள் மைக்ரோசா·ப்டில் இருக் கிறார்கள்?
 
 சோமா: மைக்ரோசா·ப்டில் பல இந்திய வழி வந்த பல ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். மைக்ரோசா·ப்டில் இருக்கும் பல குழுக்களில், மென்பொருள் உருவாக்கும் குழுக்களில்தாம் இந்தியர்களின் பங்கு சற்றுக் கூடுதல். சரியாக எவ்வளவு பேர் என்பது தெரியாது. திரு. பில் கேட்ஸ் ஐஐடி50 விழாவில் மென்பொருள் குழுக்களில் குத்து மதிப்பாக ஒரு 20% ஊழியர்கள் இந்திய மரபினர் என்று மதிப்பிட்டார். அது சரியாகத்தான் இருக்கும்.
 
 தென்றல்: இந்தியர்களின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
 
 சோமா: பொதுவாகவே, கணினித் துறையில் இந்தியர்களின் பங்கு சற்றுக் கூடுதலாக இருக்கிறது. தீமையிலும்  ஒரு நன்மை விளையும் என்று சொல்வதுபோல், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டதால் படித்த இந்தியர்களுக்கு ஆங்கிலப் புலமை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியர்கள் கல்வியில் கணக்குக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், அவற்றில் திறமையுள்ளவர்கள் ஏராளம். மேலும் புதிர்களை விடுவிக்கும் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இவை மூன்றுமே கணினித் துறையில் வளர்ச்சி பெற உதவுகின்றன.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்டில் பல இந்தியர்கள் தொழில்நுட்பத்தில் தொடங்கி நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இன்று உலகில் பெரும் செல்வாக்குள்ள வெகு சில தமிழர்கள் மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தில் இருக்கிறீர்கள். இந்த உயர்வுக்குக் காரணம் இந்தியர்களின் திறமையா, அல்லது மைக்ரோ சா·ப்டா?
 
 சோமா: முதலில் இதில் மைக்ரோசா·ப்டின் பங்கு பற்றிச் சொல்கிறேன். திறமையையும், சாதனைகளையும் உண்மையிலேயே போற்றி மதிக்கும் வெகு சில நிறுவனங்களுள் மைக்ரோ சா·ப்ட் முன்னணியில் இருக்கிறது.  திறமை, கடும் உழைப்பு, சாதனை, செயலாற்றல் இவற்றை மதித்து ஏற்ற பொறுப்புகளுக்குப் பல வாய்ப்புகளை அளிப்பது மைக்ரோசா·ப்டின் கலாசாரம்.  கருமமே கண்ணாக உழைத்து, எவ்வளவு சிறப்பாகச் செயலாற்ற முடியுமோ அதைச் செய்தால், பட்டங்களும், பதவிகளும் தாமே தேடி வரும்.
 
 தென்றல்: கணினித் தொழிலுக்கு வருபவர்களை இன்னும் நன்றாகப் பயிற்றுவிக்க இந்தியக் கல்வியாளர்களுக்கு, குறிப்பாக நீங்கள் படித்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?
 
 சோமா: படைப்பாற்றலை (creativity) ஊக்குவிக்க வேண்டும். இந்தியக் கல்வித் திட்டம் ஒருவரை ஊட்டி வளர்க்கிறது. படிக்க வேண்டிய பாடப் பகுதிகள் என்று தேர்ந்தெடுத்து அவற்றை மனப்பாடம் செய்தால் அதில் வெற்றி பெறலாம். ஆனால், சுயமாகச் சிந்திக்கும் திறமைக்கும், படைப்பாற்றலை வளர்க்கவும் அந்தத் திட்டத்தில் வாய்ப்புகள் இல்லை.  அமெரிக்கத் திட்டம் படைப்பாற்றலை வளர்ப்பதில் வல்லது. ஆனால், சாதாரண மாணவர்களை ஊக்குவிப்பதில் கோட்டை விட்டு விடுகிறது. புத்திசாலிகள் எந்த நாட்டில் இருந்தாலும், தாமே வளர்ந்து விடுவார்கள். சாதாரண மாணவர்களை இந்தியத் திட்டம் உந்துவித்து உயர்த்துகிறது. இரண்டிலுமே நன்மை தீமைகள் இருக்கின்றன. இந்தியத் திட்டத்தில் கூடுதலான விருப்பப் பாடங்கள் நடத்தப் பட வேண்டும்.  நெட்டுரு செய்து ஒப்பிப்பதை விட, புதிது புதிதாக எதையாவது செய்து பார்த்துப் படைப்பாற்றலை வளர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.
 
 தென்றல்: மைக்ரோசா·டின் மென் பொருள்கள் சாதாரண கைக்கணினியிலிருந்து (Handheld Computer), உலகத்தின் பெரும் நிறுவனங்களின் டேட்டா சென்டர் அல்லது தரவு மையம் வரை பரந்து நிறைந்திருக்கின்றன.  இவை அனைத்துக்கும் குவாலிடி கன்ட்ரோல் அல்லது தரக்கட்டுப்பாடு செய்யும் சிக்கல்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
 
 சோமா: எல்லா வகையான வாடிக்கையாளர் களுக்கும் மென்பொருள்கள் உருவாக்கினாலும், அவற்றில் பெரும்பான்மையானவை விண்டோஸ் இயக்குதளத்தில்தான் ஓடுகின்றன. அதனால், ஒவ்வொரு வகையான வாடிக்கையாளர்களும் எப்படி எல்லாம் எங்கள் மென்பொருள்களைப் புழங்குகிறார்கள் என்று ஆராய்கிறோம். பின்னர், வாடிக்கையாளர்கள் புழங்கும் முறைகளைப் பரிசோதிக்கிறோம். பில் கேட்ஸ் சொல்லுவார், மைக்ரோசா·ப்ட் மென்பொருள்களைப் படைக்கும் நிறுவனம் அல்ல, அவற்றைச் சோதிக்கும் நிறுவனம் என்று! (சிரிப்பு). உண்மைதான்.
 
 மென்பொருளை வெளியிட எடுத்துக் கொள்ளும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்குதான் படைப்புக்குத் தேவைப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு எங்கள் வாடிக்கைக்காரர்களுக்கு ஏற்ற தரம் வரும் வரைச் சோதிப்பதிலேயே செலவாகிறது. ஆரம்பத்திலிருந்தே தரத்தை அடிப்படையாக வைத்து மென்பொருள்களைப் படைப்பதிலும், சோதிப்பதிலும், பெரும் முயற்சிகள் செய்கிறோம். பிழைகளே இல்லாத மென்பொருள்களை உற்பத்தி செய்ய முடியுமானால் கொண்டாட்டம் தான். ஆனால், அது என் நோக்கம் அல்ல. என் நோக்கம் எல்லாம், எங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது எந்தப் பிழையும் வரக்கூடாது என்பதுதான்.
 
 தென்றல்: சிலிக்கன் வேல்லி உலகையே மாற்றும் புதுமைப் படைப்புகளை அறிமுகப்படுத்தும் தன்மையைக் கொண்டாடும் இடம். இவர்கள் தங்கள் புதுமைப் படைப்புகளை மைக்ரோசா·ப்ட் கவர்ந்து கொண்டு தங்களை விடச் சிறப்பாகச் செய்கிறது என்று எண்ணுகிறார்கள். மைக்ரோசா·ப்டின் தன்மை என்ன? புதுமையா, உற்பத்தியா?
 
 சோமா: (சிரிக்கிறார்) நான் புதுமையைப் பற்றி அக்கறைப்படுவதை விட புதுமையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் பொருள் களை உற்பத்தி செய்வதைப் பற்றிக் கூடுதலாக அக்கறை கொள்பவன். புதுமைப் படைப்பாற்றல் இல்லாமல் எந்த நிறுவனமும் இயங்க முடியாது என்பதும் தெரிந்ததே. ¦க்ஷராக்ஸ்  நிறுவனத்தின் பாலோ ஆல்டோ மையம் Graphical User Interface (படமுகப்பு) கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் அந்தப் படமுகப்பைப் பல நூறு மில்லியன் வாடிக்கைக்காரர்களின் கரங்களில் சேர்த்துக் கணினியை எளிமைப் படுத்துவது மைக்ரோசா·ப்ட் அல்லவா?
 
 மைக்ரோசா·ப்டின் தன்மை என்னவென்றால் நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனம். எங்கள் வாடிக்கைக்காரர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது எங்கள் நோக்கம். ஒரு கணக்கின் படி எங்கள் வாடிக்கைக்காரர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் எங்கள் மென்பொருளைப் புழங்குகிறார்கள். ஒரு சாதாரண மனிதர் ஒரு நாளைக்குப் பதினாறு மணி நேரம் விழித்திருக்கிறார். அவர் விழித்திருக்கும் நேரம் எல்லாம் அவரது வாழ்க்கையை மேம்படுத்த உதவும் மென்பொருள்களை உருவாக்குவது தான் எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் அடிப்படைத் திறமை.
 
 நான் ஏன் 15 ஆண்டுகளாக மைக்ரோசா·ப்டில் இருக்கிறேன், பேசாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது செய்ய வேண்டியதுதானே என்று பலர் கேட்பார்கள். நான் இன்னும் இங்கே இருப்பதற்கு ஒரு காரணம், எங்கள் பொருள்களைப் புழங்கும் வாடிக்கைக்காரர்கள் எண்ணிக்கை 600 மில்லியனையும் தாண்டி விட்டது என்ற செய்தி. உலகில் இருக்கும் மனிதர்களில் பத்தில் ஒரு பங்கு எங்கள் பொருள்களைப் புழங்குகிறார்கள்.  அவர்கள் எல்லோருமே எங்கள் பொருள்களைப் புழங்க வேண்டும் என்று கனவு காணுகிறோம்.
 
 சிந்தித்துப் பார்த்தால், வேறு எந்த நிறுவனத்துக்கு, அல்லது தொழிலுக்கு இந்த அளவுக்குத் தாக்கம் உள்ளது?
 
 நாங்கள் நூறு வாடிக்கைக்காரர்களுக்கு, ஆளுக்கு நூறு மில்லியன் டாலர் விலைக்கு விற்கும் பொருள்களைப் படைக்க விரும்புவ தில்லை. பல நூறு மில்லியன் மக்களுக்குக் கணினியின் ஆற்றலைக் கொண்டு சேர்ப்பது தான் தொடக்க காலத்திலிருந்தே எங்கள் நோக்கம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு ஆளுக்கும் தனியாள் கணினியைக் கொண்டு சேர்ப்பது மைக்ரோசா·ப்டின் குறிக்கோள் என்று திரு. பில் கேட்ஸ் தொடக்க காலத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறார்.
 
 தென்றல்: சென்ற செப்டம்பரில் தமிழ் இணையம் 2002க்கு உங்களை அழைத்த போது, நீங்கள் சியாட்டல் தமிழ்ச்சங்க நாடகத்தில் நடிக்கவிருப்பதால் வர இயலாது என்றார்கள்! உங்கள் நாடகப் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்.
 
 சோமா: (சிரிக்கிறார்) அட, அது ஒன்றுமில்லை. கல்யாணம் ஆகும் முன்னால், சிறு வயதில் சியாட்டல் தமிழ்ச் சங்க நாடகங்கள் சிலவற்றில் நடித்தேன். திருமணத்துக்குப் பின்னாலும் மைக்ரோசா·ப்ட் பொறுப்பு கூடியதாலும் அதை விட்டு விட்டேன்.  இப்போது எனது இரண்டு மகள்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் வீட்டிலே தமிழ் பேசினாலும், என் மகள்களுக்குத் தமிழ் எழுதப் படிக்க வராது. என்னுடைய வகுப்பு நண்பர் ஒருவர் அவர்களுக்குத் தமிழ் கற்பிக்கிறார். அவர்தான் மீண்டும் என்னை நடிக்கத் தூண்டினார். வேலையில் நெடுநேரம் இருப்பதால், இது ஒரு நல்ல மாறுதலாய் இருக்கும் என்று எண்ணி சரி என்றேன். சென்ற ஆண்டு ஒரு நாடகத்தில்தான் பங்கேற்றேன். அதைத் தமிழில் சில முறையும், ஆங்கிலத்தில் ஒரு முறையும் நிகழ்த்தினோம்!
 
 தென்றல்: மகள்களுக்குத் தமிழ் கற்பிப்பதைப் பாராட்டுகிறோம். அதற்கு ஏதேனும் மைக்ரோ சா·ப்ட் மென்பொருளைப் புழங்குகிறீர்களா?
 
 சோமா: ஹ¥ம். (பெருமூச்சு) இல்லீங்க. (மெல்லிய சிரிப்பு) இது வரைக்கும் இல்லை.
 
 தென்றல்: உலகின் ஒவ்வொரு மேஜையிலும் தனியாள் கணினி என்பது மைக்ரோசா·ப்டின் குறிக்கோள். ஆனால், அந்தக் கணினிக்கு வாடிக்கைக்காரரின் மொழி புரிய வேண்டுமே! கணினியில் இந்திய மொழிகள் பற்றிய மைக்ரோசா·ப்டின் திட்டங்கள் என்ன?
 
 சோமா: மைக்ரோசா·ப்ட் இந்திய மொழிகளுக்கு இரண்டு கட்ட ஆதரவு அளிக்கிறது. முதற் கட்டத்தில், இந்திய மொழிகளுக்கு ஏற்ற கீ போர்டு/விசைப்பலகை, ·பாண்ட்/எழுத்துரு மற்றும் தேதி, பணம் என்பவற்றிற்கான உள்நாட்டுக் குறிகளைத் தருகிறது. கணினியின் படமுகப்பு (GUI) ஆங்கிலத்தில் இருந்தாலும், 12 இந்திய மொழிகளில் டாகுமெண்ட்/ஆவணங்களை உருவாக்கலாம், பகிர்ந்து கொள்ளலாம்.
 
 அடுத்த கட்டத்தில் ஆங்கில முகப்பை முழுதும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். தற்போது இந்தி மொழியில் இதைச் செய்யத் தொடங்கி உள்ளோம். முதலில், பெரும்பான்மையோர் பயன்படுத்துவதை மொழி பெயர்க்க உள்ளோம். பிறகு எல்லாவற்றையும் மொழி பெயர்ப்போம். வரும் சில ஆண்டுகளில் மற்ற இந்திய மொழிகளிலும் முழு மொழி பெயர்ப்புத் திட்டம் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்பை நாங்களே செய்வதைக் காட்டிலும், எங்களோடு இணைந்து மொழி பெயர்க்க முன் வரும் பல்கலைக்கழக அல்லது அரசு அமைப்புகளின் துணையோடு, விரைவில் பல மொழிகளில் படமுகப்பைத் தர முடியும். அதற்கு வசதியாக மொழி முகப்புக் கட்டு ஒன்றைப் படைத்துக் கொண்டிருக் கிறோம். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, தமிழக அரசு போன்ற நிறுவனங்கள் முன் வந்தால், தமிழில் மைக்ரோசா·ப்ட் மென்பொருள்கள் விரைவில் கிடைக்கலாம்.
 
 தென்றல்: கணினித் திறமை மிக்க இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு, மைக்ரோ சா·ப்டின் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதை விட, லினக்ஸ் போன்ற ஓபென் சோர்ஸ்/திறந்த நிரல் செயலிகள் மலிவான செலவில், தங்களுக்குத் தேவையானவற்றைத் தாமே படைக்கும் வாய்ப்பு அளிக்கின்றன. இதை மைக்ரோசா·ப்ட் எவ்வாறு சமாளிக்கப் போகிறது?
 
 சோமா: திறந்த நிரல் செயலிகளை யார் விரும்புகிறார்கள் என்று பார்த்தால், ஒரு கோடியில் இருப்பவர்கள் எதையாவது நோண்டிப் பார்த்து விளையாடும் ஆர்வலர்களும், பொழுது போக்காளர்களும். மறு கோடியில் பெரு நிறுவனங்களும், அரசுகளும் விரும்புகின்றன. இவர்களும் திறந்த நிரல்களை வைத்து எவற்றையும் தன்வயப் (customize) படுத்துவதில்லை. ஆனால், தங்களைப் பாதுகாக்கும் நோக்கங்களுக்காக இவர்கள் தாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் நிரல்களை நாடுகின்றனர். ஏதாவது காரணத்துக்காக இவர்கள் பயன்படுத்தும் செயலிகளை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டால், ஆபத்துக்கு அந்த நிரல்களைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு. மேலும் கணினிப் பாதுகாப்பு முறைகள் செயலிகளில் சரியாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும் சரி பார்க்க வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்காக நிரல் பகிர்வுத் (shared source) திட்டத்தை அமைத்துள்ளோம்.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்ட் சீனாவில் 600 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. இது போல இந்தியாவிலும் ஏதேனும் திட்டம் உள்ளதா?
 
 சோமா: இந்தியாவில் வரும் மூன்று ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் முதலீடு செய்யவிருக்கிறோம். இந்தியாவிலும், சீனாவிலும் சேர்த்து உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வாழ்கின்றனர். இது மாபெரும் வணிக வாய்ப்பு. மேலும், தற்போது அமெரிக்காவுக்கு அடுத்த படியாக உலகில் அதிகமான மென்பொருள் வல்லுநர்கள்  இருப்பது இந்தியாவில்.  இன்னும் சில ஆண்டுகளில் இந்தியக் கணிஞர்களின் எண்ணிக்கை அமெரிக்காவைக் கடந்து விடும் என்கிறது நாஸ்காம் அமைப்பு. இந்தியக் கணிஞர்களும், இன்·போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்பத் தேவைகளையும் நிறைவேற்றுகின்றனர். இவ்வளவு கணிஞர்களுக்கும் பயிற்சி அளிக்கும் கல்வி நிலையங்களும் இந்தியாவில் ஏராளம். மைக்ரோசா·ப்ட் மென்பொருள்கள் இவர்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
 
 தென்றல்: இந்தியா, சீனா போன்ற நாடுகளில் லினக்ஸ் இயக்குதளத்தோடு கடுமையான போட்டி இருப்பதால், சிறப்புச் சலுகை தர மைக்ரோசா·ப்ட் சிறப்பு நிதி ஒன்று தொடங்கி இருக்கிறது என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்ததே!  அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?
 
 சோமா: அந்தச் செய்தியை நான் படிக்கவில்லை என்பதால் அதைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. ஆனால், லினக்ஸ் வலிமையான போட்டி என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இது போன்ற நல்ல போட்டிகளால் வாடிக்கைக்காரர்களுக்கும் நன்மைதான். வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தக்க முறையில் மைக்ரோசா·ப்ட் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் வரை எங்களுக்குத்தான் வெற்றி. லினக்ஸ் போட்டியில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். முதலில் லினக்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது என்று தோன்றினாலும், தொடர்ந்து தம் தேவைகளை நிறைவேற்ற அதில் செய்ய வேண்டிய முதலீடுகளை வாடிக்கையாளர்கள் கருத்தில் கொண்டு உடைமை முழுச்செலவு (Total Cost of Ownership) கணக்கெடுத்தார்களானால், மைக்ரோசா·ப்ட் பொருள்களின் மதிப்பை உணர்வார்கள்.
 
 தென்றல்: நீங்கள் படித்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா?
 
 சோமா: ஒரிரு உதவிகள் செய்துள்ளேன். இந்தியாவில் பல்கலைக்கழகத் தொடர்புத் திட்டம் ஒன்று தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 10-12 கல்வி நிலையங்களோடு உறவாடி வருகிறோம். மைக்ரோசா·ப்டின் ஆய்வாளர்கள் இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உரையாடிக் கருத்துப் பரிமாறி வருகிறார்கள். சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் .நெட் சிறப்பு மையம் (.Net Center of Excellence) ஒன்றைத் திறந்து வைத்தேன். அதில் 30-35 கணினிகளும், அண்மையில் வெளிவந்த மென்பொருள்களும், நூல்களும் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி மையமாக அமைவது மட்டுமல்லாமல், இளநிலை, மற்றும் பட்ட மேற்படிப்பு ஆய்வாளர்களுக்கும் இது உதவும்.
 
 தென்றல்: திரு. பில் கேட்ஸின் மேல் இந்தியத் தலைவர்களுக்கும், பல இந்தியர்களுக்கும் திரைப்பட நட்சத்திரங்களைப் போன்ற ஓர் ஈர்ப்பு இருப்பதால், சியாட்டலுக்கு வரும் பல இந்தியத் தலைவர்கள் அவரோடு சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்ற செய்தி உண்மையா?
 
 சோமா: (சிரிக்கிறார்). பில் கேட்ஸ் பலர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் என்பது உண்மைதான். மாபெரும் நிறுவனத்தைத் துவக்கியவர், பங்குச் சந்தையில் பெரும் முதலீட்டை ஈர்த்தவர், பல்லாயிரக் கணக்கானவர்களைச் செல்வந்தராக்கியவர், பல நூறு மில்லியன் மக்களுக்குக் கணினித் தொழில் நுட்ப வசதியைக் கொண்டு வந்தவர் என்று அவருடைய சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவை இந்தியர்கள் மட்டுமல்லாமல் எல்லா மக்களையும் கவரும் செய்கைகள். இந்தியத் தலைவர்கள் சியாட்டல் வரும்போது, திரு. பில் கேட்ஸ் அவர்களைச் சந்திக்க விரும்பினால், அவருக்கு நேரமிருக்கும் பட்சத்தில் அவரைச் சந்திக்க நாங்கள் உதவி செய்து வருகிறோம்.
 
 கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பணி புரியும் வாய்ப்பு இருந்ததால் என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் சொல்லி விடுகிறேன். பில் கேட்ஸ் பல துறைகளில் வியக்கத்தக்க அளவுக்கு விரிவான அறிவுள்ளவர். ஒரு நிமிடம் மென்பொருள் தொழில் நுட்பத்தில் பொறியாளர்களோடு ஆழமான அலசல் செய்வார். மறு நிமிடம், வணிக நுட்ப தந்திரங்களைப் பற்றி வேறு வல்லுநர் குழுவோடு அவர்களுக்கு இணையாகப் பேசிக் கொண்டிருப்பார். வணிக நுட்பம், தொழில் நுட்பம், செயல் முறைத் தந்திரம் இவை மூன்றையும் இந்த அளவுக்குத் திறமை உள்ள வெகு சிலரிலும் பில் கேட்ஸ¤ம் தலைமை நிலையில் இருப்பவர். அவர் எல்லோரையும் ஈர்ப்பதில் வியப்பில்லை.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்ட் மிகப் பெரிய நிறுவனமாக இருந்தாலும், பல முறை வெகு விரைவில் தன் திசையை மாற்றியிருக்கிறது. தனியாள் கணினியை மையமாகக் கொண்டிருந்த மைக்ரோசா·ப்ட், இணையத்தை  மையமாகக் கொண்டு திசை திரும்பியது பலரை வியக்க வைத்தது.  இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமாகிறது?
 
 சோமா: பல காரணங்கள் - பொதுவாக நாங்கள் மரபுவழி சார்ந்தவர்கள். நிதானமாக முடிவுகளை எடுத்தாலும், நெடுங்காலம் நிலைக்க வைப்போம். எடுத்த முடிவுகளை விரைவாகச் செயலாற்றுகிறோம். எங்கள் செயல்களை நாங்களே கடுமையாக விமரிசித்துக் குறை களைவோம். நேற்று வரை கண்ட வெற்றிகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தால், நாளை வருவதைக் கோட்டை விட்டு விட வேண்டியதுதான். அதனால், இன்று என்ன செய்கிறோம், நாளை என்ன செய்ய வேண்டும், நம் அடிப்படை வலிமை என்ன, வாடிக்கை யாளரிடம் நம் மதிப்பை எப்படி உயர்த்த முடியும் என்று சிந்திக்கிறோம். எங்கள் குறிக்கோள்கள், நோக்கங்கள், மற்றும் போட்டியாளர்களை மனதில் கொண்டு நாங்கள் போகும் திசையைத் தீர்மானிக்கிறோம். அதற்குப்பின், ஓட்டு, ஓட்டு, ஓட்டு என்று விடாமுயற்சியுடன் செயலாற்றத் தொடங்குகிறோம்.  இந்தக் காரணங்களால் தான், இணையத்தை மையமாகக் கொண்டு திசை திரும்பும் சாதனைகளைப் படைக்க முடிகிறது.
 
 தென்றல்: டாட் காம் என்ற புள்ளி வாணிகள் புஸ்வாணமாய்ப் போன பின், அடுத்து வந்த பொருளாதார மந்த நிலை, ஆட்குறைப்பு இவற்றால் சிலிக்கன் வேல்லி நிலை குலைந்து போயிருக்கிறது.  இந்த மந்த நிலையை எப்படி மைக்ரோசா·ப்ட் சமாளிக்கிறது? நீங்கள் இன்னும் வேலைக்கு ஆள் எடுக்கிறீர்களா?
 
 சோமா: (சிரிக்கிறார்). ஆமாம், நாங்கள் இன்னும் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாகவே, நாங்கள் சிக்கனமானவர்கள். ஆட்குறைப்பும் மிகவும் கஷ்டமானது. அதனால், ஆள் கணக்கைக் கூட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்போம். இந்தப் பொருளாதார நிலையும் விதி விலக்கல்ல. இந்த நிலையிலும் நாங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். முன்னைப் போல வேகமாக வளராவிட்டாலும், வளர்ச்சி தொடர்கிறது. அதே போல், முன்னைப்போல் பெரிய அளவில் ஆட்களை எடுக்காவிட்டாலும், தொடர்ந்து ஆள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
 
 தென்றல்: மைக்ரோசா·ப்டில் வேலை செய்யும் பலர் கோடீஸ்வரர்கள். இருந்தாலும், அவர்கள் இரவு பகலாகக் கண்விழித்து, வெறும் பிட்சா சாப்பிட்டு, பெப்சி குடித்து வேலை செய்கிறார்கள். அது ஏன்?
 
 சோமா: மைக்ரோசா·ப்டுக்கு வேலை தேடி வருபவர்களிடம் எதைப் பார்க்கிறீர்கள் என்றால் எங்கள் சி.இ.ஓ. ஸ்டீவ் பால்மர் சொல்லுவார் “வருபவர்கள் கண்ணில் தீப் பொறி, சாதனை படைக்க வேண்டும் என்ற தீராத் தாகம் தெரிகிறதா என்று பார்ப்பேன்.” மென்பொருள் படைப்பதில், மென்பொருள் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அடங்காத ஆர்வம் இருப்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். இவர்களுக்குப் பணம் முக்கியம் தான். ஆனால், பணம் மட்டும் முக்கியமல்ல. மைக்ரோசா·ப்ட் ஊழியர்களுக்குத் தக்க வருவாய் அளித்துக் கவனித்துக் கொள்கிறது. பணத்துக்காக மட்டும் மைக்ரோசா·ப்டில் வேலை செய்பவர்கள் அபூர்வம். அதே நேரத்தில், தான் செய்த வேலை, சேர்த்த பணம் போதும் என்று நிறைவோடு, வாழ்க்கையில் வேறு ஏதாவது சாதிக்க வேண்டும் என 32, 35, 38 வயதில் ஓய்வு எடுத்தவர்களும் உள்ளனர்.
 
 தென்றல்: உங்கள் தனிப்பட்ட வருங்காலக் குறிக்கோள்கள் என்ன? இன்னும் இருபது ஆண்டு களில் எங்கே இருப்பீர்கள்?
 
 சோமா: எனக்குத் தெரிந்த வரையில் மைக்ரோசா·ப்ட் ஓர் தலை சிறந்த நிறுவனம். வேறு எங்கும் வேலை செய்வேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என்றாவது ஒரு நாள் நான் மைக்ரோசா·ப்டை விட்டுப் போக வேண்டியிருக்கும். அது நான் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாளாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்வில் மாபெரும் தாக்கம் உண்டாக்கும் விண் டோஸ் மென்பொருள் தொடர்பாக நான் செய்யும் வேலை என்னைத் தினமும் ஊக்குவிக்கிறது. அது மட்டுமல்லாமல், மைக்ரோசா·ப்டில் என்னோடு அன்றாடம் வேலை செய்பவர்களின் திறமை என்னை ஈர்க்கிறது.
 
 பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இன்னும் நான் என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து ஏதேனும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்படிப் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள, உலகில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கும் வரை, என் பங்குக்கு நானும் சாதிக்க முடியும் வரை நான் தொடர்ந்து இங்கே இருக்கவே விரும்புகிறேன். திடீரென்று ஒரு நாள் எழுந்து நான் இமயமலைக்குப் போக வேண்டும், அல்லது இந்தியாவில் தொண்டாற்ற வேண்டும் என்று தோன்றினால் போகத்தான் போகிறேன். ஆனால், அது வரை நான் ஒரு மைக்ரோசா·ப்ட் ஆள்! (சிரிக்கிறார்)
 
 தென்றல்: சோமசேகர் அவர்களே, தென்றல் வாசகர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. வணக்கம்.
 
 *****
 
 S. “Soma” Somasegar is the corporate vice president of the Windows Engineering Solutions and Services group in the Windows Division at Microsoft. Somasegar’s group is responsible for the overall project and release management of the Windows family of products. Somasegar manages all the Windows cross-group services including application compatibility, customer connection and trust initiatives, system integration test, sustained engineering, worldwide product localization, and all the international releases of Windows. He also manages the Business Group Productivity Services team, which is responsible for providing internal productivity tools, training and services for all the product groups at Microsoft. In addition, he oversees the R&D Center in Hyderabad, India. Somasegar also is responsible for the core e-business infrastructure solutions. Somasegar began his career at Microsoft in January 1989 as a software design engineer in the OS/2 group. He took on management roles of increasing responsibility, eventually becoming responsible for test management for the Windows NT family of products. Most recently, he was the general manager for Windows NT releases in the Windows Division.
 
 Somasegar and his wife Akila have two daughters - Sahana and Archana.
 
 பேட்டி :மணி மு. மணிவண்ணன், ரகுநாத் பத்மநாபன்
 ஒலிபெயர்ப்பு : ஆஷா மணிவண்ணன்
 மொழிபெயர்ப்பு, தொகுப்பு : மணி மு. மணிவண்ணன்
 படங்கள்: மைக்ரோசா·ப்ட் நிறுவனம்
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |