| 
                                            
												|  |  
												| 
                                                        
	                                                        | ''கற்பது கற்கண்டே'' - முனைவர் ராமானுஜம் |    |  
	                                                        | - அசோகன் பி., சரவணன் ![]() | ![]() நவம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  |  
												|  சந்தித்து உரையாடியவர்: பி. அசோகன் படங்கள்: சரவணன்
 
 MATSCIENCE - சென்னை தரமணியில் இருக்கும் ஒரு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம். கணிதவியல், இயற்பியல் மற்றும் கணினியியல் ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நிறுவனம்.
 
 தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் (TNSF) என்ற அமைப்பில் பல வருடங்களாக தொண்டாற்றி வரும் முனைவர் ராமானுஜம் அவர்களை சந்திக்க இந்த அமைதியான வளாகத்துக்குச் சென்றோம். ஓர் அறிவியல் வல்லுனர் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு விடுமுறையிலும் தமிழ்நாட்டில் எங்காவது ஓர் ஊரில் ''அறிவொளி'' இயக்கப் பணிகளில் ஆழ்ந்துவிடுபவர் இவர்.
 
 எளிமையான தோற்றம், இனிமையான புன்னகை, தெளிவான பேச்சு - கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலுக்குப் பின்னர், நம்பிக்கையின்மை நிறைந்த இவ்வுலகில் சமூகநலன் பற்றிய தெளிவான சிந்தனையையும், அதற்காக தனது உழைப்பையும், நேரத்தையும் ஈடுபடுத்தி தம்மால் மாற்ற முடியும் என்ற நோக்குடைய ஒரு செயல் வீரரைப் பார்த்தோம் என்ற திருப்தியுடன் திரும்பினேன். உரையாடலில் இருந்து சில பகுதிகள் :
 
 உங்கள் படிப்பு மற்றும் பிற விபரங்கள்?
 
 திருச்சியில் தூய வளனார் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பின்னர் BITS பிலானியில், மின்னியல்/மின்னணுவியல் பிரிவில். விடுமுறையின் போது IDM நிறுவனத்தில் பகுதி நேர வேலை; அந்நிறுவனம் TIFRக்காக மென்பொருள் தயாரித்துக் கொண்டிருந்தது. அப்போது கிடைத்த தொடர்பால் TIRFஇல் Theoretical Computer Science துறையில் Ph.D., பட்டம் பெற்றேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நியூயார்க்கில் Post Directoral Work. 1998இல் சென்னை MAT SCIENCEக்கு வந்தேன். அன்றிலிருந்து இன்று வரை சென்னைவாசி!
 
 கணினியில் மற்றும் கணிதவியலில் இருந்து, எப்படி நீங்கள் இந்த அறிவொளி/TNSF இயக்கங்களில் ஆர்வம் கொண்டீர்கள்?
 
 அதற்குக் காரணம் இரண்டு நண்பர்கள்: வாஞ்சிநாதன் மற்றும் ஷாஜி. (குறிப்பு: தென்றல் வாசகர்களுக்குக் குறுக்கெழுத்து மற்றும் சில கட்டுரைகள் மூலமாக ஏற்கனவே பரிச்சயமான வாஞ்சிநாதன் தான்!). ஷாஜி low-cost and no-cost பரிசோதனைகள் மூலம் அறிவியலைப் பயிற்றுவிப்பது பற்றி மிகத் தீவிர முயற்சி எடுத்து வந்தார்; அதில் பெரிதும் வெற்றியும் கண்டார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் கிருஷ்ணகிரியில் நடந்த ஒரு முகாமில் வாஞ்சியுடன் பங்கு கொண்டேன். அங்கு Insurnace Agent போன்ற பணிபுரியும் ஆர்வலர்கள் இவ்வியக்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். இவர்களே செய்யும் போது அறிவியலில் பட்டம் பெற்று அந்த துறையில் ஈடுபட்டிருக்கும் நான் நிறையவே செய்ய முடியும், செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
 
 துளிர் போன்ற முயற்சிகள் என்னை பெரிதும் கவர்ந்தன.
 
 ஆரம்ப கால அனுபவங்கள்...
 
 TNSF தொண்டர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் கணிதவியல் வரலாறு பற்றி வகுப்புகள் நடத்தினேன். தமிழில் பேசுவதற்கும், அருஞ்சொற்கள் தெரியாமலும் மிகவும் கஷ்டப்பட்டேன். BITSல் படிக்கும் போது தமிழ் போதனா மொழி பள்ளியிலிருந்து ஆங்கிலத்தில் பயில வேண்டிய காலத்தில் பட்ட சிரமங்கள் ஞாபகத்திற்கு வந்தன. இது ஒருவிதத்தில் வேடிக்கை தான். (அன்று ஆங்கிலம் புரியாததால் கஷ்டம்; இன்றைக்கு தமிழில் பேச முடியாததால் கஷ்டம்). ஆனால் இது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
 
 கதை, கவிதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் தொழில் துறையில் எழுத முன்வருபவர்கள் மிகச் சிலரே. அதிலும் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் குறிப்பாக கி¡மப்புற பள்ளி மாணவர்களுக்கு முறைசாரா கல்வியில் பயில்வோருக்கும் எழுதுவதற்கு கிட்டத்தட்ட யாருமே இல்லை.
 
 தமிழ் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும், பேசுபவர்களும் இதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. ஒரு மின்விசிறி எவ்வாறு இயங்குகிறது. லேத் எவ்வாறு இயங்குகிறது போன்ற உண்மை உபயோகமான விஷயங்களை விளக்குவதற்கு நம்மிடம் எழுத்து மூலமாக எந்த வகையான உதவியும் இல்லை.
 
 சென்னையில் நடத்தும் செயல்பாடுகள் குறித்து....
 
 1990ம் வருடம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் பாடங்கள் நடத்துவதற்காக சென்றேன். அப்போது அங்கிருந்த அறிவொளி இயக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டேன். பின்னர் சென்னையில் இதே போல முயற்சிகளை தொடங்கினோம்.
 
 தென்சென்னை TNSF (தென்சென்னை என்று சொன்னாலும் அடையாறு, ஐஐடி, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதிகளிலேயே பெரும்பாலான குடிசைவாழ் மக்களுக்கு நடத்தப்படுகிறது) ஒவ்வொரு வியாழன் அன்றும் கூட்டம் நடத்துகிறோம். 2 வருடங்களில் ஆயிரம் பேருக்கும் எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறோம். அதில் கிட்டத்தட்ட 200 பேர் 3 புத்தகங்களை படித்து முடித்திருக்கிறார்கள்.
 
 உண்மையில் இந்த நடிவடிக்கைகள் இதில் பயில்பவர்களுக்கு பயனிக்கின்றனவா?
 
 சொல்லப்போனால் நாங்கள் கற்றுக் கொண்டது தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இன்னமும் நினைவில் இருக்கும் நிகழ்ச்சி 1991ல் நிகழ்ந்தது.
 
 ஒரு குறிப்பிட்ட அளவு பாடங்கள் நடத்தப்பட்டபின் அது எவ்வாறு நடந்திருக்கிறது என்பதை சோதிக்கும் பொருட்டு ஆல்காட் குப்பம் பகுதியை தேர்வு செய்தோம். சரஸ்வதி என்கிற ஓர் அம்மையார், பேரைக் கேட்டவுடன் இவருடன் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கருதி அவரிடம் மாலைமுரசை கொடுத்து தலைப்புச் செய்தியை படிக்கச் சொன்னோம்.
 
 It was as disaster. என்றன்றும் மறக்காத அந்த தலைப்பு செய்தி என்னவென்றால், 'காங்கேயம் தொகுதியில் ஆர்.எம். வீரப்பன் அமோக வெற்றி' இதை எழுத்துக் கூட்டி படித்து விட்டார்கள். ஆனால் 'தொகுதி', 'அமோக', 'வெற்றி' ஆகிய வார்த்தைகளுக்கு அவருக்கு பொருள் தெரியவில்லை. விளக்கியபின், ''ஓ, ஜெயிச்சிட்டாரா.....'' என்று சொன்னார்.
 
 அப்போது எனக்கு ஆதித்தனார் மீது மிகவும் மரியாதை வந்தது. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு செய்தி படிப்பதற்காகவே எழுத்தறிவு முக்கியம் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அவர்களுடைய தினசரி வாழ்வில் தமிழுக்கும், மத்தியதர மக்ளால் உபயோகிக்கப்படும் தமிழுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பள்ளியில் ஆறாவது முதல் எட்டாவது வரை படித்துவிட்டு நிறுத்தியவர்கள் கூட அதன்பின்னர் இதுபோன்ற தமிழை அறிவதற்கு சாத்தியமேயில்லை. பிற்காலத்தில் ஒருமுறை இன்னொரு முதியவர் சொன்னது, ''ஐயா, உலக நடப்பு புரிவதற்கு நியூஸ் கேள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்று ஒன்பது மணி தமிழ் நியூஸில் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை'' என்றார்.
 |  
												|  |  
												| கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதை யாரும் வலியுறுத்தி சொன்னதாகவும் தெரியவில்லை.... 
 ஆமாம். புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள் (Neo-Literate) படிக்கக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக நம்மிடம் எந்த சரக்கும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், இந்த மக்கள் யாரும் எங்களை கூப்பிட்டு எதுவும் கேட்கவில்லை. படிப்பு சொல்லிக் கொடு என்றோ, எழுத சொல்லிக் கொடு என்றோ அவர்கள் எங்களை கூப்பிடவில்லை. என்னைப் போன்றவர்கள் சேவை செய்வதாக ஆரம்பித்து, பாட்டு பாடி, நாடகம் நடத்தி, அவர்களை இழுத்துவந்து சொல்லிக் கொடுத்து ஆனாலும், அது பயன் இல்லாமல் போகிறது.
 
 இப்போதும் இதே நிலைமை தானா? ஏதாவது மாற்றம் உண்டா... உங்கள் அணுகுமுறையில் வேறு ஏதாவது முயற்சித்தீர்களா?
 
 ஆமாம். இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு பல மாற்றங்கள் செய்தோம். உதாரணமாக நான் அறிவியலாளன். எனக்கு அறிவியல் தெரியும். இவர்களுக்கு தெரியாது. எனவே இவர்களுக்குத் தெரியாததை சொல்லி தருவோம் என்கிற நிலையிலிருந்து மாறி அவர்களுக்கு பயனுள்ளதாக சொல்லித் தருகிற அணுகுமுறையை மேற்கொண்டோம்.
 
 உதாரணமாக கடிதம் எழுதுவது, பள்ளிக் கூடங்களில் கூட நாம் என்றைக்கும் எழுதாத ஒரு கடிதத்தை தான் சொல்லிக் கொடுக்கிற§¡ம். உன்னுடைய மாமாவுக்கு அவர் தந்த பரிசுக்கு நன்றி கூறி கடிதம் எழுதுக என்று சொல்கிறது மாதிரி, நாம் எப்போதாவது இதுபோல கடிதம் எழுதியிருக்கிறோமா! எழுதுவோமா!
 
 இதை திருத்துவதன் மூலம் முகவரி இடதுபுறத்தில் இருந்தால் அதற்கு இரண்டு மார்க். Yours Sincerely என்று எழுதினால் அதற்கு இரண்டு மார்க் என்று திருத்துவது தான் பழக்கமாகி விட்டது.
 
 நாங்கள் இந்த மக்கள் என்றைக்கும் இது போன்ற கடிதத்தை எழுதி அனுப்பப் போவதில்லை. கடிதம் எழுதுவதே ஒரு abstract esercese. எனவே எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதுங்கள் என்று சொன்னோம். கடவுளுக்கு கடிதம் எழுதுங்கள் என்று சொன்னோம்.
 
 இது மிகவும் வரவேற்பை பெற்றது. நன்றாகவும் எழுதினார்கள். கடவுளுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று.
 
 'நேத்து தண்ணி லாரி வரல்லை. அடுத்த வாரமாவது தினமும் வரணும்.'
 
 TNSF - ல் தங்கள் பொறுப்பு?
 
 கல்வி சார்ந்தவை, சுகாதாரம் சார்ந்தவை மற்றும் சேமிப்பு சார்ந்தவை என்ற மூன்று பிரிவுகளில் இயக்கப்பணிகள் நடக்கின்றன. நான் கல்விப்பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.
 
 அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கம் என்று சொன்னால் சுகாதாரம், சேமிப்பு ஆகியவை பொதுவாக நம் எண்ணத்தில் தோன்றுவதில்லை. அதைப்பற்றி......
 
 TNSF பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவியல் சார்ந்த சேவை புரியும் தன்னார்வ அமைப்பு. ஆனால் இந்த துறையில் ஈடுபட்டதும், இந்தப் பிரச்சினைகளைத் தனியாக அணுகுதல் பயனுள்ளதாக இருக்காது என்று புலப்பட்டது. மேலே சொன்னதுபோல் அவர்களுக்கு உபயோகம் இல்லாததை செய்வதை விட இந்த கல்வி அறிவு கொடுப்பதே அவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான். அதே போல் அவர்கள் தினவாழ்வில் உபயோகமாக இருக்கக்கூடிய பிறவற்றையும் சேர்ந்து கொடுக்க ஆரம்பித்தோம்.
 
 முதியோர்களுக்கு எழுத படிக்க சொல்லி கொடுக்கும் காலத்தில், அவர்கள் சொன்னது, ''எங்களுக்கு இந்த அளவு போதும் சார். இங்கே சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் எங்கள் பசங்களுக்கு ஏதாவது செய்யுங்கள் சார்'' என்று சொன்னார்கள்.
 
 இது நகர்வாழ் குடிசைப் பகுதிகளிலும் வாழும் மக்களுடைய குறைமட்டும் இல்லை. எல்லா பகுதிகளிலும் இருக்கும் கீழ்த்தட்டு மக்களின் தேவையும் கூட.
 
 பள்ளியில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்துகிறார்கள் என்பதை ஆராய ஆரம்பித்தோம்.
 
 மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் மட்டுமே வறுமை மற்றும் இதுபோன்ற காரணங்களால் பள்ளிக்கு வருவதை நிறுத்துகிறார்கள். மற்ற எல்லோரும் யாரும் கேட்பதில்லை என்பதனாலேயே பள்ளிக்கு போவதில்லை.
 
 இதைப் பற்றி அவர்கள் பெற்றோர்களிம் விசாரித்தால் அவர்களுக்கே அவர்கள் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதில்லை என்பது ஒரு செய்தியாக இருக்கிறது. பெற்றோர்கள் பெரும்பாலும் காலை 5 மணிக்கே வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்கள் பள்ளிக்கு போகின்றார்களா, இல்லையா என்பது தெரியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான கணக்கீடுகள் வெளிவரவில்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் பள்ளியிலிருந்து பாதியில் விலகுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. இதை TNSF மற்றும் அறிவொளி இயக்கத்தின் மிக பெரிய சாதனையாக நினைக்கிறோம். முதியோர் கல்வி என்று ஆரம்பித்து வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்கிற ஆர்வமும், அவர்கள் படிப்பை நிறுத்துவது குறைவதும் ஒரு spinoff.
 
 'Brain Drain' என்னைப் பொருத்தவரையில் பள்ளியிலிருந்து சிறுவர்கள் பாதியிலேயே வெளியேறுவது தான். பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தும் அதே நேரத்தில் கற்பதை எளிமையாகவும், இனிமையாகவும் ஆக்கும் பல முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். குழந்தைகள் படிப்பை ஒரு சுவையான அனுபவமாக எண்ண வேண்டும், 'கற்பது கற்கண்டே இயக்கம்' என்று பெயரிட்டுள்ளோம். மேலும் இதற்காக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். 'விழுது' என்ற ஆசிரியர்களுக்கான காலாண்டிதழையும் கொண்டு வருகிறோம்.
 
 TNSF - ல் வேறு என்னென்ன செய்கிறீர்கள்.....
 
 'துளிர்' இதழ் - TNSFன் மிகப் பெரிய சேவை. கிட்டத்தட்ட 15 ஆயிரம் பிரதிகள் விற்கப்படுகின்ற சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ். 40 ஆயிரம் வரை சென்ற காலமும் உண்டு. 5 ஆயிரமாக குறைந்த காலமும் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பெரிய ஊர்களில் 3000 பிரதிகள் மட்டுமே விற்கப்படுகின்றன. பெருவாரியானவை கிராமப்புறங்களிலும், சிறுநகரங்களிலும் விற்கப்படுகின்றது. தொண்டர்கள் மூலமாகவும், பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும் இது விற்கப்படுகிறது. விற்கப்படும் ஒவ்வொரு துளிரையும் குறைந்தது மூன்று நான்கு பேர் படிக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இதனால் பயனடைகிறார்கள்.
 
 ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாம் எழுதப்படிக்க தெரியாதவர்களே தவிர அறிவில்லாதவர்கள் இல்லை. இவர்களுக்கு நல்ல இலக்கியத்தை படிக்க தர தவறிவிட்டோம். இதனால் சிறந்த இலக்கியங்களை உதாரணமாக ஓ ஹென்றி, மாப்பசான், தாகூர் ஆகியோரது படைப்புகளை இவர்களுக்கு புரியக்கூடிய தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்.
 
 சுந்தரராமசாமி, சா. கந்தசாமி, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் கதைகளையும் தமிழ்படுத்தியுள்ளோம். (சிரிக்கிறார்...)
 
 'அறிவுத் தென்றல்' என்று ஒரு Broadsheet பத்திரிக்கையும் கொண்டு வருகிறோம்.
 
 இவர்களுக்கு எழுதப்படிக்க விஷயங்கள் தரும் அதேநேரத்தில் இவர்களுடைய அறிவு விருத்தியையும் பதிவு செய்து கொள்கிறோம். விடுகதை, மற்றும் நாட்டுப்புறக் கதைகளை இவர்களிடமிருந்து கேட்டு பிரசுரித்திருக்கிறோம்.
 
 பலமுறை இவர்களுடைய விடுகதைகளுக்கு பதில் சொல்ல எங்கள் யாராலும் முடிந்ததில்லை.
 
 இரண்டாவதாக சுகாதாரம் சம்பந்தப்பட்டது. தொண்டர்கள் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செலவு செய்தவன் மூலம் பலருடைய வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காண்பித்திருக்கிறோம். Volunteers' Committment is Phenomenal. பலர் அவர்களே தினசரி சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இதுபோன்றவர்கள் முயற்சி எடுத்து இரத்த தானம் செய்வது, காலரா நோயை கட்டுப்படுத்துவது, இளம் தாய்மார்கள் குழந்தைகளை பேணுதல் போன்ற நடைமுறைகளை சொல்லித் தருவதன் மூலம் மக்களிடையே ஓர் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
 
 ஒருவிதத்தில் பார்க்கப் போனால் நம்முடைய சமுதாய மாற்றத்தினால் We have become dobly impoverished.
 
 கை வைத்தியம், நாட்டு வைத்தியம் போன்ற பழைய விஷயங்கள் இப்போது கிடைப்பதில்லை; தெரிவதில்லை. அதே சமயம் புதிய சுகாதார முறைகள் வசதி இவர்களை போய்ச் சேருவதில்லை. நகரத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் வசதிகள் கூட, பல கிராமங்களில் இல்லவே இல்லை. இதனாலேயே சுகாதாரத்தை பற்றிய முயற்சிகள் TNSFன் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.
 
 இதன் மூலம் நீண்டகால பயன் ஏதாவது கிட்டும் என்றும் நினைக்கிறீர்களா.....
 
 கொள்கை அளவில் மாற்றங்களை கொண்டு வருவதே எங்களுடைய நோக்கம். நம்மிடம் வசதிகள் இல்லாதது ஒரு பெரிய குறையல்ல. Lack of Social will is a bigger problem. இந்த முயற்சிகள் யாவும் குறைந்த செலவில் செய்யக் கூடியவை. எளிதில் பிற இடங்களுக்கும் கொண்டு போக முடியும்.
 
 படித்த மத்தியதரவர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க பள்ளிகள், அரசாங்க மருத்துவ மனைகள், தபால் போன்ற Social support infrastructure ஐ உபயோகப்படுத்துவதை குறைத்துக் கொண்டுவிட்டது. இதனால் இந்த அடிப்படை வசதிகளில் குறைப்பாடுகளை சுட்டிக் காட்டவோ, நிவர்த்தி செய்யவோ, முயற்சி எடுக்கக்கூடிய கட்டாயம் அல்லது தேவை பெருவாரியானவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. எங்களுடைய முயற்சிகள் மூலம் we hope to sensitize policy makers and we educated middle class. ஆக்கப்பூர்வமாக நம்மிடையே இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு பெருமளவிற்கு சாதிக்க முடியும் என்பதற்கு நடைமுறை நிருபணமாக TNSF மற்றும் அறிவொளி இயக்கங்கள் விளங்குகின்றன.
 
 சந்தித்து உரையாடியவர்: பி. அசோகன்
 படங்கள்: சரவணன்
 
 தமிழ்நாடு மக்கள் அறிவியல் இயக்கம் (TNSF) மற்றும் அறிவொளி இயக்கங்கள் ஆர்வத்தை மட்டும் உந்து சக்தியாக கொண்டு சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வியக்கங்களுக்கு இயன்றவர்கள் அனைவரும் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம். உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள thendral@chennaionline.com
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |