| 
                                            
												| ஜெஸ்ஸி பால் 
 |  
	|  |  
												|  |  
	|  |  
	|  |  
												| 1978-ம் ஆண்டு குரோம்பேட்டையில் முதிய கிறிஸ்தவப் பெண்மணி ஒருவரோடு மன்டே சாரிடி கிளப்பால் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம், இன்று 'விச்ராந்தி' என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்களையும், ஆதரவற்ற சிறாரையும் தாங்கி நிற்கும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதை நடத்தி வரும் சாவித்ரி வைத்தி, அமெரிக்கன் பயோகிராபிக்கல் நிறுவனத்தின் (ABI) '2000வது ஆண்டின் பெண்மணி' விருது, சாதனை மகளிருக்கான சி.என்.என். விருது, தமிழக அரசின் 'கலைஞர் விருது' உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். தென்னிந்தியாவில் முதல் முதியோர் சேவை இல்லத்தைத் தோற்றுவித்தவர் என்ற பெருமைக்குரியவர். தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து.... 
 கே: முதியோருக்கான சேவை இல்லம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
 
 ப: முதலில் ஆர்வமுள்ள சில பெண்களைக் கொண்ட குழுவை ஏற்படுத்தினேன். ஒரு லேடீஸ் கிளப் போன்றதுதான். 20 பெண்கள் சேர்ந்தார்கள். சமையல் வகுப்பு, பஜனை என்றில்லாமல் சமுதாய சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினோம். ஒரு திங்கட்கிழமை அன்று ஆரம்பித்ததால் அதற்கு 'மன்டே சாரிடி கிளப்' என்று பெயரிட்டோம். மாதம் ஒரு உதவி என்பது முதல் குறிக்கோளாக இருந்தது. முதலில் புத்தக வங்கி (Book Bank) தொடங்கினோம். கல்லூரிப் பாடப் புத்தகங்களை வாங்கி அவற்றை மாணவர்களுக்குக் கொடுத்தோம். பின்னர் ஏழை மாணவர்களுக்கு கல்லூரிப் பணம் கட்டவும், புத்தகங்கள் வாங்கவும் உதவ முடிவு செய்தோம். நன்கொடைகள் மூலமும், தெரிந்தவர்கள் மூலமும் புத்தகங்களைப் பெற்று அதனை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினோம். அப்படிப் படித்தவர்கள் இன்று மிக உயர்ந்த நிலையில் இருப்பது எங்களுக்குப் பெருமை தரும் விஷயம். என் வீடுதான் அப்போது அலுவலகமாக இருந்தது.
 
 பிரபலமானவர்களை எங்கள் அமைப்பில் பேசச் செய்வோம். ஒருமுறை மேயரை அழைத்திருந்தோம். அவர் எங்கள் அமைப்பைப் பார்த்து வியந்துவிட்டு இன்னும் நிறையச் சேவைகளைச் செய்யலாமே என்று ஆலோசனை கூறினார். பலவற்றை யோசித்த பின், முதியோர் இல்லம் தொடங்கி நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அப்படி ஆரம்பித்ததுதான் விச்ராந்தி.
 
 
 கே: விச்ராந்தியின் ஆரம்ப காலம் பற்றிச் சொல்லுங்களேன்!|  |  | பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுகூட இங்குள்ள முதியவர்கள் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்கள். சில கல்லூரி விழாக்களில் இவர்களை அழைத்துச் சென்று கௌரவிப்பதும் உண்டு. |  |  | 
 ப: 1978ல் குரோம்பேட்டையில் ஒரே ஒரு நபரோடு விச்ராந்தியை ஆரம்பித்தோம். அவர் ஒரு கிறிஸ்தவர். குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்மணி. கால் பாதிக்கப்பட்டிருந்தார். (எங்களுக்குச் சாதி, மத வேறுபாடு இல்லை). குரோம்பேட்டையில் 250 ரூபாய் வாடகை வீட்டில் அந்த இல்லம் நடந்து வந்தது.
 
 ஏவி. மெய்யப்பச் செட்டியாரின் மகளான ஏவி.எம். ராஜேஸ்வரி எங்கள் நண்பர். சமூக சேவையில் ஆர்வம் மிக்கவர். விச்ராந்திக்குத் தனியிடம் வேண்டுமென்று முடிவு செய்து அவரைச் சந்தித்தோம். அவர் ரூ. 20,000 நிதி கொடுத்தார். அது இன்றைக்கு 20 லட்சத்தைவிடப் பெரிது. சென்னை பாலவாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினோம். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்களுடன், சில குழந்தைகளுடனும் பாலவாக்கத்தில் அமைதியான சூழ்நிலையில் இயங்கி வருகிறது விச்ராந்தி.
 
 ஆரம்பத்தில் இலவச சேவை இல்லம் மட்டுமே இருந்தது. கட்டணம் கொடுத்துத் தங்க விரும்புபவர்களையும் அனுமதிக்கலாமே என்று சிலர் ஆலோசனை கூறினர். அதன்படி 1981ல் ஆரம்பிக்கப்பட்டது 'சாயி சரண்'. சாஸ்திரி நகரில் உள்ள டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் சகோதரிக்குச் சொந்தமான வீட்டில் அது ஆரம்பிக்கப்பட்டது.
 
 கே: விச்ராந்தியின் குடைக்கீழ் என்னென்ன சேவை அமைப்புகள் இருக்கின்றன?
 
 ப: 1990ல் தாய் அல்லது தந்தை இல்லாத பெண் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது 'மலர்ச்சி'. அக்குழந்தைகளை பிளஸ் 2 வரை படிக்க வைக்கிறோம். வீட்டைவிட்டு வெளியேறி, எங்கே செல்வது என்று தெரியாமல் இங்கே வருபவர்கள் உண்டு. அவர்கள் கோபம் தணியும் வரை, வீட்டில் உள்ளவர்களோ அல்லது இவர்களோ மனமாற்றம் அடையும்வரை தங்கிச் செல்ல அனுமதிக்கிறோம். அவ்வாறு முதியவர்கள் குறுகிய காலம் தங்கிச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது 'நிழல்'. வயது முதிந்தவர்களை கவனிக்க முடியாத அளவு வறுமையில் இருப்பவர்களுக்கு இரண்டு மாதத்துக்குத் தேவையான அரிசி, எண்ணெய், வெல்லம், பருப்பு போன்றவற்றைக் கொடுத்து உதவும் 'ஊன்றுகோல்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இங்கேயே மருத்துவமனை (I.N.M.U-Intermediate Nursing and Medical Care Unit for Senoir Citizens), மருத்துவ சேவை மையம் எல்லாம் உள்ளன.
 
 கே: விச்ராந்திக்கு வரும் முதியவர்கள் குறித்தும், இங்குள்ள சூழ்நிலை குறித்தும் சொல்லுங்கள்!
 
 ப: முன்பு ஆதரவற்றவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் இன்று, மகன், மகள் உயிருடன் இருக்கும்போதே ஒதுக்கப்பட்டு வந்து சேர்பவர்களே அதிகம். சிலர் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து விடுவதும் உண்டு. நாங்களே நேரடியாகச் சென்று அவர்களின் நிலை குறித்து விசாரித்தும் சேர்த்துக் கொள்வதுண்டு. இங்கே அவரவர் வேலையை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வைத்திருக்கிறோம். துணி துவைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைக்க வேண்டும்.
 
 ஆனால் தற்போது படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மிக அதிகமாகி விட்டார்கள். அவர்களுக்கு காலைக்கடன்கள் முதல் உடல் சுத்தம், உணவு என எல்லாமே படுத்த படுக்கையிலே தான் செய்ய வேண்டிய நிலை. அதை இங்குள்ள உதவியாளர்கள் செய்கிறார்கள். துணி துவைக்க வாஷிங் மெஷின் இருக்கிறது. மற்றபடி நன்கு பாடக்கூடியவர்கள், அழகாகக் கோலம் போடக் கூடியவர்கள், நடிப்பவர்கள் எனப் பல திறமைகள் உள்ளவர்கள் இங்கே இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுகூட இங்குள்ள முதியவர்கள் நாடகங்கள் நடத்தியிருக்கிறார்கள். சில கல்லூரி விழாக்களில் இவர்களை அழைத்துச் சென்று கௌரவிப்பதும் உண்டு. இப்போதெல்லாம் ஸ்டெல்லா மேரிஸ், எம்.எஸ்.டபிள்யூ, ஃபாத்திமா காலேஜ் என்று பல கல்லூரிகளின் மாணவிகள் பயிற்சிக்காக இங்கே வருகிறார்கள்.
 
 கே: இங்கே அளிக்கப்படும் உணவு குறித்து...
 
 ப: இங்கே எல்லாம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும். நான் அதில் மிக கவனமாக இருக்கிறேன். காலை 6.00 மணிக்கு டீ கொடுத்து விடுவார்கள். 9.00 மணிக்குக் கஞ்சி என்று வேளாவேளைக்கு எல்லாம் தருவோம். அது வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்வதாக, எளிதில் செரிமானம் ஆவதாக இருக்கும். வியாழக்கிழமை கஞ்சி மட்டும்தான் ஆகாரம். ஒருநாள் உபவாசம். அதனால் அவர்கள் மிக ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இவர்களுக்கு தியான வகுப்பு, உடற்பயிற்சி எல்லாம் உண்டு. மாடியில் பஜனைக் கூடம் இருக்கிறது. தொலைக்காட்சி இருக்கிறது. ஆனால் சினிமா காண்பிப்பதை நிறுத்தி விட்டோம். ஏனென்றால் இப்போது வரும் திரைப்படங்கள் ஆபாசம், வன்முறை என்று மனதைக் கெடுப்பவையாக இருக்கின்றன. வயதானவர்களுக்குத் தேவை நிம்மதி. இதுபோன்ற திரைப்படங்களைப் பார்ப்பதால் அது குலைந்து போகும். பக்தி சீரியல்கள் மட்டும் பார்ப்பார்கள்.
 
 இவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கிறோம். வாராவாரம் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு இசை, நாட்டியம், நாடகம், பாடல் என்று ஏதாவது நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். இங்கே ஒரு வீட்டில் இருப்பது மாதிரிச் சூழல்தான் இருக்கும்.
 |  
												|  |  
	|  |  
												| கே: விச்ராந்தியின் வேறு சுவையான அம்சம் என்ன? 
 ப:  இங்கு வரும் முதியவர்களிடம் கண்தானத்தைப் பற்றி விளக்கி, அவர்கள் இறந்தபின் அவற்றை தானமாக வழங்க ஒப்புதல் வாங்கி விடுகிறோம். அப்படி 300க்கும் மேற்பட்டவர்களின் கண்கள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, கண்தானம் பெற்றுக் கொண்டவர்களை இங்கு வரவழைத்து இங்குள்ளவர்களிடம் பேசிப் பழகச் சொல்கிறோம். இது அவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது.
 
 கே: முதியோர் இல்லங்கள் பெருகி வருவதற்கு காரணம் என்ன?
 
 ப: வயதானவர்கள் அவர்களாக வீட்டை விட்டு வருகிறார்களா அல்லது வெளியேற்றப்படுகிறார்களா என்பது மிக முக்கியமானது. இப்போதெல்லாம் "என் பிள்ளை கஷ்டப்படுகிறான். அவன் நன்றாக இருந்தால் போதும்" என்று சொல்லி அநேகம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி இங்கே வருகிறார்கள். ஆக, காரணம் இதுதான் என்று சரியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய், தந்தை நன்றாக இருக்க வேண்டும், சரியாக கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக முதியோர் இல்லத்தில் விட்டுச்செல்வதும் உண்டு. முதியவர்களை பாரமாக நினைத்து ஒதுக்கி விடுபவர்களும் உண்டு.
 
 சிலர் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது. இடமில்லை. எல்லோரும் வேலைக்குப் போகிறோம். கவனிக்க ஆள் இல்லை. ஒரே சண்டை, சச்சரவு. அனுசரித்துப் போக மாட்டேன் என்கிறார் என்றெல்லாம் சொல்லி இங்கே வந்து விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் சில மாதம் அல்லது வருடம் கழித்து ஏதாவது காரணம் சொல்லி அழைத்துப் போவார்கள் எதற்கு என்றால், வீட்டைப் பார்த்துக் கொள்ள, அல்லது பிரசவத்திற்காக வந்திருக்கும் பெண்ணை கவனித்துக் கொள்ள, பத்தியம் சமைத்துப் போட என்று இப்படி சுயநலத்திற்காக அழைத்துப் போவார்கள். இவர்களும் என் பேத்தி, என் மருமகள் கூப்பிடுகிறாள் என்று ஆசையாகப் போய்விடுவார்கள். ஆனால் ஆறுமாதம் கழித்துப் பார்த்தால் திரும்பி வந்து விடுவார்கள். அவர்கள் காரியம் ஆனதும் பாட்டியின் உதவி வேண்டாமே, அதனால் ஏதாவது காரணம் சொல்லி இவர்களை அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்து விடுவார்கள்.
 
 இருக்கும்வரை கவனிக்காத சில உறவினர்கள், இறந்ததைத் தெரிவித்தால் உடலைக்கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் சில வாரம் கழித்து வந்து அவர் போட்டிருந்த நகை இருக்கிறதா, தோடு எங்கே என்று கேள்வி கேட்பார்கள்.
 
 கே: எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இங்கே சில காலம் இருந்தார், இல்லையா?
 
 ப: ஆமாம். ஐ.ஜி. திலகவதி அவரைப்பற்றிச் சொல்லி இங்கே சேர்த்துக் கொள்ளச் சொன்னார். சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நான்தான் ராஜம் கிருஷ்ணன் இருந்த வீட்டுக்குப் போய் அவரைத் தூக்கிக்கொண்டு வந்தேன். மிகவும் கொடுமையான விஷயம் அவருக்கு நடந்தது. உறவினர்களே அவரை ஏமாற்றி விட்டார்கள். அவர் தங்கியிருப்பதற்காக நான் தனி அறைகூட ஏற்பாடு செய்தேன். வேண்டாம். நான் மக்களோடேயே இருக்கிறேன் என்றார். அவரைப் பார்க்க நிறையப் பேர் வருவார்கள். கொஞ்ச காலம் இருந்தார். பிறகு நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று விட்டனர்.
 
 
 கே: உங்கள் செயல்பாடுகளில் உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து?|  |  | வயதானவர்கள் அவர்களாக வீட்டை விட்டு வருகிறார்களா அல்லது வெளியேற்றப்படுகிறார்களா என்பது முக்கியமானது. இப்போதெல்லாம் "என் பிள்ளை கஷ்டப்படுகிறான். அவன் நன்றாக இருந்தால் போதும்" என்று சொல்லி அநேகம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி இங்கே வருகிறார்கள். |  |  | 
 ப: பலரைச் சொல்லலாம். குறிப்பாக விச்ராந்தி உறுப்பினர்கள், இங்கு சேவை செய்பவர்கள் எல்லோருமே வளர்ச்சிக்கு உறுதுணைதான். என்னிடம் பணிபுரிபவர்கள் அனைவருமே மிக நல்லவர்கள். சமூக அக்கறை உள்ளவர்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். ராமகிருஷ்ணா மடம் போன்றவற்றிலிருந்து பயிற்சி பெற்று வருபவர்களையே நாங்கள் இங்கு சேர்த்துக் கொள்கிறோம். இன்னுமொரு முக்கியமான விஷயம் இங்கிருக்கும் பணியாளர்களில் சிலர் மனநோய் விடுதியிலிருந்து குணமாகி வந்தவர்கள். அவர்களை பைத்தியக்காரர்கள் என்று ஒதுக்கி வீடோ, சமூகமோ ஏற்றுக் கொள்ளாத நிலையில், நாங்கள் ஏற்று இங்கே பணியாளர்களாக வைத்திருக்கிறோம். அப்படி எட்டுப் பேர் இங்கே இருக்கிறார்கள். பல பிரபலங்கள் நிறைய உதவி இருக்கிறார்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி உட்பட. உதவியும் வருகிறார்கள்.
 
 கே: நீங்கள் வேறென்ன சேவைகள் செய்கிறீர்கள்? வேறு கிளை நிறுவனங்கள் உள்ளனவா?
 
 ப: இது முழுக்க முழுக்கத் தன்னார்வச் சேவை அமைப்பு. பல குடும்பத் தலைவிகள் இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். பல்வேறு சேவைகளை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம். கலிஃபோர்னியாவில் இருக்கும் DRI என்ற அமைப்பின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, உடல்நலமில்லாதவர்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்திருக்கிறோம். கடலில் செல்லும் மீனவர்களின் உடல்நலனுக்காகச் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கிறோம். எங்கள் மண்டே சாரிடி கிளப் மூலம் மீனவக் குடியிருப்புகளில் கழிவறைகள் கட்டித் தந்திருக்கிறோம். மேலும் செய்ய வேண்டும் என்ற ஆவலும் இருக்கிறது. ஆனால் அதற்கு நிதி ஆதாரம் அதிகம் தேவைப்படுகிறது.
 
 இருங்காட்டுக்கோட்டையில் விச்ராந்தியின் கிளை ஒன்று இருக்கிறது. அங்கே ஒரு நல்லவர் தனது 1 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தந்தார். அதில் இல்லம் ஆரம்பித்து நடந்து வருகிறது. அருகே இருக்கும் யுண்டாய் நிறுவனத்தின் மருத்துவர்கள் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். அது ஒரு சுயச்சார்புக் கிளை. மற்றுமொரு விஷயம். நாங்கள் இந்த விச்ராந்தி என்ற இந்தப் பெயரை காப்புரிமம் செய்து கொள்ளவில்லை. பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதுமில்லை. வருகிறவர்கள் தேடி வருகிறார்கள். இதே பெயரில் பெங்களூருவிலும் ஒரு சேவை அமைப்பை ஆரம்பித்தார்கள். நான்தான் போய் அதைத் துவக்கி வைத்தேன். அது எல்லாப் பணியாளர்களுக்கும் வீடு, பள்ளி என்று பிரமாதமாக இருக்கிறது.
 
 கே: நிதித் தேவைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
 
 ப: நன்கொடைகள்தான் இந்த அமைப்பு நடக்கக் காரணம். ஒருநாளைக்குத் ரூ. 35,000 வரை செலவாகிறது. ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அரசு உதவி கிடைக்கிறது. அரிசி, கோதுமை போன்ற பங்கீட்டுப் பொருட்கள் கிடைக்கும். முக்கியமாக, கருணை உள்ளம் கொண்டவர்களின் நிதி உதவியால்தான் இந்த அமைப்பு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
 
 கே: தென்றல் வாசகர்கள் எப்படி உங்களுக்கு உதவலாம்?
 
 ப: நாங்கள் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறோம். ஒருநாள் உணவுக்கு நன்கொடை தரலாம்; பிறந்த நாள், மணநாள், நினைவு நாள் போன்றவற்றை இங்குள்ளவர்களுடன் கழிக்கலாம். உணவுச் செலவை ஏற்கலாம். உடை, உணவுப் பொருட்கள், மருத்துவச் செலவுகள், போர்வை போன்றவற்றுக்கு நன்கொடை அளிக்கலாம். விருப்பமான நாளில், விருப்பமான தொகையை நன்கொடையாக அளிக்கலாம். நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு.
 
 நன்கொடைகளை கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.
 
 Vishranthi
 28, A.V.M. Rajeswari Gardens,
 M.G.R. Salai, Palavakkam,
 Chennai 600 041
 TamilNadu, India
 Phone: 91-(44)-2449 0972
 
 Vishranthi Charitable Trust
 Flat No. 1, Sapthagiri Apts.,
 83, T.T.K. Road, Alwarpet,
 Chennai 600 018
 TamilNadu, India
 Phone: 91-(44)-2499 6634
 
 79 வயதான சாவித்ரி வைத்தி இங்கிருக்கும் அனைவருக்கும் அம்மாவாக இருக்கிறார். அவரைவிட வயது முதிர்ந்தவர்கள் கூட இவரை 'அம்மா' என்றுதான் அன்போடு அழைக்கின்றனர். 125க்கும் மேற்பட்ட முதியவர்களும், 30க்கும் மேற்பபட்ட ஊழியர்களும் இங்கே இருக்கின்றனர். அவர்களைக் கனிவுடனும், பாசத்துடனும் கவனித்து இச்சேவை இல்லத்தை நடத்திவரும் அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
 
 
 சந்திப்பு, படங்கள்: டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், அரவிந்த் சுவாமிநாதன்
 
 ****************
 
 -------------------
 பெட்டிச் செய்திகள்
 -------------------
 
 நெருஞ்சி முள்
 
 நாங்கள் ஆரம்பத்தில் திருவான்மியூரில் ஒரு வாடகை வீட்டில் விச்ராந்தியை நடத்தி வந்தோம். அப்போது திடீரென்று ஒருவர் மரணமடைந்து விட்டார். அதுவரை இறப்பை நாங்கள் சந்தித்ததில்லை. அந்த இறப்பை எதிர்பார்க்கவும் இல்லை. அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வரவில்லை. நானும் என்னுடன் தங்கம் பத்மநாபன் என்பவரும் இடுகாட்டுக்கு சென்று உறவினர்களுக்காகக் காத்திருந்தோம். பல மணி நேரமாகியும் யாரும் வரவில்லை. காத்திருந்த வெட்டியான்கள், எத்தனை மணி நேரம்மா பிணத்தை வைத்துக் கொண்டு காத்திருப்பது என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். திடீரென்று எனக்குத் தோன்றியது. நம்மை நம்பித்தானே வந்தாள். நாமே செய்வோம் என்று தீர்மானித்து நானே கொள்ளி வைத்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.
 
 நான் குளித்துவிட்டு தலை ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தபோது எழுத்தாளர் சிவசங்கரி என்னைச் சந்திக்க வந்தார். என்ன இந்த நேரத்தில் இந்தக் கோலத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்டார். அவரிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. பின்னர் ஒரு சில நாட்கள் என்னுடன் தங்கியிருந்து அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்துத்தான் 'நெருஞ்சி முள்' என்ற கதையை எழுதினார். பூமா என்று பாத்திரத்தை வைத்து அவர் மிகச் சிறப்பாக அதை எழுதியிருந்தார். அதிலிருந்து மிகவும் நெருக்கமாகி விட்டார். நிறைய உதவி வருகிறார்.
 
 சாவித்ரி வைத்தி
 
 *****
 
 இப்படியும் ஒரு மகன்
 
 அப்போது விச்ராந்தி எல்டாம்ஸ் ரோடில் இயங்கி வந்த காலம். மிகவும் கஷ்டப்படுகிறார் என்று சொல்லி ஒரு பெண்ணை எங்கள் இல்லத்தில் வந்து சேர்த்தார்கள். நானும் சரி என்று சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெண் "என்னை ஒரு பந்து மாதிரி எல்லோரும் வீட்டில் உதைத்துத் தள்ளுகிறார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை" என்று அடிக்கடி சொல்வார்.
 
 ஒருநாள் ஓர் இளைஞர் வந்தார். இவர் என் அம்மா. நான் தவறு செய்து விட்டேன். இப்போது திருந்தி விட்டேன் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு போனார். இதுமாதிரி இங்கிருந்த யாரையாவது உறவினர்கள் கூட்டிக்கொண்டு போனால், சில வாரம் கழித்துத் திடீரென அந்த முகவரிக்குப் போய் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் பார்ப்பேன். அதன்படிச் சில நாள் கழித்து நானும் எங்கள் ஊழியரும் அவர்கள் வீட்டுக்குப் போனோம். மாடியில் வீடு. வாசலில் தார்ப்பாய் மாதிரி துணி கட்டியிருந்தார்கள். ஏன் இப்படித் துணி கட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால் உள்ளே அந்தப் பாட்டி உட்காந்து கொண்டிருந்தார். எதிரே சமையலறை. பாட்டியின் அருகே ஒரு அலுமினியத் தட்டு, ட்மளர்.
 
 "என்ன பாட்டி, இங்கே இப்படி உட்காந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "நான் வந்தது முதலே இங்கேதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார். காபி கொடுப்பார்களா என்று காத்துக் கொண்டிருந்தார் அவர். ஏன் இப்படி இவரை வைத்திருக்கிறீர்கள் என்று அந்த வீட்டில் உள்ள பெண்ணிடம் கேட்டேன். சும்மா ஏதாவது நச்சு நச்சு என்று சாப்பிடக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரே தொந்தரவு என்றார் அவர். நேர் எதிரே சமையல்கட்டு. சமைத்தால் வாசனை வராதா? அதற்காக வயதான ஒருவரை இப்படியா செய்வது? அப்படியே அவரைத் தூக்கிக்கொண்டு வந்து மீண்டும் இல்லத்தில் சேர்த்தோம். சில வருடம் நிம்மதியாக இருந்தார். யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஒருநாள் காலமாகி விட்டார். வீட்டாருக்குச் சொல்லி அனுப்பினோம். யாரும் வரவில்லை.
 
 சிலநாள் கழித்து அவருடைய பையன் வந்தான். அம்மாவுக்கு திவசம் செய்ய வேண்டும், அவர் இறந்த திதி என்னவென்று கேட்டான். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. நான்தான் உன் அம்மாவுக்குக் கொள்ளி வைத்தேன். உயிருடன் இருக்கும் போது அம்மாவுக்கு எந்த நல்லதும் செய்யாதவன் இறந்த பிறகு திதி செய்யப் போகிறானாம். மரியாதையாகப் போய்விடு என்று திட்டி அனுப்பிவிட்டேன். வந்தவரிடம் நான் கோபப்பட்டது அன்றுதான். பெற்ற தாயை வேலைக்காரியை விடக் கேவலமாக வைத்திருந்து விட்டு அப்புறம் என்ன திதி?
 
 சாவித்ரி வைத்தி
 
 *****
 |  
												| மேலும் படங்களுக்கு |  
	|  |  
												| More 
 ஜெஸ்ஸி பால்
 
 |  
	|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |