|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| கால்தடம் படா கடற்கரை போல
 இருக்கும் வீடு
 
 எனது மகனின்
 விஷமத்திற்குப் பின்
 இல்லப் பொருள்கள்
 எங்கும் இரைபட்டு
 
 கண்காட்சி நடந்த
 கடற்கரை போலக்
 காட்சியளிக்கும்.
 
 ஒரு குவளை
 நீரெடுத்து
 மறுகுவளையில்
 மாற்றி ஊற்றி
 அவன் விளையாடினால்
 வீட்டுக்குள்
 வாசல் தெளித்தது
 போலிருக்கும்.
 
 யாரும் காணாத
 சமயங்களில் அவன்
 குறும்பாய்
 கம்பளத்தில் சிறுநீர்
 கழித்த இடங்களை
 கடக்கையில்
 நாற்றச் சந்துகள்
 நினைவுக்கு வரும்.
 
 ஆடும் பற்களைப்
 போல வீட்டுக்
 கதவுகள்
 ஆடிக்கொண்டிருக்கும்.
 
 புதிதாய்
 புடவை கட்டும்
 பெண் கோக்கும்
 கொசுவம் போல
 ஜன்னல் திரையின்
 இதழ்கள் இவன்
 இழுத்து விளையாடியதில்
 இடைவெளி அதிகம்
 அடைந்திருக்கும்.
 
 என் பிள்ளை
 என்ற காரணத்தால்
 என்ன செய்தாலும்
 ஏதும் எனக்கு
 சொல்லத் தோன்றாது.
 | 
											
												|  | 
											
											
												| அறியாமல் செய்கிறான் என்ற காரணத்தால்
 அவனுக்கு அறிவுரை
 சொல்வேன்; ஆனால்
 அதட்டப் பிடிக்காது.
 
 வாய் நிறைய
 இனிப்பை
 வைத்துக்கொண்டு
 எவரையும் வைய
 முடியுமா?
 
 மனம் நிறைய
 அவன்மீது
 அன்பிருக்கும்போது
 அவனைத் தண்டிக்க
 முடியுமா?
 
 இதே
 காரணத்தால்தான்
 நாம் பூமியில்
 செய்யும் பாதகங்களைப்
 படைத்தவனும்
 பொறுத்துக் கொள்கிறானோ?
 
 சற்று இருங்கள்
 எனது மகன்
 அழும் சத்தம்....
 
 அடடா!
 அவன் இரைத்த
 நீர் வழுக்கி
 அவனே
 வீழ்ந்துவிட்டான்.
 நான் அவனைத்
 தண்டிக்கவில்லை
 இறைவனும் நம்மைத்
 தண்டிப்பதில்லை.
 
 அம்மையே அப்பா
 ஒப்பிலா மணியே!
 
 குருப்ரசாத் வெங்கடேசன்,
 எல்க்ரிட்ஜ், மேரிலாந்து
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |