|
|
|
 |
 |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். திருக்கைலாயத்துக்கு ஒப்பானது பேரூர் என ஈசனே, நந்தி பகவானிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உத்திர கைலாயம், மத்திய கைலாயம், தக்ஷிண கைலாயம் என மூன்று தலங்கள் உண்டு. இவற்றில் தக்ஷிண கைலாயம் என்னும் பேரூரே திருக்கைலாயத்துக்கு ஒப்பான தலம் என ஈசன், நந்தியிடம் மொழிந்ததாகத் தலவரலாறு சொல்லுகிறது. இத்தலத்திற்கு காமதேனுபுரம், பட்டிபுரி என்ற பெயரும் உண்டு. இறைவன் பட்டீஸ்வரர். இறைவி மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி.
ஒரு சமயம் பிரம்மா படைப்புத் தொழிலை மறந்து சிறிதுநேரம் கண்ணயர, திருமால் காமதேனுவை அழைத்து ஈசனை வழிபட்டு, அவர் அருளைப் பெற்றுப் படைப்புத் தொழிலை மேற்கொள்ளப் பணித்தார். காமதேனுவும் கைலாய மலையில் பல ஆண்டுகள் கடுந்தவம் செய்தும் ஈசன் தரிசனம் கிடைக்கவில்லை. கவலையுற்ற காமதேனுவிடம் நாரதர் தான் வழிபட்ட தக்ஷிண கைலாயத்தைப் பற்றிச் சொன்னார். காமதேனுவும் தன் பட்டியுடன் அங்கு வந்து தினமும் லிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வழிபட்டது.
ஒருமுறை காமதேனுவின் கன்றுக்குட்டி அறியாமல் லிங்கத்தை மறைத்திருந்த புற்றை மிதித்ததால் கன்றின் கால்கள் புற்றினுள் மாட்டிக் கொண்டன. அதன் கால்களை விடுவிக்கக் காமதேனு தன் கொம்பால் புற்றினைக் கலைத்தது. உடனே அவ்விடலிருந்து ரத்தம் பீறிட்டது. காமதேனு அதைக் கண்டு மனம் வருந்த, உடன் சிவபெருமான் உமையுடன் காட்சி தந்தார். உமையவளின் வளைத்தழும்பை தன் மார்பில் ஏற்றுக் கொண்டதுபோல், கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டதாக அருளினார். களிப்படைந்த காமதேனு சிருஷ்டி ரகசியத்தை அருளும்படி வேண்ட, பேரூர் முக்தித் தலம் என்பதால் இங்கு சிருஷ்டி ரகசியத்தை விளக்க முடியாது என்பதால், திருக்கருகாவூர் வந்து ரகசியத்தை அறிந்துகொள்ளும்படி ஆணையிட்டார். தம்மை நினைந்து காமதேனு நெடுங்காலம் தவமிருந்த இத்தலம் இனி காமதேனுபுரம் எனவும் அதன் கன்றின் நினைவாக 'பட்டிபுரி' எனவும் அழைக்கப்படும் என்று அருளினார். |
|
|
ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால் உள்ளே கொடிமரம், பலிபீடம், பட்டீஸ்வரர் சன்னிதி, வலப்பக்கம் கணபதி, இடப்பக்கம் கனக சபை. இச்சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தருகிறார். ஒவ்வொரு பஞ்சாட்சரப் படியை அடுத்தும் அற்புதச் சிற்பங்கள் உள்ளன. நர்த்தன கணபதி, காளி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்ரர், அக்னி வீரபத்ரர் என அவை ஒவ்வொன்றும் படி உயரமுள்ளவை. ஒரே கல்லால் ஆனவை. கருவறையில் பட்டீஸ்வரர் லிங்கத் திருமேனியில் பட்டியின் குளம்படிச் சுவடும், காமதேனுவின் கொம்புத் தழும்பும் பதிந்த்துள்ளன. மூலவருக்குப் பின்னால் சுவரில் காமதேனுவின் சிற்பம் அழகுற விளங்குகிறது. உள்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நாயன்மார், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ஞான பைரவர் போன்றோரைத் தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் பால தண்டபாணி, விநாயகர், காசி விஸ்வநாதர்-விசாலாக்ஷி போன்றோரைத் தரிசிக்கலாம்.
தனிச் சன்னிதியில் மரகதாம்பாள் என்னும் பச்சைநாயகி பத்மபீடத்தில் வலதுகையில் நீலோத்பல மலருடனும், கருணை பொழியும் கண்களுடனும் எழுந்தருளியுள்ளாள். இடப்புறத்தில் பராசக்தி என்னும் திருநாமத்துடன் துர்கை சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பதைக் காணலாம். அன்னை ஆலயத்தின் வலதுபுறம் வரதராஜர் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் மரத்தாலான ஆஞ்சநேயர் கம்பீரமாகச் சேவை சாதிக்கிறார்.
இத்தலத்தில் இறப்பவர்களது காதில் ஈசனே 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்தை ஓதி முக்திப்பேறு அளிப்பதாக நம்பிக்கை. அதனால் இங்குள்ள மக்கள் இறக்கும்போது வலதுகாது மேலே இருக்கும்படி வைக்கப்படுகிறார்கள்.
ஆலயத்தின் அதிசயமாக கோயில்முன்னே இருக்கும் 'பிறவாப்புளி' மரத்தைச் சொல்லலாம். இங்கு வந்து இறைவனை தரிசிப்போர்க்கு இனி பிறப்பில்லை என்பதை அறிவிக்கும் வகையில் இம்மரத்தின் விதைகளை எங்கு எடுத்துச் சென்று போட்டாலும் அவை முளைப்பதில்லை. இங்குள்ள பனைமரமும் 'இறவாப் பனை' எனப்படுகிறது. ஆதிசங்கரரும் தன் தாயின் முக்திக்காக இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். பேரூர் பட்டீஸ்வரரை தரிசித்துப் பெரும்பேறு பெற்று வாழ்வோம்.
சீதா துரைராஜ், சென்னை |
|
|
|
|
|
|
|
|
|
|