டாக்டர் ஜெ. பாஸ்கரன் நரம்பியல், தோல் மருத்துவர். பன்முக எழுத்தாளரும் கூட. தனது சிறுகதை, நேர்காணல் மூலம் தென்றல் இதழுக்கு முன்பே அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மருத்துவ நூல்கள் எனப் பதினெட்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய சமீபத்திய படைப்புகளில் ஒன்று 'என் வீட்டு பால்கனி வழியே...'
தான் கண்டவை, கேட்டவை, அறிந்தவை ஆகியவற்றுடன் தனது வாழ்வியல் மற்றும் மருத்துவ அனுபவங்களைத் தொகுத்து நூலாகத் தந்துள்ளார். வாசிக்க மிகவும் சுவாரஸ்யமானது மட்டுமல்லாமல் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பான எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளார். நூலை எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கத் தொடங்கலாம்; சுவை குறையாது என்பது இதன் சிறப்புக்களில் ஒன்று. 'நறுக் சுருக்' வார்த்தைகளுடன் நகைச்சுவையும் கலந்து பல கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம். பல கட்டுரைகளின் முடிவில் ஒரு சின்ன ட்விஸ்ட், நகைச்சுவை அல்லது சிந்திக்கத்தூண்டும் வரிகள் அமைந்துள்ளன.
பாஸ்கரனின் இளவயது வாழ்க்கை அனுபவங்கள், சம்பவங்கள், மருத்துவ அனுபவங்கள், சமகால நிகழ்வுகள், இசை, புத்தக விமர்சனங்கள், இலக்கியம் என ஒரு கதம்பமாக 'என் வீட்டு பால்கனி வழியே...' நூல் அமைந்துள்ளது. 'சரஸ்வதி பூஜையும்...' கட்டுரை தொடங்கி, துலா ஸ்நானம், திருவானைக்கா பிரசாதம், குழந்தைகள் தினம், உலகக் கவிதை நாள், டிசம்பர் பூக்கள், மீசை மகத்துவம், மருதாணியும், பாட்டி வைத்தியமும், கார்த்திகை தீபமும் சொக்கப்பானையும் என்று தொடங்கி, திண்டுக்கல்லிலிருந்து டொராண்டாவுக்கு.., ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்... வரை 43 கட்டுரைகள் நூலில் உள்ளன. நா.பா., டாக்டர் சாந்தா பற்றிய கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. பெரும்பாலான கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டவை. வாசக வரவேற்பைப் பெற்றவை. பலராலும் பாராட்டப்பட்டவை.
எதையும் சுவாரஸ்யமாக, சுருக்கமாக, அதே சமயம் ஆழமாகச் சொல்வதில் தேர்ந்தவர் டாக்டர் ஜெ. பாஸ்கரன். அது இந்தத் தொகுப்பிலும் சிறப்புடன் வெளிப்பட்டுள்ளது. ரசனைக்குரிய நூல் இது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதைச் சுவைத்துப் பாருங்கள்:
"திண்ணை சலூனில் இருந்து யூனிசெக்ஸ் பார்லர் வரை..."
"நாங்க மன்னருமில்லே, மந்திரியில்லே, வணக்கம் போட்டு தலைய சாய்க்கிறான்" !
ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தில் கண்ணதாசனின் பாடல் - சந்திரபாபு, எம் ஆர் ராதாவுக்குப் பின்னணி பாடியிருப்பார்! அன்றைய முடிதிருத்தும் நிலையத்தில் (சலூனில்) ராதாவும் அவரது தோழர்களும் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். பாடல், இசை, நடிப்பு எல்லாம் பிரமாதமாக இருக்கும்!
சமீபத்தில் முடி வெட்டிக்கொள்ள (திருத்திக்கொள்ள) இன்றைய சலூனுக்கு (எல்லாம் 'பியூட்டி பார்லர்' என்றாகி, ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவான அழகு நிலையங்களாக மாறிவிட்டன!) போனபோது அங்கிருந்த ஆம்பியன்ஸ்(!), ஏசி, உயர் ரக சோஃபா (பழைய காலம்போல் இவை சுழல்வதில்லை!), அலங்கார விளக்குகள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்போல் டிராலிகளில் உபகரணங்கள் என வேறொரு தேவலோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது!
மரியாதையாய் உட்கார வைக்கப்பட்டு, கழுத்துக்கு ஒரு டிஸ்யூ பேப்பர், அதன்மேல் ஒரு சிறிய துணிப்பட்டி, பின்னர் பூப்போட்ட கருப்புத் துணியால் கழுத்திலிருந்து முழங்கால் வரை போர்த்தப்பட்டு, கிளிப்பிடப் பட்டேன் - அவரே என் கண்ணாடியை சர்வ ஜாக்கிரதையாகக் கழற்றி மேசைமேல் வைத்தார். 'தேடித் தேடி'த்தான் முடியை வெட்ட வேண்டிய தலைக்கு, இவ்வளவு சோடசோபசாரங்கள் தேவையில்லை என உள்மனது சொன்னாலும், பின்னால் வரப்போகும் பில்லுக்கு இவையெல்லாம் அவசியம் என்பதை அனுபவம் சொல்லியது! தலையில் கை வைத்தவுடன், கண்கள் மூடிக்கொள்ள, பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்!
சிதம்பரத்தில் வீட்டின் இடது பக்கம் உள்ள சின்ன திண்ணைதான் எங்கள் வீட்டு சலூன்! செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை நாட்கள் தவிர மற்ற நாட்களில் வீட்டிற்கே வந்து முடிவெட்டும் கோபாலு என்கிற கோபாலகிருஷ்ணன் எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் பழகுவார். கணுக்கால் வரை தூக்கிக் கட்டிய வெள்ளை வேட்டி, அரைக்கை வைத்த ஜிப்பா (மஞ்சள் அல்லது பச்சைக் கலரில்), நூல் கட்டினாற்போல் ஒதுக்கி விடப்பட்ட அரும்பு மீசை, முன் வழுக்கை, பாதி மண்டையிலிருந்து எடுக்கப்பட்ட வகிடு, பின் மண்டையில் வாரும் அளவுக்கு முடி, பளீரென வெள்ளை பற்கள்! கக்கத்தில் துணிப்பையில் சுற்றி வைக்கப்பட்ட தகரப் பெட்டியில், முடிவெட்டும் உபகரணங்கள்!
"நன்னா ஒட்ட வெட்டு" என்ற பாட்டியின் குரலில், இன்னும் மூன்று மாதத்துக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது என்னும் எச்சரிக்கை தொனிக்கும்! இடுப்பில் சின்ன காசித் துண்டுடன் வந்து உட்கார்ந்த உடன் 'என்னா கண்ணு, ஊர்ல அம்மாவெல்லாம் சௌக்கியமா?' என்றபடி மூக்கு, இரண்டு கண்கள் மட்டுமே காட்டக்கூடிய சின்னக் கண்ணாடியைக் கையில் கொடுப்பார் - முடி வெட்டப்பட்ட தலையழகைப் பார்க்க! தலை, முகம் எல்லாம் ஒரு சேர அந்தக் கண்ணாடியில் பார்த்துவிட்டால், உலகின் மிகப்பெரிய பௌதீக விருது உங்களுக்கு நிச்சயம்! சின்ன கப்பிலிருந்து தண்ணீரை விரல் நுனிகளில் எடுத்து, தலையில் தெளித்து, இரண்டு மூன்று பல் போன சீப்பால் வாருவார் - வெட்டப்போற முடிக்கு என்ன அலங்காரம்? கட்டிங் மெஷினை எடுத்து (ஆமைக்கு இரண்டு நீளப் பின்னங்கால்கள் முளைத்தாற்போல் ஒரு வஸ்து) 'கட கட கட்' என விரைவாகச் செதுக்கி முடிகளை என்மீதும் தரையிலும் தூவிடுவார்! பத்து நிமிடம் குனிந்த தலை நிமிராமல், ஆடாது அசங்காது உட்கார்ந்து, தலை வெட்டிக்கொண்ட பவ்யம் வேறு யார் முன்னும் எனக்கு வந்ததில்லை!
பின்னர் சவரக் கத்தியை அதன் உறையிலிருந்து விரித்து, தோல் பட்டையில் தீட்டி, சைடில், பின் பக்கத்தில் 'கரக், கரக்' என வழித்து, வேலை முடிப்பார்! ஒரு கையில் என் தலையைப் பிடித்து, இடமும் வலமுமாகத் திருப்பி, இரண்டு பக்க சைட் பர்ன்ஸும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார் - அப்போது அவர் நாக்கு தானாகவே மேல் உதட்டைத் தொட்டுக்கொண்டிருக்கும்! தெரிந்த அளவில் அந்தச் சின்னக் கண்ணாடி, முழுவதுமாக மேயப்பட்ட முன் தலையையும், அன்று நட்ட நாற்றங்கால்களைப் போல் நான்கைந்து முடிகள் படியாமல் உச்சியில் துருத்திக்கொண்டிருப்பதையும் காட்டும். இதற்கே பாட்டி ரேழியில் இருந்து, 'கட்டேல போறவனே, அப்படியே வெச்சிருக்கியே' என்றவாறே ஒரு இருபத்திஐந்து பைசா நாணயத்தைக் கொடுப்பாள். கிணற்றடியில் குளித்து, சற்றே பெரிய கண்ணாடியில் முகம் பார்த்து, எந்த ஆங்கிளிலும் சீப்புக்குப் படியாத கிராப்புடன் இரண்டு மூன்று வாரங்களுக்கு மல்லுக்கு நிற்க வேண்டியிருக்கும்!
ஆற்றங்கரை சலூன், மரத்தடியில் நாற்காலி சலூன் எல்லாம் தமிழ் கிராமிய மணம் வீசும் சினிமாக்களில் பார்த்தது! காசியில் பிளாட்ஃபார மாடர்ன் சலூனில் சமீபத்தில் எனக்குப் பட்டாபிஷேகம் செய்தது (முடி வெட்டிக் கொள்வதைத்தான் சொல்கிறேன்!) மறக்க முடியாத அனுபவம்.
சிதம்பரத்தில் இருந்து சென்னை வந்தபோது, பாண்டி பசார் கேரளா ஹேர் டிரஸ்ஸர்ஸ், ஆந்திரா கில்லிக்கு எதிரில் ஷண்முகம் சலூன் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. உள்ளே நுழையும்போதே, ஊதுவத்தி, ஷேவிங் கிரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன், இன்னும் பெயர் தெரியா வண்ண லோஷன்கள், பவுடர் என எல்லாம் கரைந்த ஒரு வாசனை மண்டலத்துள் - ஆரோமா - மிதப்பதைப் போல இருக்கும். காலையில் டி.எம்.எஸ். உள்ளம் உருகி, முருகனைக் கும்பிட்டோ, சரோஜ் நாராயண்சாமி செய்திகளுடனோ, சிலோனின் பொங்கும் பூம்புனலுடனோ, ஒரு வயலின், வீணையுடனோ மதியத்தில் மிகப்பழைய இந்திப் பாடல்களுடனோ இடைவிடாது தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் ரேடியோ, இந்த வகை சலூன்களின் ஜீவநாடியாகும்! அன்றைய தினசரிகள், பேசும்படம், பொம்மை, ராணி போன்றவைகளும் காத்திருப்போர் வாசிக்கக் கிடைக்கும்! சுற்றிலும் பதிக்கப்பட்ட கண்ணாடியில், எல்லா ப்ரொஃபைல்களிலும் நம்மைப் பார்த்துக் கொள்ளலாம்! அன்றைய பிரபலங்கள் இவரிடம் முடிவெட்டிக்கொண்ட போது எடுத்த போட்டோக்கள் சுவரை அலங்கரிக்கும். ஷண்முகம் சலூனில் கொஞ்சம் பெரிய சைஸ் போட்டோவில், ஷண்முகத்துக்கு எதிரில் மர நாற்காலியில் தயாராய் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் நடிகர் திலகம் - ஷண்முகத்துக்கு அந்தப் போட்டோவைப் பற்றிப் பேச நிறையத் தகவல்கள் இருந்தன!
"மெஷின் கட்டிங்கா, சிசர் கட்டிங்கா? க்ளோஸ் கட்டிங்கா, ஜஸ்ட் ட்ரிம்மிங்கா? இல்லெ மீடியமா உட்டுட்டா?" - இந்த ஆப்ஷனெல்லாம் கோபாலு என்னைக் கேட்டதே இல்லையே என வியந்ததுண்டு!
சுழலும் நாற்காலி, மேலும் கீழும் உயரம் மாறும் அதிசயம்! பாட்டில் நீரை, சின்ன மெட்டல் குழல் மூலம் தலையிலும் முகத்திலும் 'ப்புஸ் 'புஸ்' என அடிக்கும் லாவகம்; மூன்றாம் ஆளுக்கு புரியாதவாறு, தன் சக பணியாளரோடு பேசும் திறமை, இடையே கேஷ் பெட்டியிலிருந்து பைசா எடுத்து வெளியே பிச்சை கேட்கும் அரவாணிகளுக்குப் போடும் கருணை என சென்னைக் கோபாலுகள் என்னை வசீகரித்தனர்!
பின்னர் பெல் பாட்டப் பாவாடைகளுடன், கமல், சேகர் மாதிரி "ஸ்டெப்" சுட்டிங் - ஆழ்வார்ப்பேட்டை 'அம்புலி' சலூன் - செய்துகொண்ட போது, சிதம்பரம் சின்னத் திண்ணையின் பரிணாம வளர்ச்சி என்னைப் பாடாய்ப் படுத்தியது!
தலையில் பொடுகு, சோரியாஸிஸ், படை, மரு இத்யாதிகளுக்கு முதல் வைத்தியர்களாக விளங்கும் கோபாலுகளும் உண்டு!!
எல்லாம் முடிந்து கண் விழித்தபோது, எதிரே கண்ணாடியில் என் தலைக்கனம் குறைந்து, பணிவாய் அடக்கமாய் நின்றிருந்த கொஞ்சம் முடிகள், என் பழைய நினைவுகளில் மகிழ்ந்து இருப்பதாய்ப்பட்டது!
மீண்டும், "ஒரு சொந்தமுமில்லே, பந்தமுமில்லே" எம்ஆர் ராதா, கண்ணதாசனைப் பாடிக்கொண்டிருந்தார் - என் மனதுக்குள்தான்!
நூலை குவிகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. kuvikam.com |